9/19/10

சமூகப் பணி வரலாறென்பது ஆட்டுக்குத் தாடியும் அத்தைக்கு மீசையும் போன்றதா?

வரலாரென்றால என்ன?
சேர, சோழ, பாண்டியர்களின் கதையா?
கனக விஜயன் கல் சுமந்த கதையா? ககூம்
வரலாறென்பது.....
இவ்வுலகின் அளவிடமுடியாத அவலத்தை
கருணை கையாண்ட கதைதானே!
மானுட அவலத்தின் முன்னே, கருணை
பல நேரங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கின்றது
சில அவலங்களை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கின்றது
சிலதை முடமாக்கி மூலையில் உட்காரவைத்திருக்கின்றது
சில அவலங்களை அதன் போக்கில் வளர விட்டு
சட்டென்று புட்டத்தில் உதைத்துத் தள்ளியிருக்கின்றது
சில அவலங்களை நேருக்கு நேர் சந்தித்து
நெஞ்சில் மிதித்திருக்கின்றது
சில அவலங்களை, கோழையைப் போல்
பதுங்கிப் பதுங்கி பின்புறமாகத் தாக்கிவிட்டு ஒளிந்திருக்கின்றது.
அரசாக..
தனிமனிதர்களாக..
குழுக்களாக..
ஆயுதங்களாக..
கர்ஜனையாக..
ஒப்பாரியாக..
பேனாவாக..
பிரார்த்தனையாக
எத்தனையோ வழிகளில், வடிவங்களில்
கருணை அவலத்தைக் கையாண்டிருக்கின்றது.
கருணை அவலத்தைக் கையாண்ட வரலாற்றை
எப்படி வேண்டுமென்றாலும்..
புத்தகமாக..
கவிதையாக..
கட்டுரையாக..
எப்படி வேண்டுமென்றாலும்
எழுதிக் கொள்ளுங்கள்
ஆனால் தலைப்பு மட்டும்
சமூகப் பணி வரலாறு என்றுதான் இருக்க வேண்டும்
*
பள்ளிகளில், கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் பாடங்களில் கடினமானது வரலாற்றுப் பாடம் என்றே படுகிறது.மற்ற பாடங்களெல்லாம் நெடுஞ்சாலையில் கும்மிருட்டில் வரும் வாகனத்தின் முகப்பு வெளிச்சம் போல் சீராகவும், தெளிவாகவும் இருக்கும்.ஆனால் வரலாறோ, மேடும் பள்ளமுமான சாலையில் வரும் விளக்கு வெளிச்சம் போல், சீரற்று, விட்டுவிட்டு தெரிவது போல் தெரியும். வரலாற்றுப் பாடத்தில் சூட்சுமம் நிறைந்திருக்கும். வருடங்களை நமக்குக் காட்டிவிட்டு, அதன் சாரத்தை, சத்தை, ஜீவனை வேறிடத்தில் ஒளித்து வைத்து விளையாடும். 15.8.1947 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றதென்பதில் என்ன சிறப்பிறக்க முடியும்...அந்த நாளிரவிலும்,அதற்கு முந்தியும்,பிந்தியும் என்ன நடந்ததென்பதை நம்மால் உள்வாங்க முடியாவிட்டால்.
*
உலகெங்கிலும் சமூகப் பணி படிக்கும் மாணவர்களுக்கு சமூக நல/ சமூகப் பணி வரலாறுதான் முதலில் கற்றுத் தரப்படுகின்றது. மேலை நாடுகளில் அதை மாய்ந்து மாய்ந்து சொல்லித்தருகிறார்கள். சென்ற வருடத்தில் இணையத்தில் இருந்த Content விட இந்த வருடம் அதிகமாகிவிட்டது. வரலாறு என்ற அந்த வாசலின் மூலமே மாணவர்களை வசப்படுத்த முடியுமென்று நம்புகிறார்கள். நான் மாணவனாக இருந்த காலத்தில் சமூகப் பணி வரலாறு எங்களுக்கு சுவைபடச் சொல்லப்படவில்லை. புதிதாக பேராசிரியர் பணியில் சேர்ந்த நண்பரிடம் கேட்டபோது, வரலாறு சமந்தப்பட்ட தலைப்புகளையெல்லாம் அசைன்மெண்ட் ஆகக் கொடுப்பதுதான் அங்கு வழக்கமென்றார். செமினார் என்ற களத்தைத் ஏற்பாடு செய்து அதில் அசைன்மெண்ட் என்ற கைத்துப்பாக்கியால் பெரும்பாலான மாணவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொள்ளும் ஒரு அருமையான போதனாமுறை பழக்கத்திற்கு வந்துவிட்டது ஆசிரியர்களுக்கு ஒரு சௌகரியம்.வரலாற்றில், குறிப்பாக சமூகப் பணி வரலாற்றில் நாங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு “ஆட்டிற்குத் தாடியும் அத்தைக்கு மீசையும் அநாவசியம்” என்ற மனோபாவமே காரணம்.. இருந்தாலும் வரலாறு தூக்கி எறியப்படவில்லை. ஒன்றை வைத்துக் கொண்டே அதை உதாசீனப்படுத்துவதை விட தூக்கி எறிந்திருக்கலாம். தூக்கியெறிந்தால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பத் தெரியாததால் தானேன்னமோ அதை வைத்திருக்கின்றோமோ என்று கூடப் படுகின்றது.
*
கடந்த இரண்டு வருடங்களாக சமூகப் பணி வரலாற்றைக் கற்றுக் கொடுக்கும் படியான பணிப் பகிர்வு எனக்கு வந்தது. அதைத் தவிர்த்திருக்கலாமோ எண்ணும்படியாக அதிகம் படிக்க வேண்டிய நிர்பந்தம். சமூகப் பணி வரலாறென்பது உலக வரலாற்றின் சாரம்..சத்து..ஜீவன். உலக வரலாறு, குறிப்பாக, ஐரோப்பிய, அமெரிக்காவின் சமூக வரலாறு தெரியாமல் அதைப் புரிந்து கொள்ள முடியாது. மேலும் நமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள கலாசார இடைவெளி புரிதலை கடினமாக்கும். எனக்கோ கையருநிலை.
*
மேலை நாடுகளில் .Parish Council /Community (திருச்சபை பங்கு) என்றழைக்கப்படுகின்ற சமூக அமைப்பு முறைகளிலிருந்து உருவான சமூகப் பொறுப்புக்களும், அதைச் சார்ந்து சமூகப் பணியும் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் பெற்றது. Parish Community என்பது ஒரு வகையான சமூகக் கட்டமைப்பு முறை. இந்தியாவில் அது மாதிரியான சமூக அமைப்பு முறை இல்லாததால், அந்த வார்த்தையோடு பரிச்சயமாகலாமே தவிர அதன் ஜீவனைப் புரிந்து கொள்ளமுடியாது. அதற்கு மேலானது கூட நம்மிடையே இருந்திருக்கலாம். அது எனக்குத் தெரியாது.அது எனக்குத் தெரியாதென்பது என் மாணவர்களுக்கும்,என் கல்லூரி நிர்வாகத்திற்கும், சம்பளம் கொடுக்கும் அரசுக்கும் கூட தெரியாது. ஆனால் எங்கள் எல்லோருக்கும் எந்திரன் படம் எப்போ ரிலீஸ் என்று தெரிந்திருப்பதால், பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.
*
புரிந்து கொள்ள இயலாமையால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால், சிந்தனைத் தெளிவுடைய நண்பர் ஸ்ரீநிவாசனிடம் (Dept. of Management Studies, SASTRA University & Coordinator Swadeshi Academic Council) புலம்பிக் கொண்டிருந்தேன். அவர் என் துறையைச் சேராதவராதலால் கிடைத்த தைரியம். “படிப்பதற்கும் சோம்பல். புரியவுமில்லை. எனக்கே எப்படியென்றால் மாணவர்களுக்கு எப்படியிருக்கும்? வார்த்தைகளோடுதான் பரிச்சயமாக்க முடிக்கின்றது. வார்தைகளோடு இணைந்த ஜீவனை எங்களால் தொட்டுக்காட்ட முடியவில்லை” என்று புலம்பினேன். எங்களுடைய உரையாடல் மேலை நாடுகளில் உருவான Settlement House Movement முயற்சிகளைப் பற்றித் திரும்பியது.” Settlement House Movement என்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நடந்த முயற்சிகளில்தான் “சமூகப் பணி” என்ற பாடமுறை வடிவம் பெற ஆரம்பித்தது. Settlement House Movement -க்கு இணையான மொழி பெயர்ப்பைக் கூட என்னால் அறிய முடியவில்லை. தமிழில் நிறைய வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் எழுதிய பேராசிரியரிடம் விளக்கம் கேட்க, ஏன் கேட்டோமென்று போய்விட்டது” என்று ஆதங்கப்பட்டபோது, Settlement House Movement என்றால் என்னவென்று விளக்கும்படி நண்பர் ஸ்ரீநிவாசன் கேட்க “படித்த சமூக அக்கறை கொண்ட (பெரும்பாலும் பல்கலைக் கழகம் சார்ந்தவர்கள்) சேரிப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடனே வாழ்ந்து கொண்டு, சேரியின் சுற்றுச் சூழல், சமூகப், பொருளாதார, கலாச்சாரக் கூறுகளை மாற்றியமைப்பதின் மூலம் (அதாவது வீடு, வீடாகச் சென்று விளக்கேற்றும் தனிமனித சேவைக்கு முன்னுரிமை கொடுக்காமல்) மக்களின் வாழ்வில் விரும்பத் தகுந்த மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்று நிரூபித்த பரிசோதனை முயற்சிகள்” என்று விளக்கமளித்தேன்.
என்னுடைய விளக்கத்தைக் அமைதியாகக்கேட்டுவிட்டு, ‘இதைத்தானே காந்தி தென் ஆப்பிரிக்காவில் பீனிக்ஸ் செட்டில்மெண்டில் செய்தார். இந்தியா திரும்பிய பிறகு சபர்மதியிலும், வார்தாவிலும்செய்தார். சமூகப் பொறுப்புள்ள ஒரு சிலர், ஓரிடத்தை தேர்ந்தெடுத்து, அங்கேயே வாழ்ந்து கொண்டு, தங்களுடைய சிந்தனை மற்றும் செயல்களால், சுற்று வட்டாரத்தில் காரணகாரியத் தெளிவுடன், சமூக மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுவது Settlement House Movement நோக்கமென்றால், இந்தியாவில் ஆசிரமங்கள் காலகாலமாக அதைத்தானே செய்து வந்தன.Ashrams are Indian equivalents of Settlement House Movement. Let us avoid the argument of which is superior என்று விளக்கமளித்துவிட்டு, Settlement House Movement –க்கு தமிழாக்கம் தேடி என் அலையனும். Settlement House Movement-ம் ஆசிரமங்களும் குணத்தால் ஒன்று என்று புரிந்து கொள்ளுங்களேன்” என்றார்.
*
பொட்டென்று நெற்றியில் ஒரு தட்டு. ஞானத்தைத் தொட்டுக் காட்டிவிட்டு, “ரெம்ப நேரமாச்சு. உங்களையும் என்னையும் வீட்டில் தேட ஆரம்பித்து விடுவார்கள்” என்று விடைபெற்றார். நண்பர் ஸ்ரீநிவாசனை போதி மரமாகவும், அதனடியில் ஞானம் பெற்றவனாகவும் என்னை நினைத்துக் கொண்டேன்.
*
ஸ்ரீநிவாசனை என்னைத் தட்டிய தட்டில் எனக்கு தானாகவே பல விசயங்கள் புரிய ஆரம்பித்தது. என்னைச் சுற்றி, நம்மைச் சுற்றி எத்தனை Settlement House Movement. . கருணை கொண்ட ஒரு தாயுள்ளம், தான் கருணையை வடிப்பதற்கு இடம் பார்த்து அதற்கு காந்தி கிராமம் என்று பெயரிட்டது. இன்னொருவரோ தன்னுடைய கனவுகளை காரியசித்தியாக்க கல்லுப்பட்டியைத் தேர்ந்தெடுத்து காந்தி image நிகேதன் ஆசிரமம் என்று ஆரம்பித்தார். சவுந்திரம் அம்மா –டாக்டர் ராமசந்திரன், கோ. வெங்கிடசலபதி –டாக்டர் குமாரப்பா இவர்களெல்லாம் செய்தது Settlement House Movement தவிர வேறென்ன? இருபது வருடங்களாக என் மாணவர்களை கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம் அழைத்துச் சென்றிருக்கின்றேன். அங்கே எதற்கு அழைத்துச் செல்கின்றீர்கள் என்று கேட்டபோது, கிராம மேம்பாடு, காந்தியம் என்றுதான் ஒளிந்திருக்கின்றேன். இப்போ யாராவது கேட்டால், அங்கேதானே நாம் ஜனித்தோம் என்று பெருமைபடச சொல்லியிருப்பேன்.
*
Arnold Toynbee, Jane Addams போன்ற அற்புதமான மனிதர்கள் ஆரம்பித்த முயற்சிகளெல்லாம் அருங்காட்சியகங்களாக மாறிவிட, சவுந்திரம் அம்மா ஆரம்பித்த முயற்சி, அருங்காட்சியகமாக ஆகிவிடாமல், பல்கலைக்கழகமாகப் பரிணமித்து...யுக யுகமாக ஒளி founder தந்து கொண்டிருக்கும்.இல்லையா?
அமெரிக்காவின் Jane Addams கருணையின் வடிவமென்றால், அதற்கு இணையான தேஜசுடன் நமக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் சவுந்திரம் அம்மா – கோ. வெங்கிடசலபதி போன்றவர்களை நம்மால் பார்க்க முடியவில்லையே. ஏன்? கண் மருத்துவர்களால் கூட கண்டறியமுடியாத பார்வைக் கோளாறால் நாமனைவரும் சமூகப் பணிக் கல்வியாளர்கள் உட்பட பாதிக்கப்பட்டிருக்கின்றோமோ? .
*
சமூகப் பணிக் கல்வியாளர்கள காந்தி பற்றியும், வினோபா பற்றியும் பிரமாதமாகப் பேசியும், எழுதியும் சென்றிருக்கின்றார்கள். ஆசிரமங்கள் Settlement House Movement- டின் இந்தியப் படிமங்கள் என்று சொல்லியிருந்தால், ஒரு தலைமுறை மாணவர்கள், நான் உட்பட, நம்மைச் சுற்றி நடந்ததை, நடப்பதை பெருமையுடன் பார்க்கத் தலைப்பட்டிருப்போம்.
*
தன்னுடைய பிரச்சினைகளை சரியாகக் கையாளத் தெரியாத எந்த சமூகமும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாது. தமிழ்ச் சமூகமும் தன் பிரச்சினைகளச் ஓரளவு திறனுடன் கையாண்டு வந்திருக்கின்றது. தமிழ் நிகண்டுகளில் சொல்லப்பட்ட முப்பத்தி இரண்டு அறம் –சமூகப் பிரச்சினைகளைக் கையாள தமிழர் வகுத்து வைத்த செயல்முறைகள்.


முப்பத்திரண்டு வகை அறங்கள் –பிங்கல மற்றும் சூடாமணி நிகண்டு
1 ஆதுலர் சாலை:- ஆதுலர் என்றல் தரித்திரர். உணவின்றி வறுமையில் வாடும் வறியவர்கள் பசியாறும்படி அன்னச்சத்திரம் கட்டிப் பராமரித்தல். முப்பத்திரண்டு அறங்களில் இதுவே முதல் அறமாகக் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவேண்டும். பசிக்கு உணவு அளிப்பது மட்டுமே அறம் என்று மணிமேகலை கூறியதை நினைவு கூற வேண்டும்
2 ஓதுவார்க்கு உணவு:- நன்னெறிகளைப் போதிப்பவர்களின் பசியாற்றுதல்
3 அறு சமயத்தார்க்கு உணவு:- ஆறு சமயங்களின் (சைவம், வைணவம்,சாக்தம், காணாபத்தியம், கௌமாரம்,சௌரம்) மூலம் ஆன்மீகத்தை வளர்க்கும் சமய ஆச்சாரியார்களைப் போஷித்தலாகிய அறம்.
4 பசுவுக்கு வாயுறை:- பசுவுக்கு ஒருபிடி புல்லேனும் ஈதல்.
5 சிறைச்சோறு:- சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்குப் போதிய உணவு தரப்பட்டாலும் அது கண்டிப்புடன் கூடிய அன்பற்ற உணவாக இருப்பதால், நன்மக்கள் இயன்ற சமயங்களில் சிறைச்சாலைக்குச் சென்று, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் எளிய உணவேயாயினும் அத்துடன் அன்பையும் கனிவையும் கலந்து சிறைக் கைதிகளுக்கு வழங்குதல்.
6 ஐயமிடுதல்:- சாதாரணமாக யாசகர்க்குப் பிச்சை இடுவதை இது குறிக்கிறது
7 நடைத் தின்பண்டம்:- நடந்து செல்லும்போது வழிப் போக்கருக்குச் சிறு தின்பண்டம் அல்லது வயல்வழியே செல்வார்க்குத் தின்னக் கூடிய அறுவடைப் பொருள்களை, அவர்களை வலியக் கூவி அழைத்து வழங்குதல்.
8 மகச் சோறு:- திக்க்கற்ற சிறு குழந்தைகளுக்குச் சோறு ஊட்டிப் பசியாற்றுதல்
9 மகப்பெறுவித்தல்:- ஒரு பெண்ணுக்கு அவளுடைய பிரசவத்தின் போது செய்யப்படும் உதவிகள்.
10 மகவளர்த்தல்:- அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தல்
11 மகப்பால்:- ஏழ்மை காரணமாகத் தாய்க்குப் போதிய உணவு உண்ணக் கிடைக்காததால் தாயிடம் தாய்ப்பால் வற்றி ஸ்தனங்களில் துவாரம் அடைபட்டுப் போனதை அறியாத குழந்தை பாலுக்காக ஏங்கித் தாயின் முகம் பார்த்து அழுகிறது. அத்தாயும் தன் சேயின் முகம் பார்த்து அழுகின்றாள். இத்துயரக் காட்சியை "இல்லி துர்ந்த பொல்லா வறுமுலை" (இல்லி-ஓட்டை, துவாரம்) என்ற ஒரு வார்த்தையின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது சங்க இலக்கியம் ஒன்று. தாயையோ தாய்ப் பாலையோ இழந்துவிட்ட குழந்தைக்கு மற்றொரு தாயின் மூலம் தாய்ப்பாலை ஊட்டச்செய்வது இவ்வறம்
12 அறவைப் பிணம் சுடுதல்:- அறவை என்றால் ஆதரவற்ற நிலை. அதாவது ஆதரவற்ற அனாதைப் பிணத்தைத் தகனம் செய்வதான அறம்.
13 அழிந்தோரை நிறுத்துதல்:- புயல், பூகம்பம், ஆழிப் பேரலை (சுனாமி) போன்ற இயற்கைச்சீற்றங்களின் போது உற்றாரையும் உடைமைகளையும் முற்ற இழந்து தவிக் கும் மக்களுக்கு வாழ்வித்தல்.
14 வண்ணார் மக்கள் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களான வண்ணாரையும் நாவிதரையும் போக்ஷித்தல்
15 நாவிதர்.
16 வதுவை:- கன்னியின் திருமணத்துக்குத் தாலி, கூறைப்புடவை, மண மாலைகள் தந்து உதவுதல்.
17 பூணூல்:- பூணூலணியும் வழக்கம் உடையோர்க்குப் பூணூல் தானம் செய்தல்
18 நோய் மருந்து:- வியாதிக்கு ஏற்ற மருந்தை இலவ்சமாக வழங்குதல்
19 கண்ணாடி:- தன்னம்பிக்கை வளர்க்கும் ஒப்பனை செய்து கொள்ள கண்ணாடியை இலவசமாக வழங்குதல்
20 நாள் ஓலை:- ஒருவர்க்கு அன்றே தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்திகளைத் தாமதமின்றித் தெரிவித்தல்
21 கண் மருந்து:- கண்நோய்க்கு இலவசமாய் மருந்து வழங்குதல்
22 தலைக்கு எண்ணெய்:- தலைக்கு இட்டுக் குளிக்க நல்லெண்ணை வழங்குவதான அறம்
23 கன்னிகா தானம்:- அனாதைப் பெண்களுக்குத் திருமணம் செய்வித்தல்.
24 அட்டூண்:-இயலாதவருக்கு உணவு சமைத்துக் கொடுத்தல் (அடுதல்-சமைத்தல்)
25 பிறர் அறங்காத்தல்:- ஒவ்வொருவரும் தத்தமது சுதர்மத்தில் நிலைத்து நிற்க உதவி புரிதல்.
26 தண்ணீர்ப் பந்தல்:-அவசியமான காலத்தில் அவசியமான இடங்களில் தண்ணீர்ப் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தைப் போக்குதல்.
27 மடம்:- ஆன்மீகத்தை நாடும் மக்களுக்கு ஆன்மீகத்தைப் போதிக்கவும், அவர்களின் பசியை ஆற்றவும் மடங்களை நிறுவுதல்
28 தடம்:- இருமருங்கிலும் நிழல்தரும் மரங்களுடனும் குடிநீர்க் குளங்களுடனும் கூடிய சாலைகளை அமைத்தல்
29 கா:- வழிப்போக்கர் தங்க நிழலும் குடிநீரும் கிடைக்கும் படியான பூங்காவையும் மரச்சோலைகளையும் உருவாக்குதல்
30 ஆவுரிஞ்சு நடுதறி:- ஆ- பசு; உரிஞ்சுதல்- உராய்தல். தேய்த்தல்; நடுதறி நடுகின்ற கல் அல்லது மரக்கட்டை. பசுக்களுக்கும் நம்மைப் போலவே அவற்றின் உடம்பில் தினவு ஏற்படும். ஊர்தல் என்னும் அத்துன்பத்தைச் சொறிந்துவிட்டு ஆற்றிக்கொள்ள அவற்றுக்குக் கைகள் இல்லை. அதனால் அவை அத்துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகத் தம் உடம்பை உரசியும் தேய்த்தும் தீர்த்துக் கொள்ளும் வகையில் மேய்ச்சல் வெளிகளிலும், கிராமச்சாலை ஓரங்களிலும், ஆங்காங்கே நடப்படும் ஒற்றைக் கருங்கல் தூண் அல்லது மரக்குற்றியை (குற்றி- மரத்திம்மை) இது குறிக்கிறது. முன்னாளில் தமிழ் நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் சுமைதாங்கிக் கற்கள் காணப்பட்டன. மனிதன் மனம் சுருங்கிப் போனதால் இன்று அத்தகைய அறச்சின்னங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.
31
32
ஏறு விடுதல்:- பசுவுக்குக் காளை மூலம் கர்ப்ப தானம் செய்தல்
விலை கொடுத்துக் கொல்லுயிர் மீட்டல்:- கொல்லுவதற்குக் கொண்டுசெல்லப்படும் சிற்றுயிர்களை விலை கொடுத்து வாங்கி அவற்றைச்சுதந்திரமாய்ப் பறக்கவிடுதலான அறம். இதனைச் செய்யுமுன் ஒன்றை யோசித்துச்செய்ய வேண்டும். ஒருவன் கொல்வதற்காகக் கொண்டுசெல்லும் ஆடு, மாடு, கோழிகளை விலை கொடுத்து வாங்கிச் சுதந்திரமாய்ப் போக விட்டாலும் அவற்றை மற்றொருவன் பற்றிப்பிடித்து கொல்வதற்காகக் கொண்டு செல்வான். மாறாக, ஒரு கூடை நிறையக் குருவிகள், கிளிகள், புறாக்கள், காடை கௌதாரிகளைப் பிடித்துக் கொண்டு வரும் குருவிக்காரனிடமிருந்து விலை கொடுத்து வாங்கி அவற்றைச் சுதந்திரமாகப் பறக்க விடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லதான அறச்செயல். இதுவே முப்பத்திரண்டாவது அறமாகக் குறிப்பிடப்படுகிறது. அறம், அது பாரத மக்களின் வாழ்க்கைத் திறம்.

வேறு விதமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது
ஆதுலர்க்குச் சாலை, ஐயம், அறுசமயத்தோர்க்குண்டி, ஓதுவார்க்குணவு, சேலை, ஏறுவிடுதல், காதோலை, பெண்போகம், மகப்பால், மகப்பேறு, மகவளர்த்தல், மருந்து, கொல்லாமல் விலைகொடுத்துயிர் நோய்தீர்த்தல் (ஆதுலர் - வறியவர்) கண்ணாடி, பிறரிற்காத்தல், கன்னிகா தானம், சோலை, வண்ணார், நாவிதர், சுண்ணம், மடம், தடம், கண்மருந்து, தண்ணீர்ப் பந்தர், தலைக்கெண்ணெய், சிறைச் சோறு, விலங்கிற்குணவு, பசுவுக்கு வாயுறை, (நாவிதர் - அம்பட்டர் - வாயுறை - மருந்து ) அறவைப் பிணமடக்கல், அறவைத் தூரியம், தின்பண்ட நல்கல், ஆவுரிஞ்சுதறி, (ஆவிரிஞ்சுதறி - பசுதினவை ஒழித்துக்கொள்ளும் கட்டை)

யாரையும் விட நாம் உயர்ந்தவர்கள் என்ற கருத்தில் இது மேற்கோள் காட்டப்படவில்லை. நம்மிடமும் பல வலிமை இருந்திருக்கின்றது. அதைச் சற்று புரிந்துகொண்டால் இன்னும் சிறப்பாகப் பலவற்றைப் புரிந்துகொண்டு செயல்படலாம்.அந்தப் பெருமையை யாராவது தோண்டியெடுத்து துலக்கிக் காட்டினால் தமிழ்ச் சமூகம் நன்றிபாராட்டும்