இணையம் ஒரு மாபெரும் அறிவுச் சுரங்கம். அதைப் பயனுள்ளதாகவும், அழகுள்ளதாகவும் ஆக்குவது, தங்களை முன்னிறுத்திக் கொள்ளாத, முகமறியப்படாத தன்னார்வலர்களே. அனைவராலும் கையாளத்தக்க, எளிமைப்படுத்தப்பட்ட, இணையத் தொழில்நுட்பம் எத்தனையோ பேர்களுடைய ஆக்கத்திற்கு வடிகாலாய் இருந்து வருகின்றது. ஆர்வம் பெரிதா? அந்த ஆர்வத்திற்கு துணைநிற்கும்
தொழில்நுட்பம் பெரிதா? இரண்டும் ஏதாவதொரு புள்ளியில் இணையும் போது, அது அறிவுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது. கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று சொல்லப்படும் விக்கிபீடியா இதற்கு நல்ல உதாரணம். இப்படி நூற்றுக் கணக்கில் சொல்லலாம். தன்னார்வமும், தொழிநுட்பமும் இணையும் போது, சகலமும் சாமான்யர்களுக்கு சாத்தியமாகின்றது. “முடவர்கள் நடக்கின்றார்கள், குருடர்கள் பார்க்கின்றார்கள்” என்று பிரசங்கிப்பது மாதிரி, மிகச் சாதாரணமானவர்கள் கூட அறிவுப் பெருக்கத்திற்கு தங்களால் இயன்ற பங்கினைச் செய்ய முடிகின்றது.

இந்த இணையச் சூழல்தான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன், சில பரிசோதனை முயற்சிகளில் என்னை ஈடுபடத்தூண்டியது. ஒரு ஆசிரியர் என்ற முறையில், வகுப்பெடுக்க, எனக்காக தயாரித்த பாடக் குறிப்புகளை, ஆவணமாக்கி, மாணவர்களின் உபயோகத்தின் பொருட்டு, இணையத்தில் பதிவேற்ற, அதைப் பயனுள்ளதாகக் கருதிய பலர், அதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியது என்னை உற்சாகப்படுத்தியது. “இதைத் தேடித்தான் இத்தனை நாளும் அலைந்து கொண்டிருந்தேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி” என்ற முகமறியா வாசகர்களின் பாராட்டு, என்னை மேலும் பல ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யத் தூண்டியது. ஆரம்பத்தில் மிகக் குறைவானவர்களால் பார்க்கப்பட்ட ஆவணங்கள், பலரால் விரும்பிப் பார்க்கப்பட இன்றுவரை ஆறரை இலட்சம் பேர்களால் பார்க்கப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டுமுள்ளது. இதில் பெருமைப்பட ஏதுமில்லாயென்றாலும், என்னையும், நான் பணியாற்றிய சூழலையும் வைத்துப் பார்க்கும் போது, பலருக்கும் பயன்தரத்தக்க பணியைச் செய்து முடித்த திருப்தி ஏற்படுகின்றது.
நான் படித்த, பின் கற்பித்த சமூகப் பணிப் பாடத்திட்டத்தில், அதன் ஆதாரமான, நாடித்துடிப்பான “Theories of Social Work” நான் மாணவனாயிருந்தபோதும், பின் ஆசிரிய்ரான போதும் சேர்க்கப்படாததால், அதைக் கற்கவும், கற்பிக்கவும் வாய்ப்பில்லாமலிருந்தது, சமூகப் பணி தத்துவத்தை புரிந்துகொள்வதில் ஒரு வெற்றிடத்தை என்னுள் உருவாக்கி விட்டதை உணர்ந்தேன். சமூகப் பணி கருத்தாக்கம் என்பது மிகப் பெரிய உரையாடல். சமூகவியல், உளவியல், மானுடவியல், அரசியல், பொருளியல், நிர்வாகவியல் என்று அனைத்து அறிவுசார் துறைகளோடும், சமூகப் பணி கல்வியாளர்கள் உரையாடி, உரையாடி வகுத்தெடுத்த நடைமுறைக் கோட்பாடுகள்.
என்னுடைய புரிதல், புரிதலின்மை வரையறைக்கு உட்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவனங்கள் என்னை மட்டுமல்ல, நான் படித்த, பணியாற்றிய கல்லூரியின் இருப்பையும் உலகிற்கு தெரியப்படுத்தியது, மகிழ்ச்சி தரத்தக்க விசயம்தான். இது மாதிரியான முயற்சிகளை கூட்டாகச் செய்வதற்கும், நிறுவனமயமாக்கவும் நான் வேண்டிக்கொண்டதை, சக ஆசிரியர்களும், நிறுவனமும் கண்டு கொள்ளாததற்கான காரணங்களை இன்றளவும் என்னால் ஊகிக்க முடியவில்லை.
சமூகப்பணி பாட பொருளை அனைவருடன் பகிர்ந்துகொள்ள நான் செய்த முயற்சிகள் எப்படியெல்லாம் கேலிக்குள்ளானது, எப்படியெல்லாம் வரவேற்பைப் பெற்றது என்பதை ஏற்கெனவே என்னுடைய பதிவுகளில் கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒருபக்கம் உதாசீனப்படுத்தப்பட்டாலும், முகமறியா வாசகர்களின் பாராட்டு என் வலிகளுக்கு ஒத்தடமிட்டு வந்துள்ளது.
மார்க்ஸீய சிந்தனைத் தாக்கம் உள்ளவரும், இணையத் தொழில்நுட்பத்தின் பல கூறுகளின்மீது மாற்றுக்கருத்துக்கள் கொண்ட நண்பர் பாலாஜி (Square Computer Network Solutions, Chennai) அவர்கள், “உங்களை மாதிரி ஆட்கள் வெகுளித்தனமாக நல்ல காரியங்களைச் செய்து தொலைப்பதால், பெருமளவு சுரண்டலுக்கு வழிவகுக்கும் தொழில் நுட்பங்கள் பற்றி என்னைப் போன்றவர்கள் அடக்கியே வாசிக்க வேண்டியுள்ளது” என்று கடிந்துகொள்வார். திரு. பாலாஜி அவர்களின் விமர்சனமே எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று பல நேரங்களில் நான் மகிழ்ந்திருக்கின்றேன்.