5/9/09

Insurance - Like rain on a scorched crop

சமூகக் காப்பீடு - தீயும் பயிருக்கு பேயும் மழைபோல

சமூகக் காப்பீடு. சமூகப் பாதுகாப்பு (safety nets, social security, social insurance) போன்ற கருத்தாக்கங்கள்தான் ஆரம்பகால சமூகப் பணியாளர்களின் சிந்தனையையும், செயல்பாடுகளையும் ஆக்கிரமித்திருந்தது. எந்த ஒரு சமூகம், அதனுடைய மக்கள் அனைத்துத் தரப்பினரும் அணுகத்தக்க வகையில் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருகிறதோ, அந்த சமூகம் பிரச்சினைகளைத் தவிர்த்து, தன்னைத்தானே தக்கவைத்துக்கொள்ளும். உலக நாகரீகங்கள் பல அழிந்துபட்டதற்கு பலப்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், காலத்திற்கேற்றவாறு சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீரமைக்கத் தவறியது கூட அந்நாகரீகங்களின் அழிவிற்கு காரணாமாய் இருக்கலாம் என்று நான் நினைத்ததுண்டு. இந்தியா, தன பழம் பெருமையை இழந்ததற்கு கூட, அது தன்னுடைய சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை காலத்திற்கு ஏற்றவாறு சீரமைக்கவும், புனரமைக்க்கவும் தவறியதுதான் என்றுகூட எனக்குப் படுகிறது.

ஆரம்ப கால சமூகப் பணியாளர்கள் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் காட்டிய அக்கறையை பின்னாளில் வந்தவர்களாகிய நாம் காட்டவில்லை. சமூகப் பாதுகாப்பு என்பது சமூகப்பணிக் கல்வியில் சம்பிராதயமான வார்த்தையாகிவீட்ட்து. இதைச் சொல்லும் போது, எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது.

"உலக மக்களின் பிரச்சினையை ஒரே ஒரு எளிய தீர்வின் மூலம் தீரககுமபடியான தெளிவு பெறவேண்டி முனிவர் ஒருவர் தவமியற்ற ஆரம்பித்தார். கடுமையாக தவமிருந்தார். உலகப் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வு கிடைத்துவிட்டால் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்த அரக்கர்கள் (சாத்தான்கள்), முனிவரின் தவத்தைக் கலைக்க பலவிதங்களிலும் முயன்று தோல்வியடைந்தனர். அரக்கர் தலைவனிடம் சென்ற குட்டிச் சாத்தான்கள், "தலைவா!அந்த முனிவர் முழுமுதல் உண்மையைக் கண்டறியும் நிலைக்கு வந்துவிட்டார்! நமக்கு வேலையில்லாமலும், முக்கியத்துவமில்லாமலும் செய்து விடுவார்" என்று முறையிட, பெரிய சாத்தானோ, "பயப்படவேண்டாம்!அந்த முனிவர் உண்மையை உணரட்டும். உண்மையை உணர்ந்தவர், அந்த உண்மையைப் பரப்ப, ஒரு இயக்கத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ நிச்சயமாக ஆரம்பிப்பார். அந்த அமைப்பில் நீங்களெல்லாம் சேர்ந்து விடுங்கள்" என்று அறிவுரை கூறினானாம்.

சமூகப் பாதுகாப்பு என்ற அற்புதமான பேருண்மை, இன்று அதில் சிறிதளவும் நம்பிக்கையில்லாதவர்களால் கற்பிக்கப்பட்டும், நிர்வாகிக்கப்பட்டும் வந்தாலும், அதையெல்லாம் மீறி சமூகக் காப்பீடு அதன் உண்மையான அர்த்தத்தில் செயல்பட்டு வருவதை,அவ்வப்பொழுது நாம் பார்க்கவும், கேட்கவும் முடிவது நமக்கு ஆறுதல் தருகின்ற விசயங்கள்.

காப்பீடு (insurance), தனிப்பட்ட முறையில், பொருளாதார இழப்புகளில் இருந்தும் , உடைந்து போகாமலும் என்னைக் காப்பாற்றி இருக்கின்றது. என் அனுபவதைக்க் கண்டறிந்த பலர் காப்பீடு மூலமாக தங்கள் சுய கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளமுடிந்திருக்கிறது. இத்தனைக்கும் காரணம் என் கல்லூரி நண்பன் T.பூபதி.

சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற பூபதி, National Insurance Company என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, இன்று உயர்பதவியில் இருப்பவன். நல்ல காப்பீடு நிர்வாகமென்பது, பலருடைய கண்ணீரைத் துடைக்கும், இழந்த நம்பிக்கையைப்புனரமைக்கும் என்று நம்பிச் செயல்படுபவன். ஆசாபாசங்களுக்கு அடிமையாகாத அப்பழுக்கற்ற நிர்வாகி.

சமீபத்தில் என்னை ஒருநாள் தொலைபேசியில் அழைத்த பூபதி, "மக்கா, உனக்கு கவியரசு வைரமுத்து பிடிக்கும்தானே. அவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் எங்கள் அலுவலகத்திற்கு வரவிருக்கின்றார். நீ மகிழ்ச்சியடைவாய் என்பதற்காக இதைச் சொல்லுகின்றேன்" என்றான். எதற்காக கவியரசு வருகின்றார் என்று கேட்டதற்கு, "சாலை விபத்தில் மரணமடைந்த அவருடைய சகோதரர் குடும்பத்திற்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை காரணமில்லாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட, நான் மும்பையிலிருந்து மாற்றலாகி வந்தபின், தேவையில்லாமல் தாமதப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற நடவடிக்கை எடுத்து ஆவன செய்தேன். நன்றி சொல்வதற்காக எங்கள் அலுவலகம் வருகின்றார்" என்றான்.

ஆனானப்பட்ட கவியரசுவே வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில், சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்! எல்லா இடங்களிலும் என் நண்பனைப் போல நல்லதிகாரிகள் இருக்கும் பட்சத்தில், வைரமுத்து அவர்களே பாராட்டியது மாதிரி, "மனித நேயம் கொண்ட நல்லதிகாரிகள் இருக்கும் பட்சத்தில், இன்னும் அதிகமான பேர் காப்பீடு செய்ய முன்வருவார்கள். நல்ல காப்பீடு நிர்வாகம் பலருடைய கண்ணீரைத் துடைக்கும்".

அழுபவனை அரவணைத்து, அவன் கண்ணீரைத் துடைத்து, புது நம்பிக்கை ஏற்படுத்த வழிகாட்டுவதுதான் சமூகப் பணியென்றால், அதைப் படித்த என் நண்பன் அனுதினமும் அதை அற்புதமாகச் செய்துகொண்டிருக்கின்றான் என்பதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் மக்கா!