12/14/10

எனது இந்துத்வம்

சாப விமோசனம்
ஐநூறு அடிக்கு மேலான ஆழ்துளைக் கிணறுகள்
இவ்வளவு அவ்வளவு என்றில்லாமல்
எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் தேக்க
நிலத்தடித் தொட்டிகள்.
எந்த வ ட்சியையும், தண்ணீர் பஞ்சத்தையும் தாங்கும்
வீடுகளிருந்த அந்தத் தெருவில்.. ஒரு தெருக்குழாய்!

தெருக்குழாய்களுக்கு அழகே
அதைச் சுற்றிலும் பிளாஸ்டிக் குடங்களும்
நைலான் சேலைப் பெண்களும்தானே!
அதற்குக் கூட வழியில்லாமல்
அத்தெருக்குழாய் சபிக்கபட்டிருந்தது.
துருப்பிடித்து பல காலமாய் நின்று கொண்டிருந்தது
சாப விமோசனத்திற்கு காத்துக் கொண்டிருந்த அகலிகை மாதிரி..

இன்று காலை வாக்கிங் சென்றபோது
அத்தெருக்குழாயைச் சுற்றிலும்
தமிழல்லாத வேறு பாஷையில் பேசிக்கொண்டு
கொஞ்சம் தள்ளியிருந்த காலி பிளாட்டில்
ரோடு வேலைக்காக வந்து டெண்டடித்துத் தங்கியிருந்த
பீகாரியப் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்...

ஸ்ரீ ராமனால் மட்டுமல்ல
சீதைகளாலும் சில நேரங்களில் சாப விமோசனம் தரமுடியும்

நிலையாமை
அது ஒரு நாலு ரோடு கூடுமிடம்..
6 x 10 என்ற விசாலமான பிளக்சில்
உள்ளூர், தமிழக, தேசிய தலைவர்கள்
மாலையுடன்....
மகுடம் தரித்து உட்கார்ந்திருப்பார்கள்....
கவர்ச்சியாகச் சிரிப்பார்கள்....
கம்பீரமாக நடப்பார்கள்....

பருவத்திற்கு ஏற்றமாதிரி
படங்களும் மாறிவிடும்.

மாறினால்தான் என்ன?

எதைக் கொண்டுவந்தார்கள்
அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட
அவர்கள் அங்கு இல்லாததால்
எதை இழந்துவிட்டது
அந்த நாலு ரோடு சந்திப்பு!

பாண்டிச்சேரியிலிருந்து மதுரை
முன்னொருநாள்
ஆரோவில்லுக்குச் சென்றிருந்தேன்
என் நண்பரின் நண்பர்களாக
பல காலம்
ஆசிரமத்திலும்
ஆரோவில்லிலும் வாழ்ந்துகொண்டிருக்கும்
பலருடன் பக்கத்திலமர்ந்து பேசினேன்.
அரவிந்தரையும் அன்னையையும்
அவர்களிடத்தில் தேடினேன்....

பிறிதொருநாள்
கண் சிகிச்சைக்காக உறவினறொருவரை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன்
அப்பொழுது தான் தெரிந்தது
நோயாளியாகவும்,
நோய் தீர்ப்பவராகவும்
அரவிந்தரும், அன்னையுமே நடமாடிக் கொண்டிருந்தனர்.
அரவிந்தரும், அன்னையும்
பாண்டிச்சேரியிலிருந்து மதுரை வந்து
ஆண்டுகள் பல ஆகிவிட்டனவாம்.

12/12/10

கோவிந்தநகரம் - ஒரு இந்திய கிராமத்தின் கதை

கதவு கூடப் போடமுடியாமல் வட்டக்குடிசையில் கோவிந்தப்பா தொடங்கிய வாழ்க்கை, அவ்வட்டாரத்திற்கென்றிருந்த சகல இடர்ப்பாடுகளையும் சாமாளித்து, வாய்ப்புக்களை வசப்படுத்தி, எப்படி கோவிந்தநகரமாக, ஒரு மேம்பட்ட நாகரீகமாக வளர்ந்தது என்பதைச் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணமே- கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா 

வரலாறும் அது தரும் படிப்பினைகளும் நமக்கு வேண்டும்:

வரலாறு என்பது நடந்து முடிந்த கடந்த காலச் சம்பவங்களின் தொகுப்புதானென்றாலும், சம்பவங்கள் தொகுக்கப்பட்டால்தான், அந்தச் சம்பவங்கள் உருவாக்கிய தாக்கத்தை, அதிர்வலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு மறுவினையாற்றத திட்டமிடமுடியும். அச்சம்பவங்கள் தொகுக்கபடாத பட்சத்தில், கால இடைவெளிகளுக்குள் (past,present,future) உள்ள உயிர்த் தொடர்பு (organic & dynamic continuity) அறுந்துபடும். இந்த உயிர்த் தொடர்ச்சி, அனுபவத் தொடர்ச்சியென்பது பழமையைப் பாதுகாப்பதல்ல. பழமையென்பது தொடர்ச்சியற்றுப் போன, நூலறுந்த நிலை. அனுபவத் தொடர்ச்சியென்பது புதுமைக்கு எதிரானதல்ல. அது புதுமையையை நடைமுறைக்கேற்றவாறு மாற்றியமைக்கும் நுண்ணறிவு. நிலைத்த முன்னேற்றம் (sustainable development) வலியுறுத்தும் தலைமுறைகளுக்கு இடையேயான ஒப்புரவுப் பண்பை (inter generational equity) அடையவேண்டுமென்றால், அது கடந்த தலைமுறையின் வாழ்க்கையை, வழிமுறைகளைத் தொகுப்பதன் மூலமாகவும், ஒப்பீடு செய்யவதன் மூலமாகவுமே சாத்தியப்படும்.
வரலாற்றுப் போக்குகளை முன்னேற்ற முயற்சிகளுக்கு ஏதுவாக உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதைப் பெருந்தலைவர்களின் வாழ்க்கையோடும், தலைநகரச் சம்பவங்களோடு மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையோடும், சிறு நகரங்கள் மற்றும் கிராமச் சம்பவங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழாகவும், (Top Down தலைவர்கள், தலைநகர்ங்களிலிருந்து சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகள் வரை) கீழிருந்து மேலாகவும் (Bottom up சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து தலைநகரங்கள் வரை) வரலாறு தொகுக்கப் படவேண்டும். இம் முயற்சிகள் பற்றி (Local History, Micro History, History from Below, Decentralized History, Participatory History) பேசப்பட்டாலும், அது இன்னும் பரவலான செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலைநாடுகளில் இம்மாதிரியான முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் அதனுடைய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லுமுகமாக அருங்காட்சியகங்கள் (Museum) கூட வைத்திருக்கின்றார்கள்.
மக்கள் பங்கேற்பு மூலம் கிராம அளவிலான குறுந்திட்டங்கள் (Micro plans) தயாரிக்கும் முயற்சிகளை அரசும், தொண்டுநிறுவனங்களும் பிரபலப்படுத்தியது மாதிரி, நிறுவனப்படுத்தியது (Popularizing & Institutionalizing) மாதிரி, குறுவரலாறுகள் (Micro history) எழுதும் முயற்சிகளை பிரபலப்படுத்தவில்லை. பங்கேற்பு முறைப் பயிற்சிகளில் கிராம அளவிலான வரலாற்றுப் பிரக்ஞயை வெளிக்கொணர்ந்து, அதனடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்ற திட்டவரைவுகள்தான் ஆவணப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதேயொழிய, அந்தத் திட்டங்களின் பின்னணியிலிருந்த வரலாற்றுணர்வு, வரலாற்றுத்தேவை ஆவணப்படுத்தபடவில்லை.
கடந்தகாலச் சம்பவங்கள், அச்சம்பவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள், அதற்கு கிராம அளவில் உருவான எதிர்வினையாக்கம் (incidents, impacts and reaction) பற்றி கிராம அளவில் மக்கள் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டாலும், சாமான்ய மக்களின் வரலாற்றுணர்வை, பிரக்ஞயை பதிவுசெய்ய பொறுப்புள்ள தொண்டுநிறுவனங்கள் கூடத் தவறிவிட்டது வருத்ததிற்குரியது. ஏனெனில் தன்னார்வமே இதன் இயக்கு சக்தியாதலால், இதைப் பலகலைக் கழகங்களோ அரசோ செய்ய முன்வராது.. கிராம மக்களின் வரலாற்றுப் பிரக்ஞை, சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றப் பணிகளில் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றை நாம் சுலபமாகக் கையாண்டிருப்போம்.
வரலாற்றுப் படிப்பினைகள்:
மின்சாரம் வந்ததால் ஏற்பட்ட ஓய்வால் ஆண்களிடையே உருவான அரசியல் ஈடுபாடு, பேருந்து வசதிகள் பெருகியதால் (ஆசிர்யர்களால் மட்டுமல்ல) உள்ளூர் ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட கல்வித்தர மேம்பாடு, மாறுதலடைந்த பிழைப்பாதார வாய்ப்புகள், புதிதாகப் பாலம் கட்டப்பட்டதால் உயர்ந்த நிலமதிப்பு மற்றும் சமூகப்பிணக்குகள், பெருநகரத்தோடு சாலையால் இணைக்கப்பட்டிருந்தாலும், ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைச்சாலை வந்தபின் எழுந்து நின்ற மீனவக் கிராமம், சாலை விபத்தில் இறந்த கிராமத்து முக்கியஸ்தரால் பல்லாண்டுகள் ஸ்தம்பித்து நின்ற கிராமம், பள்ளி மாணவனாயிருந்த போது ஊருக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியதைப் பார்த்து, நீராதரத்தைப் பெருக்க வழிமுறைதெரிந்து ஊரில் முதன்முதலில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முனைந்ததால் நிலத்தடி நீரில்லாத கிராமத்தில் இருபதாண்டு காலம் வேளாண்மையை நீட்டித்த அதிசயம், ஊரில் கோயில் கட்டியதால் ஊரே பிளவுபட்டது, பின் ஒன்றுபட்டது, தலித்துகளை ஏற்றுக்கொண்டதால் சுகப்பட்ட கிராமங்கள், அவர்களோடு மல்லுக்கட்டி இருதரப்பும் இழந்ததும், பெற்றதும், காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் (Love & intercaste marriages) ஊர்தோரும் உருவாக்கிய விதவிதமான அதிர்வலைகள், திருமணபந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுமுறைகள் (extra marital relationship) ஜாதிகளுக்குள்ளே உருவாக்கிய ஒப்புரவு, ஆரம்பப் பள்ளி நடுநிலைப் பள்ளியானால் பட்டதாரி ஆசிரியர்தான் தலைமையாசிரியராக முடியுமென்பதால் அவ்வூரின் ஆரம்பக் கல்வியை சீர்குலைத்த செகண்டரி கிரேடு கிராம ஆசிரியர் என்று நூற்றுக்கணக்கான சம்பவங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும், அதையொட்டி செயல்திட்டங்கள் வகுத்து ஜெயித்த தொண்டு நிறுவன முயற்சிகளோடு நானே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றேன். இது ஒருபுறம். இன்னொரு புறமோ, தேசியத் திட்டங்களையும், மாநிலத் திட்டங்களையும் ஒவ்வொரு கிராமமும் உள்வாங்கிப் பிரதிபலிக்க முயன்றபோது ஏற்பட்ட சம்பவங்கள், அச்சம்பவங்கள் கிராம அளவில் உருவாக்கிய தாக்கங்கள், அந்தத் தாக்கங்களை குழு (ஜாதி) அளவில் உள்வாங்கிய தனித்தன்மை - கிராம வரலாறு என்பது தேசிய வரலாற்றிற்கு இணையான உள்விரிவாக்கமும் (complexity), சுவாரசியமும், படிப்பினையும் கொண்டதுதான். இப்படிப்பினைகளை நாம் புறக்கணித்ததால்தான், அனுபவத் தொடர்ச்சி அறுந்துபோனதால்தான், நம்மால் ஆண்டுதோறும் வரும் வறட்சி, வெள்ளத்தைச சரியாகக் கையாளத் தெரியாமலும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற திட்டங்களால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகின்றது என்றெல்லாம் கருத ஆரம்பித்துவிட்டோம்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தைத் திருத்தி, (Constitutional Amendment) அதிகாரத்தைப் பரவலாக்கி (Decentralized Democracy), வளர்ச்சிப் பணிகளுக்கென்று கோடிகோடியாக முதலீடு செய்தும், நம்மால் ஒரு கிராமத்திற்கான குறைந்தபட்ச பண்போவியக் குறிப்புகளைக் (Profile &Data base) கூட உருப்படியாக குறித்து வைக்க முடியவில்லை.
பங்கேற்பு முறைகளில் (Participatory Methods-PRA) எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடுமுண்டு என்று என் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் தெரியும். பங்கேற்பு முறைகளில் Timeline & Trend change என்ற முறையை எங்கு சென்றாலும் பரீட்சித்துப் பார்ப்போம். காரணம் அதன் மூலம் வரலாற்றுணர்வு கிடைப்பது மட்டுமல்ல, அது மற்ற முறைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்களை சோதித்தறிய ஒரு அற்புதமான Triangulation Tool கூட.
கோவிந்தநகரம் – ஒரு இந்தியக் கிராமத்தின் கதை:
கிராம வரலாறு பற்றிய என்னுடைய ஏக்கத்தைப் புரிந்துதானென்னவோ, என்னுடன் கல்லூரியில் படித்த, என்மீது சகோதர வாஞ்சை கொண்ட, எங்கள் ஊருக்கு அருகாமையிலிருக்கும் அம்பாசமுத்திரத்திலிருந்து நண்பர் பெருமாள்சாமி, சமீபத்தில், தனக்கு தற்செயலாகக் கிடைத்த “கோவிந்தநகரம் – ஒரு இந்தியக் கிராமத்தின் கதை” என்ற புத்தகத்தை, எனக்கு மிகவும் பிடிக்குமென்று, அனுப்பியிருந்தார். அப் புத்தகம் எனக்குப் பிடித்தது மட்டுமல்ல என் சிந்தனையையும் பல்வேறு கோணங்களில் தூண்டிவிட்டது.
அப்புத்தகத்தைப் படித்த பொழுது எனக்கென்னவோ மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திரா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னால், ஹிந்து நாளிதழில் குன்றக்குடியில் அடிகளார் செய்துவந்த கிராம முன்னேற்றப் பணிகளைப் படித்துவிட்டு “This is what I wanted for all my villages” (இது மாதிரி இந்தியக் கிராமங்கள் அனைத்திலும் நடைபெற விரும்புகின்றேன்) என்று குறிப்பெழுதியது நினைவுக்கு வர, “கோவிந்தநகரம் – ஒரு இந்திய கிராமத்தின் கதை” என்ற புத்தகத்தை படித்தபோது நானும் இந்திரா காந்தியின் மனநிலையில்தானிருந்தேன் – இது மாதிரி ஒவ்வொரு இந்திய கிராமத்தின் கதையும் எழுதப்படவேண்டுமென்று.
கோவிந்தநகரம் தேனிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம். தேனியிலிருந்து எங்கள் ஊரான கோபாலபுரத்தை (கோனாம்பட்டியை)த் தாண்டி கூப்பிடு தூரத்தில் உள்ள ஊர்தானென்றாலும் இதுவரை நான் அந்த ஊருக்குச் செல்ல வாய்பேற்படவில்லை. இருப்பினும் கல்லூரியில் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த, ஆனால் கோவிந்தநகரத்தில் உறவினர்களைக் கொண்டிருந்த நண்பர் (பெரியாழ்வார் வெங்கட்ராமானுஜம் என்ற பெரி வெங்கட்) ஒருவர் கிடைத்தார். இன்று அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பெரிவெங்கட்டின் தாய்மாமா, கோவில்பட்டியருகிலுள்ள நாலாட்டின்புதுரிலிருந்து கோவிந்தநகரத்தில் செட்டிலாகியிருந்தார். கோவிந்தநகரம் என் பக்கத்து ஊர் என்ற பாசத்தைவிட, என் பாசத்துக்குரிய நண்பனின் உறவினர்கள் வாழும் ஊர் என்ற அளவுடன் என் பரிச்சயம் நின்றுபோய்விட்டது.
எழுத்தா? தவமா?
அவ்வூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் (திரு. ஆ. கோவிந்தராஜன்) மற்றும் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்த அதிகாரி (திரு. கி. வெங்கிட்டராமன்) இணைந்து கோவிந்தநகரத்தைப் பற்றி அருமையான வரலாற்று ஆவணம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள். அப்புத்தகத்தில் எழுதப்பட்ட விசயங்கள், புகைப்படங்கள், ஆதாரங்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், எழுதியிருக்கின்றார்கள் என்று சொல்வது அவர்களின் முயற்சியை உதாசீனப்படுத்துவது மாதிரி. இருவரும் சேர்ந்து ஊருக்காக தவமியற்றியிருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எழுத்துத் திறமை, பணத்தை வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்யமுடியுமென்றால் இந்தநாட்டில் இது மாதிரி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். மண்மீது கொண்ட பேரபிமானம், இனி வரப்போகின்ற தலைமுறைக்கு சிலவற்றைச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டுமென்ற ஆர்வம், பொறுப்பு இதுதான் இதுமாதிரியான புத்தகங்களை உருவாக்க உணர்வு ரீதியாக அவர்களை உந்தித் தள்ளியிருக்கும். அவர்களுக்கு நன்றி.
கோவிந்தப்பா உருவாக்கிய குடியிருப்பு:
பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு, அவர்கள் விரும்பிய சொத்தை இனாமாக வழங்கும் (கவுல் வாங்குதல்) அன்றைய வழக்கப்படி வாங்கிக்கொண்ட 25 ஏக்கர் நிலத்தில், கோவிந்தப்பா போட்ட வட்டக்குடிசைதான் கோவிந்தநகரம் என்ற கிராமமாக, நாகரீகமாக வளர்ந்துள்ளது. “கேட்டேயாள அண்ணாச்சி! பத்து வீட்டுக்காரணுக இருக்கிற ஊருக்கு நகரமென்னு பேரு வச்சிக்கிட்டாணுக. ஆயிரம் குடும்பங்க வாழ்ர நம்ம ஊரைப் (விருது) பட்டியங்குறோம்! என்று நூறு வருடங்களுக்கு முன்னமயே ஊர் பேரை வைத்து மற்றவர்களைத் திகைக்க வைத்த ஊர்.
ஏறக்குறைய 250 பக்கங்களுக்கு நீளும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு தகவலும், பல இடங்களிலிருந்து குடிபெயர்ந்த குடும்பங்கள் எப்படி தங்களை, ஒருசமூகமாக, ஒரு நாகரீகமாக வார்த்தெடுத்துக்கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. எந்தெந்த ஊர்களிலிருந்தெல்லாம் வந்து குடியேறினார்கள் என்று தகவல்கள் இருந்தாலும், எந்தெந்தக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருப்பார்கள் என்ற காரணத்தை அறிய இப்புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. நம் எல்லோருக்கும் ஒரு பூர்வீகம் இருந்திருக்கின்றது. அந்த பூர்வீகத்திலிருந்து நாம் ஏன் பெயர்த்தெடுக்கபட்டோம் என்பதை அறிய நாம் ஆர்வம் காட்டியதில்லை. நம் ஒவ்வொரு குடும்பத்தின் இடப்பெயர்வையும், மறுகுடியேற்றத்தையும் புரிந்து கொண்டிருந்தால் அது நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இப் புத்தகம் அந்த ஆர்வத்தைத் தூண்டுகின்றது.
1885 ஆம் ஆண்டு கோவிந்தப்பாவால் உருவாக்கப்பட்ட குடியிருப்பு, ஆரம்பத்தில் “பட்டாளத்து நாயக்கன்பட்டி” என்று அழைக்கப்பட்டு, பின்னர் கோவிந்தநகரமானதலிருந்து, முதல் குடிநீர்க் கிணறு எப்பொழுது வெட்டப்பட்டது? யார் வீட்டிற்கு முதலில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது? யார் கிணற்றில் முதலில் மோட்டார் பொருத்தப்பட்டது? உள்ளூர்ப் பள்ளி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? ஊரின் முதல் பெண் ஆசிரியை யார்? முதல் பட்டதாரி யார்? குழாய் பதித்து பாசன வசதி செய்தவர் யார்? முதலில் வெளிநாடு சென்றவர் யார்? சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர், அதன் பிறகு விவசாயப் போராட்டத்தில் சிறை சென்றவர் யார்? யார்? கதையெழுதியவர்கள், கவிதையெழுதியவர்கள் என்று பல தகவல்களைக் கொடுத்து அவர்களின் புகைப்படங்களையும் இணைத்திருக்கின்றார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்ட விண்வெளி விஞ்ஞானியைப் பற்றிச் சொல்லும்போது கூட “பத்மபூசன் விருது பெற்ற பத்மாவதி கணவர்” என்று குறிப்பிட்டு, தங்கள் ஊரோடு சம்பந்தப்பட்ட அனைவரையும், அனைத்தையும் எழுத்தில் கொண்டாடி மரியாதை செய்திருக்கின்றார்கள்.
அப்புத்தகத்தில் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்ட பல சம்பவங்களைப் படிப்பவர்களுக்கு கிராம வாழ்வைப் பற்றிய தெளிவு கிடைக்கும். இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும், "இது நம் ஊரில் எப்படியிருந்தது, இப்பொழுது எப்படியிருக்கின்றது என்று ஒப்புமைப்படுத்திப் புரிந்துகொள்ளத் தூண்டும். இந்தத் தூண்டுதலுணர்வுதான் இப்புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி.
வீடுகளின் பரிணாமம்
ஊர் உருவாகிய 150 கால வரலாற்றில், இப்பொழுதைய (1991) கணக்குப்படி 792 வீடுகள் இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களில் தெரியும் வீடுகளைப் பார்த்தால் நவீனமாகக் கட்டப்பட்ட மாடிவீடுகளாகத் தெரிகின்றது.
கதவில்லாமல் கட்டப்பட்ட மண்ணாலான வட்டக்குடிசைகள் தொடங்கி, செவ்வக வடிவில் கட்டப்பட்ட மண்வீடுகள், கூரைவேய பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கால்நடைகளுக்கென்று வீட்டிற்குள்ளும், வீட்டையொட்டியும் கட்டப்பட்ட தொழுவம், விவசாயக் கருவிகள் வைத்துக்கொள்ள, தானியங்களைச் சேமிக்க, சாமான்கள் வைத்துக்கொள்ள தனித்தனி இடங்கள், சமையலறையின் அமைப்பு, காலந்தோறும் மாறிவந்த கட்டுமானப் பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றது. வீட்டுக் கூரைகளும், வீட்டடிக் கிணறுகளும் எப்படி சமூக அடையாளங்களாக பரிணாமம் அடைந்தது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு காலகட்டம் வரைக்கும் உள்ளூரில் கிடைத்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளை, சிறிது சிறிதாக வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களை வைத்துக் கட்டும்படியான தேவை ஏன் ஏற்பட்டது? எப்பொழுது, எதற்காக ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கான விடையைத் தேட இப்புத்தகம் ஆர்வமுள்ளவர்களைத் தூண்டலாம். வெளியிடப் பொருட்களின் (External inputs) ஆதிக்கம் வேளாண்மையில் இருப்பதைப் பற்றி கடுமையான விமர்சனங்களும், பரவலான விழிப்புணர்வும் உருவாகி, இயற்கை வழி வேளாண்மையைப் (Organic Agriculture) பற்றி பேசி வருகின்றோம். கட்டுமானத் துறையில் நமது கிராமங்கள் சுயதேவைப் பூர்த்தி இழந்தது பற்றி யாரும் பேசுவதில்லை. வாழ்க்கை என்பது ஒன்றுதான். ஒன்றில் முழுக்க, முழுக்க சார்புத்தன்மையும் இன்னொன்றில் இயற்கை வழி சுயதேவைப் பூர்த்தியென்பதும் சிந்திக்க வேண்டிய செய்திகள். இப்புத்தகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.
கிராம நிதியிலிருந்து கிராமத் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள், வசூலிக்கப்பட்ட வாடகை, காலனி வீடுகள் என்று சொல்லப்படும் விவரங்களிலிருந்து ஒரு கிராமம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டது தெரியவருகின்றது.
கிராம நிர்வாகம்.
ஒவ்வொரு கிராமமும் தனித்தன்மை கொண்ட சமூகக் கலாசார, பொருளாதார, அரசியல் பின்னனி கொண்டது. அரசுத் துறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் என்று இருந்தாலும், இவையெல்லாம் Monolithic organization என்று சொல்லப்படுகின்ற வேறுபாடின்றி எங்கும் ஒரே சீராக இயங்கக்கூடிய வரையறைக்குட்ட்பட்ட நிறுவனங்கள். இந்த அமைப்புகளால் கிராமத்தின் பிரத்யேகத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, இந்த அமைப்புகள் திறனுடன் செயல்பட சமூக மூலதனம் (Social Capital) என்று சொல்லப்படுகின்ற தன்னார்வ சமூக அமைப்புகளோ (Civil Society organization) அல்லது பரம்பரியத் தலைவர்களோ (Leaders with ascribed status) அல்லது வலுவுடைய/ செல்வாக்கு மிக்க தலைவர்களோ (Charismatic Leaders) தேவை. இந்த அமைப்புகள்தாம் ஒருகிராமத்தை மற்றொரு கிராமத்திலிருந்து மாறுபடுத்திக் காட்டுபவை.
பாரம்பரிய நாட்டாண்மைப் பொறுப்புடன், நாட்டாண்மையே ரெவின்யூ நாட்டாண்மையாக இருந்து ஊரை நிர்வகித்த நிலை மாறி, பின் நாட்டாண்மை, டெவைதாரர்கள், வாசினியார் போன்ற பாரம்பரிய அமைப்பு சிறிதுகாலம் செயல்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, தனிமனிதரை மையப்படுத்தியிருந்த பொறுப்புக்கள் குழுவிடம் வந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக கிராம நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவருகின்றது.
கிராமத்திற்கான நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, 1946 ஆம் வருடத்திலிருந்து யார் யார் கிராமச் செயலர்களாக இருந்தார்கள், கிராம நிர்வாகக் குழுவின் மூலமாக செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆரமபக் கல்விக்கு அரசு நிதியுதவி இல்லாத காலத்திலே பள்ளி உருவாகவும், ஆசிரியர்களுக்கு மாதம் 12 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை சம்பளம் கொடுத்ததையும், மேல்நிலைப் பள்ளி துவங்க முயற்சியும் வைப்புத் தொகையும் செலுத்தியதையும், வாசகசாலை கட்ட இடம் நன்கொடை வாங்கியதையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள். முழுக்க முழுக்க வேளாண்மை சார்ந்த ஒரு சமூகத்தில், யாரோ ஒரு தனவந்தர் கருணையடிப்படையில் கல்வி தந்தார் என்றில்லாமல், ஒரு சமூகமே தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைத் தருவதை தன் கடமையாக எடுத்துச் செயல்பட்டது தெரியவருகின்றது. It takes a whole village to raise a child என்ற பழமொழியை ஆயிரம் தடவை படித்திருக்கின்றேன். அதனுடைய உண்மையான அர்த்தம் இப் புத்தகத்தைப் படிக்கும் போதுதான் புரிந்தது. நமது கிராமப்பள்ளிகளின் வரலாற்றை, பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நமது வரலாற்றாசிரியர்கள் போதுமான அக்கறையையோ மாதிரிகளையோ உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். கடந்த காலத்தில் ஒவ்வொரு கிராமமும், தன்னுடைய குழந்தைகளுக்கு கல்விதர எடுத்துக்கொண்ட முயற்சிகளை நாம் ஆவணப்படுத்த தவறிவிட்டோம். வணிகத்தாலோ, வேறு விதமான பொருளீட்டல் வாய்ப்புகளற்ற வேளாண்மை சார்ந்த கோவிந்தநகரம் மாதிரியான கிராமங்களில், கல்வியில் முதலீடு செய்வதென்பது அபூர்வம். இம்மாதிரியான சமூக முயற்சிகளை சரிவர ஆவணப்படுத்தத் தவறியதால்தான் இன்று ஆரம்பக் கல்வியின் தரம் மேம்படுத்துவதென்பது சிரமமான காரியமாக இருக்கின்றது.
கிராம நிர்வாகக் குழு என்ற விதையிலிருந்து, பள்ளி நிர்வாகக் குழு, பழைய மாணவர் சங்கம், நேதாஜி வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் உருவாகி, ஒவ்வொரு அமைப்பும் ஏதாவது ஒருவகையில் முன்னேற்றப் பணிகளை அடுத்த கட்டடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள்.
கிராம நிர்வாகம் பற்றிய தகவல்களில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஒன்றியப் பெருந்தலைவர்களாக இருந்திருந்ததைப் பெருமையுடன் குறிப்பிட்டாலும், அவர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் கிராமச் செயல்பாடுகள் அவர்களைச் சார்ந்ததாக இருந்த மாதிரி குறிப்பிடப்படவில்லை.
பாரம்பரியத் தலைமையாலும் (Leaders with ascribed status) வலிவுடைய/ செல்வாக்கு மிக்க (Charismatic Leaders) தலைமையாலும் கிராமங்கள் பயன்பெற்றதை மறுக்கமுடியாதுதான். இருப்பினும் ஜனநாயகப் பண்புகள் கொண்ட கிராம அமைப்புகளே சிறந்தது; நிலைத்திருக்கக் கூடியது. அதுமாதிரியான அமைப்புகள் கோவிந்தநகரத்தில் இருப்பது புத்தகத்திலிருந்து தெரிய வருகின்றது. இந்த மாதிரியான ஆவணங்களைப் படிக்கும்போது, கிராமப் பின்னணியிலிருந்து வரும் என்னைப் போன்ற வாசகர்களை நமது கிராமத்தில் கிராம நிர்வாகம் எப்படியிருந்தது, இப்பொழுது எப்படியிருக்கின்றது என்று ஒப்புமைப்படுத்தத் தூண்டுகின்றது
வேளாண்மை
புத்தகத்தில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, கோவிந்தநகரம் மற்றும் அந்த வட்டார விவசாயத்தைப் பற்றிய காலந்தோறும் நடைமுறையிலிருந்த கோட்பாடுகளைப் (Policy Issues & Practices) பற்றித் தெரிந்துகொள்ள முடிகின்றது. கோவிந்தநகரமும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கண்டமனூர் ஜமீனைச் சேர்ந்தது. கண்டமனூர் ஜமீன் எல்லைக்குட்பட்டிருந்த வருசநாட்டு மலையிலிருந்தே வைகையாறு தோன்றுகிறது. தமிழகக் கலாச்சாரத்தோடிணைந்த, பாண்டி மண்ணிற்கு பெருமை சேர்த்த வைகை இன்று ஓரிரு மாதங்கள் மட்டும் நீர்வரத்துள்ள காட்டாறாக மாறிப்போனது. பெரியாறு அணை கட்டப்பட்டு நீர்மின்சாரத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் சுருளி ஆற்றின் மூலமாக வைகையில் கலப்பதும், வைகையணை கட்டப்பட்டதும், வைகையை உயிரோட்டமுள்ள நதியாகக் காண்பித்தாலும், பெரியாறு நீர் சுருளியாற்றின் மூலமாக வைகையில் கலக்குமுன்னுள்ள மேல்பகுதிதான் பூர்வ வைகை / தாய் வைகை ஆகும். தாய் வைகை முற்றிலும் கைவிடப்பட்டது என்பதுதான் உண்மை. சுருக்காகமாகச் சொன்னால் தாய் வைகையின் நீர்ப்பிடி நிலங்கள்தான் கண்டமனூர் ஜாமீன்.
நல்லவரென்று சொல்லப்பட்டாலும், ஜமீனுக்குரிய சூதுவாதும், பொறுப்பும் இல்லாததால், ஜாமீன் நிர்வாகம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, ஜமீனைப் பிடித்த சிக்கல், ஜமீன் குடிகளையும் பல்லாண்டுகள் பிடித்து உலுப்பி வந்திருக்கின்றது. "கடவுளால் கைவிடப்பட்ட கண்டமனூர் ஜமீன்" என்று சொல்லும்படி மக்கள் பல சிரமங்களை அனுபவித்துள்ளனர். வரிகட்ட முடியாத ஜமீன் நிர்வாகத்தை, ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு குர்த் எனும் ஆங்கிலேயரை அரசு நிர்வாகியாக்குகின்றது.
ஆங்கிலேய அரசு அவ்வட்டாரத்தை வளப்படுத்த முதலீடு செய்ய முன்வராது என்பதைப் புரிந்துகொண்ட குர்த் துரை, அப்பகுதியில் பாண்டியர் காலத்துப் புதையல்களும், பொக்கிசங்களும் இருப்பதாகக் கூறி, ஏழு கிராமங்களையும், வளமான மலை நிலங்களையும் ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு பம்பாய் சேட்களை (பட்டேல் சகோதரர்கள்) ஏலத்தில் எடுக்க வைக்கின்றார். நிலங்களை அளந்து குர்த் துரை முறைப்படுத்திக் கொடுக்க, கொஞ்ச நிலங்களை உள்ளூர் வாசிகள் வாங்குகின்றார்கள். மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளை பென்னி குயிக் பாணியில் கிழக்கே திருப்பி நீராதரங்களை வளப்படுத்த குர்த் சொன்ன யோசனைகளை சேட்டுக்கள் ஏற்காததால், மனமுடைந்து போகிறார்.
பட்டேல் சகோதரர்களிடமிருந்து பின் கோவை பி.எஸ்.ஜி சகோதரர்கள் நிலத்தை வாங்குகின்றனர். மனிதாபிமானமும், நவீனத்துவமும் கலந்த அவர்களின் நிர்வாக முறைகள் விவசாயத்திற்கு உந்துவிசை தர ஆரம்பித்தது.
குர்த் துரை யோசனைப்படி (தாய்) வைகையில் தடுப்பணைகள் கட்டி, ஆங்காங்கே குளங்களும், கண்மாய்களும் தோண்டப்பட்டிருந்தால், நிலத்தடி நீராதரம் பெருகி வட்டாரம் வளப்பட்டிருக்கலாம். வைகை அணையைக் கட்டி ஆயக்கட்டுப் பரப்பை அதிகப்படுத்திய அரசும், வைகையின் நீர்ப்பிடிப் பரப்பை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஊரையொட்டி ஓடும் வைகையாறு. ஆனால் பயிரிடப்பட்ட பயிர்களோ...சாமை, குதிரைவாலி, வரகு, கேள்வரகு, கம்பு, சோளம், மானாவரிப் பருத்தி, மிளகாய், வெங்காயம், பூண்டு, புகையிலை, சீரகம்...அரிசிச் சோறு சாப்பிட நினைத்த விவசாயிகள் சீப்பாலக்கோட்டையில் வயல் வாங்கி நெல் பயிரிட்டிருக்கின்றார்கள். வைகை மூலம் யார்யாரோ வளம் பெற, தங்கள் காலடியில் ஓடிய வைகையை எத்தனை நாளைக்கு குடிக்க, குளிக்க, குண்டிகழுவ மட்டும் ஒரு சமூகம் பயன்படுத்திக்கொண்டு சும்மா இருக்கும்.
வைகையை வசப்படுத்த வெறிகொண்டனர் போலும். ஆற்றில் துரவு கிணறுகள் அமைத்து, மோட்டார் பொருத்தி, குழாய்கள் மூலம் தங்கள் நிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அவர்களின் இந்த மதிநுட்பத்தோடு பசுமைப் புரட்சி முயற்சிகளும் கலந்தடிக்க, கடவுளால் கைவிடப்பட்ட கண்டமனூர் ஜமீன் பகுதியை சாமான்ய விவசாயிகள் தங்கள் முயற்சியால் வென்றெடுத்திருக்கின்றார்கள். அது சாதாரண வெற்றியல்ல என்பது மட்டும் அவ்வட்டார வாசிகளுக்கு தெரியும்
பாண்டியர் காலத்துப் புதையலும், பொக்கிசமும் இருப்பதாகக் கூறித்தான் குர்த் துரை, பம்பாய் பட்டேல் சகோதரர்களுக்கு ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு இவ்வட்டாரத்தை விற்றிருக்கின்றார். குர்த் துரை சொன்ன புதையல், பொக்கிஷத்தின் உண்மையான அர்த்ததைப் புரிந்துகொண்ட, இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு பிடிமண்ணிலிருந்தும் அள்ள அள்ளக் குறையாத பொக்கிசங்களை எடுத்திருக்கின்றார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான தேனி வேளாண்சந்தையை, ஒருகாலத்தில் ஏலத்திற்கு விடப்பட்ட பகுதி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களால் நிரப்பி வியக்க வைத்திருக்கின்றார்கள். கோவிந்தநகர விவசாயிகள் இதில் முக்கிய பங்கு வகித்தார்கள். கோவிந்தநகரம், விவசாயத்திற்காக தமிழகத்திலே அதிக மின்சாரம் பயன்படுத்திய முன்னுதாரனக் கிராமமாகின்றது.
கோவிந்தநகரத்தின் வேளாண்மையை ஆவணப்படுத்திய முறையிலிருந்து, அதுவும் read between the lines என்று சொல்வார்களே அதுமாதிரி படித்து புரிந்துகொள்ளும் போது நாம் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகின்றது. வேளாண்மைக்காக அரசுசெய்த முதலீட்டைவிட ஒவ்வொரு விவசாயியும், நீர்ப்பாசன உத்திரவாதத்தைப் பெற தனித்தனியே அல்லல் பட்டிருக்கின்றார்கள். மற்ற எந்த கட்டமைப்பையும்விட மின்சாரமும், தொழில்நுட்பமுமே (மின்சார மோட்டார்) அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாயிறுந்த்திருக்கின்றது. வைகை ஆற்றின் குறுக்கே ஆரம்பத்திலே பாலம் கட்டப்பட்டிருந்தால், மணல்மேட்டுப் பகுதியிலும், வருசநாட்டுப் பகுதியிலும் அவர்களின் விவசாய விரிவாக்கம் சிரமமில்லாமல் இருந்திருக்கும். வைகை ஆற்றின் நீர்ப்பிடி பிரதேசம் சரியான முறையில் பாராமரிக்கப் பட்டிருந்தால், வைகை ஆற்றில் நீரோடும் (Runoff) காலம், அதிகரித்து, நிலத்தடி நீராதாரம் ஓரளவாவது பாதுகாக்கப் பட்டிருக்கும். (தாய்) வைகையில் தடுப்பணைகள் என்ற பெயரில் அரசு செய்த சொதப்பல்களும், முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் PT ராஜன் கால்வாய் மூலமாக இப்பகுதிக்குக் கொண்டு வரச் செய்த முயற்சிகளில் அரசின் அக்கறையின்மை – அனைத்தும் சேர்த்தே இவ்வட்டார விவசாயிகளுக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தத் தனித்துவத்தை உள்வாங்காத எந்த அரசின் கொள்கை நடைமுறைகளையும், இங்கே பிரயத்தனத்தின் பேரில்தான் கொண்டுசெலுத்தமுடியும்.



பாகம் இரண்டு தொடரும்


11/13/10

ஏழ்மையென்பது கண்ணியமான மலக் கழிப்பிடங்களைத் தேடி அலைந்து கொண்டிருப்பதே

மலம் உருவாக்கும் பொருளாதார அரசியல் சுழற்சி
நான் முதுகலை படித்து முடிக்குமட்டிலும் (இடையில் ஓராண்டு பாளை புனித சவேரியார் கல்லூரிப் படிப்பின் போது மட்டும்) பெரும்பாலும் திறந்த வெளியிலே மலம் கழித்து வந்திருக்கின்றேன். நவீன கழிப்பறைகளுக்காக ஏங்கியதில்லை என்றாலும், சுத்தமான கழிப்பறைகள் தரும் விடுதலையுணர்வை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. அருந்ததியர் சமூகத்தின்பால் எனக்கிருந்த கரிசனமே என்னைக் கழிப்பறைகளைப் பற்றி அதிகம் சிந்திக்க வைத்தது. நல்ல கழிப்பறைகளும் கழிப்பறைத் தொழில் நுட்பமும், பல சமூகங்களை இழிநிலையிலிருந்து விடுவிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
மதுரை மாநகர கழிப்பறைகளைப் பற்றி மாணவர்களை ஆய்வு செய்ய தொடர்ந்து தூண்டியும் உற்சாகப்படுத்தியும் வந்துள்ளதை சில மாணவர்கள் அறிவார்கள்.சில ஆண்டுகள் கழிப்பறைகளைப் பார்வையிடுவதையே களப்பணியாகத் தந்துள்ளேன். ஆரோக்கியமான கழிப்பறைகள் அனைவருக்கும் வேண்டுமென்பது என்னுடைய கனவு.
II
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 உலக கழிப்பறை தினமாகக் (World Toilet Day) கொண்டாடி வருகின்றோம். அதை மனதில் வைத்து கழிப்பறைகளைப் பற்றி எழுதவேண்டுமென்ற ஆவல். ஒரு ஆர்வக் கோளாரில் ஆரம்பித்த முயற்சி 30 பக்கமுள்ள கட்டுரையாக நீண்டுவிட்டது.
மலத்தைப் பற்றியும், மலம் கழித்தலைப் பற்றியும் சிலாகித்து எழுதினாலே, அவ்வாறு எழுதுபவர், ஏதோ ஒரு வகையில் காம இச்சைக்குள்ளானவர் என்று பிராய்டின் உளவியல் கணிப்பாக இருந்ததால்,அதைப் பற்றி பேசவும், எழுதவும் இன்றளவும் பெரும்பாலோர்க்குத் துணிச்சலில்லை.
மலத்தைப் பற்றி எழுதுபவர் மன நோயாளி மாதிரி பார்க்கப்பட்டாலும், அதையும் மீறி மலம் கழித்தலைப் பற்றி எழுதுபவர்கள், சிந்திப்பவர்கள், செயல்பாட்டாளர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் கடவுளை சிருஷ்டித்த கிரேக்கர்கள், மலத்திற்கும், கடவுளைச (பெல்பெகார் - Belphegor) சிருஷ்டித்து, கோயிலெலுப்பி, அந்தக கோயிலுக்கு முன்னே மலங்கழிப்பதும், மலக் குப்பையை அங்கே குவித்து வைப்பதையும் புனிதச் சடங்காகச் செய்ததலிருந்து, இன்று வரை மக்கள் எப்படி மலங்களித்து வருகின்றார்களென்ற வரலாற்றை எழுதியிருக்கின்றார்கள்.
III
அனாதி காலம் தொட்டே மலம் அருவருப்பான வஸ்துவாகக் கருதப்பட்டாலும், அது அச்சுறுத்தும் வஸ்துவாக, விசத் தன்மையுள்ள வஸ்துவாக மாறியது, பொது சுகாதாரத்தைப் பற்றிய நமது கண்ணோட்டங்களால்தான். மலம் நீரோடு கூட்டணி சேரும்போதும், அதில் ஈக்கள், கொசுக்கள் ஊடாடி வரும்போதும் அதன் மூலமாக தொற்று வியாதிகள் பரவுகிறது என்று நிரூபிக்கபட்ட பிறகு, அருவருப்புடன் அச்சுறுத்தலும் சேர்ந்துகொள்ள, அதன் பிரதிபலிப்பாகவே மலம் பற்றிய நமது கண்ணோட்டம் மாறியது. பருவத்தையும் (விவசாயம்), தினத்தையும் (சுய தொழில்) அடிப்படையாகக் கொண்ட ஜீவனோபாய முறைகள், தொழிற் புரட்சிக்கு பின் நடந்த தொழில் மயமாதலால், நேரப்படி நடக்கும் ஜீவனோபாய முறைகளாயின. அருவருப்பு, சுகாதாரக்கேடு, நேரப்படியான வாழ்க்கை முறைகள் என்று மலம் கழித்தலைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வந்திருக்கின்றது.
IV
கடந்த காலத்தில் கிராம சுகாதார மேம்பாட்டிற்காக யுனிசெஃப் (UNICEF) நிறுவன உதவியுடன் கிராமங்கள் தோறும் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. அக் கழிப்பறைகள் சிதைந்து இப்போது காணாமல் போய்விட்டாலும், இன்னும் பல கிராமங்களில் நம் தவறான கொள்கை அணுகுமுறைகளுக்குச் (Public Policy) சாட்சியமாக அக்கழிப்பறைகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. கழிப்பறைகள் கட்டி பல ஆண்டுகள் கழிந்த பின்னும், அவைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டு நொந்து போன யுனிசெஃப், அதை மீண்டும் பயன்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ஆய்வை மேற்கொண்டது. கழிப்பறைகளை ஏன் பயன்படுத்தவில்லை என்பதற்கும் (உதாரணமாக முனி பார்வை படுமிடத்தில் கழிப்பறை கட்டப்பட்டதால், அதை முதலில் பயன்படுத்திய ஆணையும், பெண்ணையும் முனி அடித்து விட்டது என்பதும் ஒன்று), கழிப்பறைகளை பயன்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமென்பதற்கு (தண்ணீர் வசதி, விளக்கு வசதி, ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனி இடங்களில் கழிப்பறைகள்) மக்கள் சொன்ன காரணங்களை வைத்துப் பார்த்தால், கழிப்பறைகளைப் புனரமைக்க ஆகும் செலவைவிட அதை அப்படியே விட்டுவிடத் தோன்றியது. ஆனால் மக்களின் பதில்களுக்குப் பின்னே அவர்கள் சொல்லாமல் விட்ட காரணங்கள் பல..... மக்களுக்குக் கழிப்பறைகள் தேவைப்பட்டிருக்கவில்லை...எந்தெந்தக குடியிருப்புகளிலெல்லாம் ஓரிரு நிமிட நடையில் ஒதுங்குவதற்கு இடமிருந்ததோ, அங்கெல்லாம் கழிப்பறைகள் தேவைப்படவில்லை. ஆண்களுக்கு அறவே தேவைப்படவில்லை. பெண்களுக்கு மலம் கழித்து விட்டு அதைக் கழுவ வீட்டையொட்டியோ, வீட்டிற்குள்ளோ மறைவிடம் மட்டும் தேவைப்பட்டது. பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கு பல வீடுகளில் குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கழிப்பறைகள் சில வீடுகளில் இருந்தாலும், அது முறையாகப் பாராமரிக்கப்படவில்லை. திறந்த வெளியில் மலம் கழிப்பதில் சௌகரியக் குறைச்சல் இருந்தாலும், அதில் சுதந்திரமிருப்பதாகக் கருதினார்கள். “போனமா வந்தமா” என்றில்லாமல், கக்கூசைக் கட்டி அதைக் கழுவிக் கொண்டு...கழிப்பறைகள் இல்லாத சலிப்பு அவர்களிடமில்லை. பெரிய கிராமங்களில் (டவுன் பஞ்சாயத்து) ஓரிரு நிமிடங்களில் ஒதுங்க இடமில்லாதவர்கள், கழிப்பறைகளிலும் அதைப் பராமரிப்பதால் பெற்ற விடுதலையுணர்வையும், கிராம மக்களால் உணர முடியவில்லை. அவர்கள் அவஸ்தையை, அவஸ்தையென்றே ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில், கழிப்பறைகள் பொது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்று சொன்னால் அதை எப்படி அவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
இன்று நிலைமை மாறியிருக்கின்றது. காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பது தவறு என்று உணர்ந்ததால் அல்ல....ஓரிரு நிமிட நடையில் ஒதுங்கக் கிடைத்த மறைவிடங்கள் குக்கிராமங்களில் கூட இன்று காணாமல் போய்விட்டதால்தான். வீட்டோடிணைந்த கழிப்பறைகள் அவஸ்தையிலிருந்து தங்களை விடுவிக்கும் என்று பரவலாக மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
V
மலமோ, சிறுநீரோ அதைக் கழிக்க விரும்பும் அந்தக் கணத்தில் கழிக்கும்படியான சுதந்திரம் கிடைப்பது மிகப் பெரிய ஆசீர்வாதம். பெரும்பாலோர்க்கு அது வாய்ப்பதில்லை. கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் சமூகச் சூழலில், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய் என்பது மிகப் பெரிய சமூக முரண்பாடு. கடுமையான உழைப்பிற்கு பின் கிடைக்கும் அரிசி, ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்படுவது அதன் மகத்துவத்தை மட்டுப்படுத்துகின்றது. ஆனால், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயென்பது, அது ஏதோ இழிவான, ஆபத்தான செயல் மாதிரியும், அதை வெளியேற்ற கட்டணமென்பது நியாயமானதே என்று வாதிடப்படுகின்றது. கட்டணக் கழிப்பறைகள் நமக்கு சொல்லும் நீதியென்னவென்றால்.. வறுமையென்பது சமூக விளைவு.அதைக் கையாள அரசு உதவும். மலம், சிறுநீர் கழித்தலென்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. நம்மால் நெறிப்படுத்த முடிந்தது. அது தனிமனிதப் பொறுப்பு. பொது இடங்களில் அதைச் செய்யவேண்டுமென்றால் செய்யச் சுதந்திரமுண்டு. ஆனால் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும்.
VI
நான் வளர்ந்த கிராமத்தில், அந்த ஊர் தரத்தின்படி வசதியான, மரியாதைக்குரிய பெரியவர் ஒருவர் இருந்தார். மின்சாரம் அறிமுகமாகிய காலத்தில், தன் கிணற்றில் மோட்டாரை அறிமுகப்படுத்தியதால் அவர் “பம்பு தாத்தா” என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். முற்போக்கு விவசாயியான அவருக்கு கல்கோட்டை மாதிரியான காரை வீடு இருந்தது. காலை எழுந்ததும் தன் முகத்தைப் பார்ப்பதை சகுனமாகக் கொண்டிருந்ததால், அறையெங்கும் நிலைக்கண்ணாடிகள் பதித்திருந்ததாகவும், அது வசந்த மாளிகை சினிமாவில், சிவாஜி, வாணிஸ்ரீக்கு காட்டிய அறைமாதிரி இருக்குமென்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள்.
எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த “பம்பு தாத்தா” விற்கு மூட்டு வலி. அவரால் சம்மணமிட்டோ, குத்துக்காலிட்டோ உட்காரமுடியாது. குத்துக்காலிட முடியாது என்றால் மலங்களிக்க முடியாது. இந்த அவஸ்தையிலிருந்து தப்பிக்க, அந்தத் தாத்தாவும் ஒரு வழி கண்டறிந்திருந்தார். ஊரடியில், அதிக ஆள் நடமாட்டமில்லாத கிணற்றடியில் இருந்த ஒரு இடுப்பளவு கல்லில், தன் புட்டத்தின் ஒரு ஓரத்தை வைத்து, உட்கார்ந்து கொண்டு மலம் கழித்து, கிணற்றுத் தொட்டியில் இருக்கும் நீரைக் கொண்டு நின்று கொண்டே கழுவுவார். மனித மலமென்ன எல்லா நாளும், ஒரே மாதிரி, கயிறு மாதிரியா எதிலும் படாமல் விழும்? சில நேரங்களில் நாலா பக்கமும் தெறிக்கும்தானே. அந்தக் கல்லில் இடம் மாற்றி உட்கார்ந்து, தாத்தா மலம் கழித்ததால் கல்லெல்லாம் பீ ஒட்டிக்கொண்டிருக்கும். நாங்கள் பள்ளி செல்லும் வழியிலிருந்த அக்கல்லுக்கு “பீக்கல்” என்று பெயரிட்டிருந்தோம். பள்ளி செல்லும் போது அந்தக் கல்லைப் பார்ப்பதும், தாத்தா வந்துட்டுப் போய்ட்டாரா என்று பார்ப்பதும், சில நாட்களில் தாத்தா அக்கல்லில் உட்கார்ந்து லாவகமாக மலங்களிப்பதும், நின்றுகொண்டே கழுவுவதும் சிறுவர்களாகிய எங்களுக்கு வேடிக்கைக் காட்சி.
கழிப்பறைகளே அறிமுகமாகாத கற்காலத்தில் அவர் வாழவில்லைதான். வசதியிருந்தும், தனக்கு சௌகரியமான கழிப்பறையை உருவாக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை. அதுவே அவரை வேடிக்கைப் பொருளாக்கி, சிறுவர்களாகிய எங்களிடம் சிறுமைக்குள்ளாக வைத்தது.
VII
சரியான கழிப்பறை வசதியின்ன்மையால் பெண்கள்தாம் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் என்று அனைத்து விசயங்களிலும் அதிக இழப்புக்குள்ளாகியிருக் கின்றார்கள். பெண்ணுக்கே உரிய பல்வேறு சிக்கல்களினால் அவர்கள் கழிப்பறை களில் எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் ஆண்களை விட மிக அதிகம். உலக அளவிலான IPC (International Plumbing Code) யும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 எனும் விகிதத்தில் இருப்பது மிகவும் நல்லது, தேவையானது என அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பெரும்பாலான மேலை நாடுகள் ஆண்களுக்கான ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்காய் இரண்டு கழிப்பிடங்கள் வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கிறது. உதாரணத்துக்கு நியூயார்க்கின் யாங்கீ ஸ்டேடியத்தில் ஆண்களுக்கான கழிப்பறைகள் 176. பெண்களுக்கான கழிப்பிடங்கள் 358 !
பெண்களின் பிரத்யேகத் தேவைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது மட்டுமல்ல, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, கழிவைக் கையாளும் ஒட்டுமொத்தப் பொறுப்பை அவர்கள் தலையில் கட்டிவிடவும் செய்திருக் கின்றோம்.இது ஆணாதிக்கம் மட்டுமல்ல. இது பெண்களின் மீது காட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற பெரிய அராஜகம்
VIII
கழிவு மேலாண்மையில் உண்மையிலே மாற்றங்கள் கொண்டுவர முடியுமா? தன் மருத்துவ மேற்படிப்பில் Public Health படித்து மக்களுக்கு உண்மையான சேவைசெய்ய நினைத்த நகர் நல அதிகாரியாயிருந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன் நொந்துபோய்ச் சொன்ன கருத்துக்கள் நாம் எதிர்கொண்டிருக்கின்ற எதார்த்தத்தை பிரதிபலித்தது. “மருத்துவக் கல்லூரிகளில் பப்ளிக் ஹெல்த் (Public Health) படிப்பிற்கு போதுமான மரியாதை கொடுப்பதில்லை. டெபுடேசன் வாங்கிக் கொண்டு இங்கே வந்த பிறகுதான் பரீட்சார்த்தமாக பலவற்றைப் புரிந்துகொண்டேன். பீ அல்றதும், குண்டிகழுவி விடுறதும் சாதாரண வேலையல்லவென்று. பொதுநலன் கருதி ஆர்வமிகுதியால் எதையாவது செய்ய நினைத்தால் கையெல்லாம் பீ ஆக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான். செய்வது மாதிரி போக்கு காண்பித்துக்கொண்டு, சம்பாதிக்க வேண்டுமென்றால் இதைவிட பொருத்தமான இடம் அரசுத்துறையில் வேறுதுவும் இல்லை. Peace and Prosperity will dawn on those who pretend to work”.
நம்மைச் சுற்றியுள்ள பல எதார்த்தங்கள் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், இந்த சோர்வையும் மீறிப் பலவற்றை சிறுது சிறிதாகச் சாதித்தே வந்திருப்பதாகப்படுகின்றது.
உள்ளாட்சிகளில் ஊழல் இருந்தாலும், ஜனநாயகம் உத்தரவாதமாக்கப்பட்டுவிட்டது. என்னதான் சமூகத்தை கற்பனையான புனைவுகளால் போர்த்தினாலும், மாற்றுக் கருத்து சொல்பவர்களின் கழுத்து நெறிக்கப்பட்டாலும், எல்லாவற்றிற்கும் போக்கு காண்பித்துவிட்டு தங்கள் கருத்துக்களை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்து, அதிகார வர்க்கத்திற்கு தலை வலியையும், திருகு வலியையும் தரக்கூடிய ஜித்தன்களும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டுதானிருக்கின்றார்கள்.அவர்களுடைய முயற்சிகள் வீண்போகாது. மாற்றம் வந்துதானாக வேண்டும்.
மானுட விஞ்ஞானமும் அரசு நிர்வாகமும் (Sociology & Public Administration) நமக்கு சரியான தீர்வுகள் தரமுடியவில்லையா? அப்பொழுதும் கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கின்றது Bio-Technology. கிருமிகளற்ற, நாம் விரும்பும் மலர்களின் மணத்தோடு மலமும், சிறுநீரும் கழிக்க மாத்திரை கண்டுபிடிக்காமலா போய்விடுவார்கள்? அப்படி ஒரு மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டால் எப்படியிருக்குமென்பதை கொஞ்சம் கற்பனை செய்துதான் பார்ப்போமே?

விரிவான கட்டுரைக்கு Scribd தளத்திற்குச் செல்லவும்;
For a detailed essay go to my Scribd Pages

10/1/10

ஹார்வி மில்ஸ் (மதுரை கோட்ஸ்) - அறம் வளர்த்த ஆலை

மதுரைக்குக் கிடைத்த உந்து விசை

தங்களைச் சுற்றி நடப்பதில் சிலவற்றைப் பெரிதுபடுத்தியும், சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுமான மனித சுபாவம் விசித்திரமானது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்றத்தாழ்வென்பது சமூகத்தின் பல நிலைகளில் பளிச்சென்று தெரியாமலிருக்க, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தெரிய வந்திருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், குறிப்பாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நம்மைப் பெரிதும் கவலைப்பட வைத்திருக்கின்றது. பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிக் கவலைப் படும் நாம், சமூகத்தின் பிற தளங்களில் ஏற்பட்டிருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பிரக்ஞையற்றும், அதை இயற்கையானதென்றும் கருதுகின்றோம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நிலைகளில் சமனப்பட்டிருந்த பல குடியிருப்புகள், குறிப்பாக நகரங்களில் சில, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்டதற்கும், சில அசுர வளர்ச்சியைக் கண்டதற்குமான காரணங்களை அறிய முயன்றிருக்கின்றோமா? அதை இயற்கையானதென்று நினைப்பதோடு அல்லாமல் அதைப் பற்றிப் பெருமையும் அடைகின்றோம்.

மதுரைக்கும், கும்பகோணத்திற்கும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படியான ஏற்றத்தாழ்வுகள் இல்லை. (1891-இல் மதுரை ஜனத்தொகை 87,428 கும்பகோணத்தின்ஜனத்தொகை 54,307 ஆனால் 2001-இல் மதுரை ஜனத்தொகை 928,869 கும்பகோணத்தின் ஜனத்தொகை 140,021 இன்று அதைவிட அதிகம். கும்பகோணமும் கோவில் நகரம்தானே) ஆனால் இவ்விரு நகரங்களும், தற்போது சமநிலையிலா இருக்கின்றது? மதுரை, கும்பகோணத்தைவிட பின் தங்கியிருந்த கோவை கண்ட வளர்ச்சி பிரமிக்கத்தக்கதுதானே. இதற்கெல்லாம் காரணமென்ன?

நம்மைச் சுற்றி நடந்த பலவற்றை இயற்கையானது, விதியென்று நாம் நினைத்திருக்க. அதன் ”காரண காரியத் தொடர்புகளைக் கண்டறிந்து”, ”இது இதனால் இப்படி ஏற்பட்டது” என்று விளக்கமளித்து, நம்மைப் பாதிக்கும் விளவுகளைத் தவிர்த்து, நமக்குச் சாதகமான விளைவுகளைத் துரிதப்படுத்த அறிவியல் நமக்குக் கற்றுக் கொடுத்தது. எதையும் ”கூட்டிக் கழித்துக் கொண்டாடி” மகிழ அறிவியல் (both Pure & Social Sciences) நமக்குப் பெரிதளவு கைகொடுத்துள்ளது.

சம நிலையிலிருந்த இரண்டு பிராந்தியங்களில் (நாடுகள், நாட்டின் வட்டாரங்கள்), ஒன்று ஸ்தம்பித்து நிற்க, இன்னொன்று ”பாய்ச்சல் காட்டி” முன்னேறவுமான காரணங்கள் நமக்குப் பிடிபடாமலிருந்த போது, அதற்கான காரணங்களைப் பொருளாதார நிபுணர்கள் ஊகித்துச் சொன்னார்கள். அப் பொருளாதாரக் கோட்பாடுகள், ஊகங்கள் ஒவ்வொன்றும், நாடுகள், வட்டாரங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தை சரிசெய்ய உதவியிருக்கின்றது. அதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதுமளவிற்கு நான் பொருளாதாரம் அறிந்தவனல்ல..

பொருளாதார மேம்பாட்டைப் பற்றி என் மந்த புத்திக்கு விளங்கிக் கொள்ளும்படியாயிருந்தது பெராக்ஸ் (Perroux) என்ற பொருளாதார அறிஞரின் உந்து விசைத் தொழிலகங்கள் (Dynamic Propulsive Industry) என்ற கோட்பாடே. ஒரு பிராந்தியம் ”பொருளாதாரத்தில் பாய்ச்சல் காட்டி முன்னேறுவதற்கு” உந்து விசைத் தொழிலகங்களே காரணம் என்றார். உந்து விசைத் தொழிலகங்களின் ஸாமுத்ரிகா இலட்சணங்களாக அவர் குறிப்பிடுவது இன்னும் அழகு.

Ø உந்து விசைத் தொழிலகங்கள் (உவிதொ) நவீனத் தொழில் நுட்பத்தையும், நிர்வாக மேலாண்மையையும் கடைப்பிடிக்கும். (highly advanced level of technology and managerial expertise)

Ø உவிதொ மக்களின் வருமானத்திற்கேற்ப நுகர்வை அதிகரிக்கும் பொருட்களைத் தயாரிக்கும். (high income elasticity of demand for its products)

Ø உவிதொ உள்ளூர் பொருளாதாரப் பரிவர்த்தனையை பன்மடங்காக்கும். (Marked local multiplier effects)

Ø உவிதொ தொழிலகங்களுக்கிடையேயான தொடர்புகளை வலுவாக்கும். (strong inter-industry linkages with other sectors)

இப்படிப்பட்ட குணக்கூறுகளைக் கொண்ட ஒரு உந்து விசைத் தொழிலகம் ஒரு பிராந்தியத்தில் தோன்றினால்...பிறகென்ன.. அந்த வட்டாரமே வளப்படும்...வளமையாகும்.

இந்தப் பீடிகையெல்லாம் எதற்கென்றால் – கும்பகோணத்திற்கும், மதுரைக்குமிடையே ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்து கொள்ளத்தான். மதுரைக்கு ஒரு உந்து விசைத் தொழிலகம் கிடத்த மாதிரி, கும்பகோணத்திற்குக் கிடைக்கவில்லை. கோவை, மதுரையைவிடப் பொருளாதாரப் பாய்ச்சல் காட்டுகிறதென்றால், கோவையில் உவிதொ அதிகம். திருச்சிக்கு BHEL, திருப்பூருக்கு பனியன், சிவகாசிக்குத் தீப்பெட்டி என்று உந்து விசைகள். அந்த உந்து விசை ஒரு ஊருக்கு எப்படி வரும்? எப்படியும் வரலாம். அது இயற்கையாகவோ, திட்டமிட்டோ, அரசியல் சதியாகக் கூட இருக்கலாம். ஆனால் வந்து விட்டால் பொருளாதார வளர்ச்சி என்னும் சக்கரம் சுழ்ல ஆரம்பிக்கும்.

”வொக்…..வெள்ளைக்காரன் திருச்சி வரைக்கும் போட்டுத் தொலைச்ச அகல இரயில் பாதையை மதுரை வரைக்கும் போட்டிருந்த்தால் BHEL திருச்சிக்குப் போயிருக்குமா? என்று நான் மாணவனாயிருந்தபோது மதுரை பெரியவர் ஒருவர் ஆதங்கப்பட் கேட்டிருக்கின்றேன். BHEL எனும் உந்து விசையும் மதுரைக்கு வந்திருந்தால், அந்த நினைப்பே பரவசத்தை தருகின்றது

மதுரைக்கு அப்படி ஒரு உந்து விசைத் தொழிலகம் ஒன்று கிடைத்தது. இப்பொழுது மாதிரியிருந்திருந்தால் நான் தான் காரணம் என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடி ஓட்டுக் கேட்டிருப்பார்கள். ஆனால் அந்த உவிதொ எப்படியோ வந்தது. 1892ல், ஹார்வி பிரதர்ஸ் எனப்படும் ஆண்ட்ரு ஹார்வி, பிராங்க் ஹார்வி ஆகியோரால் ஹார்வி மில்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அம்பாசமுத்ரம் (1885) தூத்துக்குடியில் (1889) அவர்கள் ஆரம்பித்த நெசவாலைகளைவிட, பரப்பளவிலும், உற்பத்தியிலும், தொழிலாளர் எண்ணிக்கையிலும், மிகப் பெரியது மதுரையிலமைந்த ஹார்வி மில்ஸ் தான். மின்சார வசதி இல்லாத அக்காலத்தில், நீராவி மூலம் இராட்சத டர்பனை சுற்றவைத்து இயந்திரங்களை இயக்கியிருக்கின்றார்கள். மில்லில் இருக்கும் இயந்திரங்கள் எல்லாம் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த பிரமாண்ட டர்பனை (சக்கரம்) மதுரையிலேயே தயாரித்திருக்கின்றார்கள். இச்சக்கரம் இன்றும் மில்லில் நினைவுச் சின்னமாக காட்சி அளிக்கிறது. இச் சக்கரம் இயங்கிய போது வெளியேற்றப்பட்ட சுடுதண்ணீர் சென்ற வாய்க்காலை இன்றும் ‘சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு’ என்றே அழைக்கின்றனர். இந்த சுடுதண்ணீர் வாய்க்காலில் நீராடியும், துணிகளைத் துவைத்தும் மதுரை மக்கள் பெற்ற சிலிர்ப்பை பூரித்து சொல்லும் பெரியவர்கள் சிலர் இன்றும் உள்ளனர்.

அறம் வளர்த்த ஆலை

தொடக்க காலத்தில் தமுக்கடித்து கூவி அழைத்து ஆண்களையும், பெண்களையும் வேலைக்கு அமர்த்திய இந்நிறுவனத்தில் 18,000 பேருக்கு மேல் வேலை செய்தனர். 18 ஆயிரம் பேருக்கு வேலையென்றால் 18 ஆயிரம் குடும்பங்கள் – ஒரு குடும்பத்திற்கு ஐவர் என்று வைத்துக் கொண்டால், 85 ஆயிரம் பேர்கள்; அவர்களுக்கு தேவையான பொருட்கள், சேவையைத் தர கடைகன்னிகள். அப்போதைய மதுரையின் பாதி ஜனத்தொகையை மதுரை மில்லே போஷித்தது. மில் தொழிலாளர்கள் வருமான வரி கட்டுமளவு சம்பளம். வக்கணையாகச் சாப்பிட கேண்டீன். மில்லில் தீபாவளி போனஸ் போட்டால் மதுரை ஜவுளிக் கடைகளுக்கும், நகைக் கடைகளுக்கும் கொண்டாட்டம். தொழிலாளர்கள் குடியிருக்க ஹார்வி பட்டி என்று தனி நகரியம். அங்கிருந்து மில்லுக்கு நேரடியாக இரயில் வசதி. அது மதுரையின் வசந்தகாலம். ஆடி, சித்திரை, ஆவணி, வெளி வீதிகளில் சிறைப்பட்டிருந்த மதுரையை ஹார்வி மில் சிறிது, சிறிதாக விரித்தது.

ஹார்வி மில்ஸ், மெஜுரா மில்ஸ், மெஜுரா கோட்ஸ், கோட்ஸ் வயலா என காலத்திற்கு காலம் மாறிய இந்நிறுவனம் பல தலைமுறையைக கண்டு விட்டது. ஹார்வி சகோதரர்களுக்குப் பின் வந்த தொழிலகங்கள்-தொழிலதிபர்கள் தங்களுடைய சமூகப் பொறுப்புகளால் மதுரையை வளமாக்கினார்கள். தியாகராஜ செட்டியார், டி.வி. சுந்தரம் ஐய்யங்கார் மதுரை மக்களால் கைகூப்பி வணங்கத் தக்கவர்கள். ஆனால் பஞ்சு துரைகள் என்றழைக்கப்பட்ட ஹார்வி சகோதரர்கள் காலில் விழுந்து வணங்கத்தக்கவர்கள்.

மதுரை கோட்ஸ் உருவாக்கிய உந்து விசை மதுரையோடு நின்றதாகத் தெரியவில்லை. ஆலைக்கு வேண்டிய பருததியையும், பஞ்சையும பெற தேனி வட்டாரத்திலும் கவனம் செலுத்தியதை நானே உணர்ந்துள்ளேன். மதுரை கோட்ஸ் ஆதரவால் வளர்ந்த பஞ்சறவை மில்களே, இன்று தேனியில் பஞ்சாலைகளாக வளர்ந்துள்ளது. தீவீர பருத்தி சாகுபடித்திட்டத்தின் (Intensive Cotton Development Programme) போது அரசுடன் இணைந்து மதுரை கோட்ஸ் செயல்பட்டது, பருத்தி தேனி வட்டார விவசாயிகளுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. நான் கூட மேற்படிப்பு படிப்பதை ஒத்தி வைத்து ஓராண்டு பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டேன். மேலும் தொடர்ந்திருந்தால்....என்னுடைய நல்வினை மேலே படித்து தப்பித்தேன்.

மதுரை மில்லே நடத்திய பள்ளிகள், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள், மதுரை மில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தவரின் துணைவியார் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட லேடி டோக் கல்லூரி, மதுரைக் கல்லூரியின் நூலகத்திற்கு அவர்கள் செய்த உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு மதுரை மில் துணை நின்றது, சாலையோரப் பூங்காக்கள், தடுப்புகள் என்று ஒரு காருண்ய அரசு செய்வதைப் போலல்லவா செய்திருக்கின்றார்கள். ஒரு நெசவாலை பருத்தியிலிருந்து பஞ்சு, நூல், துணி வகைகள் என்று மதிப்புக் கூட்டுவார்களென்று (Value Addition) கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் மதுரை கோட்சோ நெசவாலையின் உப பொருளாகக் (by product) கருணையையையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

எந்தவொரு நிறுவனமும் சந்திக்கும் தொழில் முறைப பிரச்சினைகளை இந்நிறுவனமும் சந்தித்திருக்கின்றது. ஆனால் அதைக் கையாண்ட விதம் வித்தியாசமானது. ஆரம்ப காலத்தில் மில்லில் உருவான தொழிற்சங்கங்களை நசுக்க முயன்று, பின் ஞானோதயம் ஏற்பட்டு, தொழிற்சங்கங்களை மேதா விலாசத்துடன் (enlightened அப்ரோச்) அணுகி, தொழிலாக

ஜனநாயகத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள். தொழிற் சங்கங்களைச் சமூக மூலதனமாகக் கருதியவர்கள். Peter Drucker என்ற Management Guru பிரேரித்த Management by Objectives (MBO) என்ற கோட்பாட்டிற்கு, இவர்களின் நிர்வாக முறைகளே உதாரணங்களாகப் பாடப் புத்தகங்களில் குறிக்கப்பட்டது. உலகத்தின் தலை சிறந்த பெண்மணியாகப் போற்றப்படும் இந்திரா நூயி மதுரை கோட்ஸில் பயிற்சி பெற்றவர்தானே.

மதுரை கோட்ஸ் அதன் உன்னத நிலையிலிருந்த போதுதான், அதன் நிர்வாக இயக்குனராக இருந்த திரு. எம்.பி.எஸ். ஹென்றி அவர்கள் மதுரை சமூகப் பணிக் கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவரானார்கள். இன்றைக்குத் தகவல் தொழில் நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் Infocys Narayamoorthy, HCL Shiv Nadar போன்று,பஞ்சாலைத் தொழிலில் முத்திரை பதித்த மதுரை கோட்ஸ் நிர்வாக இயக்குனர்,ஒரு சின்னஞ் சிறிய கல்லூரியின் ஆட்சிக் குழுவில் பங்கெடுத்து, கல்லூரி நிகழ்ச்சிகளிலெல்லாம், பணிவுடன் பங்கேற்றதை இப்பொழுது நினைத்தால், பெருமை கொள்வதற்கு பதிலாக உடல் நடுங்குகிறது. காரணம் ஹென்றி அவர்களின் அருமையைப் பற்றியோ, அவர் நிர்வாகத்தின் கீழிருந்த மதுரை கோட்ஸ் நிறுவனம் இந்தியப் பஞ்சாலைத் தொழ்லில் செலுத்திய ஆதிக்கம் பற்றியோ, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் கூட முன்ன்னனுமதியில் லாமல் அவரைச் சந்திக்க முடியாது என்பது பற்றியோ மாணவர்களாகிய எங்களுக்குத் தெரியாது. நரை விழுந்தால் தான் ஞானம் என்ற மாதிரி, மதுரை கோட்ஸ் பற்றிய அருமை பின்னாளில் தானே தெரிந்தது. ஹென்றியவர்கள் கல்லூரியோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு, கல்லூரியின் நிறுவனரும், இயக்குனருமான கேப்டன் த. வெ.பெ. இராஜா அவர்கள் ஹென்றியவர்களிடம் வைத்திருந்த நட்பும், இந்தியா, தமிழ்நாடு, மதுரை மீது ஹென்றியவர்களுக்கிருந்த வாஞ்சையும் ஒரு காரணம்.

வெள்ளைத் துரை மார்களின் மனமகிழ் மன்றமாக (English Recreation Club) விசாலமான பரப்பிலமைந்திருந்த, கலையழகு பொருந்திய கட்டிடத்தை, இந்தியாவின் மிக மிகப் பெரிய தொழிலகம், தமிழகத்தின் மிகப் பெரிய செல்வந்தர் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசோடு தன் தேவைக்குத் தருமாறு வற்புறுத்த, “You have money. You can get a place wherever you want. But I have decided to donate it for a socially useful purpose” என்று விலை மதிப்பற்ற ஒரு பொக்கிசத்தை சமூகப் பணிக் கல்லூரிக்குக் கொடுக்க முன்வந்த தார்மீக தைரியம் யாருக்கு வரும்? இப்பொழுது சமூக அறிவியல் கல்லூரி நடைபெறும் இடம் மதுரை கோட்சால ஹென்றியவர்களின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்கு, ஒரு சிறு தொகையை அடையாளமாகப் (Token) பெற்றுக்கொண்டு ஒரு வகையில் தானமாக வழங்கபட்ட இடமாகும். அந்த இடத்தின் மீது, சில அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே உருவாக்கிய வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டு கல்லூரி நிர்வாகம் படுகின்ற அவஸ்தையிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை.

கல்லூரிக்கு இடம் கொடுத்தது மட்டுமல்ல, திருப்பூரில் இயங்கிய மதுரை கோட்ஸ் Ginning Factory- ஐ dispose செய்த போது, அங்கிருந்த கேண்டீன் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அனுமதி கொடுக்க, அப்பொழுது பணியில் சேர்ந்திருந்த நான் அந்த வேலையைச் செய்து முடிக்குமாறு பணிக்கப்பட்டேன். நானும், அப்பொழுது கல்லூரியில் பணியாற்றிய கண்ணுச்சாமி என்ற கடைநிலை ஊழியரும் திருப்பூரில் ஒருவாரம் தங்கியிருந்து, ஏழெட்டு லாரி லோடுகளாக அப்பொருள்களை ஏற்றி அனுப்பினோம். அந்தப பொருட்களை வைத்துத்தான் புதிய வகுப்பறைகளை அதிகப் பொருட்செலவில்லாமல் கல்லூரியால் கட்டமுடிந்தது. அந்த ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடத்தில்தான் வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், மற்றும் விரிவாக்கப் பணி மையங்கள் என்று 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றது. வசதி வந்தபின் அதையே அடுக்குமாடி ஆக்கினார்கள். திருப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட அழகான சிமெண்டு பலகைகள்தான் மரத்தடியில் மாணவர்கள் ஓய்வாக உட்காரப் போடப்பட்டது.

Corporate Social Responsibility என்றாலே, ஒரு தொழிலகம், தன் பொருளை விற்பதற்கும், சந்தையில் தன்னுடைய அடையாளத்தை வலுப்படுத்தி, பங்கு மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்துவதற்குமான உத்தி என்று மலினப்பட்டுப் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், மதுரை கோட்சின் Corporate Social Responsibility –ஐ இன்றைய Corporate Houses -ஆல் கூடப் புரிந்து கொள்ளமுடியாதுதான். ஏனெனில் அது Corporate Social Responsibility மட்டுமல்ல...அதைவிட மேலானது. மதுரை கோட்ஸ்....அறம் வளர்த்த ஆலையல்லவா?

மதுரை கோட்ஸ் வளர்த்த தொழிற்சங்கமெனும் சமூக மூலதனம்.

நான் எம்.ஏ சமூகப் பணி படித்துக்கொண்டிருந்த போது, மதுரை கோட்ஸ் மிகப் பிரபலமாக விளங்கியது.மதுரை கோட்ஸிற்கு களப்பணி (inplant training) செல்வதென்பது கௌரவமான விஷயம். முதலாமாண்டில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலிருந்த மாணவர்களில் நான் ஒருவனாக இருந்தாலும், புதிதாகப் பொறுப்பேற்றிருந்த பேரா. முத்துவெங்கட்ராமன் அவர்களுக்கு என் மீது ஏற்பட்ட கசப்பால், என்னை மதுரை கோட்சில் போடாதது மட்டுமல்ல, என்னை ”நல் வழிப்படுத்தும்” நோக்கில் என்னை Deputy Commissioner of Labour (DCL) அலுவலகத்தில் போட்டு, என்னைத் தன்னுடைய மேற்பார்வையிலே வைத்துக் கொண்டார். வித்தியாசமான என் பாணி களப்பணியில் திருப்தியடைந்த பேராசிரியருக்கு நான் வெகு சீக்கிரமே பிரியமானவனாகிவிட என்னை அவருடைய “தேநீராலும் முரூக்காலும்” அடிக்கடி ஆசீர்வதித்தார்

DCL அலுவலகத்தின் மூலமாக தொழிற்சங்கத் தலைவர்களுடன் பழக வாய்ப்பேற்பட்டு, அப்பொழுது மதுரையில் மிகச் செல்வாக்குடனிருந்த HMS இராமையா (அவர் மூலமாக கோவை சுப்ரமணியன்) நாராயணன், INTUC ராமசந்திரன், கோவிந்தராஜன் AITUC நாராயணன் CITU தலைவராக உருவாகிக் கொண்டிருந்த மோகன் (எம்பி), TVS பொம்மையா போன்றவர்களுடன் பழக வாய்ப்பேற்பட்டது. இன்றைக்குப் போலல்லாமல் தொழிற்சங்கங்கள் வலிமையுடனிருந்த கால கட்டம். தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அரசியல் பின்னணியிருந்தாலும், அக்கால் அரசியல்வாதிகளுக்குரிய மனமாச்சரியங்கள் இல்லை.

பின் தென் மாவட்டத் தொழிற்சங்கங்களுக்கு முன் மாதிரியாயிருந்த Papanaasam Labour Union (PLU) தலைவர் P.A..கன்னையா (PAK) பிஏ.பிஎல். அவர்களுடன் நெருக்கமாகி, அவருடைய ஆளுமையால் கவரப்பட்டு, அவர் வாழ்க்கை வரலாறான “என் சுய சரிதை”யை எழுத பக்கத்துணையாயிருந்து – நான் கற்றுக் கொண்டது ஏராளம். Papanaasam Labour Union (PLU) முழுக்க முழுக்க மதுரை கோட்சில் மட்டும் செயல்பட்ட யூனியன். ஆகையால், PAK அவர்களுடைய வாழ்க்கை வரலாறென்பது மதுரை கோட்சை மையப்படுத்தியே சுழன்றது. மதுரை கோட்ஸ் பற்றியும், மதுரை கோட்ஸ் கையாண்ட தொழிலக உறவுகள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு பிஏகே அவர்களின் சுய சரிதை பெரும் பொக்கிஷம். சங்கச் சந்தாவை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து வாங்காமல் தொழிளார்களிடமிருந்தே நேரிடையாக வசூலித்த தார்மீக தைரியம் பிஎல்யு சங்கத்திடமிருந்தது. சங்கத்திற்கு என்று தனியாக அச்சுக் கூடம், மாதப் பத்திரிக்கை, வாசகசாலை, பயிற்சி கூடம், நலத்திட்டங்கள், வைப்புநிதி என்று முன்மாதிரியாக PLU சங்கம் நடத்தப்பட்டது. அம்பாசமுத்திரம் மதுரை கோட்சில் PLU தான் பெரிய யூனியன். சங்கத் தலைவர் P.A..கன்னையா அனைத்துத் தரப்பினரின் மரியாதையையும் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட தலைவர், என்னை அம்பாசமுத்திரத்திற்கு அழைத்து, பி.எல்.யு வின் எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்து, என்னைப் போன்றவர்கள் தொழிற்சங்கப் பணிக்கு வரவேண்டுமென்றும், பொறுப்பான, நேர்மைத் திறம் கொண்ட, தொழிலாளர் வர்க்கத்தின் பால் அன்புகொண்ட வெளிநபர்கள் தங்களுக்குத் தலைமையேற்பதில் PLU சங்கத்தினருக்கு உடன்பாடே என்றெல்லாம் கூறி, அவருடைய சுயசரிதையை வெளியிடுவதில் நான் காட்டிய அக்கறையையும், என்னுடைய சிந்தனைப் போக்கும் பழகும் விதமும் பெரும்பாலான சங்க செயற்குழு உறுப்பினர்களைக் கவர்ந்துள்ளதாகவும், தனக்குப் பின்னர் பி.எல்.யு வின் தலைமைப் பொறுப்பை ஏற்க பயிற்சி பெறவேண்டுமென்றும், கல்லூரியில் பேராசிரியப் பணியில் நான் பெரும் ஊதியம்ளவிற்கு பி.எல்.யூவினால் கொடுக்கமுடியுமென்றும் கூறி என் சம்மதத்தைக் கேட்க, உங்களுக்குப் பிறகு நானா? அதற்கு கொஞ்சம் கூட நான் தகுதியில்லாதவன் என்று பயத்துடனும், பணிவுடனும் மறுத்து விட்டேன். ஒரு உத்தமரின் ஆசையை நிராகரித்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு இன்றளவும் எனக்கு உண்டு.

போராட்டங்களால் மட்டும் இந்தியத் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கவில்லை. அப்பழுக்கற்ற சில தொழிற்சங்கத் தலைவர்களின் தார்மீக/ஆன்ம பலத்திற்கு முன் அரசும், தொழிலதிபர்களும் பல நேரங்களில் பணிந்ததாலும் தான் சில உரிமைகளும், சலுகைகளும் சாத்தியமாகியது என்று எனக்குப் படுகின்றது. P.A..கன்னையா (PAK) அப்படிப்பட்ட ஆன்ம/ தார்மீக பலம பொருந்திய தலைவராக எனக்குப் பட்டார்.

மதுரை கோட்சின் மிகப் பெரிய சமூகப் பங்களிப்பு அவர்கள் தொழிலக ஜனநாயகத்தைப் பேணியதுதான். தொழிற்சங்கங்களை தலைவலியாகக் கருதாமல்,அதை சமூக மூலதன்மாக் கருதினார்கள். PAK யும் PLU வும் அதற்கு சிறந்த உதாரணங்கள். அந்த வகையிலும் கூட மதுரை கோட்ஸ் அறம் வளர்த்தது.

எப்படி நன்றி சொல்லப் போகின்றோம்

வளர்ச்சிக்கு உந்து விசை மிக முக்கியம். முன்னேற்றம் முடுக்கிவிடப்பட வேண்டுமென்றால், சமூக, பொருளாதார, கலாச்சாரத் தளங்களில் உந்து விசை வேண்டும். மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு ஆண்ட்ரூ சகோதரர்கள், தியாகராஜ செட்டியார், டி.வி.சுந்தரம் ஐயங்கார் ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கது. இவர்களில்லாத மதுரையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. இவர்களின் நினைவு சமூக உடமையாக்கப்பட வேண்டும்.

பெரியார் அணையின் மூலமாக தங்களின் வாழ்விற்கு உத்தரவாதமளித்த பென்னி குயிக்கிற்கு சிலை வைத்து, அவரின் சந்ததியினரை அழைத்து வந்து கௌரவப்படுத்தி, பொதுப்பணித்துறையும், விவசாயிகளும் தங்களின் நன்றியை வெளிப்படுத்தி விட்டார்கள். மதுரை சமூகப் பணிக் கல்லூரி, கல்லூரி நூலகத்திற்கு மார்டின் ஹென்றி அவர்களின் பெயரை வைத்து நன்றிக்கடன் செலுத்திவிட்டது. மதுரைக்கு வளம் சேர்த்த மகத்தான மனிதர்களுக்கு மதுரை மக்கள் எப்படி நன்றி செலுத்தப் போகின்றார்களோ? பொருத்திருந்து பார்ப்போம்.

மதுரை சமூகப் பணிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரிஆட்சிக் குழுத் தலைவராக இருந்தவர் அப்பொழுது பஞ்சாலைத் கொடிகட்டிப் பறந்த மதுரை கோட்சின் நிர்வாக இயக்குநர் திரு.எம்.பி.எஸ். ஹென்றி என்ற ஆங்கிலேயர். கல்லூரியின் வளர்ச்சிக்கு பலவிதங்களிலும் அவர் உறுதுணையாக இருந்ததாக இயக்குநர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாங்கள் படித்தபோது கல்லூரிக்கு அடிக்கடி வருவார். அப்பொழுது அவருடைய மேன்மை பற்றியெல்லாம் எங்களுக்கு அதிகம் தெரியாது. பின்னாளில் அவரும், அவர் தலைமையேற்றிருந்த மதுரை கோட்ஸ் மில்லும் மதுரையின் வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பு மகத்தானது என்று புரிய வந்தது. அத்தகைய பெருமைக்குரிய மனிதர் பல ஆண்டுகள் கழித்து இவ்வாண்டு மீண்டும் கல்லூரிக்கு வருகின்றார். மதிக்கத்தக்க அம் மாமனிதரின் வருகையையொட்டிஎன் மனதில் ஓடிய நினைவலைகள்.