11/13/10

ஏழ்மையென்பது கண்ணியமான மலக் கழிப்பிடங்களைத் தேடி அலைந்து கொண்டிருப்பதே

மலம் உருவாக்கும் பொருளாதார அரசியல் சுழற்சி
நான் முதுகலை படித்து முடிக்குமட்டிலும் (இடையில் ஓராண்டு பாளை புனித சவேரியார் கல்லூரிப் படிப்பின் போது மட்டும்) பெரும்பாலும் திறந்த வெளியிலே மலம் கழித்து வந்திருக்கின்றேன். நவீன கழிப்பறைகளுக்காக ஏங்கியதில்லை என்றாலும், சுத்தமான கழிப்பறைகள் தரும் விடுதலையுணர்வை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. அருந்ததியர் சமூகத்தின்பால் எனக்கிருந்த கரிசனமே என்னைக் கழிப்பறைகளைப் பற்றி அதிகம் சிந்திக்க வைத்தது. நல்ல கழிப்பறைகளும் கழிப்பறைத் தொழில் நுட்பமும், பல சமூகங்களை இழிநிலையிலிருந்து விடுவிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
மதுரை மாநகர கழிப்பறைகளைப் பற்றி மாணவர்களை ஆய்வு செய்ய தொடர்ந்து தூண்டியும் உற்சாகப்படுத்தியும் வந்துள்ளதை சில மாணவர்கள் அறிவார்கள்.சில ஆண்டுகள் கழிப்பறைகளைப் பார்வையிடுவதையே களப்பணியாகத் தந்துள்ளேன். ஆரோக்கியமான கழிப்பறைகள் அனைவருக்கும் வேண்டுமென்பது என்னுடைய கனவு.
II
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 உலக கழிப்பறை தினமாகக் (World Toilet Day) கொண்டாடி வருகின்றோம். அதை மனதில் வைத்து கழிப்பறைகளைப் பற்றி எழுதவேண்டுமென்ற ஆவல். ஒரு ஆர்வக் கோளாரில் ஆரம்பித்த முயற்சி 30 பக்கமுள்ள கட்டுரையாக நீண்டுவிட்டது.
மலத்தைப் பற்றியும், மலம் கழித்தலைப் பற்றியும் சிலாகித்து எழுதினாலே, அவ்வாறு எழுதுபவர், ஏதோ ஒரு வகையில் காம இச்சைக்குள்ளானவர் என்று பிராய்டின் உளவியல் கணிப்பாக இருந்ததால்,அதைப் பற்றி பேசவும், எழுதவும் இன்றளவும் பெரும்பாலோர்க்குத் துணிச்சலில்லை.
மலத்தைப் பற்றி எழுதுபவர் மன நோயாளி மாதிரி பார்க்கப்பட்டாலும், அதையும் மீறி மலம் கழித்தலைப் பற்றி எழுதுபவர்கள், சிந்திப்பவர்கள், செயல்பாட்டாளர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் கடவுளை சிருஷ்டித்த கிரேக்கர்கள், மலத்திற்கும், கடவுளைச (பெல்பெகார் - Belphegor) சிருஷ்டித்து, கோயிலெலுப்பி, அந்தக கோயிலுக்கு முன்னே மலங்கழிப்பதும், மலக் குப்பையை அங்கே குவித்து வைப்பதையும் புனிதச் சடங்காகச் செய்ததலிருந்து, இன்று வரை மக்கள் எப்படி மலங்களித்து வருகின்றார்களென்ற வரலாற்றை எழுதியிருக்கின்றார்கள்.
III
அனாதி காலம் தொட்டே மலம் அருவருப்பான வஸ்துவாகக் கருதப்பட்டாலும், அது அச்சுறுத்தும் வஸ்துவாக, விசத் தன்மையுள்ள வஸ்துவாக மாறியது, பொது சுகாதாரத்தைப் பற்றிய நமது கண்ணோட்டங்களால்தான். மலம் நீரோடு கூட்டணி சேரும்போதும், அதில் ஈக்கள், கொசுக்கள் ஊடாடி வரும்போதும் அதன் மூலமாக தொற்று வியாதிகள் பரவுகிறது என்று நிரூபிக்கபட்ட பிறகு, அருவருப்புடன் அச்சுறுத்தலும் சேர்ந்துகொள்ள, அதன் பிரதிபலிப்பாகவே மலம் பற்றிய நமது கண்ணோட்டம் மாறியது. பருவத்தையும் (விவசாயம்), தினத்தையும் (சுய தொழில்) அடிப்படையாகக் கொண்ட ஜீவனோபாய முறைகள், தொழிற் புரட்சிக்கு பின் நடந்த தொழில் மயமாதலால், நேரப்படி நடக்கும் ஜீவனோபாய முறைகளாயின. அருவருப்பு, சுகாதாரக்கேடு, நேரப்படியான வாழ்க்கை முறைகள் என்று மலம் கழித்தலைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வந்திருக்கின்றது.
IV
கடந்த காலத்தில் கிராம சுகாதார மேம்பாட்டிற்காக யுனிசெஃப் (UNICEF) நிறுவன உதவியுடன் கிராமங்கள் தோறும் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. அக் கழிப்பறைகள் சிதைந்து இப்போது காணாமல் போய்விட்டாலும், இன்னும் பல கிராமங்களில் நம் தவறான கொள்கை அணுகுமுறைகளுக்குச் (Public Policy) சாட்சியமாக அக்கழிப்பறைகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. கழிப்பறைகள் கட்டி பல ஆண்டுகள் கழிந்த பின்னும், அவைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டு நொந்து போன யுனிசெஃப், அதை மீண்டும் பயன்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ஆய்வை மேற்கொண்டது. கழிப்பறைகளை ஏன் பயன்படுத்தவில்லை என்பதற்கும் (உதாரணமாக முனி பார்வை படுமிடத்தில் கழிப்பறை கட்டப்பட்டதால், அதை முதலில் பயன்படுத்திய ஆணையும், பெண்ணையும் முனி அடித்து விட்டது என்பதும் ஒன்று), கழிப்பறைகளை பயன்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமென்பதற்கு (தண்ணீர் வசதி, விளக்கு வசதி, ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனி இடங்களில் கழிப்பறைகள்) மக்கள் சொன்ன காரணங்களை வைத்துப் பார்த்தால், கழிப்பறைகளைப் புனரமைக்க ஆகும் செலவைவிட அதை அப்படியே விட்டுவிடத் தோன்றியது. ஆனால் மக்களின் பதில்களுக்குப் பின்னே அவர்கள் சொல்லாமல் விட்ட காரணங்கள் பல..... மக்களுக்குக் கழிப்பறைகள் தேவைப்பட்டிருக்கவில்லை...எந்தெந்தக குடியிருப்புகளிலெல்லாம் ஓரிரு நிமிட நடையில் ஒதுங்குவதற்கு இடமிருந்ததோ, அங்கெல்லாம் கழிப்பறைகள் தேவைப்படவில்லை. ஆண்களுக்கு அறவே தேவைப்படவில்லை. பெண்களுக்கு மலம் கழித்து விட்டு அதைக் கழுவ வீட்டையொட்டியோ, வீட்டிற்குள்ளோ மறைவிடம் மட்டும் தேவைப்பட்டது. பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கு பல வீடுகளில் குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கழிப்பறைகள் சில வீடுகளில் இருந்தாலும், அது முறையாகப் பாராமரிக்கப்படவில்லை. திறந்த வெளியில் மலம் கழிப்பதில் சௌகரியக் குறைச்சல் இருந்தாலும், அதில் சுதந்திரமிருப்பதாகக் கருதினார்கள். “போனமா வந்தமா” என்றில்லாமல், கக்கூசைக் கட்டி அதைக் கழுவிக் கொண்டு...கழிப்பறைகள் இல்லாத சலிப்பு அவர்களிடமில்லை. பெரிய கிராமங்களில் (டவுன் பஞ்சாயத்து) ஓரிரு நிமிடங்களில் ஒதுங்க இடமில்லாதவர்கள், கழிப்பறைகளிலும் அதைப் பராமரிப்பதால் பெற்ற விடுதலையுணர்வையும், கிராம மக்களால் உணர முடியவில்லை. அவர்கள் அவஸ்தையை, அவஸ்தையென்றே ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில், கழிப்பறைகள் பொது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்று சொன்னால் அதை எப்படி அவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
இன்று நிலைமை மாறியிருக்கின்றது. காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பது தவறு என்று உணர்ந்ததால் அல்ல....ஓரிரு நிமிட நடையில் ஒதுங்கக் கிடைத்த மறைவிடங்கள் குக்கிராமங்களில் கூட இன்று காணாமல் போய்விட்டதால்தான். வீட்டோடிணைந்த கழிப்பறைகள் அவஸ்தையிலிருந்து தங்களை விடுவிக்கும் என்று பரவலாக மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
V
மலமோ, சிறுநீரோ அதைக் கழிக்க விரும்பும் அந்தக் கணத்தில் கழிக்கும்படியான சுதந்திரம் கிடைப்பது மிகப் பெரிய ஆசீர்வாதம். பெரும்பாலோர்க்கு அது வாய்ப்பதில்லை. கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் சமூகச் சூழலில், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய் என்பது மிகப் பெரிய சமூக முரண்பாடு. கடுமையான உழைப்பிற்கு பின் கிடைக்கும் அரிசி, ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்படுவது அதன் மகத்துவத்தை மட்டுப்படுத்துகின்றது. ஆனால், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயென்பது, அது ஏதோ இழிவான, ஆபத்தான செயல் மாதிரியும், அதை வெளியேற்ற கட்டணமென்பது நியாயமானதே என்று வாதிடப்படுகின்றது. கட்டணக் கழிப்பறைகள் நமக்கு சொல்லும் நீதியென்னவென்றால்.. வறுமையென்பது சமூக விளைவு.அதைக் கையாள அரசு உதவும். மலம், சிறுநீர் கழித்தலென்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. நம்மால் நெறிப்படுத்த முடிந்தது. அது தனிமனிதப் பொறுப்பு. பொது இடங்களில் அதைச் செய்யவேண்டுமென்றால் செய்யச் சுதந்திரமுண்டு. ஆனால் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும்.
VI
நான் வளர்ந்த கிராமத்தில், அந்த ஊர் தரத்தின்படி வசதியான, மரியாதைக்குரிய பெரியவர் ஒருவர் இருந்தார். மின்சாரம் அறிமுகமாகிய காலத்தில், தன் கிணற்றில் மோட்டாரை அறிமுகப்படுத்தியதால் அவர் “பம்பு தாத்தா” என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். முற்போக்கு விவசாயியான அவருக்கு கல்கோட்டை மாதிரியான காரை வீடு இருந்தது. காலை எழுந்ததும் தன் முகத்தைப் பார்ப்பதை சகுனமாகக் கொண்டிருந்ததால், அறையெங்கும் நிலைக்கண்ணாடிகள் பதித்திருந்ததாகவும், அது வசந்த மாளிகை சினிமாவில், சிவாஜி, வாணிஸ்ரீக்கு காட்டிய அறைமாதிரி இருக்குமென்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள்.
எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த “பம்பு தாத்தா” விற்கு மூட்டு வலி. அவரால் சம்மணமிட்டோ, குத்துக்காலிட்டோ உட்காரமுடியாது. குத்துக்காலிட முடியாது என்றால் மலங்களிக்க முடியாது. இந்த அவஸ்தையிலிருந்து தப்பிக்க, அந்தத் தாத்தாவும் ஒரு வழி கண்டறிந்திருந்தார். ஊரடியில், அதிக ஆள் நடமாட்டமில்லாத கிணற்றடியில் இருந்த ஒரு இடுப்பளவு கல்லில், தன் புட்டத்தின் ஒரு ஓரத்தை வைத்து, உட்கார்ந்து கொண்டு மலம் கழித்து, கிணற்றுத் தொட்டியில் இருக்கும் நீரைக் கொண்டு நின்று கொண்டே கழுவுவார். மனித மலமென்ன எல்லா நாளும், ஒரே மாதிரி, கயிறு மாதிரியா எதிலும் படாமல் விழும்? சில நேரங்களில் நாலா பக்கமும் தெறிக்கும்தானே. அந்தக் கல்லில் இடம் மாற்றி உட்கார்ந்து, தாத்தா மலம் கழித்ததால் கல்லெல்லாம் பீ ஒட்டிக்கொண்டிருக்கும். நாங்கள் பள்ளி செல்லும் வழியிலிருந்த அக்கல்லுக்கு “பீக்கல்” என்று பெயரிட்டிருந்தோம். பள்ளி செல்லும் போது அந்தக் கல்லைப் பார்ப்பதும், தாத்தா வந்துட்டுப் போய்ட்டாரா என்று பார்ப்பதும், சில நாட்களில் தாத்தா அக்கல்லில் உட்கார்ந்து லாவகமாக மலங்களிப்பதும், நின்றுகொண்டே கழுவுவதும் சிறுவர்களாகிய எங்களுக்கு வேடிக்கைக் காட்சி.
கழிப்பறைகளே அறிமுகமாகாத கற்காலத்தில் அவர் வாழவில்லைதான். வசதியிருந்தும், தனக்கு சௌகரியமான கழிப்பறையை உருவாக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை. அதுவே அவரை வேடிக்கைப் பொருளாக்கி, சிறுவர்களாகிய எங்களிடம் சிறுமைக்குள்ளாக வைத்தது.
VII
சரியான கழிப்பறை வசதியின்ன்மையால் பெண்கள்தாம் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் என்று அனைத்து விசயங்களிலும் அதிக இழப்புக்குள்ளாகியிருக் கின்றார்கள். பெண்ணுக்கே உரிய பல்வேறு சிக்கல்களினால் அவர்கள் கழிப்பறை களில் எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் ஆண்களை விட மிக அதிகம். உலக அளவிலான IPC (International Plumbing Code) யும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 எனும் விகிதத்தில் இருப்பது மிகவும் நல்லது, தேவையானது என அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பெரும்பாலான மேலை நாடுகள் ஆண்களுக்கான ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்காய் இரண்டு கழிப்பிடங்கள் வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கிறது. உதாரணத்துக்கு நியூயார்க்கின் யாங்கீ ஸ்டேடியத்தில் ஆண்களுக்கான கழிப்பறைகள் 176. பெண்களுக்கான கழிப்பிடங்கள் 358 !
பெண்களின் பிரத்யேகத் தேவைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது மட்டுமல்ல, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, கழிவைக் கையாளும் ஒட்டுமொத்தப் பொறுப்பை அவர்கள் தலையில் கட்டிவிடவும் செய்திருக் கின்றோம்.இது ஆணாதிக்கம் மட்டுமல்ல. இது பெண்களின் மீது காட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற பெரிய அராஜகம்
VIII
கழிவு மேலாண்மையில் உண்மையிலே மாற்றங்கள் கொண்டுவர முடியுமா? தன் மருத்துவ மேற்படிப்பில் Public Health படித்து மக்களுக்கு உண்மையான சேவைசெய்ய நினைத்த நகர் நல அதிகாரியாயிருந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன் நொந்துபோய்ச் சொன்ன கருத்துக்கள் நாம் எதிர்கொண்டிருக்கின்ற எதார்த்தத்தை பிரதிபலித்தது. “மருத்துவக் கல்லூரிகளில் பப்ளிக் ஹெல்த் (Public Health) படிப்பிற்கு போதுமான மரியாதை கொடுப்பதில்லை. டெபுடேசன் வாங்கிக் கொண்டு இங்கே வந்த பிறகுதான் பரீட்சார்த்தமாக பலவற்றைப் புரிந்துகொண்டேன். பீ அல்றதும், குண்டிகழுவி விடுறதும் சாதாரண வேலையல்லவென்று. பொதுநலன் கருதி ஆர்வமிகுதியால் எதையாவது செய்ய நினைத்தால் கையெல்லாம் பீ ஆக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான். செய்வது மாதிரி போக்கு காண்பித்துக்கொண்டு, சம்பாதிக்க வேண்டுமென்றால் இதைவிட பொருத்தமான இடம் அரசுத்துறையில் வேறுதுவும் இல்லை. Peace and Prosperity will dawn on those who pretend to work”.
நம்மைச் சுற்றியுள்ள பல எதார்த்தங்கள் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், இந்த சோர்வையும் மீறிப் பலவற்றை சிறுது சிறிதாகச் சாதித்தே வந்திருப்பதாகப்படுகின்றது.
உள்ளாட்சிகளில் ஊழல் இருந்தாலும், ஜனநாயகம் உத்தரவாதமாக்கப்பட்டுவிட்டது. என்னதான் சமூகத்தை கற்பனையான புனைவுகளால் போர்த்தினாலும், மாற்றுக் கருத்து சொல்பவர்களின் கழுத்து நெறிக்கப்பட்டாலும், எல்லாவற்றிற்கும் போக்கு காண்பித்துவிட்டு தங்கள் கருத்துக்களை சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்து, அதிகார வர்க்கத்திற்கு தலை வலியையும், திருகு வலியையும் தரக்கூடிய ஜித்தன்களும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டுதானிருக்கின்றார்கள்.அவர்களுடைய முயற்சிகள் வீண்போகாது. மாற்றம் வந்துதானாக வேண்டும்.
மானுட விஞ்ஞானமும் அரசு நிர்வாகமும் (Sociology & Public Administration) நமக்கு சரியான தீர்வுகள் தரமுடியவில்லையா? அப்பொழுதும் கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கின்றது Bio-Technology. கிருமிகளற்ற, நாம் விரும்பும் மலர்களின் மணத்தோடு மலமும், சிறுநீரும் கழிக்க மாத்திரை கண்டுபிடிக்காமலா போய்விடுவார்கள்? அப்படி ஒரு மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டால் எப்படியிருக்குமென்பதை கொஞ்சம் கற்பனை செய்துதான் பார்ப்போமே?

விரிவான கட்டுரைக்கு Scribd தளத்திற்குச் செல்லவும்;
For a detailed essay go to my Scribd Pages

1 comment:

Anonymous said...

Dear Sir. Every man freedom in our vast nation considers to make a piss or Lou anyplace he wishes in-spite he belong to the caste upper or the lower . Although, there are adequate toilet facilitates in the country, people neglect it because of a few unknown reasons which people fail to express.

The water problem prevailing is also a reason. We see a number of waterborne diseases because of this problem too.

There has to be adequate research to be conducted to know the real fact..Srivathsan