12/9/09
12/7/09
Untouchable Spring - தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்
தீண்டாத வசந்தம்
ஆசிரியரென்ற முறையில் சில நல்ல தமிழ்ப் புத்தகங்களைப படிக்க மாணவர்களுக்கு ஆலோசனை சொல்வதும், மாணவர்களும் தாங்கள் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியதும் கடந்த காலக் கனவாகிவிட்ட நிலையில், வினோத் அம்பேத்கர் என்ற முதலாண்டு (MSW) மாணவர், திரு. ஜி. கல்யாணராவ் தெலுங்கில் எழுதியதன் தமிழ் மொழிபெயர்ப்பான "தீண்டாத வசந்தம்" என்ற நாவலை படிக்குமாறு கொடுத்தார். வினோத் தலித் விடுதலையிலும், மேம்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருப்பவர். அவர் படிக்கக் கொடுத்த புத்தகமும் அதையே கருவாகக் கொண்டிருந்தது.
ஆக்க இலக்கியமும் சமூகப்பணியும் நெருங்கிய தொடர்புடையது. நான் ஆங்கில இலக்கியங்கள் அவ்வளவாகப் படித்திராவிட்டாலும், Charles Dickens தொடங்கி உலக இலக்கிய கர்த்தாக்களில் பலர், அவ்வக் காலத்திற்குரிய சமூக அமைப்பை, அதன் அவலங்களை, அதன் ஆற்றாமையை சமூகப் பணியாளர்கள் உணர்வு பூர்வமாக உள்வாங்க உதவிருக்கின்றார்கள். நானும் கூட சமூகப்பணியின் பல்வேறு கூறுகளை ஜெயகாந்தனைப படித்தே புரிந்து கொண்டேன். கி.ரா., வைரமுத்து, மேலாண்மை பொன்னுசாமி, நாஞ்சில் நாடான், சுந்தர ராமசாமி ....இப்படி பலரின் எழுத்துக்கள் என்னை எனக்குப் புரியவைத்தது. பாடப் புத்தகங்களை விட, ஆக்க இலக்கியத்தின் மூலமாக சமூகத்தைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை மாணவர்கள், குறிப்பாக சமூகப் பணி மாணவர்கள் எளிதாக உள்வாங்க முடியும் என்ற நம்பிக்கை எனககிருந்தாலும், அந்த நம்பிக்கையை பரவலாக நடைமுறைப்படுத்துமளவு, சுழலோ, அறிவுத்திறனோ, ஆளுமையோ எனக்கு வாய்க்கப் பெறாததால், எனது நம்பிக்கைகளை என்னளவிற்குக குறைத்துக் கொண்டேன். காலப் போக்கில் வாசிப்பு கூட குறைந்து கொண்டு வந்தது.
புத்தகத்தின் வெளியீட்டாளர் திரு. பாலாஜி அவர்கள் பதிப்புரையில் சொல்லிய மாதிரி, இலக்கியம் நமது உணர்ச்சிகளை தூண்டச் செய்து, நமது உள்ளுணர்வுகளை பொங்கவைக்கின்றது. தீண்டாத வசந்தம் நாவல் அதை அற்புதமாகச் செய்திருக்கின்றது என்பதில் ஐயமேதுமில்லை.
தீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உணர்வு பூர்வமான வரலாற்றை இந்நாவல் காட்சிப்படுத்துகிறது. நாவலைப் பற்றி திரு. வே. மீனாட்சி சுந்தரம் எழுதிய மதிப்பீடு, நாவலின் விற்பனையை சற்று பாதிப்படையச் செய்தது (பக்.4) என்பதைப் படித்த போது, பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் என்ற ஜெயகாந்தன் நாவலின் மக்கள் பதிப்பு அறிமுக விழா மதுரையில் நடந்த போது, ஏற்பட்ட சம்பவம் நினைவிற்கு வந்தது.
"ஒவ்வொரு தடவையும் நாவலின் நாயகி, கல்யாணியை வெற்றிலைச் சாறைத் துப்ப முற்றத்திற்கு அனுப்பாமல், பக்கத்தில் எச்சில் பணிக்கத்த்தை வைத்திருந்தால், ரங்கா -கல்யாணி உரையாடல் பல நேரங்களில் தடைபடாமல் தொடர்ந்திருக்கும்" என்ற அர்த்தத்தில் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர். தமிழண்ணல் கருத்துக் கூற, ஏற்புரை நிகழ்த்திய ஜெயகாந்தன், “அவள் என்னுடைய நாயகி! அப்படித்தான் எச்சிலைத் துப்புவாள்! அதை விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை" என்று ஆண்மையோடு பொங்கினார். ஜெயகாந்தனின் ஆவேசம் எனக்குப் பிடித்திருந்தது.
தமிழண்ணல் சொன்ன மாதிரியே, வே.மீ யும் " போராட்டக்காரனான ஜெசி மலைப்பாறையில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? அவன் மக்களோடல்லவா இருந்திருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார். ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டுமென்றால், "அவன் ஜெசி! அவன் அப்படித்தான் வானத்தைப் பார்ப்பான்" என்றுதான் முடிக்க வேண்டும்.
தலித்துகளுக்கென்று இன்று வலிமையான இயக்கங்களும், தலைவர்களும் உள்ளனர். அரசியல், அரசாங்கம், அறிவியல் (தொழில் நுட்பம்), ஒவ்வொரு ஊரிலுமிருந்த விவரிக்க இயலாத உட்சாதி போட்டிகள், அது உருவாக்கிய உறவு முறைகள்... தலித்துகளின் விடுதலை ஒரு வழிப் பாதையாக இருந்ததில்லை. ஆனால், அந்தத் தடங்களில் நடந்து, நடந்து அதைப் பாதையாக்கிக் காட்டிய பெருமை தலித்துகளுக்கே உண்டு. நம்மில் பலர் மேலிருந்து கைகளைக் கொடுத்து தூக்கிவிட்டிருக்கலாம். அப்படி மேலே இழுக்கும் போது, முழுச் சுமையால் நாம் மூச்சுத் திணராத அளவுக்குக் கிழிருந்து முட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள்தான்.
காலந்தோறுமான தலித் விடுதலையை நான் கூர்ந்து கவனித்தவனில்லை. இருப்பினும் 60 களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தபோது, அரசியல் கட்டாயத்தால் தலித்துகளுடனான சமூக உறவுகள் சற்று மாற்றமடைய ஆரம்பித்ததை நான் கவனித்திருக்கின்றேன். பசுமைப் புரட்சிக்க்குப் பின், அதுகாறும் சோற்றுக்கும், குறைந்த சம்பளத்திற்கும் "attached labour" ஆக இருந்த தலித்துக்கள், எவரிடமும் வேலைக்குச் செல்லும் சுதந்திரமான தினக் கூலிகளானார்கள்.வெண்மைப் புரட்சி, கால்நடை வளர்ப்பிலிருந்த கண்ணோட்டத்தை மாற்றியதால், பண்ணை மாடுகளைச சோற்றுக்காக பராமரித்துக் கொண்டிருந்த தலித்துக்கள் அதிலிருந்து விடுதலை பெற்றனர். மின்சாரம், தார்ச்சாலை, பேருந்துகள் அறிமுகம் என்று கட்டமைப்பு வசதிகள் தலித்துகளின் மீதான கட்டுபாடுகளை தளரச் செய்தது. இயந்திரங்கள் நுழைய, நுழைய சமத்துவம் பல வழிகளில் சாத்தியமாயிற்று என்பது என்னுடைய கணிப்பு
அரசியல், அரசாங்கம், அறிவியல் - இவை மூன்றும் வடிவமைத்துக் கொடுக்கும் வழிமுறைகளை, அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு மாதிரியாக உள்வாங்குகிறது. இந்த உள்வாங்கலுக்கு ஏற்ப அபூர்வமாக சில இடங்களில் ஒட்டு மொத்த சமூகமும் மற்றுருவாக்கமடைகிறது. சில இடங்களில், சமூகங்களுக்கிடையில் சமகாலச் சிந்தனைப் போக்கிற்கு ஒத்திசைவற்ற உறவு முறைகளை உருவாக்குகிறது. இந்த ஒத்திசைவற்ற உறவு முறைகளால் எல்லோரும் அலைக்கழிக்கப்படுகிறோம். அவஸ்தைக்கு உள்ளாகிறோம்.தலித் விடுதலையும், தலித் விடுதலையின் மீது அசூயை கொள்ளாத மனப்பாங்கும், அரசியல், சமூக, பொருளாதாரரீதியாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் எழுச்சி கொள்ளும் போது, அவர்களே எழுந்து நிற்கும் போது, நாமும் எழுந்து நிற்கலாம் என்று போட்டியிட அல்ல, மாறாக எல்லோரிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பது நம்முன்னே உள்ள மிகப் பெரிய சவால். இந்தச் சவாலைச் சாத்தியமாக்குமளவு நம்மிடையே ஆக்க இலக்கியங்கள் படைக்கபபடவேண்டும். படைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
சந்தேகத்திற்கிடமில்லாமல் நேற்றைவிட இன்று நீதிமிக்க சமூகத்தை நாம் படைத்திருக்கின்றோம். நம்முடைய போராட்டங்கள் எல்லாம் நாம் தோற்றுப் போய்விட்டதற்கான அடையாளங்களல்ல. மாறாக இலட்சிய சமூகம் படைப்பதற்காகத்தான். ஏனனெனில், அங்கு குறைவற்ற, பழுதுபாடாத நீதி இருக்குமென்று நம்புகிறோம்.