10/1/10
ஹார்வி மில்ஸ் (மதுரை கோட்ஸ்) - அறம் வளர்த்த ஆலை
தங்களைச் சுற்றி நடப்பதில் சிலவற்றைப் பெரிதுபடுத்தியும், சிலவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுமான மனித சுபாவம் விசித்திரமானது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்றத்தாழ்வென்பது சமூகத்தின் பல நிலைகளில் பளிச்சென்று தெரியாமலிருக்க, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தெரிய வந்திருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், குறிப்பாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நம்மைப் பெரிதும் கவலைப்பட வைத்திருக்கின்றது. பொருளாதாரத் தளத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிக் கவலைப் படும் நாம், சமூகத்தின் பிற தளங்களில் ஏற்பட்டிருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பிரக்ஞையற்றும், அதை இயற்கையானதென்றும் கருதுகின்றோம்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நிலைகளில் சமனப்பட்டிருந்த பல குடியிருப்புகள், குறிப்பாக நகரங்களில் சில, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்டதற்கும், சில அசுர வளர்ச்சியைக் கண்டதற்குமான காரணங்களை அறிய முயன்றிருக்கின்றோமா? அதை இயற்கையானதென்று நினைப்பதோடு அல்லாமல் அதைப் பற்றிப் பெருமையும் அடைகின்றோம்.
மதுரைக்கும், கும்பகோணத்திற்கும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படியான ஏற்றத்தாழ்வுகள் இல்லை. (1891-இல் மதுரை ஜனத்தொகை 87,428 கும்பகோணத்தின்ஜனத்தொகை 54,307 ஆனால் 2001-இல் மதுரை ஜனத்தொகை 928,869 கும்பகோணத்தின் ஜனத்தொகை 140,021 இன்று அதைவிட அதிகம். கும்பகோணமும் கோவில் நகரம்தானே) ஆனால் இவ்விரு நகரங்களும், தற்போது சமநிலையிலா இருக்கின்றது? மதுரை, கும்பகோணத்தைவிட பின் தங்கியிருந்த கோவை கண்ட வளர்ச்சி பிரமிக்கத்தக்கதுதானே. இதற்கெல்லாம் காரணமென்ன?
நம்மைச் சுற்றி நடந்த பலவற்றை இயற்கையானது, விதியென்று நாம் நினைத்திருக்க. அதன் ”காரண காரியத் தொடர்புகளைக் கண்டறிந்து”, ”இது இதனால் இப்படி ஏற்பட்டது” என்று விளக்கமளித்து, நம்மைப் பாதிக்கும் விளவுகளைத் தவிர்த்து, நமக்குச் சாதகமான விளைவுகளைத் துரிதப்படுத்த அறிவியல் நமக்குக் கற்றுக் கொடுத்தது. எதையும் ”கூட்டிக் கழித்துக் கொண்டாடி” மகிழ அறிவியல் (both Pure & Social Sciences) நமக்குப் பெரிதளவு கைகொடுத்துள்ளது.
சம நிலையிலிருந்த இரண்டு பிராந்தியங்களில் (நாடுகள், நாட்டின் வட்டாரங்கள்), ஒன்று ஸ்தம்பித்து நிற்க, இன்னொன்று ”பாய்ச்சல் காட்டி” முன்னேறவுமான காரணங்கள் நமக்குப் பிடிபடாமலிருந்த போது, அதற்கான காரணங்களைப் பொருளாதார நிபுணர்கள் ஊகித்துச் சொன்னார்கள். அப் பொருளாதாரக் கோட்பாடுகள், ஊகங்கள் ஒவ்வொன்றும், நாடுகள், வட்டாரங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தை சரிசெய்ய உதவியிருக்கின்றது. அதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதுமளவிற்கு நான் பொருளாதாரம் அறிந்தவனல்ல..
பொருளாதார மேம்பாட்டைப் பற்றி என் மந்த புத்திக்கு விளங்கிக் கொள்ளும்படியாயிருந்தது பெராக்ஸ் (Perroux) என்ற பொருளாதார அறிஞரின் உந்து விசைத் தொழிலகங்கள் (Dynamic Propulsive Industry) என்ற கோட்பாடே. ஒரு பிராந்தியம் ”பொருளாதாரத்தில் பாய்ச்சல் காட்டி முன்னேறுவதற்கு” உந்து விசைத் தொழிலகங்களே காரணம் என்றார். உந்து விசைத் தொழிலகங்களின் ஸாமுத்ரிகா இலட்சணங்களாக அவர் குறிப்பிடுவது இன்னும் அழகு.
Ø உந்து விசைத் தொழிலகங்கள் (உவிதொ) நவீனத் தொழில் நுட்பத்தையும், நிர்வாக மேலாண்மையையும் கடைப்பிடிக்கும். (highly advanced level of technology and managerial expertise)
Ø உவிதொ மக்களின் வருமானத்திற்கேற்ப நுகர்வை அதிகரிக்கும் பொருட்களைத் தயாரிக்கும். (high income elasticity of demand for its products)
Ø உவிதொ உள்ளூர் பொருளாதாரப் பரிவர்த்தனையை பன்மடங்காக்கும். (Marked local multiplier effects)
Ø உவிதொ தொழிலகங்களுக்கிடையேயான தொடர்புகளை வலுவாக்கும். (strong inter-industry linkages with other sectors)
இப்படிப்பட்ட குணக்கூறுகளைக் கொண்ட ஒரு உந்து விசைத் தொழிலகம் ஒரு பிராந்தியத்தில் தோன்றினால்...பிறகென்ன.. அந்த வட்டாரமே வளப்படும்...வளமையாகும்.
இந்தப் பீடிகையெல்லாம் எதற்கென்றால் – கும்பகோணத்திற்கும், மதுரைக்குமிடையே ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்து கொள்ளத்தான். மதுரைக்கு ஒரு உந்து விசைத் தொழிலகம் கிடத்த மாதிரி, கும்பகோணத்திற்குக் கிடைக்கவில்லை. கோவை, மதுரையைவிடப் பொருளாதாரப் பாய்ச்சல் காட்டுகிறதென்றால், கோவையில் உவிதொ அதிகம். திருச்சிக்கு BHEL, திருப்பூருக்கு பனியன், சிவகாசிக்குத் தீப்பெட்டி என்று உந்து விசைகள். அந்த உந்து விசை ஒரு ஊருக்கு எப்படி வரும்? எப்படியும் வரலாம். அது இயற்கையாகவோ, திட்டமிட்டோ, அரசியல் சதியாகக் கூட இருக்கலாம். ஆனால் வந்து விட்டால் பொருளாதார வளர்ச்சி என்னும் சக்கரம் சுழ்ல ஆரம்பிக்கும்.
”வொக்…..வெள்ளைக்காரன் திருச்சி வரைக்கும் போட்டுத் தொலைச்ச அகல இரயில் பாதையை மதுரை வரைக்கும் போட்டிருந்த்தால் BHEL திருச்சிக்குப் போயிருக்குமா? என்று நான் மாணவனாயிருந்தபோது மதுரை பெரியவர் ஒருவர் ஆதங்கப்பட் கேட்டிருக்கின்றேன். BHEL எனும் உந்து விசையும் மதுரைக்கு வந்திருந்தால், அந்த நினைப்பே பரவசத்தை தருகின்றது
மதுரைக்கு அப்படி ஒரு உந்து விசைத் தொழிலகம் ஒன்று கிடைத்தது. இப்பொழுது மாதிரியிருந்திருந்தால் நான் தான் காரணம் என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடி ஓட்டுக் கேட்டிருப்பார்கள். ஆனால் அந்த உவிதொ எப்படியோ வந்தது. 1892ல், ஹார்வி பிரதர்ஸ் எனப்படும் ஆண்ட்ரு ஹார்வி, பிராங்க் ஹார்வி ஆகியோரால் ஹார்வி மில்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அம்பாசமுத்ரம் (1885) தூத்துக்குடியில் (1889) அவர்கள் ஆரம்பித்த நெசவாலைகளைவிட, பரப்பளவிலும், உற்பத்தியிலும், தொழிலாளர் எண்ணிக்கையிலும், மிகப் பெரியது மதுரையிலமைந்த ஹார்வி மில்ஸ் தான். மின்சார வசதி இல்லாத அக்காலத்தில், நீராவி மூலம் இராட்சத டர்பனை சுற்றவைத்து இயந்திரங்களை இயக்கியிருக்கின்றார்கள். மில்லில் இருக்கும் இயந்திரங்கள் எல்லாம் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த பிரமாண்ட டர்பனை (சக்கரம்) மதுரையிலேயே தயாரித்திருக்கின்றார்கள். இச்சக்கரம் இன்றும் மில்லில் நினைவுச் சின்னமாக காட்சி அளிக்கிறது. இச் சக்கரம் இயங்கிய போது வெளியேற்றப்பட்ட சுடுதண்ணீர் சென்ற வாய்க்காலை இன்றும் ‘சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு’ என்றே அழைக்கின்றனர். இந்த சுடுதண்ணீர் வாய்க்காலில் நீராடியும், துணிகளைத் துவைத்தும் மதுரை மக்கள் பெற்ற சிலிர்ப்பை பூரித்து சொல்லும் பெரியவர்கள் சிலர் இன்றும் உள்ளனர்.
அறம் வளர்த்த ஆலை
தொடக்க காலத்தில் தமுக்கடித்து கூவி அழைத்து ஆண்களையும், பெண்களையும் வேலைக்கு அமர்த்திய இந்நிறுவனத்தில் 18,000 பேருக்கு மேல் வேலை செய்தனர். 18 ஆயிரம் பேருக்கு வேலையென்றால் 18 ஆயிரம் குடும்பங்கள் – ஒரு குடும்பத்திற்கு ஐவர் என்று வைத்துக் கொண்டால், 85 ஆயிரம் பேர்கள்; அவர்களுக்கு தேவையான பொருட்கள், சேவையைத் தர கடைகன்னிகள். அப்போதைய மதுரையின் பாதி ஜனத்தொகையை மதுரை மில்லே போஷித்தது. மில் தொழிலாளர்கள் வருமான வரி கட்டுமளவு சம்பளம். வக்கணையாகச் சாப்பிட கேண்டீன். மில்லில் தீபாவளி போனஸ் போட்டால் மதுரை ஜவுளிக் கடைகளுக்கும், நகைக் கடைகளுக்கும் கொண்டாட்டம். தொழிலாளர்கள் குடியிருக்க ஹார்வி பட்டி என்று தனி நகரியம். அங்கிருந்து மில்லுக்கு நேரடியாக இரயில் வசதி. அது மதுரையின் வசந்தகாலம். ஆடி, சித்திரை, ஆவணி, வெளி வீதிகளில் சிறைப்பட்டிருந்த மதுரையை ஹார்வி மில் சிறிது, சிறிதாக விரித்தது.
ஹார்வி மில்ஸ், மெஜுரா மில்ஸ், மெஜுரா கோட்ஸ், கோட்ஸ் வயலா என காலத்திற்கு காலம் மாறிய இந்நிறுவனம் பல தலைமுறையைக கண்டு விட்டது. ஹார்வி சகோதரர்களுக்குப் பின் வந்த தொழிலகங்கள்-தொழிலதிபர்கள் தங்களுடைய சமூகப் பொறுப்புகளால் மதுரையை வளமாக்கினார்கள். தியாகராஜ செட்டியார், டி.வி. சுந்தரம் ஐய்யங்கார் மதுரை மக்களால் கைகூப்பி வணங்கத் தக்கவர்கள். ஆனால் “பஞ்சு துரைகள்” என்றழைக்கப்பட்ட ஹார்வி சகோதரர்கள் காலில் விழுந்து வணங்கத்தக்கவர்கள்.
மதுரை கோட்ஸ் உருவாக்கிய உந்து விசை மதுரையோடு நின்றதாகத் தெரியவில்லை. ஆலைக்கு வேண்டிய பருததியையும், பஞ்சையும பெற தேனி வட்டாரத்திலும் கவனம் செலுத்தியதை நானே உணர்ந்துள்ளேன். மதுரை கோட்ஸ் ஆதரவால் வளர்ந்த பஞ்சறவை மில்களே, இன்று தேனியில் பஞ்சாலைகளாக வளர்ந்துள்ளது. தீவீர பருத்தி சாகுபடித்திட்டத்தின் (Intensive Cotton Development Programme) போது அரசுடன் இணைந்து மதுரை கோட்ஸ் செயல்பட்டது, பருத்தி தேனி வட்டார விவசாயிகளுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. நான் கூட மேற்படிப்பு படிப்பதை ஒத்தி வைத்து ஓராண்டு பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டேன். மேலும் தொடர்ந்திருந்தால்....என்னுடைய நல்வினை மேலே படித்து தப்பித்தேன்.
மதுரை மில்லே நடத்திய பள்ளிகள், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள், மதுரை மில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தவரின் துணைவியார் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட லேடி டோக் கல்லூரி, மதுரைக் கல்லூரியின் நூலகத்திற்கு அவர்கள் செய்த உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு மதுரை மில் துணை நின்றது, சாலையோரப் பூங்காக்கள், தடுப்புகள் என்று ஒரு காருண்ய அரசு செய்வதைப் போலல்லவா செய்திருக்கின்றார்கள். ஒரு நெசவாலை பருத்தியிலிருந்து பஞ்சு, நூல், துணி வகைகள் என்று மதிப்புக் கூட்டுவார்களென்று (Value Addition) கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் மதுரை கோட்சோ நெசவாலையின் உப பொருளாகக் (by product) கருணையையையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.
எந்தவொரு நிறுவனமும் சந்திக்கும் தொழில் முறைப பிரச்சினைகளை இந்நிறுவனமும் சந்தித்திருக்கின்றது. ஆனால் அதைக் கையாண்ட விதம் வித்தியாசமானது. ஆரம்ப காலத்தில் மில்லில் உருவான தொழிற்சங்கங்களை நசுக்க முயன்று, பின் ஞானோதயம் ஏற்பட்டு, தொழிற்சங்கங்களை மேதா விலாசத்துடன் (enlightened அப்ரோச்) அணுகி, தொழிலாக
ஜனநாயகத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள். தொழிற் சங்கங்களைச் சமூக மூலதனமாகக் கருதியவர்கள். Peter Drucker என்ற Management Guru பிரேரித்த Management by Objectives (MBO) என்ற கோட்பாட்டிற்கு, இவர்களின் நிர்வாக முறைகளே உதாரணங்களாகப் பாடப் புத்தகங்களில் குறிக்கப்பட்டது. உலகத்தின் தலை சிறந்த பெண்மணியாகப் போற்றப்படும் இந்திரா நூயி மதுரை கோட்ஸில் பயிற்சி பெற்றவர்தானே.
மதுரை கோட்ஸ் அதன் உன்னத நிலையிலிருந்த போதுதான், அதன் நிர்வாக இயக்குனராக இருந்த திரு. எம்.பி.எஸ். ஹென்றி அவர்கள் மதுரை சமூகப் பணிக் கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவரானார்கள். இன்றைக்குத் தகவல் தொழில் நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் Infocys Narayamoorthy, HCL Shiv Nadar போன்று,பஞ்சாலைத் தொழிலில் முத்திரை பதித்த மதுரை கோட்ஸ் நிர்வாக இயக்குனர்,ஒரு சின்னஞ் சிறிய கல்லூரியின் ஆட்சிக் குழுவில் பங்கெடுத்து, கல்லூரி நிகழ்ச்சிகளிலெல்லாம், பணிவுடன் பங்கேற்றதை இப்பொழுது நினைத்தால், பெருமை கொள்வதற்கு பதிலாக உடல் நடுங்குகிறது. காரணம் ஹென்றி அவர்களின் அருமையைப் பற்றியோ, அவர் நிர்வாகத்தின் கீழிருந்த மதுரை கோட்ஸ் நிறுவனம் இந்தியப் பஞ்சாலைத் தொழ்லில் செலுத்திய ஆதிக்கம் பற்றியோ, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் கூட முன்ன்னனுமதியில் லாமல் அவரைச் சந்திக்க முடியாது என்பது பற்றியோ மாணவர்களாகிய எங்களுக்குத் தெரியாது. நரை விழுந்தால் தான் ஞானம் என்ற மாதிரி, மதுரை கோட்ஸ் பற்றிய அருமை பின்னாளில் தானே தெரிந்தது. ஹென்றியவர்கள் கல்லூரியோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு, கல்லூரியின் நிறுவனரும், இயக்குனருமான கேப்டன் த. வெ.பெ. இராஜா அவர்கள் ஹென்றியவர்களிடம் வைத்திருந்த நட்பும், இந்தியா, தமிழ்நாடு, மதுரை மீது ஹென்றியவர்களுக்கிருந்த வாஞ்சையும் ஒரு காரணம்.
வெள்ளைத் துரை மார்களின் மனமகிழ் மன்றமாக (English Recreation Club) விசாலமான பரப்பிலமைந்திருந்த, கலையழகு பொருந்திய கட்டிடத்தை, இந்தியாவின் மிக மிகப் பெரிய தொழிலகம், தமிழகத்தின் மிகப் பெரிய செல்வந்தர் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசோடு தன் தேவைக்குத் தருமாறு வற்புறுத்த, “You have money. You can get a place wherever you want. But I have decided to donate it for a socially useful purpose” என்று விலை மதிப்பற்ற ஒரு பொக்கிசத்தை சமூகப் பணிக் கல்லூரிக்குக் கொடுக்க முன்வந்த தார்மீக தைரியம் யாருக்கு வரும்? இப்பொழுது சமூக அறிவியல் கல்லூரி நடைபெறும் இடம் மதுரை கோட்சால ஹென்றியவர்களின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்கு, ஒரு சிறு தொகையை அடையாளமாகப் (Token) பெற்றுக்கொண்டு ஒரு வகையில் தானமாக வழங்கபட்ட இடமாகும். அந்த இடத்தின் மீது, சில அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே உருவாக்கிய வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டு கல்லூரி நிர்வாகம் படுகின்ற அவஸ்தையிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை.
கல்லூரிக்கு இடம் கொடுத்தது மட்டுமல்ல, திருப்பூரில் இயங்கிய மதுரை கோட்ஸ் Ginning Factory- ஐ dispose செய்த போது, அங்கிருந்த கேண்டீன் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அனுமதி கொடுக்க, அப்பொழுது பணியில் சேர்ந்திருந்த நான் அந்த வேலையைச் செய்து முடிக்குமாறு பணிக்கப்பட்டேன். நானும், அப்பொழுது கல்லூரியில் பணியாற்றிய கண்ணுச்சாமி என்ற கடைநிலை ஊழியரும் திருப்பூரில் ஒருவாரம் தங்கியிருந்து, ஏழெட்டு லாரி லோடுகளாக அப்பொருள்களை ஏற்றி அனுப்பினோம். அந்தப பொருட்களை வைத்துத்தான் புதிய வகுப்பறைகளை அதிகப் பொருட்செலவில்லாமல் கல்லூரியால் கட்டமுடிந்தது. அந்த ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடத்தில்தான் வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், மற்றும் விரிவாக்கப் பணி மையங்கள் என்று 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றது. வசதி வந்தபின் அதையே அடுக்குமாடி ஆக்கினார்கள். திருப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட அழகான சிமெண்டு பலகைகள்தான் மரத்தடியில் மாணவர்கள் ஓய்வாக உட்காரப் போடப்பட்டது.
Corporate Social Responsibility என்றாலே, ஒரு தொழிலகம், தன் பொருளை விற்பதற்கும், சந்தையில் தன்னுடைய அடையாளத்தை வலுப்படுத்தி, பங்கு மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்துவதற்குமான உத்தி என்று மலினப்பட்டுப் போய்விட்ட இன்றைய காலகட்டத்தில், மதுரை கோட்சின் Corporate Social Responsibility –ஐ இன்றைய Corporate Houses -ஆல் கூடப் புரிந்து கொள்ளமுடியாதுதான். ஏனெனில் அது Corporate Social Responsibility மட்டுமல்ல...அதைவிட மேலானது. மதுரை கோட்ஸ்....அறம் வளர்த்த ஆலையல்லவா?
மதுரை கோட்ஸ் வளர்த்த தொழிற்சங்கமெனும் சமூக மூலதனம்.
நான் எம்.ஏ சமூகப் பணி படித்துக்கொண்டிருந்த போது, மதுரை கோட்ஸ் மிகப் பிரபலமாக விளங்கியது.மதுரை கோட்ஸிற்கு களப்பணி (inplant training) செல்வதென்பது கௌரவமான விஷயம். முதலாமாண்டில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலிருந்த மாணவர்களில் நான் ஒருவனாக இருந்தாலும், புதிதாகப் பொறுப்பேற்றிருந்த பேரா. முத்துவெங்கட்ராமன் அவர்களுக்கு என் மீது ஏற்பட்ட கசப்பால், என்னை மதுரை கோட்சில் போடாதது மட்டுமல்ல, என்னை ”நல் வழிப்படுத்தும்” நோக்கில் என்னை Deputy Commissioner of Labour (DCL) அலுவலகத்தில் போட்டு, என்னைத் தன்னுடைய மேற்பார்வையிலே வைத்துக் கொண்டார். வித்தியாசமான என் பாணி களப்பணியில் திருப்தியடைந்த பேராசிரியருக்கு நான் வெகு சீக்கிரமே பிரியமானவனாகிவிட என்னை அவருடைய “தேநீராலும் முரூக்காலும்” அடிக்கடி ஆசீர்வதித்தார்
DCL அலுவலகத்தின் மூலமாக தொழிற்சங்கத் தலைவர்களுடன் பழக வாய்ப்பேற்பட்டு, அப்பொழுது மதுரையில் மிகச் செல்வாக்குடனிருந்த HMS இராமையா (அவர் மூலமாக கோவை சுப்ரமணியன்) நாராயணன், INTUC ராமசந்திரன், கோவிந்தராஜன் AITUC நாராயணன் CITU தலைவராக உருவாகிக் கொண்டிருந்த மோகன் (எம்பி), TVS பொம்மையா போன்றவர்களுடன் பழக வாய்ப்பேற்பட்டது. இன்றைக்குப் போலல்லாமல் தொழிற்சங்கங்கள் வலிமையுடனிருந்த கால கட்டம். தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அரசியல் பின்னணியிருந்தாலும், அக்கால் அரசியல்வாதிகளுக்குரிய மனமாச்சரியங்கள் இல்லை.
பின் தென் மாவட்டத் தொழிற்சங்கங்களுக்கு முன் மாதிரியாயிருந்த Papanaasam Labour Union (PLU) தலைவர் P.A..கன்னையா (PAK) பிஏ.பிஎல். அவர்களுடன் நெருக்கமாகி, அவருடைய ஆளுமையால் கவரப்பட்டு, அவர் வாழ்க்கை வரலாறான “என் சுய சரிதை”யை எழுத பக்கத்துணையாயிருந்து – நான் கற்றுக் கொண்டது ஏராளம். Papanaasam Labour Union (PLU) முழுக்க முழுக்க மதுரை கோட்சில் மட்டும் செயல்பட்ட யூனியன். ஆகையால், PAK அவர்களுடைய வாழ்க்கை வரலாறென்பது மதுரை கோட்சை மையப்படுத்தியே சுழன்றது. மதுரை கோட்ஸ் பற்றியும், மதுரை கோட்ஸ் கையாண்ட தொழிலக உறவுகள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு பிஏகே அவர்களின் சுய சரிதை பெரும் பொக்கிஷம். சங்கச் சந்தாவை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து வாங்காமல் தொழிளார்களிடமிருந்தே நேரிடையாக வசூலித்த தார்மீக தைரியம் பிஎல்யு சங்கத்திடமிருந்தது. சங்கத்திற்கு என்று தனியாக அச்சுக் கூடம், மாதப் பத்திரிக்கை, வாசகசாலை, பயிற்சி கூடம், நலத்திட்டங்கள், வைப்புநிதி என்று முன்மாதிரியாக PLU சங்கம் நடத்தப்பட்டது. அம்பாசமுத்திரம் மதுரை கோட்சில் PLU தான் பெரிய யூனியன். சங்கத் தலைவர் P.A..கன்னையா அனைத்துத் தரப்பினரின் மரியாதையையும் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட தலைவர், என்னை அம்பாசமுத்திரத்திற்கு அழைத்து, பி.எல்.யு வின் எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்து, என்னைப் போன்றவர்கள் தொழிற்சங்கப் பணிக்கு வரவேண்டுமென்றும், பொறுப்பான, நேர்மைத் திறம் கொண்ட, தொழிலாளர் வர்க்கத்தின் பால் அன்புகொண்ட வெளிநபர்கள் தங்களுக்குத் தலைமையேற்பதில் PLU சங்கத்தினருக்கு உடன்பாடே என்றெல்லாம் கூறி, அவருடைய சுயசரிதையை வெளியிடுவதில் நான் காட்டிய அக்கறையையும், என்னுடைய சிந்தனைப் போக்கும் பழகும் விதமும் பெரும்பாலான சங்க செயற்குழு உறுப்பினர்களைக் கவர்ந்துள்ளதாகவும், தனக்குப் பின்னர் பி.எல்.யு வின் தலைமைப் பொறுப்பை ஏற்க பயிற்சி பெறவேண்டுமென்றும், கல்லூரியில் பேராசிரியப் பணியில் நான் பெரும் ஊதியம்ளவிற்கு பி.எல்.யூவினால் கொடுக்கமுடியுமென்றும் கூறி என் சம்மதத்தைக் கேட்க, உங்களுக்குப் பிறகு நானா? அதற்கு கொஞ்சம் கூட நான் தகுதியில்லாதவன் என்று பயத்துடனும், பணிவுடனும் மறுத்து விட்டேன். ஒரு உத்தமரின் ஆசையை நிராகரித்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு இன்றளவும் எனக்கு உண்டு.
போராட்டங்களால் மட்டும் இந்தியத் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கவில்லை. அப்பழுக்கற்ற சில தொழிற்சங்கத் தலைவர்களின் தார்மீக/ஆன்ம பலத்திற்கு முன் அரசும், தொழிலதிபர்களும் பல நேரங்களில் பணிந்ததாலும் தான் சில உரிமைகளும், சலுகைகளும் சாத்தியமாகியது என்று எனக்குப் படுகின்றது. P.A..கன்னையா (PAK) அப்படிப்பட்ட ஆன்ம/ தார்மீக பலம பொருந்திய தலைவராக எனக்குப் பட்டார்.
மதுரை கோட்சின் மிகப் பெரிய சமூகப் பங்களிப்பு அவர்கள் தொழிலக ஜனநாயகத்தைப் பேணியதுதான். தொழிற்சங்கங்களை தலைவலியாகக் கருதாமல்,அதை சமூக மூலதன்மாக் கருதினார்கள். PAK யும் PLU வும் அதற்கு சிறந்த உதாரணங்கள். அந்த வகையிலும் கூட மதுரை கோட்ஸ் அறம் வளர்த்தது.
எப்படி நன்றி சொல்லப் போகின்றோம்
வளர்ச்சிக்கு உந்து விசை மிக முக்கியம். முன்னேற்றம் முடுக்கிவிடப்பட வேண்டுமென்றால், சமூக, பொருளாதார, கலாச்சாரத் தளங்களில் உந்து விசை வேண்டும். மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு ஆண்ட்ரூ சகோதரர்கள், தியாகராஜ செட்டியார், டி.வி.சுந்தரம் ஐயங்கார் ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கது. இவர்களில்லாத மதுரையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. இவர்களின் நினைவு சமூக உடமையாக்கப்பட வேண்டும்.
பெரியார் அணையின் மூலமாக தங்களின் வாழ்விற்கு உத்தரவாதமளித்த பென்னி குயிக்கிற்கு சிலை வைத்து, அவரின் சந்ததியினரை அழைத்து வந்து கௌரவப்படுத்தி, பொதுப்பணித்துறையும், விவசாயிகளும் தங்களின் நன்றியை வெளிப்படுத்தி விட்டார்கள். மதுரை சமூகப் பணிக் கல்லூரி, கல்லூரி நூலகத்திற்கு மார்டின் ஹென்றி அவர்களின் பெயரை வைத்து நன்றிக்கடன் செலுத்திவிட்டது. மதுரைக்கு வளம் சேர்த்த மகத்தான மனிதர்களுக்கு மதுரை மக்கள் எப்படி நன்றி செலுத்தப் போகின்றார்களோ? பொருத்திருந்து பார்ப்போம்.
மதுரை சமூகப் பணிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரிஆட்சிக் குழுத் தலைவராக இருந்தவர் அப்பொழுது பஞ்சாலைத் கொடிகட்டிப் பறந்த மதுரை கோட்சின் நிர்வாக இயக்குநர் திரு.எம்.பி.எஸ். ஹென்றி என்ற ஆங்கிலேயர். கல்லூரியின் வளர்ச்சிக்கு பலவிதங்களிலும் அவர் உறுதுணையாக இருந்ததாக இயக்குநர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாங்கள் படித்தபோது கல்லூரிக்கு அடிக்கடி வருவார். அப்பொழுது அவருடைய மேன்மை பற்றியெல்லாம் எங்களுக்கு அதிகம் தெரியாது. பின்னாளில் அவரும், அவர் தலைமையேற்றிருந்த மதுரை கோட்ஸ் மில்லும் மதுரையின் வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பு மகத்தானது என்று புரிய வந்தது. அத்தகைய பெருமைக்குரிய மனிதர் பல ஆண்டுகள் கழித்து இவ்வாண்டு மீண்டும் கல்லூரிக்கு வருகின்றார். மதிக்கத்தக்க அம் மாமனிதரின் வருகையையொட்டிஎன் மனதில் ஓடிய நினைவலைகள்.