5/27/11

மன்னார் வளைகுடா தந்த ஞானம் -I

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பவளப் பாறைகள் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆய்வின் துணைக் கூறாக, பவளப் பாறைகளால் பயனடையும் பயனாளிகளைப் பற்றிய புரிதலுக்காக, பங்கேற்பு மதிப்பீடுகளைச் (participatory appraisal) செய்வதற்காக நானும், நண்பர் இராஜேந்திர பிரசாத்தும் (ராஜன்) இராமேஸ்வரத்திற்கு அழைக்கப் பட்டிருந்தோம். இராமேஸ்வரத்திற்கு அதற்கு முன் ஓரிருமுறை சென்றிருந்தாலும், அது மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த கடற்பகுதி என்று எனக்கு அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை.

கடலில் கால் நனைத்திருந்தாலும், கடலைப் பற்றிய எனது புரிதல், சாதாரண மனிதருக்கிருக்கும் பொது அறிவின் எல்லையைத் தாண்டிச் சென்றதில்லை. பவளப் பாறைகளைப் படத்தில் மட்டும் பார்த்தவன். ஆகையால் அதன் பன்முகப் பயன்களெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆய்விற்கு போவதற்கு முன்னால, பவளப் பாறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. தெரியாவிட்டால் என்ன? பவளப் பாறைகளோடு தங்கள் வாழ்வை இணைத்துக்கொண்ட ஒரு பயனாளர் கூட்டத்தோடுதானே இருக்கப் போகின்றோம். அவர்களுக்கு நாம் நல்ல மாணக்கர்கள் என்று புரியும்படி நடந்துகொண்டால், அவர்களின் அனுபவ ஞானத்தால் நமக்கு சாயமேற்றி சாப விமோசனம் தந்து விடாமலா போய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இராமேஸ்வரம் புறப்பட்டோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கான அத்தாட்சியே இத்தொடர்.

நீங்கள் உண்மையென்றும், நன்மையென்றும் மனமொப்பி அறிந்ததை தயவு செய்து எங்களுக்கும் சொல்லுங்கள் என்ற மனோபாவத்தோடு மக்கள் முன் அமர்ந்தால், நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அர்த்தமுள்ள பகிர்தல் ஆரம்பமாகும்.அது நம்மைத் தெளிவாக்கும். இதுதானே பங்கேற்பு முறைகளின் (participatory methods) நம்பிக்கை.

சின்னபாலம் தோப்புக்காடு குடியிருப்புகள் இராமேஸ்வரத்தில் பாம்பனைச் சேர்ந்த சின்னப்பாலம் மற்றும் தோப்புக்காடு குடியிருப்புகள். அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த தொண்டு நிறுவன (TRRM) பணியாளர்களால் அறிமுகம் எளிதானது. கடற்கரையோரம் பல தலைமுறைகளைப் பார்த்தறிந்த பூவரசு மரம் எங்களுக்கு போதி மரமானது.

பல பங்கேற்பு உத்திகளைப் பயன்படுத்தினோம். வலைகளைப் பின்னிக்கொண்டே வாய் வார்த்தைகளால் பவளப் பாறைகளை வர்ணித்துக்காட்டினார்கள். மீன்கள் பவளப் பாறைகளைச் சுற்றி வருவது போல், வார்த்தைகளால் பவளப் பாறைகளைச் சுற்றி வந்தார்கள். குஞ்சு பொரித்தார்கள. அதை வலைபோட்டுப் பிடித்தார்கள். பாறைகளில் சிக்கிக்கொண்ட வலைகளை வார்தைகளால் கவனமாகப் பிரித்தார்கள்.

“பவளப் பாறைகள் கடலின் கருவறை மாதிரி; மீனவர்களின் வாழ்வு அங்குதான் ஜனிக்கிறது” என்பதை அவர்கள் புரிந்திருந்தார்கள். எங்களுக்கும் புரிய வைத்தார்கள்.

அவர்களைப் பொருத்த வரை கடலும் நிலமும் வேறுவேறல்ல. நிலத்தின் நீட்சியே கடல். நமக்கு நிலம் எப்படிப் பரிச்சயமோ, அப்படித்தான் கடல் அவர்களுக்கு. கடலை நோக்கிக் கைகளைக் காண்பித்து, அங்கே ஆறு ஓடுகிறது; ஆற்றைத் தாண்டினால் சேறு. இந்தப் பக்கம் பொட்டல். நிலத்தின் அத்தனை வகைப்பாடும் கடலிலா? இல்லை கடலின் வகைப்பாடு நிலத்திலா? நமக்குப் புரியவில்லை.

ஆங்கிலேயர் நிலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து வரைபடம் தயாரித்து, நாட்டை வசப்படுத்தியது மாதிரி, கடலை அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இந்தத் தெரிதல்தான் அவர்களுடைய பிழைப்பாதாரம். அவர்களுடைய அனுபவ ஞானத்தைப் பார்த்து, நாம் பிரமிப்பதைக் கண்டு, ஆணவம் கொள்வதற்கு பதிலாக பணிவாகின்றார்கள்.  உண்மையான ஞானத்தின் அடையாளமே பணிவுதானே.

“கடல் ஒரு கைக்குழந்தை மாதிரி. காத்து வெயில்,மழைன்னு எதுவும் அதன் தன்மையை மாத்திடும். கடலைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. காத்தைத் தெரிஞ்சிருக்கணும். வெயிலைத் தெரிஞ்சிருக்கணும். மழையைத் தெரிஞ்சிருக்கணும். ஆகாசத்தைத் தெரிஞ்சிருக்கணும்” என்று ஐமபூதங்களின் இணையறாத் தொடர்பை சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, இவர்கள் படகேறி மீன்பிடிக்கச் செல்கிறார்களா? இல்லை நடுக் கடலில் தவமியற்றி இயற்கைப் பேருண்மைகளை அறியச் செல்கிறார்களா என்று வியப்பே ஏற்பட்டது.

மூன்று நாட்கள்... கடல் பற்றி, பவளப்பாறைகள் பற்றி, மீனவர் வாழ்க்கை பற்றி, அவர்களின் சுகதுக்கங்கள் பற்றி, மாறி வரும் மீன்பிடித் தொழில் நெறிமுறைகள் பற்றி, அவர்களின் பொதுவான நம்பிக்கைகள் பற்றி...பாடங்கேட்ட அந்த நாட்கள் மறக்கமுடியாதவை. அதுதான் நண்பர் ராஜனை மன்னார் வளைகுடாவின் சற்றேறக்குறைய மையப் பகுதியான வேம்பாரில் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனம் (2001) தொடங்க வித்திட்டது. சுனாமிக்காக கடலோரம் நண்பர் ராஜன் கரையொதுங்கவில்லை. பேராசியாராகப் பணியிலிருந்தாலும், PAD நிறுவனப் பொறுப்பிலிருந்தாலும், எனக்கென்னமோ மக்கள் முன்னும், PAD நிறுவனக் களப்பணியாளர்கள் முன்னும் மாணவன் என்னும் மனோபாவம் தான் இருக்கின்றது. ஏனெனில் என்னுடைய கற்றல் அவர்களிடமிருந்துதான் தொடங்குகின்றது.

PAD வேம்பாரில் செயல்பட ஆரம்பித்த பின், கடல் சூழியலில் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாகப் பணிபுரியும் நண்பர்களான முனைவர்கள் பாலசுந்தரம் (பாரதிதாசன் பல்கலை), பொய்யாமொழி (பாண்டிச்சேரி பலகலை) ஒருமுறை வேம்பார் வந்தபோது, கடல் சூழியல் பற்றி அவர்களிடம் பேசியதைப் பார்த்து, “கடலைப் பற்றி நான் அதிகம் வாசித்திருப்பதாகப்” பாராட்டினார்கள். உண்மையென்னவென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் கேள்வி ஞானம்தான். கடல் சூழியல் தொடர்புடைய பல கலைச் சொற்களை என்னால் பிழையின்றி எழுதமுடியாது.

மக்களறிவு (People’s Knowledge) என்பது கடலோரம் பரவிக் கிடக்கும் மணல்லல்ல. அது நிலத்தடியில் உறைந்திருக்கும் நன்னீர் போன்றது. சில இடங்களில் கைகளைக் கொண்டு மணலைப் பறித்தாலே நீர் ஊரும். சில இடங்களில் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் விரும்புமளவு, சுவையான நீர் கிடைக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஒரு நல்ல ஆத்ம சாதகன் குருவைத் தேடுகின்ற மாதிரி, இல்லை நல்ல சாதகனை குருவே தேடி வருகின்ற மாதிரி, பங்கேற்பு முறைகளிலும் நாம் நல்ல Key Infomants-ஐ தேடிக் கொண்டேயிருக்க வேண்டும்.சில நேரங்களில் நாம் தேடுவது தெரிந்தாலே அவர்கள் நம்முன் நிற்பார்கள்.

பங்கேற்பு முறைகள் என்பதும் ஒரு ஆத்ம சாதகம்தான். அதைப் PAD நிறுவனத்தோடும், பணியாளர்களோடும், மக்களோடும் சேர்ந்து செய்ததை, கற்றுக் கொண்டதை மன்னார் வளைகுடா தந்த ஞானம் என்ற தலைப்பில் இங்கே தொடந்து உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

No comments: