“கருப்பாயி என்ற நூர்ஜஹான்” மற்றும் “செந்நீர்” என்ற இரண்டு நாவல்களைப் படிக்குமுன் அன்வர் பாலசிங்கத்தைப் பற்றி நான் ஏதும் அறிந்திருக்கவில்லை. அந்த இரண்டு புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னவர் நண்பரும், மாணவருமான வினோத் அம்பேத்கார். “உங்களை மாதிரி ஆசிரியர்களெல்லாம் நாளொன்றுக்கு குறைந்தது 200 பக்கங்களாவது படிக்கவேண்டும்” என்று குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) சொன்னதை வருடத்திற்கு 200 பக்கங்கள் என்று புரிந்து கொண்டவன். ஆனால் வினோத் அம்பேத்காரின் ராசி, அவர் எதைக் கொடுத்தாலும் என்னையறியாமல் படித்துவிடுகின்றேன். அவரே பணம் செலவழித்து, புத்தகங்கள் வாங்கி, சிரமம் பாராமல் என்னிடம் தந்து, படிக்கச் சொல்வதைப் பார்க்கும் போது, குன்றக்குடி அடிகளாரின் அறிவுரையை எப்படியும் என்னை பின்பற்ற வைத்துவிடுவது என்று சபதம் எடுத்திருப்பது மாதிரிதான் தெரிகின்றது.
அன்வரின் புத்தகங்களைப் படித்தபின்பு, அன்வரின் மீதும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்கருவின் மீதும் எனக்கு மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது. விரிவான வாசிப்புப் பழக்கம் எனக்கில்லையாதலால், என்னால் இலக்கிய விமர்சனமெல்லாம் செய்யமுடியாது. நாம் வாசிப்பதெல்லாம் எப்படி சமூகத்தைப் பற்றிய நம் புரிதலை விரிவாக்குக்கின்றது என்பதை வைத்துத்தானே ஒரு புத்தகத்தையும், அதை எழுதிய ஆசிரியரையும் நாம் மதிப்பீடு செய்கின்றோம். அந்த வகையில், சில கோணங்களில் என் பார்வையை விரிவாக்கிய அன்வர் மீதும் அவரின் எழுத்துக்கள் மீதும் எனக்கு மரியாதை ஏற்பட்டது.
“கருப்பாயீ என்ற நூர்ஜஹான்” மதம் மாறிய இஸ்லாமியர்களைப் பற்றிய கதைக்களம். அது மாதிரியான களத்திற்கு ஏற்கனவே நான் அறிமுகமாகியிருந்தேன். செங்கோட்டைக்கு அருகில், அச்சன்கோயில் செல்லும் வழியில் உள்ள மேக்கரை என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள்தான் மீனாட்சிபுரம், (நாவலில் குறிப்பிடப்படும் காமாட்சிபுரம்/பில்லா நகர்) மதமாற்றத்திற்கு வித்திட்டது என்று சொல்வார்கள். மேக்கரை கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த (நேத்ரா) இராமசந்திரன் அவர்களோடு சில பணிகளை முன்னெடுத்தோம். தன்னுடைய வாழ்வும் வளமும் அச்சன்கோயில் ஐயப்பன் மற்றும் மேக்கரையில் எழுந்தருளியுள்ள கோட்டைவாசல் கருப்பனால் கிடைத்த ஆசீர்வாதம் என்று நம்புகின்றவர் இராமசந்திரன். அச்சன்கோயில் கேரளாவில் உள்ளதால், தமிழக எல்லையிலுள்ள மேக்கரை முன்னேற்றத்திற்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய நினைத்தார். அவருடைய பணிகளில் நான் உடனிருந்தேன். ஏறக்குறைய ஐந்தாறு இலட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு கிராம அறிவு மையம், மேக்கரை பள்ளிக்கு நண்பர் பாலாஜி மூலம் கணனி மற்றும் கணனிப் பயிற்சி, மேக்கரை மாணவர்கள் அரசுப்பேருந்து சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு அரசுப் பேருந்துகளின் நேரத்தை பெருமுயற்சி செய்து மாற்றியமைத்தது, மேக்கரையில் சமூக நலக்கூடம் கட்ட இடம் வாங்குவதற்கு திரு.இராமசந்திரன் அவர்கள் செய்த கணிசமான பொருளுதவி, மேக்கரை மாணவர்களின் கல்வித்தரம் உயர நடத்திய Tution Centre மற்றும் அங்கு பால்வளம் பெருக்க எழெட்டு மாதம் பணியிலமார்த்தப்பட்ட முழுநேரப் பணியாளருக்கான ஊதியம் (மாதம் 10000 ரூபாய்) என்று பல இலட்சங்கள் முதலீடு செய்தும், நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அதிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேக்கரை ஒரு அழகான கிராமம். அந்த அழகிற்கு பின்னே வறுமையும், இயலாமையும் மறைந்திருந்ததை எங்களால் உணரமுடிந்தது. மேக்கரை நிலங்கள் ஒரு பாரம்பரிய சைவ ஆதீனத்திற்குச் சொந்தமானது. நிலவுடமையில் இருந்த கட்டுப்பாடுகளால், அம்மக்களால் விவசாயத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. அதில் எங்களால் தலையிடமுடியாதாகையால், வேறு வகைகளில் மக்களின் விருப்பங்களை அறிந்து சில முயற்சிகளை முன்னெடுத்தோம். மேக்கரையில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க, அம்மக்கள் விரும்பியவற்றையே அவர்களுக்குத் தரவேண்டுமெண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தோம். மக்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட விருப்பங்களினடிப்படையில் செயலாற்ற முற்பட்டபோது, அந்த முயற்சிகளில் அம்மக்கள் பாராமுகமாக நடந்துகொண்டார்கள்.
உதாரணமாக மேக்கரை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கலாம் என்று யாரோ சொன்ன வாக்குறுதியை முன்வைத்து, பலபேரிடம் நன்கொடைவாங்கி கணிசமான பொருட்செலவில் விழா எடுத்தவர்கள், மேக்கரை பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எங்கள் முயற்சியில் வழங்கப்பட்ட கணணிகளை பயன்படுத்துவதில் அந்த அளவு ஆர்வம் காட்டவில்லை. எங்களிடம் தொடர்பிலிருந்த சமூகத் தலைவர்களின் பேச்சில் இருந்த ஆர்வத்தை அவர்களின் செயலில் பார்க்கமுடியவில்லை. அவர்களைப் புரிந்துகொள்வது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஜாதியென்று பார்த்தால் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்களும், அவர்களிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியர்களும்தாம். பள்ளர் இனமே அங்கு பெரும்பான்ன்மையினம். மதம் மாறியிருந்தாலும் ஜாதி ஒன்றுதானே என்று எண்ணும்படியாகவே அவர்களுக்கிடையேயான உறவுமுறைகளும் இருந்தது. எங்களுடைய புரிதல் தவறு என்று அன்வரைப் படித்தபின்புதான் உணரமுடிந்தது.
அன்வரவர்களின் “கருப்பாயீ என்ற நூர்ஜஹான்” படித்த பின்புதான், மேக்கரை சமூக உறவுகளில் இருந்த உள்விரிவாக்கம் (Complexity) புரியவந்தது. மதம், அதையொட்டி ஏற்படும் நடைமுறை ஆசார நிர்பந்தங்கள், அதனடிப்படையில் கட்டமைக்கப்படும் ஆளுமைகள் இவையெல்லாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய விசயங்கள். இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலுமுள்ள வழிபாட்டுடன் கூடிய பிரசங்கங்கள், அதைப் பின்பற்றுபவர்களின் ஆளுமையை ஓரளவு கட்டுப்படுத்தவும், கட்டமைக்கவும் செய்கின்றது. ஒரே ஜாதிதான் என்றாலும் இருவேறு நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் தரும் உயர்வு தாழ்வு மனப்பானமை – சிக்கலான ஆளுமைகளை உருவாக்குகின்றது. திருமணமாகாதிருக்கும் முதிர்கன்னிகள் பில்லா நகரின் பிரச்சனை. அந்த பிரச்சனையையொட்டி அன்வர் வெளிப்படுத்தும் வலி ஒருபக்கம். அப்பிரச்சனையை புரிந்து கொள்ளவும், தீர்க்கவும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அன்வர் வெளிப்படுத்தும் பார்வை இன்னொரு பக்கம். ஒரு பிரச்சனைக்கான தீர்வு முக்கியமென்றாலும், அந்த பிரச்சனை பற்றிய விவாதங்கள் அப்பிரச்சனையின் பல பரிமாணங்களை புரியவைக்கும். தீர்வு எதையும் அந்தப் புத்தகம் முன்வைக்கவில்லை. பல பிரச்சனைகளுக்கு நம்மிடம் தீர்வில்லை. தீர்வுக்கான நம்முடைய முயற்சிகளே சில நேரங்களில்பிரச்சனைகளாகி விடுகின்றது. இதுதான் எதார்த்தம். இப்படித்தான் நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது.
முன்னேற்ற முயற்சிகளிலும் பல நேரங்களில் நாம் அடைய வேண்டிய இலக்குகளைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கின்றேம். நாம் அடையவேண்டிய இலக்குகளை அடைந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நமக்குக் தெரிந்திருந்தாலும், அந்த இலக்குகளின் மீது நம்மால் செயல்படமுடியவில்லை. பிரச்சனைகளும், முன்னேற்ற முயற்சிகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பில்லா நகரில் பிரச்சனை விவாதிக்கப்பட்டதை அன்வரால் இலக்கியமாக்கமுடிந்தது. மேக்கரையில் நாங்களெடுத்த முன்னேற்ற முயற்சிகளில், மக்களுடைய பாராமுகம் வேறு வகையான உரையாடல்களின் விளைவாய் இருந்திருக்கலாம். அந்த உரையாடல்கள் எங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை என்று சொல்வதைவிட, முன்னேற்றப் பணியாளர்கள் அது மாதிரியான உரையாடல்களைக் கேட்கும் உத்தியைக் கைவரப் பெறவேண்டும் என்றே எனக்குப் படுகின்றது. Development Workers need to have sensitive ears என்று சொல்வது இதனால்தான்.
செந்நீரின் கதைக்களம் சற்று விரிவானது. வலிமிக்கதும் கூட. காணாமல் போன தங்கள் மகனைக் கண்டெடுப்பதில் சுப்பன் தம்பதிகளில் தொடங்கும் ஆதாயநாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து காட்டுராஜா, முனியாண்டி, மூணாறு எம்.எல்.ஏ பூபாலன், தொழிற்சங்கங்கள், காவல்துறை என்று விரிந்துகொண்டே செல்கின்றது. பிரச்சனையைத் தீர்க்க முனையும் ஆதாய நாட்டமுடையவர்களில் சுயநலமற்ற கதாபாத்திரங்களையும், பிரச்சனைக்குக் காரணமான மிக மோசமான சூழ்ச்சியாளர்களையும், பிரச்சனையை வைத்து ஏமாற்றிப் பிழைக்க முயல்பவர்களையும், அரசு மற்றும் எஸ்டேட் நிறுவனம் போன்ற ஆதாயநாட்டமுடைய பாத்திரங்கள் எப்படி பிரச்சனையைக் கையாள்கின்றன என்று வாசகனுக்கு வலிக்கும்படியாகவே கதை சொல்லப்படுகின்றது. வலி, போராட்டங்கள், மரணங்கள், கடைசியில் எம்.எல்.ஏ கொல்லப்படுதல் – எந்த தீர்வுக்காக இதெல்லாம் நடக்கின்றதோ, அதாவது கிட்டுவைக் கண்டடைவது, அது கடைசிவரை சாத்தியமாகவில்லை. இது மாதிரிதானே நம்முடைய முன்னேற்ற முயற்சிகள் அது கண்ணாமூச்சி விளையாட்டாகவே ஆகிவிடுகின்றது. பல முயற்சிகள் முளையிலே கறுக்கப்படுகின்றன. இன்னும் சில நேரங்களில், நம்பிக்கையை வளர்த்து, அதை வளரவிட்டு கிள்ளி எறிந்துவிடுகின்றார்கள்.
முன்னேற்றப் பணிகளில், குறிப்பாக ஜீவனோபாய மேம்பாட்டுப் பணிகளில் ஆதாய நாட்டமுடையவர்கள் (Stake Holders) என்ற கருத்தாக்கம் மிக முக்கியமானது. ஆதாய நாட்டமென்றால் ஒரு முயற்சியில் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும், பாதிப்புகளையும் உணர்ந்து அதற்கேற்ப அந்த முயற்சிகளுக்கு ஆதரவோ, பாராமுகமோ, முட்டுக்கட்டையோ போடுவது. சிலநேரங்களில் தங்களுக்கு அனுகூலம் என்று அறிந்திருந்தாலும், தன்னுடைய எதிரிக்கு இன்னும் அதிக அனுகூலமாகும் என்று தெரியவரும் போது, பாராமுகமோ, முட்டுக்கட்டையோ போடுவார்கள். ஆதாய நாட்டம் என்பது கொச்சையான வார்த்தையல்ல. புரிந்து கொண்டு செயல்பாட்டில் கையாளவேண்டிய ஒரு முக்கியமான கருத்தாக்கம்.
இதுவெல்லாம் தெரிந்துதான் மேக்கரை சமூகத்தை அனுகினோம். ஆதாய நாட்டமுடையவர்களை சமநிலைப்படுத்த (Stakeholder Balancing) சில முயற்சிகளைச் செய்தோம். காரணம் மேக்கரையில் செய்யப்பட்ட முதலீடுகளெல்லாம் திரு.இராமச்சந்திரன் அவர்களின் சேமிப்பிலிருந்து செய்யப்பட்டவை. நன்கொடைகள் பெற்றோ, வெளிநாட்டு உதவி பெற்றோ காரியமாற்றியிருந்தால், விளைவுகளைப் (Impact) பற்றி அதிகமாக கவலைப்படத் தோன்றியிருக்காதுதான். ஆகையால் மிக நிதானமாக ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு காரியமாற்ற வேண்டிய கட்டாயம். புரிந்து கொண்டுதான் செயலாற்றுகின்றோம் என்று நாங்கள் நினைத்தாலும், எதிர்பார்த்த குறைந்த பட்ச ஒத்துழைப்புகூட அம்மக்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆகையால் ஒரு நல்ல மனிதரின் சேமிப்பில் கணிசமான தொகை வீணாவதற்கு நாமும் காரணமாயிருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே எனக்கேற்பட்டது.
மேக்கரையினரின் பாராமுகத்திற்கான காரணம் தெரியாமல் நான் பலநாட்கள் குழம்பிப் போயிருக்கின்றேன். அன்வரவர்களின் இரண்டு புத்தகங்களைப் படித்தபின் சில புரிதல்கள் ஏற்பட்டது. ஆதாய நாட்டமுடையவர்கள் (Stakeholders) என்ற கருத்தாக்கத்தின் பன்முகப் பரிமானங்களை அவருடைய புத்தகங்களைப் படித்தபின்பே உணர முடிந்தது. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதிலும், ஒரு புது முயற்சிக்கான ஆதரவிலும், எதிர்ப்பிலும் ஜாதி, மதம், அரசியல் மற்றும் பிற காரணங்கள் கணிசமான பங்கு வகிக்கும் என்பது பொதுவான புரிதல். இந்த பொதுவான புரிதலைத் தாண்டி சில நுட்பமான விசயங்களை அன்வரவர்கள் தன்னுடைய இரண்டு நாவல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார்.
நல்லது என்பதற்காக எந்தவொரு செயல்திட்டத்திற்கும் உடனடி சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. நல்லவைகளையும் புரிந்துகொண்டு செயல்பட செந்நீர் நாவலில் வரும் முனியாண்டி போன்ற கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றார்கள்.
ஜாதி, மதம், அரசியல் சார்ந்த ஆதாய நாட்டம் எப்பொழுதும் ஒருமித்ததாக, தட்டையாக இருப்பதில்லை எனபதை அன்வர் மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றார். இது தவிர மொழி, இனம், வரலாற்றுப் புரிதல் போன்ற இன்ன பிற காரணங்களும் ஆதாய நாட்டத்தை (பிரச்சனைகளைக் கையாள்வதில்) எப்படி வழிநடத்துகின்றது என்பதை அன்வர் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றார். நூர்ஜஹானின் மரணம், கல்லூரி மாணவன் கிட்டு காணாமல் போவது -. இந்தப் பிரச்சனைகளை ஒரு சமூகம் எப்படிக் கையாள்கின்றது என்பதை அன்வர் எடுத்துச் சொல்லும் போது ஆதாய நாட்டத்தின் பன்முகப் பரிமாணங்களை கோடிட்டுக் காட்டுகின்றார்.
கருப்பாயீ என்ற நூர்ஜஹானை இஸ்லாத்திற்கு எதிரான குரலாகவும், செந்நீரை தமிழ் தேசிய உணர்வை தூண்டுவதாகவும் எடுத்துக்கொண்டு அன்வருக்கு ஆதரவும் எதிர்ப்பும் விமர்சனங்களில் வெளிப்படுகின்றது. ஆனால் எனக்கென்னவோ இருவேறு பிரச்சனைகளை மாறுபட்ட சூழலில் வாழும் இரு சமூகங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை விளக்கிச் சொல்வதாகவே படுகின்றது. இந்த இரண்டு நாவல்களிலும் வரும் முக்கிய கதாபாத்திரங்களை, பிரச்சனைகளுக்கு உள்ளான, மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கமுயலும் ஆதாய நாட்டமுடையவர்களாக கருதும் பட்சத்தில், பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் கையாளும் அணுகுமுறையை, அவர்கள் சார்ந்த மதம், ஜாதி, மொழி, இனம், வரலாற்றை அவர்கள் புரிந்துகொண்ட பாங்கு போன்ற பல்வேறு காரணங்களும், அந்த காரணங்களில் இருக்கும் அவர்களுக்கிருக்கும் நம்பிக்கை சார்ந்த அடர்த்தியுமே தீர்மானிக்கின்றது.
தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாக அன்வர் வெளிப்படுத்தும் வலி, ஆதங்கம், கோபம் போன்ற வெளிப்பாடுகளை ஆதாய நாட்டம் என்ற academic கருத்தாக்கத்தை வைத்து நீர்த்துவிட எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் அந்த வலியைத் தாண்டி அன்வரின் எழுத்துக்களை புரிந்து கொள்ள முயலும் போது, ஒரு academic கருத்தாக்கம் பற்றிய புரிதல்கள் சட்டென்று விரிவைடைகின்றது. ஆதாய நாட்டத்தை ஒருசிலரின் உளச்சிக்கல் அல்லது சுயநலம் அல்லது பிறகாரணங்கள் காட்டி குறுக்க முயற்சிக்காமல், எதார்த்தவாழ்வின் உண்மைகள் என்று புரிந்துகொண்டு செயல்படும்போது முன்னேற்றப் பணியாளர்கள் தங்கள் செயல்பாடுகளில் அதை சற்று லாவகத்துடன் கையாளக் கற்றுக்கொண்டால் இன்னும் அதிக உயரத்தை எட்டலாம் என்றே எனக்குப் படுகின்றது. அதற்கு அன்வரின் புத்தகங்கள் உதவும். இந்தப் புரிதல்தான் அன்வரின் மீதும், அவரின் எழுத்துக்கள் மீதும் என்னை அபிமானம் கொள்ள வைத்தது.
2 comments:
அன்புள்ள ரெங்கசாமி,
நானும் ராமச்சந்திரனுடன் ஒருமுறை மேக்கரை சென்றுள்ளேன். அவர்மூலம் நான் அனுப்பிய புத்தகங்கள் எவையும் படிக்காமல் அப்படியே திரும்ப வந்துசேர்ந்துவிட்டன. இன்னமும் ராமச்சந்திரன் அங்கே மாடு வளர்க்கவேண்டும், பால் கரந்து அங்குள்ள பிள்ளைகளுக்குத் தரவேண்டும் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றாலும் அவர்களுடைய பங்களிப்பு இல்லாமல் அவர்களுடைய ஈடுபாடு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. அதைவிட எனக்குத் தோன்றுவது இதுதான். நாம் எங்கேயோ வெளியூரில் இருந்துகொண்டு தொலைதூர ஊர் ஒன்றில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. எனக்கு மேக்கரையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் அங்கு மொத்தமாக இரண்டு நாள்கள் கூட இல்லை. அதேபோல் எனக்குத் தமிழ்நாட்டின் எந்த இடத்தைப் பற்றியும் ஒரு புரிதலும் இல்லை. ஒரு வாரம் நீங்களும் நானும் போய் வந்துகொண்டிருந்த ஜமின் கொரட்டூர் பற்றி ஓரளவுக்குக் குறைவான புரிதலைத்தான் பெறமுடிந்தது.
பல ஆயிரம் களப்பணியாளர்கள் வேலை செய்துதான் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைப் பற்றிய ஒரு படத்தை உருவாக்கவேண்டியிருக்கும். எங்கிருந்து தொடங்குவது? இந்தப் படம் இல்லாமல் எப்படி ஆட்சியாளர்களால் இந்தக் கிராமத்துக்கான திட்டங்களை யோசித்துப் பார்க்கமுடியும்?
அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த பதிவை படிக்க சொன்ன நண்பர் திரு Vinoth Ambedkar அவர்களுக்கு நன்றி. இது சம்பந்தப்பட்ட நாவல்களை படிக்க விரும்புகிறேன். தென்காசி அருகே உள்ள மீனாட்சிபுரம் மத மாற்றம் செய்திகளில் படித்திருக்கிறேன்.
நன்றி.
Post a Comment