4/17/13

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்-II Poomani as a Teacher and Anjaadi as a Text Book -II

 முந்தைய பதிவின் தொடர்ச்சி..........
4
திரு.சிவராமன் அவர்கள் அஞ்ஞாடிக்கு எழுதிய பின்னுரையில் “ஒரு வாசகன் படைப்பில் தேடுவதும், காண்பதும் உருவாக்கியவனின் மனம் என்ன தரத்திலானது என்பதைத்தான்” என்ற வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. படைப்பாளாரின் தரம் பனைமரம் மாதிரியோ, சிகரம் மாதிரி நெடுநெடுவென்று உயர்ந்திருந்தாலோ, என்னை மாதிரி நோஞ்சான் வாசகர்கள் (சிவராமன் பாஷையில், கலைப்படைப்புகளின் சிறந்த மாதிரிகளோடு இடைவிடாது தொடர்பு இல்லாதவர்கள்; கடுமையான வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) உயரம் தொட முடியாது. அண்ணாந்து பார்க்கலாம். அவ்வளவுதான். தமிழிலக்கியத்தில் திருப்புமுனை என்று சொல்லப்பட்ட சில புத்தகங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வ மூட்டவில்லை. காரணம் அதன் உயரமாகக்கூட இருந்திருக்கலாம். மாறாக, ஒரு படைப்பை உருவாக்கியவனே அதன் உயரத்தைத் தொடும்படியாக, தன் கதைசொல்லும் திறனால், மொழிநடையால் நமக்கு உதவினால் எப்படியிருக்கும்?.
அஞ்ஞாடியில், நூற்றாண்டுகளின் காலச்சித்திரம் தீட்டி, அதற்குள் ஒரு கதையை வைத்து, கதைக்குள் இன்னும் பல கதைகளையும் கனவுகளையும் வைத்து, வாசகனின் பாஷையிலே பேசி......பூமணி உயரத்தை தொட்டிருக்கின்றார். என்னை மாதிரி வாசகர்கள் அந்த உயரத்தைத் தொடுவதற்குத் தோதாக படிக்கட்டுகள், பிடித்தேற பக்கவாட்டு கைப்பிடிகள், அங்கங்கே மூச்சுவாங்கும் போது சற்று இளைப்பாறிச் செல்ல திண்டுகள் என்று திட்டமிட்டு அமைத்துள்ளார். அஞ்ஞாடி மொத்தத்தையும் 22 பாகங்களாகப் (படலங்களாகப்) பிரித்து, ஒன்றிலிருந்து இன்னொன்று போக, அளவாக படிக்கட்டுகளை (தலைப்புகள்) அமைத்து, ஓய்வெடுக்க திண்டுகளை அமைத்திருந்தாலும், சில பகுதிகள் மிக செங்குத்தாக இருக்க, என்னைப் போன்ற வாசகர்களுக்கு (அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) மூச்சுத் திணறத்தான் செய்கின்றது. “நால்லாத்தானே போய்க்கிட்டிருந்தாறு. தீடீர்னு ஏன் நம்மை மூச்சுத்திணற வைக்கின்றாரு” என்று சற்று ஆசுவாசமாக உட்கார்ந்து மேலும், கீழும் பார்க்கும் போது, கீழே அவர் விவரித்துச் சொல்லும் நிலப்பரப்பிற்கும் (கதைக்களத்திற்கும்), மேலே அவர் தொட்டுக்காட்ட நினைக்கும் மதிப்பீடுகளுக்குமான தொடர்பு புலப்படுகின்றது.
கலிங்கல் மற்றும் கழுகுமலையைச் சுற்றி நம் கைபிடித்து “சொகமாக” சுற்றிக்காட்டும் பூமணி, தீடீரென்று பலவேசத்தின் கல்விளைக்கு (நாகர்கோவிலுக்கு அருகில்-படலம்-5) நம்மைத் தூக்கிச் செல்கின்றார். பள்ளர்-வண்ணார்–நாடார்-நாயக்கர் என்ற பிரக்ஞையில்லாத ஆண்டி-மாரி-பெரியநாடார் நட்புக்கிடையில், “மேச்சாதிக்காரனாக இருந்தா எனக்கென்ன! ஞாயமென்னா எல்லோருக்கும் ஒண்ணுதானே” என்று அவர்களுக்கு இணையாக நியாயச் சண்டியராகும் (கலிங்கல் கருத்தையா) அளவிற்கு இடம்கொடுக்கும் கரிசலின் பின்புலத்தைக் காட்டிவிட்டு, திடீரென்று “எந்தா பொலையாடி மவனே தள்ளி நில்லுடே” என்று ஆணவமாகப் பேசும் நாயர்களையும், நம்பூதிரிகளையும் நமக்கு காட்டும்போது “இங்கே எதுக்கு நம்மை கூட்டியாந்தாறு” என்று யோசிக்க வைக்கின்றார். தங்கள் மார்புகளைக்கூட மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து பலவேசம் என்ற மனிதனைப் பிரித்துக்கொண்டு வந்து கழுகுமலையில் நடுகின்றார்.
5
பலவேசம் என்ற கதாபாத்திரம் ஒரு அர்த்தமுள்ள குறியீடு. தங்கள் மீது சுமத்தப்பட்ட எல்லாச் சிறுமைகளையும் தாங்கிக் கொண்டு, எத்தனை விதமான போராட்ட முறைகள் இருந்தனவோ அத்தனையையும் கையாண்டு, மதம் மாறியதிலிருந்து, பிரிட்டிஷ் மகாராணிக்கு மனுச்செய்து கொள்வது வரை, “கோயிலுக்குள்ளே போற காலமும் வராமயா போயிடும்” என்று சளைக்காமல் போராடிய ஒரு குழுவின் கம்பீரமான வரலாற்றை தொடங்கிவைக்க பூமணி கையாண்ட கதாபாத்திரம்தான் பலவேச நாடர். ஒன்றுமில்லாமல் கழுகுமலைக்கு வந்து, தலைச்சுமையாக கருப்பட்டி விற்று, பின் பொதிமாடு வாங்கி, பின் ஒத்தைமாட்டு வண்டி, ரெட்டைமாட்டு வண்டி என்று பலவேசத்தின் வளர்ச்சியோடு, வண்டிப்பேட்டை தொடங்கி நாடார்கள் நாலா திக்கிலும் பரவி, ‘தெராசு பிடிச்சாத்தான் யேவரமா. இது புது யேவாரம்” என்று புதுத் தொழில்களில் ஈடுபட்டு, அருப்புக்கோட்டை, கமுதி, கழுகுமலை, சிவகாசி என்று அவர்கள் அனுபவித்த வலியையெல்லாம் மறந்து, “பழசை எதுக்குக் கிண்டி கெளரிச் சங்கடப்படனும்” “மறந்தாத்தானே ஆத்துமா சமாதானமடையமுடியும். முன்னேறமுடியும்” என்று அவர்களின் மனோபாவத்தை வார்த்தைகளாக்கிக் காட்டும்போது......கல்விளைக்கு ஏன் நம்மைக் கூட்டிச் சென்றார் என்று கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு புரிய வரும் போது, பூமணியின் தரத்திலும், உயரத்திலும் பிரமித்து நிற்பதைத் தவிர வழியில்லை.
அதேமாதிரிதான் படலங்கள் 7,8,9,10. விரிவான வாசிப்புப் பழக்கம் இல்லாத என்போன்ற வாசகர்களுக்கு, மிகவும் செங்குத்தாக மூச்சுதிணறித் திணறி ஏறும்படி அமைந்திருந்தாலும், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்தால், பூமணி விவரிக்கும் வரலாற்றிற்கும், சொல்லவந்த கதைக்களத்திற்கும் உள்ள தொடர்பு புரியவருகின்றது. சிலுவைப் போர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவு, கத்தோலிக்க-பிராட்டஸ்டண்டு பிரிவுகளுக்கிடையே நடந்த மோதலைத் தெரிந்திருக்கின்ற அளவு, ஜைன-சைவ மோதலைப் பற்றி, ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் அவர்கள் நம்பிக்கையின் பொருட்டு கழுவேற்றப்பட்டது குறித்து நமக்குத் தெரிந்திருக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையென்பது, நாடு பிடித்தலுக்கும், மக்களின் நம்பிக்கையைப் பிடித்தலுக்குமான அதிகாரப் போராட்டத்தின் ஆடுகளம்போல்தான் கடந்தகாலங்கள் இருந்திருக்கின்றது. நமது நம்பிக்கைகள்தான் நம்மை வழிநடத்தியிருக்கின்றதென்றாலும், அதே நம்பிக்கைகள்தான் நம்மை மூச்சுத் திணறவும் வைத்தது என்பதை பூமணி தொட்டுக்காட்டிச் செல்கின்றார். விரிவான வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வரலாற்று எழுத்து நடைதவிர்த்து, பாமர நடையில் பூமணி சிலவற்றைச் சொல்லிச்செல்லும் போது அதன் அழகை, என்னைப் போன்றவர்களைவிட இன்னும் கூடுதலாக அனுபவிப்பார்கள்.
6
பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையங்கள் உருவானது, முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகை, ஜமீன்கள் உருவானது.... அஞ்ஞாடியில் சித்தரிக்கப்படும் வாழ்வெல்லாம் இந்த வரலாற்றின் எச்சங்களே. கடந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்போதும்கூட கலவரங்களும், சமாதானமின்மையும் முன்னேற்றத்தை முற்றிலும் முடக்க முடியாவிட்டாலும், அதை நிச்சயமாகத் தாமதப்படுத்தும். சிறிதும் பெரிதுமான உள்நாட்டுப்(பாளையங்களுக்கிடையே)போர்கள், நம்பிக்கைத் துரோகங்கள், அரண்மனைகளுக்குள்ளே நடந்த கண்ணாமூச்சி விளையாட்டுகள், சகோதரத் துரோகங்கள், அரண்மனைகளுக்கு நெருக்கமாயிருந்தவர்களின் அத்துமீறல்கள், ஆள்வோர்களின் ஸ்திரத் தன்மை கேள்விக்குறியாகும் போது, அது சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்திருக்கும் என்பதை நம்முடைய மனமுதிர்ச்சிக்கு ஏற்ப யூகித்துக் கொள்ளும்படி பூமணி விட்டுவிடுகின்றார். தங்களுடைய கோவணத்தை யாரும் உருவிவிடக்கூடாது என்று சமஸ்தானங்களும், பாளையக்காரர்களும், ஜமீந்தார்களும் பயந்திருந்த போது, மக்களாவது மண்ணாங்கட்டியாவது.
தன்னுடைய மதத்தைச் சார்ந்தவர்களே கூட்டம்கூட்டமாக மாற்று மதத்திற்கு மாறிக்கொண்டிருந்தபோது, “கீச்சாதிப் பயலுகதானே போனாப் போறாங்க” என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமஸ்தானங்களையும், பாளையங்களையும் ஆன்மீகம் வளர்த்தார்கள் என்று சொன்னால், “வொக்காளி! அவனுக என்னத்தை ஆன்மீகம் வளர்த்தாணுகளோ” என்று யாருக்காவது கோபம் வந்தால் அதை நியாயமற்றது என்றும் தள்ளிவிட முடியாது.
ஆவணச் சான்றுகளின் அடிப்படையிலே பெரும்பாலும் கடந்தகால வரலாற்றைப் பூமணி அணுகுகின்றார். கதாபாத்திரங்கள் உரையாடிக்கொண்டது வேண்டுமானால் பூமணியின் புனைவாக இருக்கலாம். ஆனால் அந்தக் கதாபாத்திரங்களில் பலர் உண்மையில் வாழ்ந்தவர்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை, ஊமத்துரையை, வெள்ளையர்களுடன் அவர்கள் போரிட்டதை “முதல் விடுதலைப் போராக” பூமணிக்கு முன்னரே பல வடிவங்களில் ஆவணப்படுத்திவிட்டார்கள். அதையெல்லாம் பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்குத்தான் தெரியும், அவர்கள் சொல்ல மறந்ததில் எதையெல்லாம் பூமணி சொல்லமுயன்றிருக்கின்றார், ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கு எப்படி அர்த்தம் கூட்டியிருக்கின்றார் என்பது. எனக்கென்னவோ கடந்த கால வரலாற்றோடு, சமீபகால வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்படியான ஒரு தளத்தை, வாய்ப்பை பூமணி உருவாக்கிக் கொடுத்திருப்பதாகவே படுகின்றது. “தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்” என்ற ராஜ்மகாலின் விளம்பர வாசகம் போல், பல மாச்சரியங்களை இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டலைகின்ற நமது கோட்டித்தனத்தை பூமணி நாசூக்காகச் சொல்லும் போது நமக்கே சிரிப்பு வருகின்றது. .
7
கழுகுமலையில் ஏற்பட்டது திடீர்க் கலவரம். சட்டென்று ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் (ஜமீன் மேனேஜர்), நாடர்களையும் சேர்த்தே பழிதீர்த்துக் கொண்ட வஞ்சகம். ஆனால் சிவகாசிக் கலவரம் திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தை நாடர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது பெரிய பாடம். “வேலும் மயிலும் துணை” என்று கோஷமிட்டுக்கொண்டு, வெள்ளையர்களை ஊமத்துரை பாடுகண்ட மனதைரியத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிவகாசிக் கலவரத்தை நாடார்கள் எதிர்கொண்ட தீரம்.
“பிடிக்கலன்னா வேதத்துக்கு ஓடிப்போயி ஒதுங்கிக்கோ. இங்கிருந்தா இப்படித்தான். காலங்காலமா இருந்து வாற வழக்கத்த ஓதறித்தள்ளீட்டு ஒன்னோட கூடிக் கொலாவ முடியாது. அணிலு கொப்புலதான் ஆம கெணத்துல தான். மத்த கீச்சாதிக்காரனெல்லாம் இப்படியா முண்டீட்டு தோரணி பண்றான். பொச்சப் பொத்திக்கிட்டுக் கெடக்க வேண்டியதுதான்” (709) இதை பூமணியின் கற்பனை என்று ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. இது கடந்த காலத்தில் நாடர்கள் அனுபவித்த உண்மை.
அத்தனை ஜாதியினரும், ஏன் மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்களும் கூட பயந்து ஒதுங்கிக் கொள்ள, சிவகாசி இந்து நாடார்கள் மட்டும் தனித்து விடப்படுகின்றார்கள். சிவகாசி கோயில் நூழைவுப் போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த செம்புக்குட்டி நாடார், “நான் பனையேறியில்லடா. படியேறி. செவங்கோயில் படியேறம இந்த செம்புக்குட்டி ஓயமாட்டான்.....நான் சாதாரண செம்புக்குட்டி நாடான்னு நெனைச்சயா. நான் செம்பகப் பாண்டியண்டா” என்ற அவரின் கர்ஜனை கட்டபொம்மு ஜாக்சன் துரையிடம் கர்ஜித்ததைவிட உணர்வுபூர்வமானது. அதைவிட ஒருபடி உயர்ந்தது. கட்டபொம்மனாவது தன் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள ஆவேசப்பட்டான். அவனுள் விடுதலை வேட்கையோடு, சுயநலமும் கூட இருந்தது அவனுக்கு உதவ பலர் இருந்தனர். ஆனால் சிவகாசியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் “செவங் கோயில் படியேறம இந்த செம்புக்குட்டி ஓயமாட்டான்” என்ற கர்ஜனையில் சுத்த தரிசனத்திற்கான தேடல் மட்டுமே இருந்தது. இதைவிட ஒரு உயர்வான ஆத்மத் தேடலை யாராவது ஆவனப்படுத்தியிருக்கின்றார்களா என்ன? செம்புக்குட்டி நாடாரை 63 நாயன்மார்களோடு 64 வது நாயன்மாராக வைத்து வழிபட்டாலும் அதில் ஒன்றும் தவறில்லை.
“வேலும் மயிலும் துணை” என்ற மந்திரத்தை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு வெள்ளையர்களின் பீரங்கிகளை பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எதிர்கொண்டது மாதிரி, “காளியும் மாரியும் நமக்கு தொணையிருக்கும்போது கவலையெதுக்கு” என்ற தைரியத்துடன் நாடார்கள் களமிறங்கினார்கள். கலகக்காரர்களை, நாடார்கள் எதிர்கொண்ட விதத்தை பூமணி விவரிக்கும் போது, கலகக்காரர்களைவிட எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த நாடார்களின் நெஞ்சங்களிலும், ஆயுதங்களிலும் அவர்கள் நம்பியது மாதிரி, காளியும், மாரியும் குடிகொண்டுவிட, அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், “காளியே கோவங்கொண்டு துரத்துவதாக” கலகக்காரர்கள் ஊரை விட்டு ஓடினர்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கைப்பற்றி, இடித்துத் தரைமட்டமாக்கி, உழுது, அடையாளத்தை மறைக்க ஆமணக்கை விதைத்தான் வெள்ளையன். நூறாண்டுகளுக்குப் பின்னே அரசு முயற்சி எடுத்து அங்கே நினைவுச் சின்னம் எழுப்பியபின்தான் அவ்விடத்திற்கு உயிர் வந்தது. ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் சிவகாசி நாடார்கள் மீண்டெழுந்தார்கள்.
கட்டபொம்மன் வசனத்தை இன்றும் நாம் மறக்காமல் பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த வசனத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூறுவது, தேச பக்தியை நீர்த்துப் போகாமல் வைத்திருக்கவா? இல்லை நம்முடைய இயலாமையை மறைக்க கையாளும் உத்தியா? ஆனால் சிவகாசிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதை மறந்துவிட்டார்கள். “மறக்கப்போயித்தானே இம்புட்டுக்கு முன்னேறியிருக்காக” என்று அஞ்ஞாடியில் (904) வரும் உரையாடல் நம்முடைய மதிப்பீடுகள் பலவற்றை  காலத்திற்கேற்றவாறு கட்டமைத்துக்கொள்ள வற்புறுத்துகின்றது.
சிவகாசி கலவரத்திற்குப் பின்னும் நாடார்கள் நீண்டகாலம் பொறுமை காத்தார்கள். மக்கள் மக்களாக இருந்தவரை மாற்றங்கள் மெதுவாக நடக்கின்றது. ஆனால் மக்கள் வாக்காளர்களாக, தொழிலாளர்களாக, நுகர்வோர்களாக உருமாறும்போது மாற்றங்கள் வேகம் கொள்கின்றன. ஓட்டு வாங்குவதற்குத்தான் கோயிலைத் திறந்துவிட்டார்கள் என்பதை பூமணி நாசூக்காக சொல்லிச்செல்லும் போது, அதை ஒட்டுப்பொருக்கிகளின் சூழ்ச்சி என்ற அவநம்பிக்கையோடு நிறுத்தாமல், மாறாக ஜனநாயகம் நடைமுறைக்கு வரவர, மக்களின் அபிலாட்சைகளை ஆள்வோர் அங்கீகரிக்கத் தொடங்கி விட்டதை பூமணி நமக்கு புரியவைக்க முயற்சி செய்கின்றார். நாம் கண்டடைந்த ஜனநாயகம் குறைபாடுகள் அற்றதல்ல. இருப்பினும், கலிங்கல் மயானத்தில், ஆண்டியும் கருப்பியும் குழிக்குவெளியே அட்ணக்கால்போட்டு வெயில்காய்ந்து கொண்டிருக்கும் போது, ஆண்டி கருப்பியிடம் “ஏ கழுத. எதுவும் கெட்டுப்போகல. முன்னேறியிருக்கு’ என்று சொல்வதைப் படிக்கும்போது, “வொக்காளி! இதைவிட மேலாக இந்த மண்ணையும், இந்த மண்ணில் ஏற்பட்ட சகல மாற்றங்களையும்  மகிமைப்படுத்தமுடியுமா? என்ற பிரமிப்பிலிருந்து மீளமுடியவில்லை. நூற்றாண்டுகால இந்த மண்ணின் வரலாற்றை உள்வாங்கி, தன் நாடி நரம்புகளிலெல்லாம் கரைத்து, ஞானக்கரைசலாக்கி, ஞானிகளின், அரசர்களின், புலவர்களின் வார்த்தைகளாக அல்ல, சாதாரண மக்களின் வார்த்தைகளாக, பூமணி வெளிப்படுத்தும்போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை.
8
நான் அஞ்ஞாடியை ஒரு பாடப்புத்தகமாகத்தான் பார்த்தேன். எந்த ஒரு மாணவனும் பாடப்புத்தகத்தில் பொருளடக்கத்தையே முதலில் பார்ப்பான். அஞ்ஞாடியில் அப்படியான பொருளடக்கம் இல்லை. பல தமிழ் இலக்கியப் படைப்புகளில் பொருளடக்கம் இல்லை என்பது உண்மை. அது தேவையற்றதென கூட பதிப்பாளர்கள் நினைத்திருக்கலாம். பொருளடக்கமும், சொற்பட்டியல்/பெயர்ப் பட்டியல் வாசிப்பதற்கும், வாசித்த பகுதிகளைக் மறு வாசிப்பு செய்யவும் வாசகனுக்கு உதவும். அதனால், என்னுடைய புரிதலை ஆழமாக்க எனக்குப் பயன்படுகின்ற மாதிரி அஞ்ஞாடிக்கான பொருளடக்கம் தயார் செய்தேன். அதை இங்கு தந்துள்ளேன். இந்தப் பொருளடக்கம் அஞ்ஞாடியை இனிமேல் வாசிப்பவர்களுக்கு உதவலாம்.
அஞ்ஞாடி 22 படலங்களாகவும், ஒவ்வொரு படலமும் பல்வேறு தலைப்புகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளடக்கம் கொடுக்கப்படாததால் நமக்கு பிடித்த பகுதிகளை தேடுவதற்கு மெனக்கெட வேண்டியிருக்கின்றது அந்த குறைபாட்டைக் களையவே இப் பொருளடக்கம் கொடுக்கப்படுகின்றது
படலம் 1 1-112
படலம் 10 487-540
படலம் 17. 794-824
1. கண்ணுக்குட்டியும் கழுதைக்குட்டியும்
1. தகர்ந்தது பாளையம்
1.பிண வாடை
1. தண்ணிப் பேயி
2. தடுமாறும் உறவுகள்
2.கிழக்குச் சீமை
2. ருசியாயிருக்குதா
3. மைனர் ராசா
3. கோழிக்கொள்ளை
3. அவுத்துக்கிருச்சாம் கழுத
4. அரண்மனை விவகாரம்
4. மேலச்சீமை
4. கட்டுத்துறை விட்டு வெளியேறி
5. வந்தாரைய வெங்கட்ராயர்
5. கோயில்கள் எரிந்தன
5. கூனையிலே பதனியாம்.
6. புது வழி
6. பாவா பாவா
6. அடித்தட்டு விளையாட்டு
7. பரலோக மாதவே
8. நடை திறப்பு
7. அடிவானம் வெளுத்துருச்சு
8. வேத போதம்
9. தடையும் தண்டமும்
8. கஞ்சி போடுங்கஞ்ஜா
9. ஊர் புதுசு கோயில் புதுசு
10. குற்றப் பத்திரிகை
9. எம்பிளி கருப்பி
10. சோறு வேணாம் துணி வேணாம்
11. குற்றமும் தண்டனையும்
10. போயிட்டயே கழுத ஓதஞ்சான்
11. அல்லேலூயா
படலம் 18. 824-880
11. புது மூச்சு
படலம் 11 540 – 605
1. முளைக் கீரை
12. இப்படியும் உண்டுமா
1. அருமுருக்கு
2. ஆப்பு
13. மஞ்சனத்திப் பூக்கள்
2. கண்டனமாக்கி ஓடும் காலம்
3. அரவக் கருடனார் உலா
14. கதகதயாம்
3. உன்னைக் கழுவுகின்றேன்
4. இறக்கம்
15. போடி அனந்தி
4. தேரும் குருத்தும்
5.ஆலமரம் சாஞ்சது
படலம் 2 113-159
5. நீக்கிரகம் பண்ணுவேன்
6. நாடார் தோட்டம்
1. வாங்க மக்கா
6. பாவத்தின் சம்பளம்
7. பணமும் கோயிலும்
2. கேளுங்க மக்கா
7. சிலுவைப்பாடு
8. தப்பித் திரிந்தவர்கள்
3. வனவாசம்
8. தேரோட்டம்
9.பல்லாக்குச் சுமை
4. வயித்துப் பாடு
9. அவ்வளவுக்காயிப் போச்சா
10.தீட்டுச் சிலுவை
5. மதியக் குளிப்பு
10. வாக்குமூலம்
11.சீமையிலிருந்து சேதி
6. நல்லாருப்ப தாயீ
11. என் அஞ்ஞயிள்ளே
12.சம்சாரி வேலையா
7. கருத்தையன் பெண்டாட்டி
12. பிரேத விசாரணை
13.புகையும் நெருப்பும்
படலம் 3 159-212
13. அடுத்தகட்டம்
14.ரெண்டு பங்கு
1. பாளையறுவாள்
14. அடையாளப் பேரேடு
15.முகாவெட்டு.
2. கும்பிய கருப்பட்டி
15. விசாரணையும் விசாரமும்
16.அடுப்பு அடுப்பே
3. பனையும் துணையும்
படலம் 12 605-647
படலம் 19 881-905
4. வெள்ளைப் பேத்தி
1. விசாரிக்கப்படாத கதை
1.கதவு திறந்தது
5. நல்ல பொண்ணுதான்
2. அமைய மாட்டாங்காளே
2. புது மீனாட்சி
6. பருசம் வேலம்புங்க
3. நீதியின் தேவனே
3.தானான தனனன்னா
7. என்னைப் பெத்த அப்பன்
4. சிறைவாசம்
4. நில்லும் பிள்ளாய்
8. பட்டணப் பிரவேசம்
5. ரெட்ட வெள்ளாவி
5. தள்ளிப் போட்டிருக்கலாமே
படலம் 4 212- 260
6. ஆத்தும விடுதலை
6. அடடா...
1. தாது வந்தது.
7.ஏகசுதன் உயிர்த்தெழுந்தார்
7. விடிஞ்ச பின்னே
2. தண்ணீரும் கண்ணீரும்
8.அடியே மாடத்தி
படலம் 20. 906-952
3. சின்னஞ் சிறுசுகள்
9.மாதவுக்கு மாற்றுமனை
1. அண்ணைக்குப் பாத்த முகம்
4. மாண்டதும் மீண்டதும்
10.வாறென் இவனே
2. நாடாக்கமார் தெரு
5. மேகாட்டு நெல்
படலம்.13. 647-672
3.முறிவு
6. கால மழை பொழிஞ்சது
1. கூடை தொடேன்
4.குடல் கழுவி
படலம் 5 261-308
2. நெய்தல் மகன்
5.நெல்லுச் சோறு
1. கோயிலும் குளமும்
3. பாலையின் தோழன்
6.நெத்திலி
2. பொலையாடி மவளே
4.முல்லையின் பிள்ளை
7.சோளத்தட்டை
3. தீமிதி
5.மனசெல்லாம் மருதம்
8.வெலபோயிட்டானே
4. வந்த இடமே சொந்தம்.
6.குறிஞ்சி மனம்
9. பிடிமானம்
5. கோயிலைத் தேடி
7.வணிக உழவன்
10. வெறிச்சோடிய திருணை
6. வடலிவளர்த்து
8.நெடும்பயணம்
படலம்.21. 953-1002
படலம் 6 308-386
9. பாண்டியக் காலடிகள்
1. ஆகமான சவரிமுடி
1. செல்லக் கொடி
10. சிறுக்குளம் பெருக்கி
2. தேவ மாதா
2. நித்திரையும் ஆனதென்ன
படலம் 14. 672-707
3. வாழப் பிறந்தவளே
3. கட்டுச்சோறும் எலியும்
1.மேலைக்கூவல்
4. உப்புச் சக்கரை
4. எலிக்கூத்து
2.வெயிலும் மழையும்
5. வேதப் பள்ளிக்கூடம்
5. வெளையாடி முடிச்சாச்சி
3.ஊடு பட்டம்
6. அலைச்சலும் உலைச்சலும்
6. கருப்புக் கானா
4.கர்த்தரின் பந்தியில் வா
7. ஒப்புவதாரடி ஞானப்பெண்ணே
7. ஊர்க்குடும்பு
5.முதல் கனி
8. கழுத்துப் புண்
8. வீடாள வந்தவளே
6.வேதச் சாதி.
9. கண்டுகொண்டேன்
9. அந்தா போராண்டா
7.காட்டுவழி நெடுக
10. வண்ணாக்குடி வம்சாவளி
10. சிறகு முற்றி
8.இதோ வெட்டுங்கள்
11. அடிவகுத்துக் கொடியறுத்து
படலம் 7 386- 412
9.ஆறுதல் அடை மனமே
12. காக்கா முட்டை
1. பிஞ்சுப் பழம்
10.வேத வெள்ளாமை
படலம் 22 1002-1050
2. அரகர அரகர
11.அந்தரங்கம்
1. தொலைந்து போனது
3. அருகா முருகா
படலம் 15. 708-734
2. தங்கையா கூட்டம்
4. அரை மலை
1.ஆம கெணத்துலதான்
3. பாவ சங்கீர்த்தனம்
5. மோனத் திருமேனிகள்
2.தீவட்டிக் கொழுத்தி.
4. என்ன எழவு உறவோ
6. அமணச் சுவடுகள்
3.கொலையுண்ட நந்தவனம்
5. கழுதகளைக் காணலயே
படலம் 8 412-446
4.எங்கே வைப்பது
6. அலச்சல் தீரலயே
1. கழுகுமலை தேடிவரும்
5.முன்னோட்டம்
7. வாழைத்தார்
2. எட்டப்பவம்சம்
6.பதட்டமும் ஆவலாதியும்
8. தொட்டிவீடு
3. ரத்தமானியம்
7.கூடிக்கலையும் மேகங்கள்
9. மறப்பும் நினப்பும்
4. வடுகபாண்டியர்
8.வருத்தமே மிஞ்சியது.
10. ஆறுக்கு மூணடியாம்
5. கைமாறும் அதிகாரம்
படலம் 16. 734-791
6. சிவசங்கரன் பிள்ளை ஓடை
1.தனிமரம்
நன்றி 1051 -1053
7. எட்டனும் கட்டனும்
2.நெருங்கி நெருங்கி
பின்னுரை 1054-1066
8. சும்மா கெடக்காது சிங்கம்
3.தன் கையே
படலம் 9 446-487
4.வா மச்சான் வா
1. ஊமைக் கனல்
5.தொடரும் வேட்டை
2. உடைந்தது சிறை எழுந்தது கோட்டை
6. போதகரும் ஆதரவும்
3. முன்னேறிப் பின்வாங்கி
7. கடைசி நம்பிக்கை
4. வெற்றிமேல் வெற்றி
8. ஆயுத முளைப்பாறி
5. ஆயுத வேட்டை
9.முற்றுகை
6. போர் முழக்கம்
10.படுகளம்
7. பறந்துவிட்ட ராசாளி
11. தும்பை விட்டு.
8. அஞ்ஞாடி வந்துட்டானே
12. பிணக்கணக்கு
9. சிவகங்கை தேடி
13. சுட்டாலும் சும்மா இருந்தாலும்
10. பேசிப் பிரிந்த கைகள்
14.மரண ஓலம்
11. காளேசுரா
15.பம்மாத்து
12. பிரயச்சித்தம்
16.கழுகுமலைக்கு போவலைய்யா
9
அஞ்ஞாடியின் பலமும், பலகீனமும் நம் ஞாபகத்திற்கு சவால்விடுமளவு நடமாடும் கதாபாத்திரங்களே. அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொண்டு கதைத் தொடர்ச்சியை புரிந்துகொள்வது சற்று சிரமமானதுதான். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையோட்டத்தில் முக்கியப்பங்கிருக்கின்றது. இந்தகுழப்பத்தைத் தவிர்க்க கதாபாத்திரங்களை அவர்கள் வம்சா வழிப்படி புரிந்துகொண்டேன். ஆண்டி வம்சம், மாரி வம்சம், பெரியநாடார் வம்சம், உத்தண்டு,  தூங்கன், மொங்கன் வம்சம், சத்திரப்பட்டி சுந்தர நாயக்கர் குடும்பம், வேப்பங்காடு ஆண்டாள் குடும்பம் என்று வகைப்படுத்திக்கொண்டேன். அதே மாதிரிதான் கிறிஸ்தவ மத போதகர்களையும் புரிந்துகொள்ள முயற்சிசெய்தேன். என் புரிதலையொட்டி சில வம்சாவளிப் பட்டியலை தயாரித்தேன். இந்த வம்சாவளிப் பட்டியல் அஞ்ஞாடி கதாபாத்திரங்களை சட்டென்று அடையாளம் காணவும், மொத்தக் கதையோட்டத்தில் அவர்கள் பங்கை இரசிக்கவும், அசைபோடவும் உதவும். அஞ்ஞாடியை ஒரு புதினமாகப் பார்த்திருந்தால் இந்த வேலையில் ஈடுபட்டிருக்க மாட்டேன். அதைப் பாடபுத்தகமாகப் பார்த்ததன் விளைவு.
Andi Vamsaavali New
மாரி வம்சம்
பெரிய நாடார்
பிற வம்சம்
10
மேலைநாட்டு கல்லூரி ஆசிரியர்கள், ஒரு பாடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகத்தை, அத்தியாயம் வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு அத்தியாயமும் என்ன சொல்லவருகின்றது என்பதன் சுருக்கத்தையும், அதோடு தொடர்புடைய மற்ற புத்தகப் பட்டியலையும் power point presentation ஆக தருவதை இணையத்தில் பார்த்திருக்கின்றேன். அது மூலப் புத்தகத்தை படிக்க மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் உத்தி. எனக்கும் அஞ்ஞாடி புத்தகத்திற்கு அது மாதிரி குறிப்புகள் கொடுக்க ஆசைதான். அஞ்ஞாடி கதைக்களத்தின் வரைபடங்களை- கலிங்கலூருணியில், கழுகுமலையில், சிவகாசியில் கதை நடந்த இடங்களை, அந்த இடத்தோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை ஒரு GIS Presentation ஆக்க ஆசைதான். பார்க்கலாம்.நான் செய்யாவிட்டாலும் யாராவது செய்வார்கள்.

4 comments:

Muthuprakash Ravindran said...

என்னுடைய புத்தகத்தை பற்றிய எழுத்தில் இதுவே இந்த புத்தகத்தை படிப்பதில் ஒரு சுணக்கம் ஏற்படுத்துவதாய் எழுதி இருந்தேன். தங்களின் இந்த வம்சாவளி பட்டியல் புத்தகத்தை மீண்டும் வாசிப்பதில் மிகவும் உதவியாய் இருக்கும். நன்றி!!

அஞ்ஞாடி பற்றிய எனது கருத்துகள்.
http://sibipranav.blogspot.in/2013/03/1.html
http://sibipranav.blogspot.in/2013/04/2.html

SiSulthan said...

அஞ்ஞாடியை ஒரு முறை படித்து முடித்துவிட்டேன்.. ஆனாலும் பொருளடக்கம், குடும்ப வரிசை பட்டியல்கள் மற்றொருமுறை ஆற அமற படிக்கும்போது மிகவும் உபயோகமாக இருக்கும்.. நன்றி

Rathnavel Natarajan said...

அஞ்ஞாடி - திரு பூமணி அவர்கள் எழுதிய புத்தகம் பற்றிய மதிப்புரை பதிவு - பாகம் 2 - அருமையாக எழுதப் பட்டிருக்கிறது. புத்தகமும் பெரிது, மதிப்புரையும் பெரிது. நண்பர்கள் ஆழ்ந்து படிக்க கேட்டுக் கொள்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி சார் திரு Srinivasan Rengasamy .

ஜோதிஜி said...

நன்றி