1/25/09

Paavalareru Perunchitranaar - பாவலரேறு பெருஞ்சித்ரனார

முகத்திற்கு அழகு ஒப்பனை! மனதிற்கு அழகு உயர்ந்தவர்களை எண்ணி உருகுதல்
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நண்பரொருவர்தாம், பாவலரேறு பெருஞ்சித்ரனாரின் எழுதுக்க்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். பகைவர் கூட குறைசொல்ல முடியாத தமிழ், பாவலரேறுவின் தமிழல்லவா?. தனித் தமிழில் கூட இவ்வளவு சுவைபட எழுதமுடியுமா என்று எவரையும் வியக்க வைக்கும் தமிழல்லவா? பாவலரேறுவின் தென்மொழிக்கு வாசகனானேன். என்னுடைய விரிவான கடிதங்கள் ஒன்றிரண்டு கூட தென்மொழியில் பிரசுரமாயின.
அறிமுகப்படுத்திய அதே நண்பர் தாம் பாவலரேறுவின் "வாழ்வியல் முப்பது" என்ற சிறு கவிதைத் தொகுப்பைப் பரிசளித்தார். பாவலரேறு தமிழையும் கடந்து மானுடத்தை நேசித்ததற்கு அது ஒரு அடையாளம்.
வருடங்கள் கடந்தன். பாவலரேறு பல காரணங்களால் உளவுத் துறையின் கண்காணிப்பிற்கு உட்படுதப்ப்பட்டார். அறிமுகப்படுத்திய அதே நண்பர், ஒரு நாள் என்னைத் தேடி வந்தார். அவருக்கு நெருக்கமான உளவுத்துறை நண்பர், அவரிடம் என்னைப் பற்றியும் விசாரித்திருக்கின்றார்.

முன்பின் தெரியாத யாராவது, தமிழ் தீவீரவாதம், இலங்கை பிரச்சினை பற்றி வாயைக்கிளறினால் கவனமாகப் பேசும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னரே எனக்கு அறிமுகமில்லாத ஒருவர், நான் சந்தேகப்படாத அளவு இதைப் பற்றி பேசிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த மாதிரி மொக்கைகளைஎல்லாம் பட்டியலில் சேர்த்து ஏன் உயிரை வாங்குகிறீர்கள் என்று அவர் அலுவலகத்தில் கோபித்து இருப்பார்.
மதுரையில் அப்போது பிரபலமாயிருந்த இன்னொரு தமிழ் அறிஞ்ரும் கூட என்னை எச்சரிக்கை செய்தார். பாவலரேருவுக்கு பல பிரச்சனைகள். தென்மொழி வெளியீடு சிக்கலுக்கு உள்ளானது. தொடர்புகள் விட்டுப்போயின. நான் ஒரு சராசரி வாசகன் தானே!
92 ல் கல்லூரி சார்பாக ஒரு இதழ் தயாரிக்கும் பணி எனக்கு கொடுக்கப்பட, இட நிரப்பலுக்க்காக (gap filling) என் மனதில் பட்டது பாவலறேருவின் வாழ்வியல் முப்பது. எங்கள் கல்லூரியில் பாவலறேரு பற்றி யாருக்கும் தெரியாது. பாவலறேருவின் கவிதைகளைப பிரசுரித்து அவர் பெயரைப் போட்டிருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காதுதான்.அட்சேபிதிருக்கமாட்டார்கள் தாம். இருப்பினும், பிரச்சனை தவிர்க்க பெயரைப் போடாமலே பாவலறேருவின் கவிதைகளைப் போட்டுவிட்டேன்.அது தவறுதான். ஆனால் மரியாதையை மனதில் கொண்டு செய்ததால் மனசாட்சி உறுத்தவில்லை.

சமூகப் பணி இதழைப படித்த, அப்போது மதுரையில் "உங்கள் உடல் நலம்" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தவர் (பெயர் நினைவிலில்லை), எங்கள் இயக்குனரிடம் அக்கவிதைகளைப் பாராட்டியது மட்டுமல்ல, அவருடைய இதழில் மறுபிரசுரம் செய்ய விரும்புவதாகச் சொல்ல, நானே அவரைத் தேடிச்சென்று, அது எங்களுடைய கவிதையல்ல என்று சொல்லி "வாழ்வியல் முப்பதை" அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். அப்பொழுது எனக்கு தெரிந்திருக்கவில்லை, ஒரு பொக்கிசத்தை இழக்கின்றேன் என்று.
இடையில் நான் தேடியும் வாழ்வியல் முப்பதோ, சமூகப் பணி இதழோ எனக்குக் கிடைக்கவில்லை. பாவலரேறுவின் கவிதைகளை சிறு சிறு “பேனர்களாக்கி” கல்லூரியில் வைக்கும் எனது ஆசை நிராசையாகிப் போனது.
சமீபத்தில் கல்லூரி பணியாளர்கள் பழைய ஆவணங்களை கிளறிக் கொண்டிருந்தபோது, சமூகப்பணி இதழ் கிடைக்க நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாவலரேறுவின் சில கவிதைகளை பலர் பார்வைக்கு வைக்கலாமே என்ற மகிழ்ச்சி. “யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்” (தென் மொழி பதிப்ப்பகத்தார் இந்த ஆர்வத்தின் பின்னணியில் இருக்கும் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு மன்னிப்பார்களாக)

பாவலரேறுவின் கவிதைகளில் சில

ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்!
ஏக்கம் அகற்று
ஏறு போல் வினை செய்!
தாக்கும் இழிவுகள்
தாமே அகன்றிடும்!

ஒழுக்கமே உன்றனை
உயர்த்திடும் படிநிலை
இழுக்கம் இழுக்கு!
இழிவுரும் அதனால்
பழக்கம் கொடியது!
பண்பு பொன்மகுடம்!
இழக்கும் பொழுதுகட்கு
ஈட்டம் நினைந்து பார்!

உண்மை வலியது!
உள்ளமும் வலியது!
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்!
மண்மேல் அனைத்தும்
மடிந்து மட்குவன!
எண்மேல் எண்ணிய
ஒருவனாய் இரு நீ!

உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்து பார்!
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்று
அறிவு தேரவதை
கொள்ள முயற்சி செய்!
கொடு நினைவகற்று!

உயர்வாய் நினைப்பவை
உன்னை உயர்த்தும் !
மயர்வாம் நினைவுகள்
அறிவையும் மயக்கும்!
துயர்வுரும் வினைக்குத்
துணிவு கொள்ளாதே!
அயர்வின்றி இயங்கு
ஆக்கம் துணைவரும்!

உயிரை மலர்த்து
உணர்வை அகல் செய்!
பயிர், நீ! கதிர், நீ!
பழம்பெரு வான், நீ!
துயர் கொள்ளும் சிறிய
துகளிலை; நீ, ஓர்
உயிர் ஒளிப் பிழம்பு:
உலக உடம்பு!

மாந்த ஒளி நீ
மந்த விலங்கில்லை!
ஏந்தல் என நட!
இளைத்தும் தலை நிமிர்!
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திழு!
சேந்து, அவர் நினைவை
செம்மை நினைவு வார்!

உன்றன் விழிகளை
உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை
உலகெலாம் பரப்புக!
குன்று பார்! கதிர் பார்!
கோடிவிண் மீன் பார்!
நின்று பார்! நடந்து பார்!
சிறுநீ, உலகம்!

உயிரை மலர்த்து
உணர்வை அகல் செய்!
பயிர், நீ! கதிர், நீ!
பழம்பெரு வான், நீ!
துயர் கொள்ளும் சிறிய
துகளிலை; நீ, ஓர்
உயிர் ஒளிப் பிழம்பு:
உலக உடம்பு!

1 comment:

Be Yes Ramesh said...

u'r superb-BEE extract best honey from tamil poet