5/16/10

விரல் உரல் ஆனால், உரல் என்ன ஆகும்? If the finger becomes as big as a rice mortar, how big will the rice mortar become?

1.மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் கணனி /தகவல் தொழில் நுட்பத் துறையுமிருந்தாலும் என்னுடைய கணனி அறிவு மேம்பாடடைய உதவியவர்கள் கல்லூரி சாராத வெளி நண்பர்கள்தாம். கணனியில் எனக்கு இப்பொழுதுகூட பெரிய அளவு பாண்டித்யமில்லை. இருப்பினும் எனக்கு வேண்டிய ஆவணங்களை(Documents) நானே தயாரித்துக் கொள்ளுமளவு முன்னேறியிருக்கின்றேன். கரும்பலகை, கைப்பிரதி, கம்ப்யூட்டர் பிரிண்ட் என்று, மாணவர்களுக்கான எனது பாடக் குறிப்புகள் முன்னேறி வந்துள்ளது.

clip_image002[8]Desk Top applications-களைக் கடந்து இணையத்தைப் பயன்படுத்த எனக்கு ஆர்வமூட்டியவர்கள் எனது இளயமகன் விக்னேஷும் (Amazwi), மாணவராயிருந்து, பின் சக ஆசிரியராகி, பின் எனக்கு “இணய குருவான” செந்திலகணேஷும்தான். Indian Insitute of Management (IIM), அகமதாபாத்தில் ஆய்வு மாணவராக இருந்த காலத்திலும் சரி, பின் –Xavier Institute of Managemnt, Bhuvaneswar (XIMB)-ல பேராசிரியரான பின்னும் சரி, செந்தில் மதுரை வரும் போதெல்லாம் அவருடன் செலவிட்ட நேரங்களெல்லாம் ஞானப பிரசாதம்தான். என்னுடைய பெயரைச் சிதைக்காமல், gmail அறிமுகமானபோதே எனக்கென முகவரியை உருவாக்கிக் கொடுத்ததே செந்தில்தான்.clip_image004

கூரை மேலிட்ட அன்னம்

2. வலைப்பதிவு(Blog) ஆவணப் பகிர்வு (Document Sharing) என்பதைப் பற்றியெல்லாம் தெரியவர, நாமும் ஏன் சிலவற்றைப் பரிசோதித்துப் பார்க்கக்கூடாது என்ற ஆர்வம் எனக்குள்ளும் முளைவிட்டது. ‘சார்! உங்க நோட்ஸ் கையில் வைத்திருப்பதைப் பார்த்தாலே, அந்த குப்பையைத் தூக்கிக்கொண்டு ஏன் அலைகிறாய் என்று சக ஆசிரியர்கள் பரிகசிப்பதாக மாணவர்கள் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் என் கணனியிலிருந்த மிகப் பெரிய குப்பையான Regional Planning Full Document -SR என்ற ஆவணத்தைத்தான் Scribd வலைதளத்தில் முதன்முதலில் upload செய்தேன். (Publish என்பது பெரிய வார்த்தை). ஆவணத்தை ஆன்லைனில் (online) பத்திரப்படுத்தலாம் என்ற ஆர்வத்தில் செய்த காரியமது.

பத்துப் பதினைந்து நாட்கழித்து Regional Planning பாட சம்பந்தமாக இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது, நான் upload செய்திருந்த ஆவணத்தை என்னுடையதென்று தெரியாமலே நான் திறந்து பார்க்க, அதற்குள் அந்த ஆவணம் ஆயிரம் பேர்களுக்கு மேல் படிக்கப்பட்டும, நானூறு பேர்களுக்குமேல் பதிவிறக்கம் செய்யப்பட்டும், Scribd வலைதளத்தால் “Raising Document“ (popular) என்றும் பட்டியலிடப்பட்டுமிருந்தது எனக்கு ஆச்சர்யத்தையும், பெருமையையும் தந்தது. குப்பையென்று உதாசீனப்படுத்தபட்டது, கூரை மேலிட்ட அன்னம் என்று புரிந்தது. Regional Planning பற்றி நான் வெளியிட்ட கையேடுகள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்று, என்னை புவியியல் பேராசிரியாராக பலரை நினைக்கத் தூண்டியது.

clip_image0063. நீங்கள் உன்ன்மையென்றும், நன்மையென்றும் மனமொப்பி அறிந்த்ததை தயவு செய்து எங்களுக்கும் சொல்லுங்கள் (ஹெலன் கெல்லர் அம்மையாரின் கூற்று) என்ற வேண்டுகோளுடன் cdmissmdu Community Development (07.2008) என்ற வலைப்பதிவைத் தொடங்கினேன். Community Development Specialization மாணவர்களின் குரூப் போட்டோவும், அவர்களைப் பற்றிய குறிப்புமிருந்த்தால் நன்றாக இருக்குமென்ற எண்ணத்தில் குரூப் போட்டோ கேட்க (2007-2009 batch) அவர்கள் என்னைப் படுத்திய பாட்டாலும், செய்த பாலிட்டிக்சாலும், தேவையில்லாமல் மாணவர்களின் பரிகாசத்திற்கு உள்ளாக வேண்டாமென்ற ஜாக்கிரதை உணர்வால் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டேன்.

clip_image0084. cdmissmdu-Community Development –A Field of Million Possibilities வலைப்பதிவில் தொடர்ந்து எழுதாவிட்டாலும், Scribd வலைதளத்தில் என்னுடைய ஆவணங்களைத் (கையேடுகளை) தொடர்ந்து பிரசுரித்துக் கொண்டிருந்தேன். ஆவணப் பகிர்வை முறையாகச் செய்ய ஆரம்பித்து (06.2009) சற்றேறக்குறைய ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருடத்தில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஆவணங்களைப் பார்வையிட்டும், பதிமூன்று ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தி இருக்கின்றார்கள். தொழில் நுட்ப வசதியின் பொருட்டு இதே ஆவணங்களை WePapers என்ற வலைதளத்தில் போட்டுவைக்க அங்கும் பதிமூன்று ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணங்களைப் படித்த பலர், மற்ற வலைதளங்களில் upload செய்ய.... கல்லூரி அளவில் உதாசீனப்படுத்தப்பட்ட, பரிகசிக்கப்பட்ட ஆவணங்களை, ஏறக்குறைய ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் ஒரு வருடகாலத்தில் பார்த்துப் பயனடைந்திருக்கின்றார்கள்.

clip_image0115. பயனாளிகள் புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, கல்லூரி நூலகத்தைவிட அதிகமான நபர்கள் இந்த ஆவனங்களைப் பார்க்கின்றார்கள்: பயன்படுத்துகின்றார்கள். இந்த முயற்சியினால் எனக்கு இழப்பேதுமில்லை. என்னால் முடிந்த அளவு நேரத்தையும், இணைய வசதிக்காக சிறிது பணத்தையும் செலவழித்திருக்கின்றேன். என்னுடைய ஆவணங்களை கல்லூரி வேலை நேரத்திலோ, கல்லூரியின் இணைய வசதியைப் பயன்படுத்தியோ upload செய்ததில்லை. எந்தக் கல்லூரியை, எந்தப் பாடத்தை மையமாகக் கொண்டு எனக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைத்ததோ, அந்தக் கல்லூரிக்கும், அந்தப் பாடத்திற்கும் நான் ஏற்படுத்திக் கொடுத்த மரியாதை. கௌரவம். மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் Virtual Library. (கல்லூரிக்கும், Community Development என்ற மந்திர வார்த்தைக்கும் நான்னென்ன அண்ணாவி மரியாதை ஏற்படுத்திக் கொடுக்க)

6. தம்பட்டம் அடித்துக்கொள்ளுமளவு ஏதுமில்லையென்றாலும், என்னுடைய முயற்சி பயனுள்ளதாகி இருக்கின்றது. மற்ற கல்லூரிகளில் பணியாற்றும் சமூகபபணி பேராசிரியர்கள், மாணவர்கள், நேரிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு “சார்! இந்த பாடத்திற்கான notes இருந்தால் upload செய்யுங்களேன் என்று உரிமையுடன் கேட்டிருக்கின்றார்கள். சில பேர் என்னிடம் கையெழுத்துப் பிரதியை வாங்கிச் சென்று கம்ப்யூட்டரில் feed செய்து உதவி இருக்கின்றார்கள். ஆனால் எனது கல்லூரி மாணவர்களும், சக ஆசிரியர்களும், நிர்வாகமும் இம்முயற்சிகளுக்கு பாராமுகம் காட்டியே வந்திருக்கின்றார்கள்.

நான் வாழ்ந்த வாழ்வைச் சொல்லுகின்றேன். அண்டை வீட்டுக்காரன் இருக்கின்றானா என்று பார்?

7. பாராட்டப்படுவதெற்கென்றும், பிரபலமடைவதெற்கென்றும் காரியங்களைச் செய்யும் மனோநிலையைக் கடந்து விட்டமாதிரி உணர்கின்றேன். இந்த ஒரு வருட முயற்சியில் கிடைத்த அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். இது ஒரு சுகானுபாவம். இதைத் தொடர்ந்து செய்ய எந்த மனத் தடையும் என்னிடமில்லை.

8. NAAC தரச் சான்றிற்காக ஈடுபட்டிருந்தபோது, சில மாணவர்கள் “நீங்கள் ரெம்ப மெனக்கெடுகின்றீர்கள்” என்று சொல்ல, “A Grade வாங்கணும். அதுதான் நோக்கம். அப்படி வாங்கினால்தான், இதுவரை இங்கு படித்த மாணவர்களுக்கும், இனிமேல் படிக்க வரும் மாணவர்களுக்கும் நாங்கள் தேடித்தரும் மரியாதை, கௌரவம்” என்று சொன்னேன். அந்த உணர்வில்தான் இனிமேலும் செயல்படுவேன். யார் பாராட்டுதலுக்கும் காத்திராமல், எனக்கு வாய்ப்பளித்த நிறுவனர்க்கும், கல்லூரிக்கும், சக ஆசிரியர்களுக்கும், இங்கு படித்த, இனிமேல் படிக்க வருகின்ற மாணவர்களுக்கு என்னுடைய பாணியில் மரியாதையை செலுதிவிட்டுப் போகின்றேன்.

9. நிறையப் பொறுப்புகள் இருப்பதாக உணர்கின்றேன். ஏற்கனவே பிரசுரமான கையேடுகளின் தரத்தை மேம்படுத்துவது. இன்னும் பல தலைப்புகளில் மாணவர்களுக்கு உபயோகமான கையேடுகள் தயாரித்து, அவர்களின் புரிந்து கொள்ளளலை சுலபமாக்குவது. TNPSC,UPSC,JRS,NET தேர்வு எழுதும் சமூகப் பணி மாணவர்களுக்கு உபயோகபடும்படியான கையேடுகள்...சமூகப்பணி பற்றிய ஆங்கில –தமிழ்ச் சொல்லகராதி. அத்தனைக்கும் ஆசைப்படுகின்றேன். அதற்கான நேரத்தையும், பொருளையும் செலவிடும்படியான நல்ல நிலையிலிருக்க ஆண்டவன் என்னை ஆசீர்வதிப்பார் என்றே நம்புகின்றேன்.

10. தனி நபராகச் செய்யாமல், இதை ஒரு குழுவாக, கூட்டு முயற்சியாகச் செய்தால், சிறப்பாகச் செய்யலாம்:விரைவாகச் செய்யலாம்: தரமாகச் செய்யலாம். ஆக்கபூர்வவமான சிந்தனை, செயல்பாடுகள் மூலமாகத்தான் சமூக அறிவியல் கல்லூரி சம்மந்தப்பட்ட நம் அனைவரின் கௌரவமும் மேம்பாடடையும். இல்லையா?


Bookmark and Share