5/29/11

பத்ரி சேஷாத்ரி - நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி!

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்தபோது, தமிழ் வலைப்பதிவுகளில் ஒப்பந்தத்தை விமர்சித்து எழுதிய பதிவர்களில் பெரும்பாலானவர்கள் பத்ரி என்னும் பதிவரை மானாவாரியாக விமர்சிக்க அதுவே என்னை பத்ரியைப் படிக்கத் தூண்டியது. பத்ரியைப் படிக்கப் படிக்க, அவருடைய அறிவியல் பூர்வமான அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. அவர்பால் அபிமானம் கொள்ள வைத்தது. எதையும் வித்தியாசமாக, அறிவியல் பூர்வமாக அணுகும் மாற்றுச் சிந்தனையாளர் எனப் புரிந்தது. சார்புநிலை கொள்ளாத, எதிலும் “மெய்ப்பொருள்” தேடுபவர்களுக்கு பத்ரியவர்களை பிடித்துப் போகும். எனக்கும் பத்ரியைப் பிடித்துப் போயிற்று.

பத்ரியைத் தொடந்து படித்தாலும், வலைபதிவுகளில் பின்னூட்டம் எழுதும் பழக்கமில்லாததால் வாசகன் என்ற அளவில் நின்றுவிட்டிருந்த என்னை பத்ரியவர்களிடம் அறிமுகப்படுத்தியவர், எங்கள் இருவரையும் தெரிந்த நண்பர் திரு.இராமச்சந்திரன் (Naethra Technologies & Mekkarai) அவர்கள்.

பத்ரியவர்களுடனான முதல் சந்திப்பிலே நான் கொண்டிருந்த பொதுவான சில தப்பபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய பேராசிரியப் பணி, நான் சார்ந்த துறை, பணியாற்றும் கல்லூரி, எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலம் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை, உயர் சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைக் கையாளுவைதைப் போன்று கையாளும் எங்கள் அணுகுமுறைகள் பலனளிக்கின்றதா என்று கேட்டபோது, ஆசிரியரென்ற முறையில் என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. எழுத்தில் பார்த்த பத்ரியைவிட, நேரில் பார்த்த பத்ரி இன்னும் தோழமையுடனும், மனிதநேயத்துடனும் இருந்தார். அவருள் நல்லாசிரியர் ஒருவர் ஒளிந்திருந்திருப்பதை ஆசிரியாரான என்னால் உணர முடிந்தது. பத்ரியிடம் ஒளிந்திருந்த அந்த ஆசிரியர், முழுநேர ஆசிரியர்களான எங்களைவிட மாணவர்களிடம் அதிகக் கரிசனத்துடனிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

எங்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டபோது, கொஞ்சம்கூட பிகு செய்யாமல், வேறெந்தக் கல்லூரியை விடவும் எங்கள் கல்லூரி மாணவர்களைச் சந்திப்பது உபயோகமாக இருக்குமென்று கூறி உடனே தேதியும் கொடுத்தார். அதை “A Day with Badri” என்ற நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தோம். நிகழ்ச்சி தொடர்பான சில சம்பிரதாய நடைமுறைகளுக்காக பத்ரியைத் தொடர்பு கொண்டபோது, வேறு பணிநிமித்தமாக மதுரை வருவதையொட்டியே நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்தேன். தன்னுடைய வருகை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் தனக்கில்லை என்று பட்டவர்த்தனமாகக் கூறி விட்டார்.

அறிமுகத்தின் பொருட்டு பத்ரியின் ஐஐடி மற்றும் கார்னெல் பல்கலைக் கழக பின்புலம், அவருடைய சமீபத்திய சாதனைகளைச் சொல்ல, ஒருமாதிரி மிரண்டு போயிருந்த மாணவர்களை, ஒருசில நிமிடங்களில் மீட்டெடுத்து, ஆசுவாசப்படுத்தி, அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரம் மாணவர்களைத் தன்வசப்படுத்தினார். கற்பதில் ஆர்வமற்றவர்கள் என்று எங்களால் கணிக்கப்பட்டிருந்த மாணவர்கள், பத்ரியிடம் கேட்ட கேள்விகளிலிருந்து அவர்களுக்கிருந்த ஆர்வமும், அவர்களின் பொறுப்பான சிந்தனைப் போக்கும் புரியவந்தது. எங்களிடம் அதுவரை காட்டாத தங்களின் அழகான மறுபக்கத்தை பத்ரியிடம் காட்டியது என்னை வெட்கப்பட வைத்தது.

எங்கள் கல்லூரிக்கும், மாணவர்களுக்கும் தன்னால் எப்படியெல்லாம் உதவமுடியும் என்பதை நிர்வாகத்திற்கு கோடிட்டுக்காட்டினார். அவர் சொன்னபடியே, கல்லூரியின் Computer Lab-ஐ Student Friendly-ஆக மாற்றவும், எல்லாக் கம்ப்யூட்டர்களிலும் இணைய இணைப்பை ஏற்படுத்தி, இணைய பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதற்கு ஆலோசனை சொல்லவும், NHM Systems Engineer-ஐ அவர் செலவிலே அனுப்பி வைத்தார். பின்னர் கிழக்கு பதிப்பக ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களையும் அவர் செலவிலே அனுப்பி வைத்தார். பத்ரியவர்கள் மீண்டும் மதுரை வந்தபோது, எங்கள் ஆசிரியர்களுடனும் நிர்வாகத்துடனும் கணிசமான நேரம் செலவிட்டார். தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட, அறிவுஜீவிகளால் மதிக்கப்படுகின்ற, வியாபாரரீதியாக வெற்றிகரமாக ஒரு பதிப்பகத்தை நடத்திக் கொண்டு, நேரமின்மையோடு போராடிக்கொண்டிருக்கும் நபரால் எப்படி எங்களுடன் நேரம் செலவிடமுடிகின்றது? தரமான கல்வி சாமான்யர்களையும் சென்றடையவேண்டும் என்ற பத்ரியவர்களின் சமூக அக்கறையும், கல்வியின்மீதும், மாணவர்களின் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான் இதற்கெல்லாம் காரணமாயிருந்திருக்க முடியும்.

பத்ரியவர்களின் தொடர்பால் என் அணுகுமுறைகளில் மாற்றமேற்பட்டது. அவ்வளவாக நம்பிக்கையில்லாமல், விளையாட்டுத்தனமாக செய்து வந்த ஆவணப் பரிமாற்றங்களில் (Document Sharing) ஒரு நேர்த்தியைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். அந்த ஆவணங்கள் கடந்த இரண்டரை வருட காலத்தில் நான்கு லட்சம் பேர்களால் பார்க்கப்பட்டும், ஐம்பதாயிரம் பேர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டும் பயன்படுத்தப் படுகின்றது. மாணவர்களின் Field Work Reporting -ல மாணவர்கள் விரும்புகின்ற மாதிரி சில மாற்றங்களைச் செய்தபோது, செல்போன் கொண்டு குறைந்த வருவாய்க் குடியிருப்பை (குடிசைப் பகுதி- சேரி) புகைப்படங்கள் எடுத்து, அதை நல்ல ஆவணமாக்கினார்கள். மற்ற கல்லூரி மாணவர்களைவிட எங்கள் கல்லூரி மாணவர்கள், பாட முறையாலும், அவர்களுடைய சமூகப் பின்னணியாலும் வாழ்வின் எதார்த்ததிற்கு அருகாமையிலிருப்பதால், சமூகம் சார்ந்த பல பிரச்னைகளை உலகின் கவனத்திற்கு, நிபுணர்களின் கவனத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையை எங்களிடம் ஏற்படுத்த பத்ரி முயற்சி செய்தார். அப்படி செய்யும் பட்சத்தில் கல்லூரிக்குப் பெருமையும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகுமென்று எடுத்துரைத்தார்.

தனி மனிதர்கள் மாற்றங்களை சுவீகரித்துக் கொள்ளும் வேகத்தில் நிறுவனங்கள் மாற்றங்களைச் சுவீகரிக்க முடியாதுதானே. கல்லூரியைப் பொருத்தமட்டில் காலம் கைகூடி வரட்டும் என்று, பத்ரியவர்களின் ஆலோசனைகளை மற்ற இடங்களில் பரீட்சித்துப் பார்க்க ஆவல் கொண்டேன்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றிவரும் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனத்தோடு எனக்கு நட்பு ரீதியான தொடர்பும், பொறுப்புக்களும் இருந்தது. PAD எனக்கு வகுப்பறையென்றால், அதன் களப்பணியாளர்கள் எனது நல்லாசிரியர்கள். அவர்களுடைய அனுபவத்தால் நானும், என்னுடைய அனுபவத்தால் அவர்களும் பரஸ்பரம் பயனடைந்து இருக்கின்றோம். PAD பணியாளர்களின் அனுபவத்தில், அணுகுமுறைகளில் கற்றுக்கொள்ள பாடங்கள் பல இருப்பதாக நான் எப்போதும் நம்பி வந்ததால் அதையெல்லாம் ஆவனப்படுத்தி, இணையத்தின் மூலமாக உலகோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டதுண்டு. PAD மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த 115 கிராமங்களில் பணியாற்றுகின்றது. இக்கிராமங்கள் சார்ந்த தகவல்களையெல்லாம் இணையத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்; இணையத்தையும், சமூக வலைதளங்களையும், மக்களை ஒருங்கிணைக்கவும், நல்லாட்சி (Good Governance) அமைந்திடவும் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

நம்முடைய கிராமங்களின் வரலாறு, பாரம்பரியம், அறிவார்ந்த மேதமை (Indigenous Knowledge) முறையாக ஆவனப்படுத்தப்படவில்லை. நான் ஏற்கெனெவே கோவிந்தநகரம் - ஒரு இந்திய கிராமத்தின் கதைஎன்ற பதிவில் எழுதியது மாதிரி, வரலாற்றுப் போக்குகளை நமது முன்னேற்ற முயற்சிகளுக்கு ஏதுவாக உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதைப் பெருந்தலைவர்களின் வாழ்க்கையோடும், தலைநகரச் சம்பவங்களோடு மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையோடும், சிறு நகரங்கள் மற்றும் கிராமச் சம்பவங்களோடும் சம்பந்தப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழாகவும், (Top Down தலைவர்கள், தலைநகர்ங்களிலிருந்து சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகள் வரை) கீழிருந்து மேலாகவும் (Bottom up சாதாரணக் குடிமக்கள் மற்றும் குடியிருப்புகளிலிருந்து தலைநகரங்கள் வரை) வரலாறு ஆவணப்படுத்தப்படவேண்டும் . இம் முயற்சிகள் பற்றி (Local History, Micro History, History from Below, Decentralized History, Participatory History) பேசப்பட்டாலும், அது இன்னும் பரவலான செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலைநாடுகளில் இம்மாதிரியான முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் அதனுடைய பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லுமுகமாக அருங்காட்சியகங்கள் (Museum) கூட வைத்திருக்கின்றார்கள்.

மக்கள் பங்கேற்பு மூலம் கிராம அளவிலான குறுந்திட்டங்கள் (Microplans) தயாரிக்கும் முயற்சிகளை அரசும், தொண்டுநிறுவனங்களும் பிரபலப்படுத்தியது மாதிரி, நிறுவனப்படுத்தியது (Popularizing & Institutionalizing) மாதிரி, குறுவரலாறுகள் (Microhistory) எழுதும் முயற்சிகளை பிரபலப்படுத்தவில்லை. பங்கேற்பு முறைப் பயிற்சிகளில் கிராம அளவிலான வரலாற்றுப் பிரக்ஞயை வெளிக்கொணர்ந்து, அதனடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும், இறுதி வடிவம் பெற்ற திட்டவரைவுகள்தான் ஆவணப்படுத்தப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டதேயொழிய, அந்தத் திட்டங்களின் பின்னணியிலிருந்த வரலாற்றுணர்வு, வரலாற்றுத்தேவை ஆவணப்படுத்தபடவில்லை.

கடந்தகாலச் சம்பவங்கள், அச்சம்பவங்கள் உருவாக்கிய அதிர்வலைகள், அதற்கு கிராம அளவில் உருவான எதிர்வினையாக்கம் (incidents, impacts and reaction) பற்றி கிராம அளவில் மக்கள் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டாலும், சாமான்ய மக்களின் வரலாற்றுணர்வை, பிரக்ஞயை பதிவுசெய்ய பொறுப்புள்ள தொண்டுநிறுவனங்கள் கூட தவறிவிட்டது வருத்ததிற்குரியது. ஏனெனில் தன்னார்வமே இதன் இயக்கு சக்தியாதலால் இதைப் பலகலைக் கழகங்களோ அரசோ செய்யமுன்வராது.. கிராம மக்களின் வரலாற்றுப் பிரக்ஞை, சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், முன்னேற்றப் பணிகளில் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றை நாம் சுலபமாகக் கையாண்டிருப்போம்.

இந்த எண்ணம் என்னுள் வேரூன்றியதற்கு ஒரு வகையில் பத்ரிதான் காரணமென்று கூடச் சொல்லலாம். இந்தியாவின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதை ஒரு தவமாகச் செய்துகொண்டிருந்த பேரா.சுவாமினாதனை அறிமுகம் செய்து வைத்தார். தன்னலமாற்று பேரா.சுவாமினாதன் உருவாக்கி வைத்திருக்கும் மாதிரிகளும், அதுவெல்லாம் கிராம அளவில் சாத்தியமே என்று காட்டிய “கோவிந்தநகரம் - ஒரு இந்திய கிராமத்தின் கதை”யும் என்னுடைய ஆவலை அதிகரிக்கச் செய்தன. PAD நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் பரிசோதனை முயற்சிக்கு பத்ரியவர்களால் வழிகாட்டமுடியுமென்று நாங்கள் நம்பியதால் பத்ரியை வேம்பாருக்கு அழைத்தோம். நாகப்பட்டணத்தில் பள்ளி மாணவராக இருந்தபோது, மீனவர் சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் clip_image004அவருக்கிருந்ததால், கடல் பற்றியும், மீனவர் வாழ்க்கை பற்றியும் அவருக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் இருந்தது. அதிக கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களிடம் அவர்களுக்குப் புரியும்படியாகப் பேசி, அவர்களைக் கொண்டே "மன்னார் வளைகுடா வாழ்க்கை" என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை தொடங்க வைத்தார். தங்களுடைய கருத்துக்களையும் இணையத்தில் ஏற்றமுடியும், உலகோடு பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதை பணியாளர்கள் உணர்ந்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், நம்பிக்கைக்கும் அளவே இல்லை.

தமிழில் வலைப்பதிவுகளுக்குப் பஞ்சமில்லைதான். இருப்பினும் கிராமங்களுக்கென்று வலைப்பதிவுகள் இல்லை. ஆர்வத்தால் தொடங்கப்பட்ட ஓரிரு வலைப்பதிவுகளும் நேர்த்தியாக இல்லை. (என்னுடைய கணிப்பு தவறாயிருக்கும் பட்சத்தில் சுட்டிக்காட்டவும்) மாறாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் கிராமங்களுக்கு வலைப்பதிவுகள் தொடங்கி, அற்புதமான முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய வலைப்பதிவாக்கம் என்பது பொறுப்பான கடமை. எழுத்து, தொழில்நுட்பம், எதையும் சிக்கனமாகச் செய்யும் திறன், எல்லாவற்றிற்கும் மேலாக அதைச் சமூக மாற்றுருவாக்கத்திற்குப் பயன்படுத்தும் சமூகநோக்கு என்று பலவும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். எங்களுக்கு (PAD) ஆர்வம் இருக்கின்றது. வழிகாட்ட பத்ரி போன்றவர்கள் இருக்கின்றார்கள். கிராம வலைப்பதிவுகள் தமிழகத்தில் மக்கள் இயக்கமாக உருப்பெறும் காலம் விரைவில் மலரும்.

நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி பத்ரி.

5/27/11

மன்னார் வளைகுடா தந்த ஞானம் -I

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பவளப் பாறைகள் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆய்வின் துணைக் கூறாக, பவளப் பாறைகளால் பயனடையும் பயனாளிகளைப் பற்றிய புரிதலுக்காக, பங்கேற்பு மதிப்பீடுகளைச் (participatory appraisal) செய்வதற்காக நானும், நண்பர் இராஜேந்திர பிரசாத்தும் (ராஜன்) இராமேஸ்வரத்திற்கு அழைக்கப் பட்டிருந்தோம். இராமேஸ்வரத்திற்கு அதற்கு முன் ஓரிருமுறை சென்றிருந்தாலும், அது மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த கடற்பகுதி என்று எனக்கு அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை.

கடலில் கால் நனைத்திருந்தாலும், கடலைப் பற்றிய எனது புரிதல், சாதாரண மனிதருக்கிருக்கும் பொது அறிவின் எல்லையைத் தாண்டிச் சென்றதில்லை. பவளப் பாறைகளைப் படத்தில் மட்டும் பார்த்தவன். ஆகையால் அதன் பன்முகப் பயன்களெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆய்விற்கு போவதற்கு முன்னால, பவளப் பாறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. தெரியாவிட்டால் என்ன? பவளப் பாறைகளோடு தங்கள் வாழ்வை இணைத்துக்கொண்ட ஒரு பயனாளர் கூட்டத்தோடுதானே இருக்கப் போகின்றோம். அவர்களுக்கு நாம் நல்ல மாணக்கர்கள் என்று புரியும்படி நடந்துகொண்டால், அவர்களின் அனுபவ ஞானத்தால் நமக்கு சாயமேற்றி சாப விமோசனம் தந்து விடாமலா போய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இராமேஸ்வரம் புறப்பட்டோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கான அத்தாட்சியே இத்தொடர்.

நீங்கள் உண்மையென்றும், நன்மையென்றும் மனமொப்பி அறிந்ததை தயவு செய்து எங்களுக்கும் சொல்லுங்கள் என்ற மனோபாவத்தோடு மக்கள் முன் அமர்ந்தால், நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அர்த்தமுள்ள பகிர்தல் ஆரம்பமாகும்.அது நம்மைத் தெளிவாக்கும். இதுதானே பங்கேற்பு முறைகளின் (participatory methods) நம்பிக்கை.

சின்னபாலம் தோப்புக்காடு குடியிருப்புகள் இராமேஸ்வரத்தில் பாம்பனைச் சேர்ந்த சின்னப்பாலம் மற்றும் தோப்புக்காடு குடியிருப்புகள். அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த தொண்டு நிறுவன (TRRM) பணியாளர்களால் அறிமுகம் எளிதானது. கடற்கரையோரம் பல தலைமுறைகளைப் பார்த்தறிந்த பூவரசு மரம் எங்களுக்கு போதி மரமானது.

பல பங்கேற்பு உத்திகளைப் பயன்படுத்தினோம். வலைகளைப் பின்னிக்கொண்டே வாய் வார்த்தைகளால் பவளப் பாறைகளை வர்ணித்துக்காட்டினார்கள். மீன்கள் பவளப் பாறைகளைச் சுற்றி வருவது போல், வார்த்தைகளால் பவளப் பாறைகளைச் சுற்றி வந்தார்கள். குஞ்சு பொரித்தார்கள. அதை வலைபோட்டுப் பிடித்தார்கள். பாறைகளில் சிக்கிக்கொண்ட வலைகளை வார்தைகளால் கவனமாகப் பிரித்தார்கள்.

“பவளப் பாறைகள் கடலின் கருவறை மாதிரி; மீனவர்களின் வாழ்வு அங்குதான் ஜனிக்கிறது” என்பதை அவர்கள் புரிந்திருந்தார்கள். எங்களுக்கும் புரிய வைத்தார்கள்.

அவர்களைப் பொருத்த வரை கடலும் நிலமும் வேறுவேறல்ல. நிலத்தின் நீட்சியே கடல். நமக்கு நிலம் எப்படிப் பரிச்சயமோ, அப்படித்தான் கடல் அவர்களுக்கு. கடலை நோக்கிக் கைகளைக் காண்பித்து, அங்கே ஆறு ஓடுகிறது; ஆற்றைத் தாண்டினால் சேறு. இந்தப் பக்கம் பொட்டல். நிலத்தின் அத்தனை வகைப்பாடும் கடலிலா? இல்லை கடலின் வகைப்பாடு நிலத்திலா? நமக்குப் புரியவில்லை.

ஆங்கிலேயர் நிலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து வரைபடம் தயாரித்து, நாட்டை வசப்படுத்தியது மாதிரி, கடலை அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இந்தத் தெரிதல்தான் அவர்களுடைய பிழைப்பாதாரம். அவர்களுடைய அனுபவ ஞானத்தைப் பார்த்து, நாம் பிரமிப்பதைக் கண்டு, ஆணவம் கொள்வதற்கு பதிலாக பணிவாகின்றார்கள்.  உண்மையான ஞானத்தின் அடையாளமே பணிவுதானே.

“கடல் ஒரு கைக்குழந்தை மாதிரி. காத்து வெயில்,மழைன்னு எதுவும் அதன் தன்மையை மாத்திடும். கடலைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. காத்தைத் தெரிஞ்சிருக்கணும். வெயிலைத் தெரிஞ்சிருக்கணும். மழையைத் தெரிஞ்சிருக்கணும். ஆகாசத்தைத் தெரிஞ்சிருக்கணும்” என்று ஐமபூதங்களின் இணையறாத் தொடர்பை சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, இவர்கள் படகேறி மீன்பிடிக்கச் செல்கிறார்களா? இல்லை நடுக் கடலில் தவமியற்றி இயற்கைப் பேருண்மைகளை அறியச் செல்கிறார்களா என்று வியப்பே ஏற்பட்டது.

மூன்று நாட்கள்... கடல் பற்றி, பவளப்பாறைகள் பற்றி, மீனவர் வாழ்க்கை பற்றி, அவர்களின் சுகதுக்கங்கள் பற்றி, மாறி வரும் மீன்பிடித் தொழில் நெறிமுறைகள் பற்றி, அவர்களின் பொதுவான நம்பிக்கைகள் பற்றி...பாடங்கேட்ட அந்த நாட்கள் மறக்கமுடியாதவை. அதுதான் நண்பர் ராஜனை மன்னார் வளைகுடாவின் சற்றேறக்குறைய மையப் பகுதியான வேம்பாரில் PAD (People’s Action for Development) என்ற தொண்டு நிறுவனம் (2001) தொடங்க வித்திட்டது. சுனாமிக்காக கடலோரம் நண்பர் ராஜன் கரையொதுங்கவில்லை. பேராசியாராகப் பணியிலிருந்தாலும், PAD நிறுவனப் பொறுப்பிலிருந்தாலும், எனக்கென்னமோ மக்கள் முன்னும், PAD நிறுவனக் களப்பணியாளர்கள் முன்னும் மாணவன் என்னும் மனோபாவம் தான் இருக்கின்றது. ஏனெனில் என்னுடைய கற்றல் அவர்களிடமிருந்துதான் தொடங்குகின்றது.

PAD வேம்பாரில் செயல்பட ஆரம்பித்த பின், கடல் சூழியலில் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாகப் பணிபுரியும் நண்பர்களான முனைவர்கள் பாலசுந்தரம் (பாரதிதாசன் பல்கலை), பொய்யாமொழி (பாண்டிச்சேரி பலகலை) ஒருமுறை வேம்பார் வந்தபோது, கடல் சூழியல் பற்றி அவர்களிடம் பேசியதைப் பார்த்து, “கடலைப் பற்றி நான் அதிகம் வாசித்திருப்பதாகப்” பாராட்டினார்கள். உண்மையென்னவென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் கேள்வி ஞானம்தான். கடல் சூழியல் தொடர்புடைய பல கலைச் சொற்களை என்னால் பிழையின்றி எழுதமுடியாது.

மக்களறிவு (People’s Knowledge) என்பது கடலோரம் பரவிக் கிடக்கும் மணல்லல்ல. அது நிலத்தடியில் உறைந்திருக்கும் நன்னீர் போன்றது. சில இடங்களில் கைகளைக் கொண்டு மணலைப் பறித்தாலே நீர் ஊரும். சில இடங்களில் இன்னும் சற்று ஆழமாகத் தோண்ட வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் விரும்புமளவு, சுவையான நீர் கிடைக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஒரு நல்ல ஆத்ம சாதகன் குருவைத் தேடுகின்ற மாதிரி, இல்லை நல்ல சாதகனை குருவே தேடி வருகின்ற மாதிரி, பங்கேற்பு முறைகளிலும் நாம் நல்ல Key Infomants-ஐ தேடிக் கொண்டேயிருக்க வேண்டும்.சில நேரங்களில் நாம் தேடுவது தெரிந்தாலே அவர்கள் நம்முன் நிற்பார்கள்.

பங்கேற்பு முறைகள் என்பதும் ஒரு ஆத்ம சாதகம்தான். அதைப் PAD நிறுவனத்தோடும், பணியாளர்களோடும், மக்களோடும் சேர்ந்து செய்ததை, கற்றுக் கொண்டதை மன்னார் வளைகுடா தந்த ஞானம் என்ற தலைப்பில் இங்கே தொடந்து உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.