Showing posts with label badri Seshadri. Show all posts
Showing posts with label badri Seshadri. Show all posts

4/9/13

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Text Book


1
என்னுடைய வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. கல்லூரி நாட்களில் ஜெயகாந்தனை மிகவும் விரும்பி வாசித்துள்ளேன். மதுரையில் அவர் பேசுகின்றாரென்றால், அந்தக்கூட்டங்களுக்கு தவறாமல் சென்றுவிடுவேன். என்னுடைய சமூகப் பார்வையை கட்டமைத்ததில் அவருக்குப் பங்குண்டு. பின் கோபல்ல கிராமம் படித்துவிட்டு, இடைசெவலுக்குச் சென்று, கி.ரா.வை ஆசைதீர தரிசித்துவிட்டு வந்தேன். கடந்த ஆண்டு நான் விரும்பி வாசித்த புத்தகம் காவல்கோட்டம். நிறைய வாசிக்க வாய்ப்பிருந்த ஆசிரியப் பணியிலிருந்தாலும், எனக்குத் தேவையானதை மட்டும் வாசிக்கும் கஞ்சத்தனமிக்கவனாகவே நான் இருந்துவந்துள்ளேன். ஆங்கிலத்தில் என் பாட சம்பந்தப்பட்ட நூல்களைத் தவிர, பிறவற்றில் என் வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. தியானப் பயிற்சியும் களப்பணியுமே எனக்கு பலவற்றைப் புரியவைத்தது. மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ, ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலே வாசித்துள்ளேன். தியானப் பயிற்சியால் இவர்களை நான் புரிந்துகொண்டதற்கும், எனக்கு அறிமுகமான சிலர் புரிந்து கொண்டதற்கும் வித்தியாசங்கள் இருந்ததை உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் அவர்களை நான் விரிவாகப் படிக்காவிட்டாலும், படித்த அளவு அவரை என்னால் உள்வாங்கமுடிந்தது. அவரைப் உள்வாங்க தியானப் பயிற்சி உதவும். வாசிப்பது கொஞ்சமாக இருந்தாலும், அது எனக்குள் மாற்றத்தை உண்டாக்குமளவிற்கு நெகிழ்ச்சியானவனாக இருந்து வந்துள்ளேன் என்பதுதான் உண்மை.
பூமணியின் எழுத்துக்களை அவ்வளவாக நான் படித்ததில்லை. அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயமோகன் அவர்கள் தனது இணைய தளத்தில் அவரைப்பற்றி எழுதியபோதுதான், நான் பூமணியின் “வெக்கை” படித்த நினைவு வந்தது. வெக்கை என்னை ஒரு மாதிரியாக படுத்தியது என்று கூட சொல்லாலாம். அந்த படுத்தலை உதறிவிடாமல், என்னுள் கரைத்துக்கொண்டேன். வெக்கையின் கதைக்களம் எனக்கு மறந்துவிட்டதென்றாலும், கி.ரா.வைப் போன்று பூமணியையும் எனக்கு நெருக்கமானவாராக உணர்ந்தேன். ஜெயமோகன் எழுத்துக்கள் பூமணி மீதான அபிமானத்தை என்னுள் வளர்த்துவிட்டன. இந்தநிலையில் தான் என் மாணவர் வினோத் “அஞ்ஞாடி” வாங்கித்தந்து என்னை படிக்கவைத்தார்.
பூமணியை அதிகம் வாசிக்காமலயே, அவர் மீதிருந்த அபிமானத்தால்தான், அஞ்ஞாடி எனக்கு கனமற்றதாகத் தெரிந்தது. வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம் என்று சிலர் எழுதுவதைப் படித்திருக்கின்றேன். அதை “அஞ்ஞாடி” எனக்கு நிறைவாகத் தந்தது பூமணிக்கு நன்றி.
ஒரு எழுத்தாளன் தன் ஆளுமையை எழுத்தில் வெளிப்படுத்துகின்றான். அஞ்ஞாடி முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ இல்லாமல் பூமணி அவ்வளவு இயல்பாக, தான் பார்த்த, தான் வாழ்ந்த சமூகத்தின் மீது வாஞ்சையுடன் வெளிப்படுகின்றார். அது வாழ்வின் மீது தீராக் காதல் கொண்டவர்களாலேயே முடியும். அஞ்ஞாடி பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு. அது பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு மட்டுமல்ல, படிப்பவர்களையும் பக்குவப்படுத்த எழுதப்பட்ட பாடப் புத்தகம். பாடப் புத்தகங்களில் எழுத்தாளனின் ஆளுமை வெளிப்படக்கூடாதுதான். அதனால்தான், தான் சித்தரிக்கும் கதாபாத்திரங்களின் ஆளுமைகளிலிருந்தே நமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சூட்சுமத்தை பூமணி கையாண்டுள்ளார்.
2
கழுகுமலை, சிவகாசிக் கலவரங்களின் போது முக்கிய கதாபாத்திரமான ஆண்டி உயிரோடிருப்பதாகக் காட்டப்படுவதால், அஞ்ஞாடி ஏறக்குறைய 150 வருடகால வாழ்வியலைப் படம்பிடித்துக் (ஒருசில சம்பவங்கள் தவிர) காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த 150 வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள். மனிதர்களைப் பலிவாங்கிய வலிமிகுந்த போராட்டங்கள். சுதேசி ஆள்வோர்களும் சரி, விதேசி ஆள்வோர்களும் சரி மாற்றத்திற்கான நியாயங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமலிருந்த பாராமுகப் போக்கு. கோயிந்தன் போன்றவர்கள் முன்னெடுத்த மாற்றத்திற்கான முஸ்தீபுகள். ஆனால் இந்த மாற்றங்களையெல்லாம் கடந்து, பூமணி செதுக்கியிருக்கின்ற கதாபாத்திரங்கள், இதிகாச கதாபாத்திரங்களைப் போல காலம் கடந்து நிற்கின்றன. நிற்கும்.
Resilience என்ற வார்த்தைப் பிரயோகம் சமூகப் பணியாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அதை இடர்ப்பாடுகளை தாங்கி நிற்கும் வலுவுள்ள, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய நிலை என்று சொல்லலாம். Resilient Families மற்றும் Resilient Communities ஐ கட்டமைப்பதுதான் சமூகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால். ஆண்டி-கருப்பி என்ற ஆளுமைகள் தங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எப்படி இடர்ப்பாடுகளைத் தாங்கி நிற்கும் வலுவைத் தருகின்றார்கள் என்பதுதான் அஞ்ஞாடி வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறி. ஆண்டியின் குடும்பம் மட்டுமல்ல, கலிங்கலூருணி மக்கள் கூட அவர்களோடு தொடர்புடைய அனைவரின் resilience-க்கும் உதவுகின்றார்கள். பஞ்சம் பிழைக்க வந்த சண்முக நாடாரின் குடும்பத்திற்காகட்டும், சுந்தர நாயக்கர் மற்றும் ஆண்டாள் என்ற நாயக்கர் பெண்மணிக்காகட்டும், கருத்தையா தன் கூட்டாளிகளுக்கு செய்துகொடுக்கும் ஏற்பாடுகளில் அது வெளிப்படுகின்றது. இதையெல்லாம் செய்வது மிகச் சாதாரண மனிதர்கள்தாம். இதையெல்லாம் இப்படிஇப்படி செய்யவேண்டும் என்று விரிவான ஆய்வுகளுக்குப்பின் பரிந்துரைக்கின்ற கனமான பாடப்புத்தகங்கள் சொல்லும் உத்திகளையெல்லாம் போகிற போக்கில் வெளிப்படுத்தி, நம்மையெல்லாம் அஞ்ஞாடி கதாபாத்திரங்கள் அசர வைக்கின்றார்கள். சிந்திக்கத் தூண்டுகின்றார்கள்.
அஞ்ஞாடி ஆண்டி-மாரியின் நட்பில் தொடங்கும் ஒரு வாழ்வோவியம். அவர்கள் பள்ளர்–வண்ணார் என்பது ஒரு அடையாளம்தான். ஆனால் அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்படும் மதிப்பீடுகள்....வண்ணாக்குடி, கழுதைகள், வண்ணாந்துறை பற்றி எழுதும்போதெல்லாம் பூமணி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார். கம்மந்தரிசில் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருந்த மாரி என்று முதல் பக்கத்தில் தொடங்கும் பூமணி, இறுதியில் 990 ஆம் பக்கத்தில், கலிங்கலில் வாழ்ந்த மாரியின் வம்சவரலாறு என்றுகூட குறிப்பிடாமல், கலிங்கலில் பட்டமாண்ட அல்லத்தானின் வம்சவரலாறு என்று சொற்பிரயோகம் செய்யும் போது, பூமணியின் மனது புரிய வருகின்றது.
பட்டமாண்ட பாளயக்காரர்களெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்துபோக, வேறு எந்த ஆதாரங்களுமில்லாத ஒரு வண்ணார் குடும்பம், CPR என்று சொல்லப்படும் Common Property Resources மட்டும் பயன்படுத்தி கிளைவிட்டுப் படர்வது பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது. இதுவரை CPR பற்றி மிகப் பெரிய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் சொல்லமறந்ததை எல்லாம் அஞ்ஞாடி சொல்லிச் செல்கின்றது. சலவைத் தொழிலுக்கும், sustainable Development க்கும் தொடர்புகளிருப்பதை களப்பணியினின் மூலம் அறிந்துகொண்டவன். இன்று வரை அவர்களில் பெரும்பாலோர் Common Property Resources ஐ நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். நகரத் தெருக்களின் மரநிழலிலோ, கட்டடங்களின் உயரத்தால் நிழல் விழும் இடங்களிலோ நின்று தொழில்செய்து கொண்டிருக்கும் அயர்ன் வண்டிக்காரர்கள் அதற்கு நல்ல உதாரணம். எந்த ஒரு சேவைத் தொழிலாளியும் - வீட்டு வேலைக்காரர்கள், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உருவாக்க முடியாத நம்பகத்தன்மையை அவர்கள் சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்று தெரியாமலே, விலையுயர்ந்த துணிகளை அவர்களிடம் தேய்க்கக் கொடுக்கின்றார்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் சீர்குழைத்ததாக இதுவரை எந்தப் புகாருமில்லை. இமயத்தின் கோவேறு கழுதைகளை அடுத்து நான் படித்தவரை, வண்ணார்களின் வாழ்வியலை இவ்வளவு கரிசனத்தோடு தமிழ் எழுத்தாளர்கள் யாரேனும் கையாண்டிருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
மருது சகோதரர்களுக்கும்- ஊமைத்துரைக்கும் இடையிலிருந்த நட்பைவிட, ஆண்டிக்கும்- மாரிக்கும், ஆண்டிக்கும்-பெரிய நாடாருக்கும் இடையே நிலவிய நட்பு நமக்கு ஒரு பாடம். பாளயக்காரர்களின் நட்பை நம்மால் பாவிக்க(Imitate)/பின்பற்ற முடியாது. ஆனால் நாம் நினைத்தால் ஆண்டி-பெரிய நாடாருக்குமிடையே, சுந்தர நாயக்கர்- மாடப்பனுக்குமிடையே, ஆண்டாள்- நெத்திலி வேலம்மாள் இடையே ஏற்பட்ட நட்பை நம்மால் பின்பற்ற முடியும்.
சிவகாசி கலவரத்தில் தன் கணவன் தங்கையாவைப் பறிகொடுத்துவிட்டு, கழுகுமலைக்குத் தன் இருகுழந்தைகளுடன் திரும்புகின்றாள் பெரிய நாடாரின் பேத்தி தெய்வானை. தோளில் கிடக்கும் மகள் இறந்துவிட்டதுகூட அவளுக்குத் தெரியவில்லை. களைத்து, சோர்வுற்று வரும்போது எதிரில் தென்பட்ட ஆட்டுக்காரனிடம் வழிகேட்கிறாள்.
“கழுகுமலை எங்கிருக்குய்யா”
“மேக்க தொலவட்டாச்சே.போறதுக்குள்ளே இருட்டீருமே”
“தெக்க என்ன ஊரு இரிக்குது”
“கலிங்கலூருணி”
“தூரமா”
“எட்டிப்போனா செத்த நேரத்திலே போயிரலாம்”
.....கலிங்கலுக்கு தெய்வானை நடையை விடுகிறாள். ஆண்டிப்பாட்டையா வீட்டிற்கு செல்கின்றாள். ஆண்டிக்குடும்பன் அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றான். காலம் கடக்கின்றது. கலிங்கலில் நாடார் தெரு உருவாகின்றது. அல்லல் படுவோருக்கு அபயமளிக்க தெய்வீக சக்தியால்தான் முடியுமென்று நம்முடைய இதிகாசங்கள் நம்மை நம்பவைத்துவிட்டது, மாறாக சாதாரண மனிதர்களாலும் அதைச் செய்யமுடியும் என்று பூமணி காட்டும்போது, அபயமளிப்பதற்கு தெய்வ சக்தியோ, தியாகமோ தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது என்று பூமணி நம்பிக்கை ஏற்படுத்தும்போது, நமக்கும் மனிதனாக, ஆண்டியைப் போல ஆக ஆசைவருகின்றது.
(சத்திரப்பட்டி) சுந்தர நாயக்கர் - மாடப்பக்குடும்பன், மாடனின் மனைவி முத்தம்மா, மகள் சீனித்தாய் இவர்களைச் சுற்றி பின்னப்படும் பாசவலை போன்று எல்லோரையும் பின்னிக்கொண்டால் இவ்வுலகில் எவ்வளவு சமாதானம் உண்டாக்கியிருக்கும். சுந்தர நாயக்கர் தன் மனைவியால் அவமானப்படுத்தப்படுவதாக நினைக்கும் போதெல்லாம், மாடப்பனின் ஆறுதல் வார்த்தைகள், ஒரு குடும்பனின் வார்த்தைகளாக அல்லாமல் ஒரு குருவின் உபதேசமாகவல்லவா வருகின்றது.
“நாளெல்லாம் ஒரே மாதிரி இருந்தே முடியுமா சாமி” (பக் 911) ”காலத்துக்கு தக்க மாரிக்கிறனும் சாமி” “எல்லாம் நல்லா நடக்குதா சந்தோசம்னு பெருந்தன்மையா நெனைச்சுக்கிறனும் சாமி” (பக்.920). மனதை வருடும் இதமான வார்த்தைகள் அதுவும் ஒரு வாலிபனிடமிருந்து வருகின்றது என்பதுதான் மிகப் பெரிய பாடம்.
அதே மாதிரி கலிங்கல் நெத்திலி வேலம்மாள் – வேப்பங்காடு ஆண்டாள் உறவைச் சொல்லவேண்டும். துயருரும் ஒருவர் தன்னிடம் கொட்டித்தீர்ப்பதை யாரிடமும் சொல்லக்கூடாது. Principle of Confidentiality என்பது சமூகப் பணியாளர்களும், Counsellars ம் கடைபிடிக்க வேண்டிய தர்மம். படபடவென்று பேசும் கதாபாத்திரமாக நெத்திலி வேலம்மாள் காட்டப்பட்டாலும், விதவையான ஆண்டாள் உணர்ச்சிகளோடு தோற்று கர்ப்பம் தரிக்க அதைக் கலைப்பதற்கு நெத்திலி உதவினாலும், அதை ஆண்டாளின் பலகீனம் என்றோ, இழுக்கியல்புடையதாகவோ (not attaching any stigma with the people who are suffering) நினைக்காமல் உதவுவதும், அந்த உதவியை சாக்காக வைத்து சலுகைகள் பெறமுயற்சிக்காததும், அந்த இரகசியங்களை காப்பாற்றுவதும் – நெத்திலி வேலம்மாள் சமூகப்பணி பயில்பவர்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணம்.
பருவமடைந்த குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி கையாளவேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றோம். ஆனால் வெளிஉலகத் தொடர்பில்லாத ஆண்டியும் கருப்பியும் தங்கள் மகள் வீரம்மாளின் காதலை அங்கீகரிக்கும் போது, படிப்பென்ன மயிர் படிப்பு, Knowledge is structured in consciousness என்ற யோக ஞானத்தின் விளக்கமாக அவர்கள் வாழ்ந்ததை உணரமுடிகின்றது.
நம்முடைய ஞாபகசக்திக்கு சவால்விடுமளவு எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோட்டத்தில் தேவைப்படுகின்றார்கள். தன் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம், கருத்தையா பிற சண்டியர்கள் கலிங்கலைக் கொள்ளையடிக்காமல் தடுத்து நிறுத்துவது. புளுகுனியாக, பொறுப்பற்ற இளைஞனாக கோயிந்தன் காட்டப்பட்டாலும், தேங்கிக்கிடக்கும் ஒரு சமூகத்தில் கலாச்சார ரீதியான மாற்றங்களுக்கு வித்திடுவது படிப்பவர்களை நிச்சயமாக சிந்திக்க வைக்கும்.
கொத்துக்கொத்தாக பஞ்சத்திலும், நோயிலும், கலவரங்களிலும் மக்கள் மடிவது நம்முள் பலகேள்விகளை எழுப்பினாலும், அதற்கான விடைகளை நோக்கி சற்றாவது நாம் முன் நகர்ந்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஆனால் தன் மகன் மாரிமுத்துவின் பாராமுகத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பொம்மக்காள், உவர்க்காட்டுத் தோட்டத்தின் தெலாக்கல்லில் தூக்குப் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நாடார், தொழுநோயாளியான மரியான் உபதேசியாருக்கு மரணத்திற்குபின் கிடைக்கும் மரியாதை, மரணத்திற்கு முன் கோவிந்தனின் மனநிலை - இந்தச் சம்பவங்கள் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகள் இன்றளவும் நம்மிடம் இல்லை. அதற்கான விடைகளை நாம் தேடுகின்றோமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அஞ்ஞாடி சிலவிடைகளை தொட்டுக்காட்டிச் செல்கின்றது. அது என்ன?
3
ஏதாவது சம்பவத்தையோ, மனிதர்களையோ நினைவுகூறும் போது, “அதுமாதிரி இப்ப எங்கே பார்க்கமுடியுது, அந்த மாதிரி மனுசங்க இப்ப எங்கே இருக்காங்க” என்று கடந்த கால விருப்புணர்வு (nostalgic feeling) மிகும்போது, அந்த சம்பவங்களும், மனிதர்களும் நடைமுறை சாதியமற்றவைகள் என்ற கருத்தே அதிலிருந்து மறைமுகமாக வெளிப்படுகின்றது. கடந்தகால மிகையுணர்வு நிகழ்காலச் சம்பவங்களைப் புரிந்துகொண்டு செயலாற்ற தடையாய் இருந்துவிடுகின்றது. மாறாக அந்த மாதிரியான சம்பவங்கள் காலம் கடந்தும் தொடர்கின்றது, அந்த மாதிரியான மனிதர்கள் இன்றும் நம்முடன் வாழ்கின்றார்கள் என்ற உணர்வு மேலோங்கும்போதுதான், அதிலிருந்து, அவர்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராகின்றோம். “அஞ்ஞாடி” குறிப்பிடும் சம்பவங்களாகட்டும், சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகட்டும், காலத்தைக்கடந்து வெவ்வேறு வடிவங்களில் நம்மைத் தொடர்கின்றன. அதை பூமணி எழுத்தாக்கிக் காட்டும் போது, அதை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, “ஓ! அதுமாதிரி தானே இதுவும், அவர்கள் மாதிரிதானே இவர்களும்” என்று நமக்கு புரியவரும் போது, “அஞ்ஞாடி” புதினம் என்ற நிலையிலிருந்து மேலுயர்ந்து நம்மைப் பக்குவப்படுத்தும் பாடப்புத்தகமாகின்றது. நாம் பாடம் கற்றுக்கொள்ள தோதாக அஞ்ஞாடியில் எத்துணை சம்பவங்கள். எத்துணை மனிதர்கள்.
ஆண்டியின் மனைவி கருப்பி கதைப்படி ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டவள். ஆனால் அவள் குழந்தைகளைக் கையாளும் முறை, நூற்றாண்டுப் பழமைக்குப் பதிலாக இன்றுகூட பார்க்க முடிந்த செயலாகத்தான் இருக்கின்றது.
கருப்பி பிள்ளைகளை வளர்த்த விதத்தை பூமணி விளக்குகின்றார்.
“அவள் தன் பேரனை என்னமாக வளர்த்தாள்”......ஒருதடவை பேரனை தலைக்குமேலே தூக்கி அண்ணாந்து கொஞ்சும் போது சரியாக அவள் வாயில் மோண்டுவிட்டான். அவள் பதட்டப்படவில்லை. மோண்டு முடிக்கும் வரை வாயைத் திறந்து காட்டிவிட்டு கொப்புளித்துத் துப்பினாள்”
அதைப் பார்த்த ஆண்டி “நீயென்ன எறும மாட்டுப் பெறவியா” என்று திட்டுகின்றான்.
அதற்கு கருப்பி “ஒனக்கு ஒண்ணும் தெரியாது. புள்ளையை படக்குன்னு எடுத்தா மோத்திரத்தை அடக்கீரும்”
இன்னொரு சம்பவம்...
ஒரு நல்ல நாளன்று கும்பா நெறைய நெல்லுச்சோற்றில் பருப்பாணம் ஊற்றி ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பேரன் (பொய்யாளி) நின்றாமானைக்கி கும்பாவில் மோண்டுவிட்டான். அதைப்பார்த்த சொக்கம்மா (கருப்பியின் மருமகள்) “சனியனே ஒனக்கு மோத்திரக் குடுக்கை அந்துபோச்சா” என்று ஓடிவந்து பொய்யாளியை அடிக்கின்றாள்.
அடிதாங்காமல் அழுத பேரனை மடியில் வைத்து அமர்த்தியபடி, அந்த சோற்றை கருப்பி பிசைகின்றாள். சாப்பிட்டு முடித்துவிட்டு அழுது ஓய்ந்திருந்த பேரனைப் பார்க்கின்றாள். ‘பருப்புக்கு கொஞ்சம் உப்பு கூடிப் போச்சுடா” என்கிறாள்.
வலிக்கும் வரை அன்பு செலுத்து (Love Until it Hurts) என்று மதர் தேரெசா பற்றிய புத்தகத்தின் அட்டையப் பார்த்துள்ளேன். வலிக்கும் வரை வேண்டாம். அருவருப்பில்லாமல் இருந்தாலே போதுமே. அன்புக்கு அருவருப்பு கிடையாது.
சில ஆண்டுகளுக்கு முன், தவழ்ந்து திரிந்த எங்கள் வீட்டுப் பாப்பா, தட்டில் வைத்திருந்த பட்டாணியை எடுத்து முழுங்கி விட்டது. தட்டில் வைத்திருந்த பட்டாணியை காணவில்லை என்று தேடியபோது, நான்கைந்து மணிநேரம் கழித்து, அது பாப்பாவின் வயிற்றிலிருந்து ஜீரணமாகமுடியாமல் கழிச்சலாக வெளிவந்தது. பட்டாணியை விட்டுவிட்டு கழிச்சலை மட்டும் வீட்டு நாய் நாக்கிவிட்டுச் சென்றுவிட, கொத்தான பட்டாணி எண்ணை தடவிய பளபளப்புடன் வராண்டாவில் கிடந்திருக்கின்றது. அதைச் சுத்தம் செய்யுமுன், உறவாடிவந்த அம்மையார் அப்பட்டணிகளை எடுத்து தின்ன ஆரம்பித்தார். அதைப் பார்த்து பதறிப் போய், “அதையெடுத்து ஏன் தீங்குறீங்க. அது பாப்பாவோட பீயில் வந்தது” என்று அலற, அவரோ மிக நிதானமாக, “பாப்பா பீயிலே வந்ததுதானே. ஏதோ பாலிடால் தடவுனது மாதிரி ஏன் இந்த அலறு அலறீங்க” என்றாரே பார்க்கலாம்.
கருப்பிகள் என்றைக்கு செத்தார்கள். அவர்கள் செத்தார்கலென்றாள், அஞ்ஞாடி பாசையில், “வொக்காளி இந்த ஓலகம் என்ன மயித்துக்காகுறது”. அவர்கள் காலம் தோறும் வாழ்கின்றார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இரண்டு மூன்று கருப்பிகள் ஒருசேர ஒருவீட்டிலிருந்தால் அது பல்கலைக்கழக அந்தஸ்து A+ தரச் சான்றிதழ் பெறுகின்றது.
அடுத்து ஆண்டியைப் பற்றி ஒரு சித்தரிப்பு.
ஆண்டியின் விதைப்பில் பழுதிருக்காது. கருப்பி கையிலும் பழுதிருக்காது. அவர்கள் விதைத்தால் பயிர்கள் எக்காளமிட்டு முளைக்கும். அவர்களின் கைராசியும் நேர்த்தியும் அப்படி.
தங்கள் நிலத்தில் விதைத்துக் கொடுக்க அயலூர்களிலிருந்தும் ஆண்டியைத் தேடி வருவார்கள். இன்ன சாதிக்காரர்கள் என்றில்லை. அவனும் சுணங்காமல் போவான். ஆண்டி எந்த ஊருக்குப் போனாலும் வாய்நிறைய மரியாதை கிடைக்கும். மேல்சாதிக்காரர்கள் கூட அவன் விதைப்பைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.
போகிற ஊர்களிலெல்லாம் “வெள்ளாமையெல்லாம் எப்படீருக்கு” என்று ஆண்டி அக்கறையாக விசாரிப்பான்.
“புள்ளீகளைப் பத்தி வெசாரிக்கிற மாதிரியில்ல வெள்ளாமையைப் பத்தி விசாரிக்கான். அவன் என்ன கஞ்சிக்கில்லாத வெங்கம் பயலா. ஈரனேர்ச் சம்சாரி. ஏகப்பட்ட நிலம். வாழைப்பழம் போல மாடுகள். கெதியான விவசாயம். சொந்த வேலையைப்போட்டுவிட்டு ஊரானுக்கு வெதச்சிக் கொடுக்கனும்னு வேதவதியா?
விதைபுக்காக ஆண்டிக்கோ, கருப்பிக்கோ யாராவது கொத்துக்கூலி கொடுக்கவந்தால் வசவு நாறிவிடும். அடுத்தவர்கள் காட்டில் விதைப்பது பிரியத்தினால். அது அவர்களைப் பிடித்தாட்டிய கிறுக்கு.
தன்னார்வத்தில் செயல்பட்ட அற்புதத் தம்பதியினர் The couple together were great volunteers.
சிலவருடங்களுக்கு முன் ஒரு கலந்துரையாடலுக்காக, நிதி ஒதுக்கீடு இல்லாத ஒரு informal discussion-க்காக தமிழ் நாடறிந்த மதுரை பேராசிரியர்கள் இருவரை தொடர்புகொண்டோம். தமிழ் இலக்கிய/கலாச்சாரப் பின்னணியில் சமூகப்பணி கல்வியைப் புரிந்துகொள்ள செய்யப்பட்ட முயற்சி. அவர்களை எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நாங்கள் அழைத்துக்கொண்டு வருகின்றோம் என்று ஆர்வமுடன் சொல்லிச்சென்ற மாணவர்கள் வாடிய முகத்துடன் திரும்பினார்கள். என்னவென்று கேட்க, அவங்க ரெண்டு பேரும் சொல்லிவைத்த மாதிரி இரண்டாயிரம் ரூபாய் “கொத்துக்கூலி” கேட்கின்றார்கள் என்று சொல்ல வேறு இரண்டு பேராசிரியர்களை (Prof. EKR of Yadhava College and Prof. PothiReddy of American College) அழைத்து வந்தோம். தன்னார்வத்துடன் செயல்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.
இதைவிட மனதை நெகிழ வைத்த சம்பவம்.
கிழக்கு பதிப்பக பத்ரியவர்களுடன் எனக்கு சின்னதாக அறிமுகம் உண்டு. உங்களை மாதிரியான நபர்கள் எங்கள் மாணவர்களிடையே பேசினால் அவர்கள் மேலான செயல்களுக்கு தூண்டப்படுவார்கள் என்று அவரை கல்லூரிக்கு அழைத்தேன். மதுரைக்கு வேறு வேலையாய் வரும்போது மாணவர்களைச் சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்படி அவர் மதுரைக்கு வந்தபோது “பத்ரியுடன் ஒருநாள்” என்று தலைப்பிட்டு நிகழ்ச்சி நடத்தினோம். அது மாணவர்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்காக “தேங்காய் முடி” (பொன்னாடை போர்த்தியது) வழங்கினோம். நாங்கள் என்ன சொல்லிக் கொடுக்கின்றோம், அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆலோசனை சொன்னார். ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வருகின்றோம் என்றதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அவரே ஆட்டோ பிடித்துச் சென்றார். அடுத்த சில தினங்களில் அவர்களுடைய System Engineer ஐ சென்னையிலிருந்து அனுப்பிவைத்து, மிகக் குறைந்த செலவில் கல்லூரி கணணிகளுக்கு இணையவசதி எப்படி ஏற்படுத்தலாம் என்று ஆலோசனை சொல்ல அனுப்பினார். அடுத்து கிழக்கு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களை அனுப்பி வைத்து, எங்களுடைய அனுபவங்களையெல்லாம் ஆவணப்படுத்தி உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்ல முடியுமா? என்பதை அறிந்துவர அனுப்பினார். எங்களுக்கு ஒரு செலவும் இல்லை.
ஆண்டியையும் கருப்பியையும் பிடித்தாட்டிய கிறுக்கு அவரையும் பிடித்து ஆட்டுவதை உணர்ந்த இன்னொரு சந்தர்ப்பம். ஆண்டியைவிட பத்ரி இன்னும் மோசமான கிறுக்கு என்பதை பூந்தமல்லிக்கருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற கிராமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுடன் செலவிட்ட நேரத்தையும், மற்றதையும் சொல்லலாம். ஆண்டியை மற்றவர்கள் குறிப்பட்டது மாதிரி, வேலைவெட்டி இல்லாதவரா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.
அஞ்ஞாடி கதைப்படி ஆண்டி இறந்துவிட்டார்தாம். ஆனால் ஆண்டியைப் போன்ற ஆத்மாக்கள், ஊரெல்லாம் “நல்லது விதைத்துக் கொடுக்க” நம்மிடையே இருக்கின்றார்கள். கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகளை நாம் பார்க்கலாம். விதைத்துச் செல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம். அறுவடையை நாம் அனுபவித்துக்கொள்ளலாம்.
அஞ்ஞாடி முழுக்க காலம் கடந்துநிற்கும் கதாபாத்திரங்கள்தாம். ஆண்டியின் கொள்ளுப் பேரனாக கோயிந்தன் என்று ஒரு கதாபாத்திரம். மாற்றங்களை மிக மெதுவாக எதிர்கொள்ளும் கலிங்கலில் சடசடவென மாற்றங்களைக் கொண்டுவருகின்றான். சிறுசுகளையும், பெருசுகளையும் கிராப் வெட்டிக்கொள்ள வைக்கின்றான். பெருசுகளின் “பொட்டணத்தை” மறைக்க கோவணம் கட்டவைக்க தந்திரம் செய்து சாதிக்கின்றான். சவுரிமுடி ரகசியத்தை தெரிந்துகொண்டு குளுவன் செவிட்டில் அறைந்து துரத்திவிட்டு அதைப் பற்றி ஜம்பமடிக்காமல் அமைதிகாக்கின்றான். ஊரில் முதன்முதலாக மடமும், வேப்பமரத்தடியில் உட்கார்ந்துபேச மேடையும் கட்டுகின்றான். இளைஞர்களை ஒன்றிணைத்து கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றான். கலிங்கலில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும், விதைக்கின்றான். முன்னேற்றப் பணியாளர்களைப் பற்றி பேசும் போது “அவர்கள் முன்னேற்றப் பணியை மகிழ்ச்சிக்குரியதாக்கினார்கள்” என்று ஒரு அறிஞர் குறிப்பிடுவார். (They made development work as a pleasurable one). அது மாதிரி கோயிந்தன் எந்த கோட்பாட்டு வட்டதிற்குள்ளும் சிக்காமல், கலிங்கல் உருள மசகாகின்றான்.
கோயிந்தன் வாய் கூசாமல் சாமிகளைக் கிண்டலடிப்பான். அப்படியொரு குணம். “சாமியைக் கும்புட்டாத்தானே மழ பேயும்” என்பவரிடம் “அப்ப இத்தனை வருஷம் கும்புட்டதெல்லாம் பொய்யா” என்று எதிர்க்கேள்வி போட்டு மடக்குவான்.
ஆனால் அதே நேரத்தில், சத்திரப்பட்டி சக்கிலியக்குடி முனியசாமி மீது மூத்திரம் மோண்டு கொண்டிருந்த கலிங்கல் ஆட்டுக்காரச் சிறுவர்களை ‘ஏலே அகராதி புடிச்ச அறுதச் சிறுக்கி புள்ளீகளா” என்று அவர்கள் மீது கல்லெறிந்து விரட்டுவான்.
“அதை சாமியா என்னன்னு நெனச்சீக. மழைன்னும் பாக்காம வெயிலன்னும் பாக்காம பாவம் அது பாட்டுக்கு ஒத்தியிலே நிக்குது. அதைப் போயி பாடு காங்கீகளே. நாளைக்கு மேச்சாதிக்காரப் பசங்க வந்து ஓங்க சாமி மேல பேண்டுவச்சா என்ன செய்வீக”
“பேண்ட குண்டிய அறுத்து நாய்க்குப் போட்ருவோம்” என்று மோண்டவன் அதட்டலாகச் சொல்ல, “ஒன் மானிய அறுக்குற ஆளில்லங்கிற துமுருள பேசுற. தைரியமான எளவட்டங்கன்னா அங்கயே நில்லுங்க. அத்தன பேரு குஞ்சியவும் அறுத்து காக்காய்க்கு போடுறனா இல்லையான்னு பாரு” என்று கோவத்தோடு கத்துவான்.
கோவணத்தைக் கெட்டிக்கோ, குஞ்சியத்தான் பொத்திக்கோ” என்று பயல்கள் பொச்சைப் பொத்தியபடி ஓடிவிடுவார்கள்.
கோயிந்தனுக்கு சகலரிடமும் இருந்த சௌஜன்யம் கடந்த கால நிகழ்வல்ல. இன்றைக்கும் பல குடியிருப்புகளில் காணக் கிடைப்பதுதான். அதை சமூக மூலதனம் என்கின்றார்கள். இவர்களெல்லாம் ஊருக்கு ஊறுகாயாகவும், வீட்டிற்கு வேப்பங்காயாகவும் இருப்பவர்கள். ஊருக்கு ஒரு கோயிந்தன் இருந்தாகவேண்டும் என்பது சமூகவிதி. இல்லையென்றால் அது ரெவின்யூ பாஸையில் பேச்சற்ற கிராமமாகிவிடும். அவர்களில்லாமல் ஊரில்லை. முன்னேறிய ஊர்களிலெல்லாம், யாரையும் கேட்கவேண்டாம், என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட கோயிந்தன்கள் இருப்பார்கள்.
இன்னும் தொடரும்
படங்கள் நன்றி
 http://vidhaanam.wordpress.com, http://solpudhithu.wordpress.com, http://seyakumaar.wordpress.com
,

4/4/13

நல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital

பத்ரி கொடுத்த புத்தகம்.
ஓரிரு மாதங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Swaraj என்ற புத்தகத்தின் தமிழாக்கமான “தன்னாட்சி – வளமான இந்தியாவை உருவாக்க” (தமிழில் கே.ஜி. ஜவர்லால் - கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தைத் திரு. பத்ரியவர்கள் படிக்கக் கொடுத்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நாடறிந்த சமூக ஆர்வலர். தகவல் அறியும் உரிமைச்சட்டம் இந்தியாவில் நிறைவேற அவரின் பங்களிப்பிற்காக ராமோன் மக்ஸாசே விருதும் பெற்றவர். பன்முக அனுபவம் கொண்ட அவருடைய கருத்துக்களைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதும் கூட ஒருவிதமான சமூக அக்கறையே. அந்த வகையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
அந்த புத்தகத்தைப் படித்தபோது எனக்குள்ளே பல சிந்தனைகள். தன்னாட்சியே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை. ஆதாரம். மக்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டுமென்பதில் சமரசத்திற்கு இடமில்லையாதலால், தன்னாட்சி என்ற கருத்தாக்கத்தை யாராலும் வெளிப்படையாக விமர்சிக்க முடியாது. ஆனால் நம் முன்னுள்ள சவாலே தன்னாட்சியை அடைவது பற்றியல்ல; ஏற்கெனவே ஓரளவு கைகூடியிருக்கும் தன்னாட்சியை (புதிய பஞ்சாயத்து அமைப்பு) எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பது பற்றித்தான். தன்னாட்சி என்பது சர்வரோக நிவாரணியல்லவென்றாலும், சர்வரோக நிவாரணத்திற்கான மூலப்பொருள் அதில் உள்ளதென்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு நிவாரணியை சரியாக உபயோகிக்கத் தெரிந்தால்தான் (மருந்தின் அளவு, எத்தனைவேளைகள், எத்தனை நாட்கள், பாதுகாக்கும் முறை), நோயிலிருந்து நிவாரணம் பெறமுடியும். மருந்து நன்றாகச் செயல்படவும், அதன் பக்க விளைவுகளைத் தடுக்கவும் சில நேரங்களில் துணை மருந்துகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த users Intelligence மாதிரி, தன்னாட்சி சரியாகச் செயல்படவேண்டுமென்றால், அதற்குத் துணைபுரிய ஒத்திசைவான சூழலும் வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் தன்னாட்சிக்கு வலுசேர்க்கக் கையாண்ட உதாரணங்களிலெல்லாம், தன்னாட்சியைவிட இந்த ஒத்திசைவான சூழலே மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தன்னாட்சிக்கு வலுசேர்க்கவும், தன்னாட்சி தவறிழைக்காமல் பார்த்துக்கொள்ளவும் ஒத்திசைவான சூழல் முக்கியம்.
தன்னாட்சியும் சமூக மூலதனமும்
இந்த ஒத்திசைவான சூழலை “சமூக மூலதனம்” என்று சொல்லலாம். சமூகம் செயல்பட பல்வேறு அமைப்புகள்/நிறுவனங்கள், மதிப்பீடுகள், விதிமுறைகள் பெரிய அளவு உதவுகின்றன. ஆனால் இவையெல்லாம் மூலதன அந்தஸ்தை அதன் போக்கில் பெற்றுவிட முடியாது. சமூகமென்பது மானிட உறவுகளின் வலைப்பின்னல் (Society is web of social relationships). அந்த உறவுகளில் ஸ்திரத்தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படும்போது அது மூலதன அந்தஸ்தைப் பெற்று, முன்னேற்றத்திற்கான மூலப் பொருளாகின்றது. ஒரு தரிசு நிலம், நீர்ப்பாசன வசதி பெரும்போது எப்படி அதனுடைய உற்பத்தி பெருகுகின்றதோ, அது மாதிரி சமூக மூலதனம் உள்ள இடங்களில், மற்ற மூலதனங்களான இயற்கை மூலதனம் (Natural Capital), மனித மூலதனம் (Human Capital), நிதி மூலதனம் (Financial Capital), கட்டுமான மூலதனம் (Physical Capital) போன்றவை உயிர்த்தெழும். மேலும் இந்த மூலதனங்கள் ஒன்றோடொன்று ஒத்திசைந்து செயல்படும் தன்மை கொண்டவை.
தன்னாட்சி/ ஊராட்சி கூட ஒரு மூலதனம்தான். இன்றைய தன்னாட்சி சட்டபூர்வமான ஸ்திரத் தன்மையை அடைந்திருந்தாலும், துரதிருஷ்டவசமாக அதைக் கொண்டுசெலுத்துபவர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகிவிட்டதால், அது சமூகமூலதனம் என்ற அந்தஸ்திலிருந்து பெருமளவு நீர்த்துப்போய்விட்டது. அது சிலரின் கழுத்திலும், விரல்களிலும் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்ற தங்கநகை போன்று ஒரு Non Performing Asset.
சமூக மூலதனம் – சில உதாரணங்கள்
நமது பிரச்சனைகளான பொறுப்பற்ற மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் ஊழல், அதனால் ஏற்படும் திறமையின்மை போன்றவை சமூக மூலதனம் நீர்த்துப் போனதன் விளைவே. ஒரு சமூகம் தன்னைத்தானே புனரமைத்துக்கொள்ள நீர்த்துப்போன சமூக மூலதனங்களை மீண்டும் கட்டமைக்கலாம். அல்லது புது மாதிரியான சமூக மூலதனங்களை உருவாக்கலாம். ஊழலுக்கு எதிரான அண்ணாவின் அமைப்புக்கூட தேசிய அளவில் அப்படி உருவான சமூக மூலதனம்தான். பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பாலியல் சிறுபான்மையினர் போன்றோர் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் செயல்படும் நிறுவனங்கள் சமூக மூலதானத்திற்கு எடுத்துக்காட்டுக்களே. ஈழத்தமிழர்களுக்காகப் போராடும் மாணவர் அமைப்பும் கூட சமூக மூலதனமே. இந்த மாதிரியான Macro Examples-ஐ உதாரணம் காட்டினால், இவைகளைக் கவர்ச்சியும், அர்ப்பணிப்பும், செல்வாக்குமிக்க தலைவர்கள் தோற்றுவித்து நடத்துவதால், இதற்கெல்லாம் பெருமுயற்சியும், பேராற்றலும் தேவை என்று நினைத்து நம்மில் பலர் சோர்வடைந்து விடுகின்றோம். ஆகையால் கிராம அளவில், ஒரு சிறிய எல்லைக்குள் நடக்கும் Micro Examples-ஐ உதாரணமாகக் கொண்டால், நம்முடைய புரிதல் இன்னும் சற்று அர்த்தமுள்ளதாகும்.
கிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் I.
என்னுடைய கிராமத்தையே எடுத்துக்கொள்வோம். 70 ஆண்டுக்களுக்கு முன்னரே ஒரு ஆரம்பப்பள்ளி உருவானது. உள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் முனைப்பாக செயல்பட்டு, ஒரு துணை தபால்நிலையம் கொண்டுவந்தார். நான் பள்ளிப்படிப்பு முடித்த அந்த காலகட்டத்தில், எங்கள் ஊருக்கு கிடைத்த அந்த பின்கோடே என்னை மனவெழுச்சிக்கு உள்ளாக்கியது. என்பெயர், ஊர்ப்பெயர், பின்கோடு இருந்தாலே இந்ததேசத்தில் எங்கிருந்தும் என்னை அடையாளம் காணமுடியும் என்ற பெருமையை அந்த இலக்கங்கள் கொடுத்தது.
நான்கு உட்கடை கிராமங்களைக் கொண்ட பஞ்சாயத்தில், பல்வேறு சமன்பாடுகளால் (Equations) எங்கள் ஊரைச்சேர்ந்த யாரும் ஆரம்பத்தில் ஊராட்சி தலைவராக முடியவில்லை. அரசுத் திட்டங்களெல்லாம் (சமூகநலக் கூடம், துணை சுகாதார நிலையம் என்று) பக்கத்து ஊருக்கே சென்றது. பொதுவான கட்டமைப்பு வசதிகளைத்தவிர பிரத்தியேகமான அரசு முதலீடுகள் எதுவும் எங்கள் ஊருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் ஊரிலிருந்த மூன்று ஜாதியினரும் பல இலட்சங்களைச் செலவழித்து புதிய வழிபாட்டுத் தலங்களை, கல்யாண மண்டபங்களைக் கட்டிக்கொண்டனர். ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியானது. ஆனால் அதை நிர்வகித்த குழுவால் தரத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
கடந்த காலத்தில் ஜாதிகளுக்குள்ளும், ஜாதிகளுக்கிடையேயும் இருந்த சௌஜன்யம் இப்போது இல்லை. இதனால் பிரச்சனை ஏதுமில்லாவிட்டாலும், கூட்டு முயற்சிகள் பெரிதளவு நின்றுவிட்டது. சமீபத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், எங்கள் ஊரிலுள்ள அனைத்து முதியோர்களும் முதியோர் பென்ஷன் பெறுகின்றார்கள். “கொள்ள காசு பென்சனாக நம் ஊருக்கு வருகின்றது” என்று சொன்னவரிடம், “எல்லாத்தையும் தொலைச்சுட்டோம். இதுல மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது?” என்று கேட்டேன். அவர் இரண்டுமூன்று நபர்களின் பெயரைச் சொல்லி “அவங்க ஏற்பாடுதான். 1200 லிருந்து 1500 வரை செலவாகும். பென்ஷன் வாங்கித்தந்து விடுவார்கள்” என்றார். இந்த ஏற்பாட்டை நம்மில் பெரும்பாலோர் ஊழல்/இடைத் தரகு (in collusion with govt staff) என்பார்கள். எனக்கு அப்படிப் படவில்லை. அது ஒரு சேவை (service provision). மக்களை அலைக்களிக்காமல் ஒரு அரசுத் திட்டத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது. அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. (They are not power brokers. Instead they are bridges/ bridging social capital) அவர்கள் நம்பிக்கையானவர்கள். கடந்த காலத்தில் சமூக மூலதனம் வலிமையாக இருந்தபோது, ஊராரால் பள்ளி போன்ற அமைப்புகளை அரசுடன் தொடர்பு கொண்டு ஏற்படுத்தமுடிந்தது. இன்று அந்த வலிமை நீர்த்துவிட்டது. அவர்களால் பள்ளியின் தரத்தை கட்டிக்காப்பாற்றக்கூட முடியவில்லை. அதற்கு இன்னும் அதிக ஒருங்கிணைப்பு தேவை. அது இல்லை. இருந்தாலும் அவர்களால் பென்ஷன் வாங்கிக்கொடுக்க முடிகின்றது.
கிராமங்களில் மாறிவரும் சமூக மூலதனம் II.
பல ஊர்களிலும் இதே நிலைதான். சமூக மூலதனம் தரத்திலும், அளவிலும் மாறி விட்டது. இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு உள்ளடங்கிய மீனவ கிராமம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊரில் மீனவர்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் மூலமாக இருபத்தைந்து வீடுகளை அவ்வூர்த் தலைவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அது மாதிரியான தலைமை இப்போது இல்லாததால், சுனாமி வீடுகளைப் பெறுவதில் கூட அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தது. மாறாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லாத காலங்களுக்கு, அரசு காப்பீட்டுத்/ ஈட்டுத் தொகை (lean period insurance) வழங்குகின்றது. அதைப் பெற மீனவர்கள், அடையாள அட்டை பெற்று கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி பிரீமியமும் செலுத்தவேண்டும். அந்தப் பணத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பும் சேர்ந்து கடலுக்குச் செல்லாத நான்கு மாதங்களுக்கு கணிசமான ஈட்டுத்தொகை வழங்கப்படுகின்றது. சற்றுத் தொலைவிலிருந்த அலுவலகத்தில் சென்று பிரீமியம் செலுத்துவதில் தொய்வு ஏற்பட, ஆரம்பத்தில் பலகுடும்பங்களால் ஈட்டுத்தொகையைச் சரியாகப் பெறமுடியவில்லை. மீன் வளத்துறையுடன் நெருக்கமாக இருந்த ஒருசிலர், அந்தப்பிரீமியத்தை வசூலித்து கட்ட ஆரம்பித்தார்கள். இரசீதுகளையும் பத்திரமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு பிரீமியம் கட்ட முடியாதபோது அவர்களே கட்டி, பின் அந்த பணத்தை வாங்கிக் கொள்வார்கள். இதற்கு குறைந்த சேவைக்கட்டணமாக மாதம் ரூபாய் ஐந்து பெற்றுக்கொள்வார்கள். பிரீமியம் கட்டவும், ஈட்டுத்தொகை பெரும்போது மீனவர்கள் கொடுக்கும் வெகுமதி என்று இந்த சேவையில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எத்துணை பேருக்கு சேவை செய்கின்றார்களோ அதைப்பொருத்து மாதம் குறைந்த பட்சம், 1200-1500 வரை வருமானமீட்டமுடியும். இது அவர்களுக்கு ஒரு (துணை) ஜீவனோபாய உத்தி.
“சார் நாங்க அலையவேண்டியதில்லை. பிரீமியம் கட்டவேண்டிய கெடுவுக்கு ஒரு வாரத்திற்கு முன் சொல்வார்கள். பிரிமியத்தோடு அஞ்சு ரூபாய் சேத்துக் கொடுக்கணும். பணத்துக்கு தட்டுப்பாடு என்றால், இருப்பதை வாங்கிக் கொண்டு அவர்களே மீதிப் பணத்தைப் போட்டு கட்டிவிடுவார்கள். மீதியை எங்கள் கணக்கில் பற்று எழுதிக்கொள்வார்கள். வேறு வழியற்ற முதியோர்களுக்கும், விதவைகளுக்கும் அவர்களே கட்டி விடுவார்கள். ஈட்டுத் தொகையில் அதைப்பிடித்துக் கொள்வார்கள். அவர்களே வயதிற்கு வந்த எல்லோருக்கும் அடையாள அட்டை வாங்கி உறுப்பினராக சேர்த்துவிடுவார்கள்” என்று விளக்கமளித்தார். இதைச் செய்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளல்ல. அவர்கள் Service Providers. இதில் வேறொரு கோணம் இருப்பதை மீனவர்களே உணர்ந்திருக்கின்றார்கள். மீனவர்கள் அல்லாதோருக்கும் அடையாள அட்டை வாங்கி அவர்கள் பெயரில் பிரிமியம் செலுத்தி, ஈட்டுத்தொகையை மீன்வளத் துறை அதிகாரிகளும் இவர்களும் பங்கு போட்டுக்கொள்வார்கள். “அதனால் எங்களுக்கென்ன நஷ்டம்” என்று சொல்லும் மீனவர்களுக்கு இதில் ethical issues இருப்பதாகப் படவில்லை.
இந்த மாதிரியான ஏற்பாடுகள் நமக்கு சிலவற்றை புரியவைக்கின்றது. உள்ளூர் அரசியல்வாதிகளிடம் எதற்குச் செல்ல வேண்டும், உள்ளூர் Service Providers களிடம் எதற்குச் செல்லவேண்டும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட இந்த மாதிரியான மாற்றங்களைக் காணலாம். சமூக மூலதனம் இன்று individual மற்றும் community assets ஆக பரிணாமம் அடைந்திருக்கின்றது. மாறிவரும் இந்தப் பரிணாம மாற்றத்தில் நிறைகள் இருப்பது மாதிரி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இது ஒருவகையான Bridging Social Capital. இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பகிர்ந்துகொண்டாள் சமூக மூலதானத்தின் பல்வேறு கோணங்களைப் புரிந்து கொள்ளலாம்.
நாடார் உறவின்முறை கற்றுத் தரும் பாடங்கள்
சமூக மூலதனத்தை நான் புரிந்துகொண்டதை இன்னொரு கோணத்தில் இப்படி விளக்கலாம்.
நாடார் உறவின்முறை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு ஜாதிச் சங்கம். பத்து பதினைந்து நாடார்கள் ஒரு ஊரில் குடியிருந்தாலே அவர்கள் ஒரு உறவின் முறை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின் மெதுவாக அவ்வூரில் உறவின் முறைக்கு பொதுச்சொத்துக்கள் உருவாகும். அது ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, ஒரு ஆரம்பப் பள்ளியாகவோ கூட இருக்கலாம். ஏதோ நாடார்கள்தான் ஜாதி அடிப்படையில் ஒன்றுகூடுவதாகவும், அங்கிருக்கும் மற்றவர்களுக்கெல்லாம் ஜாதிய உணர்வே இல்லாதது மாதிரியும் “நாடானுக நாலு பேர் இருந்தாக் கூட, அவங்களுக்குள்ளே எப்படி கட்டுப்பாடா, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு ஒரு வழியாக எந்திரிச்சிராணுங்க” என்று அந்த ஊரில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் ஒரு மாதிரி புழுக்கமடையும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த ஊரைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினரில் பலர், அந்த வட்டாரத்திலே மிகவும் செல்வந்தர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவ்வளவு செல்வமில்லாத, பிரபலமில்லாத ஒரு சிறிய நாடார் குழு சாதிப்பதை, மற்ற சமூகத்தினர் எண்ணிக்கையையும், செல்வத்தையும், பிரபலத்தையும் வைத்து சாதிக்கமுடியாது. “காமராஜர் இல்லாவிட்டால் இவர்களெல்லாம் இப்படி வந்திருக்கமுடியுமா? என்று பேசி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவாக இருக்குமென்றால், அந்த சிறிய உறவின்முறையில் கணிசமானோர் திராவிட இயக்கச் சார்புடையவர்களாக இருப்பார்கள்.
அவ்வளவாக மனமுதிர்ச்சி அடையாத காலத்தில், என்னுடைய புரிதலும் இந்த பொதுக்கருத்தை ஒட்டியே இருந்தது. மதுரை மாவட்டத்திலுள்ள, பாலமேடு பாத்திரகாளியம்மன் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு சென்று வந்த பிறகு என்னுடைய புரிதல் மாற்றுருவாக்கமடைந்தது.
பாலமேடு நாடார் உறவின் முறையும் பத்ரகாளியம்மன் பால்பண்ணையும்
பாலமேடு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய பேரூராட்சி. மிகச் சிறிய குடியிருப்பாக இருந்த கடந்த காலத்தில், அங்கு ஐம்பதுக்கும் குறைவான நாடார் தலைக்கட்டுக்களே இருந்திருக்கின்றது. அந்த ஐம்பது தலைக்கட்டுகள் ஒன்றிணைந்து ஒரு உறவின் முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். உறவின் முறை வளர, வளர, உறவின்முறைக்கென்று தனியாக கடைத்தெரு, நந்தவனம், ஆரம்பப் பள்ளி, பால்வாடி, மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சினிமா தியேட்டர், இளைஞர்கள், பெண்களுக்கென்று தனியாக அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கென்று வருமான வாய்ப்புக்கள், நாள்தோறும் 10000 லிட்டர் பாலை பதப்படுத்தி, சந்தைப்படுத்த வசதிகள், 600க்கும் மேலான பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு, தொழில் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்கும் நாடார் மாணவர்களுக்கு கணிசமான ஊக்கத் தொகை, மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி என்று உறவின் முறையின் செயல்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாலமேடு உறவின் முறை உருவாக்கிய பொதுச்சொத்துக்களின் மதிப்பே குறைவாக மதிப்பிட்டாலும் 10 -15 கோடிக்கு மேல் தேறும். இத்தனைக்கும் அந்த ஊரில் நாடார்கள் பெரும்பான்மையினரல்ல. எண்ணிக்கையில் அதிகமாயுள்ள, அதிகச் சொத்துவைத்திருக்கின்ற, அதிகம் படித்திருக்கின்ற பிற ஜாதியினர் சாதிக்க முடியாததை ஒரு சிறுபான்மை குழுவால் எப்படிச் சாதிக்க முடிந்தது? தென்மாவட்ட நாடார்கள் எதைத் தொடங்கினாலும், பத்ர காளியம்மன் பெயரில்தான் தொடங்குகின்றார்கள். அவர்களின் சாதனை அம்மனின் ஆசீர்வாதமாக இருக்குமோ? அந்த மாதிரி ஒரு துடியான தெய்வத்தின் அருள் மற்ற ஜாதியினருக்குக் கிடைக்கவில்லையோ என்னமோ?
அவர்களின் சாதனைக்கான காரணம் பத்ரகாளியம்மன் பால்பண்ணையில் அப்போது செயலாராக இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நாங்கள் நான்கைந்து பேர் சென்றிருந்தோம். சங்கச் செயலாளர் எங்களுக்கு தேநீர் வரவழைத்தார். அவருக்கு முன்னாள் தேநீர் டம்ளர் ஏதும் வைக்கப்படவில்லை. தேநீர் குடிக்கும்முன், மரியாதையின் பொருட்டு “அண்ணாச்சி உங்களுக்கு” என்று லேசாக இழுத்தேன். “உங்களுக்கு டீ வாங்கித் தரத்தான் எனக்கு அனுமதி. சங்கச் செலவில் டீ குடிப்பதற்கு எனக்கு அனுமதியில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறியபோது, பள்ளிவகுப்பே முடித்திருந்த, ஒரு தலைவனுக்குரிய தோற்றப்பொலிவு ஏதுமில்லாதிருந்த, சுருக்கம் விழுந்த பாலியஸ்டர் சட்டையை அணிந்திருந்த அந்த எளிமையான மனிதர், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார். அப்பொழுது கிடைத்த ஞானம். “வொக்........ளி. புரிஞ்சிக்கிட்டாயா. இது காமராஜரின் ஆதரவு அல்ல. சொல்லப்போனால் பத்ரகாளியம்மன் ஆசிகூட அல்ல. இவர்களின் சமூக ஒழுக்கம். அந்த ஒழுக்கம் காலப்போக்கில் உருவாக்கிய பரஸ்பர நம்பகத்தன்மை. அதுதான் நாடார் உறவின் முறையின் வலிமை. ஜாதி என்பது ஒரு அடையாளம். அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுகலாறுகள். பொதுவான விதிமுறைகள், உறுப்பினர்களிடையே சமத்துவம், விதிமுறைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றுவது,....நாடார் உறவின் முறையை இன்னும் நன்றாகப் பார். காமராஜர் தான் காரணம் என்று சொல்லித்திரிந்ததாலேதான் பலருடைய கற்றல் நின்றுவிட்டது. அவர்களோடு நீயும் சேர்ந்துவிடாதே”. பொட்டில் அறைந்த மாதிரி பாலமேடு பலவற்றை எனக்குப் புரியவைத்தது.
உலக வங்கியும் சமூக மூலதனமும்.
சமூக மூலதனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்ற உலகவங்கி, தன்னுடைய திட்டங்களிலெல்லாம் மக்கள் அமைப்புகளைக் கட்டி அதை சமூக மூலதனமாக வளர்த்தெடுக்க முனைப்பு காட்டுகின்றது, திட்டச் செலவில் கணிசமான பங்கையும் அதற்கென்று ஒதுக்கீடு செய்கின்றது. சமூக மூலதனம் பற்றி விளக்க வந்த உலகவங்கி, “சமூக செயல்பாடுகளின் பண்பையும்(Quality-தரம்), அளவையும்(Quantity) தீர்மானிக்கும் நிறுவனங்கள்/அமைப்புகள், உறவுமுறைகள்/தொடர்புகள், மற்றும் விதிமுறைகளை சமூக மூலதனம் எனலாம்.. சமூக மூலதனத்தை ஒரு சமூகத்தில் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையை வைத்தல்ல, மாறாக அவைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருக்கும் சக்தியை வைத்தே மதிப்பிடவேண்டும்” என்கிறது. ('Social capital refers to the institutions, relationships, and norms that shape the quality and quantity of a society's social interactions... Social capital is not just the sum of the institutions which underpin a society – it is the glue that holds them together') மனிதர்கள் ஒருவரோடொருவரை, மற்றும் நிறுவனங்களோடு பிணைப்பதில் நம்பிக்கை (Trust) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நம்பிக்கையை உருவாக்க செயல் மற்றும் வாக்குச் சுத்தம் தேவை. அப்படி உருவாகும் நம்பிக்கை பசை (Glue)/ பெவிகால் போன்றது. அதுதான் மனிதர்களைப் பிணைத்து வைக்கும் மந்திரம். சமூக உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை உருவாகும் போது, அது பயனுள்ள காரியங்களைச் செய்ய தூண்டுகோலாயிருக்கும். .
சமூக மூலதனத்திற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். பேஸ்புக், டிவிட்டார் கூட சமூக மூலதனம் தான். ஆனால் எனக்கென்னவோ சமூக மூலதானத்திற்கு நாமெல்லாம் சட்டென்று புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நல்ல முன்னுதாரணமாக நாடார் உறவின்முறை படுகின்றது. பாலமேட்டில் மட்டுமல்ல...இன்னும் பல ஊர்களில் செயல்பட்டுவரும் உறவின்முறைகளைச் சொல்லலாம். தரமான பள்ளிகள், சின்னச் சின்னதாக மருத்துவ மனைகள், ஆங்காங்கே நடைபெறும் ஜீவனோபாய மேம்பாட்டு முயற்சிகள் (பால் பண்ணைகள் போல – தங்குமிட வசதிகள்), அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயன்படும்படியான ஏற்பாடுகள். Bonding/ Bridging/ Linking Social Capital என்று வகைப்படுத்தப்படும் சமூக மூலதனத்தை உறவின்முறை உதாரணம் கொண்டே விளக்கலாம்.
சமூக மூலதனத்தை ஏன் உருவாக்க முடியவில்லை.
நாடார் உறவின் முறை செய்தது மாதிரி ஏன் பிற ஜாதியினரால் பரவலாகச் செய்யமுடியவில்லை?.
குலதெய்வ வழிபாடு இந்துக்களுக்கு முக்கியமான ஒன்று. கடவுளை நம்பாதவர்கள் கூட குலதெய்வ வழிபாட்டை விமர்சிக்க மாட்டார்கள். எனக்கும் ஒரு குலதெய்வம் உண்டு. சமாளிக்க முடியாத சங்கடங்கள் வரும்போது, “ஆத்தா நீதான் கைகொடுக்கவேண்டும்” என்று, பெரும் தெய்வங்களைக்கூட அல்ல, குலதெய்வத்தை நோக்கியே கைதொழும். வெட்டவெளியில், மேற்கூரை இல்லாமல், சூலாயுதத்தையும், ஒரு விளக்குக் கம்பத்தையும் குறியீடாகக் கொண்டதே எங்கள் குலதெய்வம். மகாசிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் எங்கிருந்தெல்லாமோ வந்து நம்பிக்கையுடன் கூடுவார்கள். அமைப்பாளர்கள் என்று யாரும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. காலம் செல்லச்செல்ல, பக்தர்களுக்கு சில வசதிகள் செய்துகொடுக்க சில முக்கியஸ்தர்கள் முடிவெடுத்து சில வசதிகள் செய்தார்கள். பின் காலப்போக்கில் இந்தப்பணிகளில் ஈடுபட்ட சிலர் தங்களை நிர்வாகஸ்தர்களாக காட்டிக்கொண்டார்கள். ஒவ்வொரு வருடமும் சிவராத்திரிக்கு முன் நிர்வாகஸ்தர்கள் ஆண்டறிக்கை அனுப்புவார்கள். அதில் பல லட்சங்களில் வரவு செலவு நடைபெற்றதாக காட்டப்பட்டிருக்கும். இந்த நல்லபணிக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து, ஒரு கணிசமான தொகையை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக்கொண்டோம்.
எங்களின் காணிக்கையை காசோலையாகக் கொடுக்க நினைத்து, அந்த காசோலையை எப்படி எழுதுவது என்று கேட்டபோதுதான், கோவில் பெயரில் வங்கிக் கணக்கு கூட அந்த நிர்வாகிகள் தொடங்காதது தெரியவந்தது. அதில் ஒரு நிர்வாகஸ்தர், “என் பெயரிலே செக் கொடுத்திருங்க’ என்று சொன்னபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பல இலட்சங்களில் ஆண்டு தோறும் காணிக்கைகள் வரும் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வங்கிக் கணக்கு இல்லாதது என்னவோ போலிருந்தது. கோவில் காரியங்களை முன்னின்று செய்யும் அவர்கள் மீது சந்தேகம் கொள்வது கூட தெய்வகுற்றமாகி விடுமென்பதால், நான் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஆனால் அவர்களின் செயல்பாடு, குலதெய்வத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, எனது உறவு முறைகளின் மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது. அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படாதபோது, எந்தவொரு அமைப்பிலிருந்தும் நம்மை அன்னியப்படுத்திக் கொள்ளவே தோன்றும். ஆனால் நாம் விலகி இருப்பது நிர்வாகத்திற்கு நல்லதல்ல. நம்மை அவர்களை நோக்கி கவர்ந்திழுக்க, பல்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். கோவிலுக்கு வங்கிக் கணக்கு தொடங்காமல், கோவிலுக்கென்று இணையதளம் தொடங்கவிருப்பதாக மகாசிவராத்திரியன்று அவர்கள் ஒலிபெருக்கியில் மீண்டும், மீண்டும் சொன்னதுகூட அந்தமாதிரியான உத்திதான். தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தன்முனைப்பான செயல்பாடுகளே அவர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. இதுமாதிரியான தலைமையை நான் கவனித்த அளவு நாடார் உறவின்முறையில் இல்லை.
சமூக மூலதனம் உருவாக கையாளப்படும் உத்திகள்.
சமூக அமைப்புக்களின்/நிறுவனங்களின் மீதான நம்பிக்கை நீர்த்துப் போகும் போது மக்கள் அதிலிருந்து விலகி நிற்கத் தொடங்குகின்றார்கள். மக்கள் பங்கெடுத்தால்தானே அமைப்புகள் உயிர்பெறும். மக்கள் பங்கெடுத்தால்தானே பணம், அதிகாரம், பேரம் பேசும் திறனை அதிகரிக்க முடியும். விலகி நிற்கும் சாதாரண மக்களை அமைப்புகள் நோக்கி இழுக்க, பயத்தையோ, ஜாதி/மத/மொழி வெறியையோ, வாக்குறுதிகளையோ உருவாக்க வேண்டியுள்ளது. இந்த கண்ணோட்டத்தில்தான் இப்போதைய பல அமைப்புகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பஞ்சாயத்து/ஊராட்சி கூட ஒரு சமூக மூலதனம்தான். அதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மக்கள் பங்கெடுக்காமல் அது உயிர் பெறாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் மக்கள் பங்கேற்றால்தான் அது உயிர்பெறும். அந்த பங்கேற்பை பெறுவதற்காக என்னென்ன தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன. வாக்குறுதிகளும், பணமும், ஆரோக்கியமற்ற முறையில் தூண்டப்படும் வேறு சில உணர்வுகளே மக்களை தேர்தலில் பங்கெடுக்க வைக்கின்றது.
மக்களின் நம்பிக்கையை வைத்து இன்றைய ஊராட்சிகள் செயல்படவில்லை. மாறாக அரசு நிதி ஒதுக்கீட்டில்தான் உயிர் வாழ்கின்றது. அரசாங்கத்தின் நிதியுதவி இருக்கும்போது மக்களாவது. மண்ணாங்கட்டியாவது. மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்காமல் தன்னாட்சியை அர்த்தமுள்ளதாக்குவது சற்று சிரமம் தான்.
நம்து தவறான அனுமானங்களே தன்னாட்சிக்கு தடைக்கல்.
மேலிருந்து ஆள்வோர்தான் தன்னாட்சிக்கு தடையாக இருக்கின்றார்கள் என்பது ஓரளவிற்குத்தான் உண்மை. மாறாக, நாம் ஒவ்வொருவரும்தான் நம்மையறியாமலே தன்னாட்சிக்குத் தடையாக இருக்கின்றோம். கீழ்மட்டத்திலிருப்பவர்கள் எல்லாம் மந்த புத்தியுடனும், சுயநலத்துடனும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பதே நம்மில் பெரும்பாலோருடைய அனுமானம். இது ஆரம்பப்பள்ளி ஆசிரியரைப் பற்றிய நம்முடைய கணிப்பில் வெளிப்படுவதைப் பார்க்கலாம். அவர்கள் பொறுப்பற்றவர்கள். பள்ளிக்குத் தாமதமாக வருவார்கள். மேஜையில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு தூங்குவார்கள். இதற்குமேல் நம் எல்லோருக்கும் பரிச்சயமான கதையும் ஒன்றுண்டு. பள்ளிக்கு வந்த ஆய்வாளர் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்ய “ஜனகனின் வில்லை யார் ஒடித்தது? என்று கேட்க, “ஜனகன் என்ற பெயரில் இந்த வகுப்பில், பள்ளியில் யாரும் படிக்கவில்லையென்றும், அப்படி யாரேனும் தவறுதலாக உடைத்திருந்தால் அதற்கான தண்டத் தொகையை மாணவர்களுக்குப் பதிலாக தானே கட்டிவிடுவதாக” அசட்டுத்தனமான பதில் சொல்லும் நபராகவே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் காலமெல்லாம் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றார். அதற்கு மாறாக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கொஞ்சம் புத்திசாலி. அவரைவிட கல்லூரி ஆசிரியர் புத்திசாலி. அவரையும்விட பலகலைக்கழக ஆசிரியர் அதி புத்திசாலி போன்ற அனுமானங்களால் நம் மூளையை நிரப்பி வைத்திருக்கின்றோம். ஒவ்வொரு நிலையிலும் புத்திசாலித்தனமும், அசட்டுத்தனமும் நிறைந்திருந்தாலும், கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அசட்டுத்தனமே பகிரங்கப்படுத்தப்படுகின்றது.
இதே அனுமானம்தான் ஆட்சியாளர்களைப் பற்றியும் நமக்கிருக்கின்றது. ஒரு ஊராட்சி தலைவர் மந்த புத்திக்காரராக, சுயநலக்காரராக, ஜாதி, மதவெறி கொண்டவராக, பெண்பித்தராக, உள்ளூர் வளங்களைப் பற்றி போதுமான அறிவில்லாதவராக சித்தரிக்கப்படுகின்றார். ஆனால் அதற்கு மாறாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை மனமுதிர்ச்சி கொண்டவராகவும், அதற்குமேல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எல்லாம் தெரிந்த ஞானவானாகவும் நாம் உருவகப்படுத்தி வைத்துள்ளோம். நம் நாட்டை, மாநிலத்தை பொறுப்பற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று யாரிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம். அதனால் ஆபத்தில்லை. ஆனால் இந்தியா கிராமங்களில் வாழ்வதால் அதை எப்படி பொறுப்பற்றவர்களிடம் ஒப்படைக்க முடியும்? அதனால்தான் கிராமங்களுக்குத் தன்னாட்சி கொடுக்க தயங்குகின்றோமோ?
நமது நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கடந்த காலத்தில் பஞ்சாயத்து அமைப்புகளை வைத்து பல சாதனைகளைச் செய்துள்ளோம். செய்யத் தவறியுமிருக்கின்றோம். அவைகளின் சாதனைகள்தாம் அவைகளை மீண்டும் உயிர்பிக்க உதவியது. அவைகளின் தவறுகளே அவைகளை இடையில் சிறுதுகாலம் செயல்படவிடாமலும், இப்பொழுது அரசியல் சட்டப்படி அவை நித்தியமாகிவிட்டாலும், அவைகளுக்கு முழுஅதிகாரம் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டையாகவும் நிற்கின்றது.
.தொடக்க காலத்தில், ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை போன்ற பல பணிகள் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகக் கட்டுபாட்டிற்குள்ளேதான் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சில குறைபாடுகளால், அத்துறைகளை பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்து பிரித்தெடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பிரதானிகள் பல தவறுகளை செய்து வந்தாலும், அவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதில்லை. மாறாக அதைச் சுட்டிக்காட்டினாலே அது உரிமைப் பிரச்சனையாகி விடுகின்றது. ஆனால் கிராம பஞ்சாயத்துக்கள், நகரசபைகள் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் அவர்களுடைய அதிகாரத்தைப் பறிக்கலாம். அவர்களைப் பதவிநீக்கம் செய்யலாம்.
நமது கிராமங்களுக்குத் தன்னாட்சியை அதன் உண்மையான அர்த்தத்தில் கிடைக்கச் செய்ய நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள். கிராம தன்னாட்சி சரியான முறையில் நடந்தால், ஆங்காங்கே மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மக்கள் தலைவர்கள் உருவாகிவிடுவார்கள். இந்த மாதிரியான தலைவர்கள், சில மதிப்பீடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருதேர்தலிலும் போட்டியிட விரும்புகின்றவர்கள் இவர்களிடம் வோட்டுபிச்சை கேட்கவேண்டிவரும். அதற்கு மாறாக மதிப்பீடுகளையும், விதிமுறைகளையும் நீர்த்துப் போகச் செய்தால், மக்களை அணுகுவது--பணத்தை வைத்தோ, பொய்யான வாக்குறிதிகளை வைத்தோ அணுகுவது எளிதாக இருக்கும். “முன்னத்தி ஏர் போற சாலை ஒட்டித்தான் பின்னத்தி ஏர் போகும்” என்பது பழமொழி. பாராளுமன்றம், சட்டமன்றம் போலவே நம்து ஊராட்சிகளையும் நாம் வார்த்தெடுத்துவிட்டோம். ஊராட்சிகள் அப்படி இருப்பதுதான் நம்முடைய அரசியல் வாதிகளுக்கு வசதியானது.
இதற்கு மாற்று வழி என்ன?
பஞ்சாயத்துக்கள் செயல்படாமிலிருந்த கடந்த கால்த்தில் ஒரு கிராமத்தில் சில முயற்சிகளை முன்னெடுத்தேன். நமது நாட்டை வழிநடத்த பாராளுமன்றம். மாநிலத்தை வழிநடத்த சட்டமன்றம் போன்று ஏன் கிராமங்களை நிர்வாகிக்க கிராமப் பாராளுமன்றம் கூடாது என்று நினைத்து கிராமப் பாராளுமன்றம் தொடங்க முனைந்தோம். சில பிரச்சனைகள் வந்தது. அதைக்கையாள சில முயற்சிகள்.....அந்த ஊர் மக்களுக்கு பிடிக்காத பாரம்பரியத் தலைமையை செயலற்றதாக்க ஒரு கோவிலைக் கட்டினோம். கோவிலின் குடமுழுக்கை ஒட்டி பிரச்சனை பூதாகரமாகி, சட்ட ஒழுங்குப் பிரச்சனையானது. இதில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த குன்றக்குடி அடிகளார், ”நீங்கள் செய்த முயற்சி பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்திற்காக நீங்கள் காய்களை நகர்த்திய விதம் அறிவு பூர்வமானது. இருந்தாலும் ஆரம்பத்திலே ஒரு தவறைச் செய்துவிட்டீர்கள். நீங்கள் கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கக்கூடாது. பாராளுமன்றம், சட்டமன்றம் என்ற வார்த்தைகளை மக்கள் எப்போதும் அதிகாரத்தோடு தொடர்பு வைத்தே புரிந்து கொள்கின்றார்கள். கிராமப் பாராளுமன்றம் என்ற வார்த்தை அவர்களுக்கு போதை ஏற்றிவீட்டது போலும். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட ஆரம்பிக்க உங்கள் நோக்கம் பாழாகிவிட்டது. பாராளுமன்றம் என்ற வார்த்தைக்குப் பதிலாக கிராம திட்டக்குழு என்ற வார்த்தையை உபயோகித்திருந்தால் அதிகாரப் போட்டி வந்திருக்காது. திட்டமிடுதல் என்ற வார்த்தை எதிர்காலத்தைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கும். அதிகாரத்தை கைப்பற்ற அல்ல மாறாக தங்களுக்கு எது தேவை என்று கற்பனை செய்ய தூண்டப்பட்டிருப்பார்கள்.” என்றார். அதுதான் உண்மை.
ஜனநாயகம்/அதிகாரப் பரவல் என்ற பெயரில், பாராளுமன்றத்திலிருந்தும், சட்டமன்றத்திலிருந்தும் அதிகார போதையை, பொறுப்பின்மையை, சுயநலப் போக்கை நமது ஊராட்சி அமைப்புகளுக்கும் பரவலாக்கிவிட்டோமோ என்று தற்போதைய நிலைமை நம்மை எண்ணவைக்கின்றது.
சமூக மாற்றங்களும் சமூக மூலதனமும்.
அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்று நாம் கண்காணிக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு திட்டமும் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாம் கவலைகொள்வதில்லை. குடிமராமத்து முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த நம் நீராதாரங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தோம். அதனால் நீராதாரம் எப்படி உயர்ந்தது என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் இந்த அதிகார மாற்றத்தால் சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கணக்கிலெடுக்கத் தவறிவிட்டோம். சிறு, குறு விவசாயிகள் என்ற கருத்தாக்கமும் அதையொட்டி வழங்கப்பட்ட அரசு சலுகைகளும் எப்படி மாற்றங்களை ஏற்படுத்தின எனபதை ஒரு கிராமத்தில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். “முன்னெல்லாம் சொத்து பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட பத்திரங்களில் இன்னார் இன்னாரென்று குறிப்பிட்டு விவசாயிகளெல்லாம் சுகஜீவனம் என்றே எழுதுவார்கள். இப்பொழுதெல்லாம் சுகஜீவனத்தை தவிர்த்துவிட்டு இன்ன ஜாதி, விவசாயம் எனறு குறிப்பிடுகின்றார்கள். நிலச்சுவான்தார், நிலக்கிழார் என்ற பிரயோகம் கல்யாணப் பத்திரிகைகளோடு நின்றுவிட்டது. பரிவர்த்தனைப் பத்திரங்களில் அதை மறந்தும் குறிப்பிடுவதில்லை” என்றனர்.
அரசின் கொள்கை வரைவுகள், கட்டமைப்பு வசதிகள் மனித உறவுகளில், அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. “தொழு நிறைய மாடு நின்னுச்சி. வண்டிவண்டியா குப்பை அடிச்சோம்” என்று பெருமை பேசுபவர்கள், இயற்கை உரத்தின் அருமை பேசுபவர்கள், இன்றைக்கு ஏன் அதையெல்லாம் விட்டார்கள்?. ஏன்னா அன்னைக்கு எத்தனை மாடு வச்சிருந்தாலும் குடிகஞ்சிக்கு மாங்கு மாங்கென்று வேலை பார்க்க ஒரு ஏழைக்கூட்டம் இருந்திச்சி. இன்னைக்கு அது மாறிறிச்சி” பசுமைப் புரட்சி நிலத்தையும் நீரையும் பாழ்படுத்திவிட்டது என்று கவலைப்படுபவர்கள், பசுமைப்புரட்சி சமூக உறவுகளில் கொண்டுவந்த மாற்றங்களை மறந்துவிடுகின்றார்கள்”. நாம் கறித்துக்கொட்டும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உருவாக்கிய தாக்கத்தைவிட, பசுமைப் புரட்சி சமூக உறவுகளிலும், சமூக அமைப்புகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
ஒரு டிராக்டர் ஒரு ஊரில் அறிமுகமானால், அங்கே பதினெட்டு விவசாயத் தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பார்கள் என்று ஆரம்பத்தில் என் பட்டப்படிப்பின் போது படித்தேன். பின் அலுவலகங்கள் கணனி மயமான காலகட்டத்தில் எத்துணையோ பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவரங்களைக்காட்டி வாதிட்டோம். இப்பொழுதுகூட அந்நியநேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் எத்தனையோ சிறு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று புள்ளிவிவரங்களின் துணைகொண்டுதானே எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றோம். ஆனால் அதுவெல்லாம் சமூக உறவுகளில், சமூக அமைப்புகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி பிரக்ஞையும் நமக்கில்லை.
மின்சாரம், போக்குவரத்து, சொல்லப்போனால் நமக்குத் தெரிந்து அறிமுகமான வயது வந்தோர் கல்வி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள், தொலைக்காட்சி, மினிபஸ், ஷேர்ஆட்டோ, ரேஷன் அரிசி, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று....ஏன் டாட்டாவின் சின்னயானை கூட சமூக உறவுகளை, சமூக அமைப்புகளை புரட்டிப் போட்டிருக்கின்றது. அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நீர்த்துப் போன சமூக மூலதனத்தை நம்மால் புனரமைக்க முடியாது. முன்னேற்றத்திற்கு துணை புரியும் புதிய சமூகமூலதனங்களை நம்மால் உருவாக்கமுடியாது.
செயல்படாமல் இருக்கின்ற பழைய சமூக மூலதனங்களை செயல்படவைக்கவும், புதிய சமூக மூலதனங்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றது. என்னென்ன மாதிரியெல்லாம் நாம் திட்டமிட்டால் இதைச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

6/16/11

விதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி

People can do it –மக்களால் செய்ய முடியும்
People can be trained to do it –மக்கள் செய்யமுடியுமாறு அவர்களைப் பயிற்றுவிக்க முடியும்
Conditions can be created to do it – அவ்வாறு செய்வதற்கான சூழலை உருவாக்க முடியும்
இதுதான் சமுதாய முன்னேற்றப் பணியின் ஆதார நம்பிக்கை. இந்த நம்பிக்கையினடிப்படையில்தான் முன்னேற்றப் பணியாளர்கள் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இந்த நம்பிக்கையில்தான் ஒரு புதிய பணிக்காக, கிழக்குப் பதிப்பக பத்ரியவர்களை ஒரு பயிற்சியில் ஈடுபடுத்தினோம். பத்ரியவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் காரியங்கள் நடக்காதபோது அவரே “என்ன எதுவும் நடக்கின்ற மாதிரி தெரியவில்லையே” என்று ஆதங்கப்பட வேண்டிய சூழ்நிலை கூட உருவானது. அந்தச் சூழ்நிலையும் மாறியது.

சமீபத்தில், அடுத்து வருகின்ற மூன்றாண்டுகளுக்கு இராமேஷ்வரம் பகுதியில் PAD செய்ய வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பங்கேற்பு பயிலரங்கத்தில் கலந்து கொள்ள வாய்ப்பேற்பட்டது.

வடிவேலு ஒருபடத்தில் “இப்பொழுதெல்லாம் துவைச்சு தொங்கப்போடுவது மட்டுமல்ல: கிளிப்பையும் மாட்டிவிட்டுப் போறாங்களே” என்று புலம்புவது மாதிரி, அரசு நிர்வாகத்தைப் பற்றிய மக்களுடைய கண்ணோட்டம் மாறிவருகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய கடுமையான விமர்சனங்களில், கோபத்தைவிட நியாயமே மேலோங்கியிருக்கின்றது.

ஒரு படத்தில் அலர்ட் ஆறுமுகம் என்ற பாத்திரத்தில் ஹோட்டலுக்குப் போகும் வடிவேலு, சாப்பாட்டில் பூச்சி இருப்பதாக ரகளை செய்யும் நபரை, “ஏண்டா! ஒரு ஆடு செத்துக்கிடக்கு! கோழி செத்துக்கிடக்கு! நண்டு செத்துக்கிடக்கு இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலே! பூச்சி மட்டும் தெரியுதாக்கும்” என்று மொத்தும் அந்தக் காட்சியை உதாரணம் காட்டி, கடலுக்குள் ஆயிரம் போகின்றது. ஆலைக் கழிவுகள், முனிசிபாலிட்டிகளின் பீக் கழிவுகள், ஆயில் கழிவுகள் என்று எத்தனையோ போய் பவளப் பாறைகளைச் சாகடிக்கின்றது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு, மீனவன் தீவுப் பக்கம் போறதுதான் கண்ணுக்குத் தெரிகின்றது. அவனால் தான் பவளப் பாறைகளே அழிவதாக அடித்து விரட்டுகின்றார்கள். வடிவேலு மொத்துன மாதிரி மொத்துனாத்தான் சரிப்பட்டு வருவார்கள். அவர்கள் ஆதங்கத்திலும் ஒரு நையாண்டி.

இந்த அனுபவங்களை எல்லாம் ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில், அந்தப் பொறுப்பை கல்லூரிப் பக்கம் கால்வைக்காத ஒரு பணியாளரிடம் ஒப்படைக்க, அவரிடமிருந்து கைப்பிரதியான அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவரிடமிருந்து மின்னஞ்சலில் வந்த அறிக்கையைப் பார்த்து நானே வியந்து போனேன். கம்ப்யூட்டரில் அந்தப் பணியாளர் உட்கார்திருந்ததைப் பார்த்தரியாத நான் அவரிடம் “இது எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோதுதான், “NHM writer” என்று பத்ரி சார் சொன்னாரே அதை டவுண்லோட் செய்து நானே கணனியில் தட்டச்சு செய்தேன் என்றார். அதற்கு முன் அவர்கள் உபயோகப்படுத்திய தமிழ் மென்பொருள் user friendly ஆக இல்லாததால், ஆங்கிலம் தெரியாத பணியாளர்களை கம்ப்யூட்டர் பக்கம் செல்லவிடாமல் தடுத்திருக்கின்றது. உருப்படியான ஒரு தமிழ் மென்பொருள் எப்படியெல்லாம் ஒரு சாதாரணத் தமிழனுக்கு, விடுதலை உணர்வைத் தரும் என்பது புரிந்த போது, தமிழ் இனக் காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு, எது தமிழை வளர்க்கும், தமிழைக் கொண்டே தமிழருக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது என்று தெரியாமல், தேவையற்ற பிரச்ச்னைகளில் நம் எல்லோருடைய நேரத்தையும், பொருளாதாரங்களையும் வீணடிக்கத் தூண்டுகின்றார்களே என்ற ஆதங்கம் தலைதூக்கியது. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். அதில் சில லட்சங்களைச் செலவழித்திருந்தால், தமிழுக்கான மென்பொருள்கள் சாதாரணத் தமிழனைச் சென்று அடைந்திருக்கும். தமிழிலில் தட்டச்சு செய்ய உதவும், இலவசமான, உபயோகத்திற்கு எளிதான மென்பொருள், ஆங்கிலம் தெரியாத தமிழனுக்கு ஒரு வரப்பிரசாதம். விடுதலையுணர்வு. பத்ரி சார்ந்த நிறுவனம் செய்ததை, இனக் காவலர்களும், கலாச்சாரக் காவலர்களும் செய்திருக்க முடியாதா என்ன?

விழுவாய் தமிழா நெருப்பாய் என்று அறைகூவல் விடுபவர்களின் ஆதங்கம் புரிகின்றது. சில நேரங்களில் நாம் நெருப்பாக விழத்தான் வேண்டும். அதற்கு முன்னாள் நமக்கு விதையாக விழவும் தெரிந்திருக்க வேண்டும்.

பத்ரி சேஷாத்ரி என்னும் தமிழருக்கு விதையாக விழத் தெரிந்திருக்கின்றது. நன்றி

நான் மேல குறிப்பட்ட பணியாளர் (ஜெ.ஜெயராஜ்) தயாரித்த ஆவணம் குறைந்த பட்ச திருத்தங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது. Scribd wePapers