7/29/11

மன்னார் வளைகுடா தந்த ஞானம் - V

கீழமுந்தல், இராமநாதபுர மாவட்டம், மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமம். ஒரு பங்கேற்புப் (Participatory Appraisal) பயிற்சியின் போது அங்கே ஆரம்பக் கல்வியின் வரலாற்றைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் (Focus group) ஈடுபட்டிருந்தோம்.

இன்று 200 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்தாலும், 75 குடும்பங்கள் வாழ்ந்த, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே அரசு அங்கு ஒரு ஆரம்பப் பள்ளியை ஏற்படுத்தி, ஆசிரியர் ஒருவரையும் நியமித்தது. கீழமுந்தல் சாயல்குடியில் இருந்து 15 கிலோமீட்டர், வாலிநோக்கத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சாயல்குடிக்கும் வாலிநோக்கத்திற்கும் சரியான போக்குவரத்து இல்லாதிருந்த போது கீழமுந்தலுக்கு மட்டும் எப்படிப் போக்குவரத்து இருந்திருக்கும்?. அங்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அங்குதான் வீடெடுத்துத் தங்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் எல்லா வீடுகளும் கூரை வீடுகள்தாம். சுவர்கள் கூட மண் சுவர்களல்ல. எல்லாம் தென்னந்தட்டியினால் மறைக்கப்பட்டது. மின்சாரம் கிடையாது. நிலத்தடி நீர் இப்போது போல் அல்லாமல் உபயோகிக்கும் அளவுக்கு இருந்தது பெரிய ஆறுதல்.

கீழமுந்தலலில் தங்கிப் பணியாற்ற எந்த ஆசிரியர் தான் முன்வருவார்?. வரும் ஆசிரியர்களும் ஓரிரு மாதங்களில் யாரையாவது பிடித்து மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். இல்லை வார விடுமுறைகளுக்கு ஊருக்குச் செல்லும்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ச்சியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். அரசு அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருகாலத்தில் இராமநாதபுரம் மாவட்டமே தண்டனைக்குரிய இடமாக இருந்தபோது, கீழமுந்தல் போன்ற இடங்களில் எந்த செலவாக்குமில்லாத அதிகாரி, ஆசிரிய அனாதைகளைத் தான் நியமிப்பார்கள். கீழமுந்தல் அரசுப்பணியை பொறுத்தமட்டில் கழுமரம்.

கீழமுந்தலிலே தங்கி அர்ப்பணிப்போடு பணியாற்றிய சில ஆசிரியர்களை அவர்கள் நன்றியுடன் இப்பொழுதும் நினைவு கூறுகிறார்கள். எல்லா ஆசிரியர்களாலும் அப்படி இருக்க முடியாதே?. தொலைதூர இடங்களிலிருந்து ஆசிரியர்களைப் போட்டால் பிரச்சனைகள் தொடரும் என்பதைப் புரிந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், அருகாமை கிராமங்களில் ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களைப் பணியிலமர்த்த ஆரம்பித்தார்கள். நடந்தோ சைக்கிளிலோ வந்த இந்த ஆசிரியர்களின் பணிக்குப்பின் பள்ளி ஓரளவு தொடர்ச்சியாகச் செயல்பட ஆரம்பித்தது.

போக்குவரத்துவசதி இல்லாததால் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு சாத்தியமில்லை. 10 மணிக்கு பள்ளி திறப்பது. 4 மணிக்கு பள்ளி மூடுவது என்ற வரைமுறை ஏதுமில்லை. அருகாமை கிராமங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்களைத் தொடர்ச்சியாக பணிபுரிய அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அவர்களைப் பழி வாங்கும் நோக்கோடோ, இல்லை வேறு ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கோடோ கீழமுந்தலுக்கு பணி மாறுதல் செய்துவிடுவார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன் வண்டித்தடமாக இருந்த பாதை, பிறகு சாலையாக மாற, சாயல்குடிக்கு சைக்கிளில் சென்று வர முடிந்தது. சில ஆசிரியர்கள், சாயல்குடியில் தங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து சென்றார்கள். சாயல்குடியிலிருந்து சைக்கிளை மிதிக்கவே சக்தியைச் செலவழித்துவிட்டு, கீழமுந்தல் பள்ளிக்கு வந்ததும் தூங்கிவிடுவார்கள். பள்ளிக்கூடம் “ஏதோ” செயல்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

பிறகு பஸ் வசதி வந்தது. தினப்படி மூணு தடவை. சாயல்குடியிலிருந்து வாலிநோக்கத்திற்குச் செல்லும் பேருந்து காலை 10½ மணிக்கு வரும். மதியம் 12½ மணிக்கு வரும். மாலை 3½ மணிக்கு திரும்பும். சாயல்குடியில் தங்கியிருந்த ஆசிரியர்கள் 10½ மணிக்கு வருவார்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வகுப்பெடுக்க 11 மணி ஆகிவிடும்.. மாலை மூன்று மணிக்கு பள்ளியை மூடிவிட்டு 3½ மணி பஸ்சுக்கு கிளம்பிவிடுவார்கள்.

ஆசிரியர்களிடம் முன் தகவல் சொல்லாமல் எந்த மேலதிகாரியும் Inspection க்கு வரமுடியாது என்பது ஆசிரியர்களுக்கு ஆறுதல். ஆசிரியர்களைக் குறை சொல்லமுடியாது. 10½ மணிக்கு முன்னால் அவர்களால் வரமுடியாது. 3½ மணி பஸ்ஸை விட்டால் அவர்களால் போகவும் முடியாது. “அரசாங்கம் பள்ளியைக் கொடுத்தது. ஆசிரியர்களைக் கொடுத்தது. எங்க பிள்ளைகளும் படித்தார்கள். ஆனால் எங்க பிள்ளைகளின் படிப்பென்பது ரெம்பக் காலம் நாங்க கோவணத்த அவிழ்த்த நேரத்தின்படி (ஜெனனம்) தான் அமைந்தது”.

பஸ் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க 9.30 மணிக்கு பஸ். வந்தது. 10 மணிக்குப் பள்ளி திறந்தார்கள். 5 மணிக்கு திரும்பச் செல்ல பஸ். 4 மணிக்கு பள்ளியை சாகவாசகமாக மூடிவிட்டு பஸ் நிறுத்தத்தில் ஆசிரியர்கள் எங்களோடு உட்கார்ந்து கொண்டு ஊர் விஷயங்கள் நாட்டு நடப்புகள் பேசினார்கள். அன்யோன்யம் உருவானது.

பிறகு மின்சாரமும் வந்தது. மின்சாரம் வந்ததால் பிள்ளைகள் இரவு நேரத்தில் படிக்க முடிந்தது. ஊர்க்கடைகளில் பேப்பர், பேனா, பென்சில், இரப்பர், நோட்டுகள் விற்க ஆரம்பித்தார்கள்.

கல்விக்கு ஏதுவான சமூகச் சூழ்நிலைகள் வேண்டும். கட்டிடங்களாலும் ஆசிரியர்களாலும் ஓரளவு கல்வியைத் தரமுடியும். மின்சாரம் கற்பதற்கான காலத்தைக் கூட்டும். போக்குவரத்து வசதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பை விரிவுபடுத்தும். அது சில செளகாரியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இது எதுவுமே இல்லாமல் படிபடி என்று சொல்வதும், து... ஏகலைவன் படிக்கவில்லையா? தெருவிளக்கில் படித்து முன்னேற வில்லையா? மேதையாகவில்லையா? அப்துல் கலாம் படிக்கவில்லையா? என்று முன்னுதாரணம் காட்டுவதெல்லாம் விதண்டாவாதம். எதுவுமிலாமல் படிக்கலாம்தான். முடியாது என்றில்லை. . அதெல்லாம் கீழமுந்தல்காரர் சொன்ன மாதிரி நாள் நேரம், நட்சத்திரம் பார்த்து கோமனத்தை அவிழ்த்திருந்தால் மட்டுமே, பெற்றோர்கள் படுக்கையில் கூடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

அனைவருக்கும் கல்வி என்பது ஒரு ஏதுவான சூழ்நிலையிலேதான் (Enabling Environment) சாத்தியப்படும். கல்வி பற்றி அரசின் சரியான கொள்கை முடிவுகள், அரசு ஆசிரியர்களைக் கையாளும் முறை (பணிமாறுதல் உட்பட), ஆர்வமான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அக்கறை, கட்டமைப்பு வசதிகள் குழந்தைகளுக்கான குறைந்தபட்ச மருத்துவ வசதிகள் எல்லாமும் வேண்டும். எதுவுமில்லாமல் சாதிப்பதென்பது ஒரு குழந்தையின் முன்வினைப்பயனால் மட்டுமே சாத்தியமாகலாம்.

ஒரு குழந்தையின் கற்றலாற்றல் என்பது அவர் பெற்றோர் படுக்கையில் கூடும் நேரத்தைப் பொறுத்து அமைவதில்லை. அது ஒரு Enabling Environment (ஏதுவான சூழ்நிலையினால்) வருவது. என்று கீழமுந்தல்காரர்கள் எங்கள் மூளையில் ஞான விளக்கேற்றினர்கள்

மன்னார் வளைகுடா தந்த ஞானம்- IV

இலங்கைத் தமிழர்கள் பால் எனக்கு உயர்வான எண்ணமே இருந்து வந்திருக்கின்றது. அது எதனாலென்று எனக்கும் புரியவில்லை? இலங்கை வானொலி தனது வர்த்தக ஒலிபரப்பால் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது, அதைக் கேட்டு வளர்ந்ததாலா? கல்லூரியில் படித்த போது இலங்கையிலிருந்து கிடைத்த பேனா நண்பர்களின் நல்ல தமிழ்க் கடிதங்களா? ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டு வந்த பொருட்களை நாம் விரும்பி உபயோகித்ததாலா? பின்னாளில் மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்கள் “இலங்கை மீனவர்கள் உபயோகித்த படகுகள் மற்றும் வலைகள் தரமுள்ளதாக இருக்கும் என்று சொன்னதாலா? மொழியின் பொருட்டும், இனத்தின் பொருட்டும் சொல்லனாத் துயரங்களை தாங்கி நின்ற அவர்களின் நெஞ்சுரத்தினாலா? .
நாம் (இந்தியா) பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற காலகட்டங்களில், இலங்கை தனது உள்நாட்டுப் பிரச்சினைகளால் தேக்கமடைந்தது. உள்நாட்டுப் போரினால் உலுக்கியெடுக்கப்பட்டாலும் கல்வி, சுகாதாரம் போன்ற அளவீடுகளில் நம்மை விட இன்றளவும் சிறப்பாகச் செயல்படுகின்றார்கள். உயர்ந்தே இருக்கின்றார்கள். என்னதான் போரிட்டுக் கொண்டாலும் அந்த தேசத்திற்கென்று ஒரு பொதுப் பண்பு இருக்கின்றது. அதை அவர்கள் தங்கள் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் பாங்கிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். கொழும்பு நகரமும், என் பஸ் பயணத்தின் போது பார்த்த நகரங்களின் சாலைகளும் தூய்மையாக இருக்கின்றது. பேருந்துப் பயணத்தின் போது உணவுக்காக நிறுத்துமிடங்களிலுள்ள உணவகங்களின் பொதுக் கழிப்பிடங்களும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலையில் நம்மவர் நடத்தும் மோட்டல்களைப்போல் பயணிகளைக் கொள்ளையடிப்பதில்லை.
கொழும்பு நகரத்தில் “பெட்ட” என்ற தெருவியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்திற்கும் சென்றிருந்தேன். அங்கேயிருக்கும் இரு சின்ன காய்கறிமார்கெட்டில் ஏறக்குறைய 200 வியாபாரிகள் 4*3 என்ற அளவில் கடை பரப்பியிருந்தார்கள். 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட சுற்றுச்சுவர் இல்லாத தெருவோரச் சந்தை, குப்பை கூளங்களில்லாமல் பளிச்சென்றிருந்தது. பெட்ட முழுமையும் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தாலும் சுத்தமாகக் காட்சியளிக்கின்றது. சுற்றுச் சூழலை நாம் சரியாகப் பராமரிக்க முடியாததற்கு, இன்னும் எத்தனை காலம் மக்கள் தொகைப் பெருக்கததை காரணம் காட்டுவோமோ தெரியவில்லை?.
இலங்கைத் தமிழர்களுக்கு இனவுணர்வு இருக்குமளவு ஒரு தேசியக் குணமும் இருக்கின்றது. அவர்கள் நம்மைவிட எல்லாவகைகளிலும் உயர்ந்திருந்ததால்தான் அவர்கள் நீதியின் பொருட்டு நெடிய இன்னல்களைத் தாங்கிக் கொள்ள முடிந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் உயர்வான சமூக கலாச்சாரப் பின்னனிதான் அவர்களுக்கு உன்னதமான தலைவர்களைக் கொடுத்திருக்கின்றது.
நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஜாதிக் கலவரங்களின் போது தமிழ் நாட்டில் எதையும் இழக்காதவர்கள் எல்லாவற்றையும் இழந்தtது மாதிரி காட்டியதும், எல்லாவற்றையும் இழந்த இலங்கைத் தமிழர்கள் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமலிருப்பதும் இரு வேறுவிதமான பண்பாட்டுத் தளங்கள் இருப்பதைக் காட்டுகிறது. “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு” என்பது நம்மை விட இலங்கைத் தமிழருக்கே பொருந்தும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றி நான் அதிகம் வாசித்தது கிடையாது. அதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தவனும் கிடையாது. எனக்குக் கிடைத்த அனுபவமெல்லாம் மதுரையில் இலங்கைத் தமிழகதிகள் சிலருடன் பேசியதும், இலங்கையில் சில சாதாரண தமிழ்க் குடும்பங்களோடு உரையாடியதிலிருந்தும் புரிய வந்ததுதான்.
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழகதிகளை விட பிற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நாம் காட்டிவரும் சில சலுகைகளை ஒப்பிடும் போது வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அதிகம். ஈழததமிழகதிகளின் முகாமை நாம் எப்படி வைத்திருக்கின்றோமென்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். இலங்கைப் பிரச்சினையை நம்முடைய இனமானக் காவலர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கிவிட்டர்கள்.
மதுரையில் இலங்கைத் தமிழகதிகளுக்காக முதலில் பெரியார் நகர் ஒதுக்கப்பட்டது. பெரியார் நகர் உலகவங்கி உதவியுடன் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை மாற்று இடமாற்றச் சேவை (resettlement project). ஆனால் தோற்பதகென்றே திட்டமிடப்பட்டது போலும். It is a biggest policy failure. வைகை நதிக்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடிசைவாசிகளுக்கென்று கட்டப்பட்ட பெரிய குடியிருப்பு. அதில் யாரும் குடியேற முன்வராததால், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கென்று ஒதுக்கப்பட, தரமற்ற முறையில் கட்டப்பட்ட அந்த வீடுகளும் சிதிலமடைய அவர்களை ஆனையூர் முகாமிற்கு மாற்றினார்கள்.
ஆனையூர் குடியிருப்பு ஹவுசிங் போர்டின் தோல்வியடைந்த திட்டம். இலங்கைத் தமிழர்கள் பங்களாதேஷ்காரர்கள் மாதிரி சட்டவிரோதமான குடியேற்றக்காரர்களல்ல. வறுமையின் நிமித்தமோ, இந்தியாவில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகையின் நிமித்தமோ இங்கு வரவில்லை, வேறு நாடுகளுக்குப் போகமுடியாத அவசரம். வேறு நாடுகளுக்குச் செல்லும்போது அந்தக் கலாச்சாரத்தோடு தங்களால் ஒன்றிட முடியாது என்ற தயக்கம், குடும்பமாக, ஒட்டுமொத்தமாக வெளியேறமுடியாது என்ற நிர்பந்தத்தாலுமே தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழ்மொழி பேசுபவதாலும், தங்கள் தாய்மொழி வாயிலாக அவர்களுக்கு பரிச்சயமான வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று இடங்கள், தலைவர்கள் இங்கே இருப்பதாலும் பெரிய அளவில் கலாச்சார அதிர்ச்சியிலிருந்து தப்பிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்கு நிம்மதியைத் தருகின்றது.
ஆனையூர் அகதிகள் முகாமில் பெரியவர்கள் புலம்புவது மாதிரி, “கற்ற கல்விக்கும், அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிற்கும் எங்கட நாட்டில் தொடர்பிருக்கும், ஒரு பட்டதாரியென்றால், அதற்குரிய திறமையுடனும், பண்புடனுமிருப்பான்., எங்க பிள்ளைகளெல்லாம் இங்கு வந்து படித்து விட்டார்கள். பட்டம் பெற்று விட்டார்கள், ஆனால் எங்களின் உண்மையான பண்பை இழந்துவிட்டார்கள்”.. இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ள விரைவான வழி.. அவர்களின் மரண அறிவித்தல்கள்தாம். அவரவர் வசதிற்கு ஏற்றபடி, ஒருவரின் மரணத்தை அவரின் வம்சாவழி விளக்கத்தோடு குறிப்பேடாக அச்சிட்டுக் கொடுக்கும் அவர்களின் பழக்கம் போற்றத்தக்கது.
இந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழ்ப்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதால்தான், ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுத் துயரம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது. (விடுதலைப் புலிகளை நேசிக்காத இலங்கைத் தமிழர்கள் கூட விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை சிலாகித்தே பேசுகிறார்கள்) இராணுவம் ஒரு பகுதியில் முகாமிட்டிருக்கும்போது சில அத்துமீறல்கள் அரங்கேறும் என்பது உலகெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இந்திய அமைதிப்படை அத்துமீறுவதற்காகவே அனுப்பப்பட்டதுபோன்று தெரிகின்றது. இலங்கைத் தமிழர்களின் ஒழுக்க உணர்வுதான் அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கவேண்டும்.
35 வயதடைந்த, தற்போது கொழும்பில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ்ப்பெண்மணியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. நம்மை பிடிக்காத பகைவர்கள் கூட நம்மிடம் பச்சாதபம் காட்டுவார்கள். ஆனால் அந்தத் தமிழ்ப்பெண், இந்திய அமைதிப்படை வீரர்களால் அவருடைய பெண்ணுறுப்பில் அறுவைச் சிகிச்சை செய்யுமளவிற்கு கூட்டாக துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றார். அதனால் அவரின் குடும்பம் அடைந்த இன்னல்கள்...இப்படி அவர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளது.
இந்திய இராணுவத்தின் உதவியில்லாமல், சிங்கள இராணுவத்தினரால் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியாது என்ற கருத்தை பலர் சொல்ல படித்திருக்கின்றேன். ஆனால் கடைசிப் போரின் போது முல்லைத்தீவு பக்கமிருந்து தப்பித்து வந்த 75 வயது முதியவர் மிகவும் வெகுளியாக “தாடிக்காரன் (சீக்கியர்) செத்துக் கிடந்ததைப் பார்த்தேன். தாடிக்காரனுக்கு அவ்விடம் என்ன வேலை? என்று என்னிடம் கேட்டபோது, நாம் கேள்விப்பட்டவற்றை நம்பத்தான் வேண்டியிருக்கின்றது.
இதற்கெல்லாம் சொல்லப்படும் காரணங்கள் நாம் செய்யாவிட்டால் சீனாக்காரனோ, பாகிஸ்தான்காரனோ செய்திருப்பார்கள் என்பதுதான். அவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே இலங்கை அரசுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதாக நியாயப்படுத்தப்படுகின்றது. இந்த இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழர்களூக்கு உதவி கிடைக்கும் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது புரியவில்லை. இந்தியா என்பதில் நானும் நீங்களும் கூட அடக்கம்தான். ஏனெனில் இலங்கையில் நம்மை அறிமுகப்படுத்தும்போது, “இவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றார்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள்.
இலங்கைத் தமிழர்கள் நம்மைப் (தமிழ்நாட்டை) பல விசயங்களில் சார்ந்திருப்பது உண்மைதான். ஆறுகோடிக்கும் அதிகமான மக்களை, நுகர்வோரைக் கொண்ட பெரும் சந்தையை வைத்துக் கொண்டு நம்மால் பலவற்றை செய்யமுடியும். சினிமா தயாரிப்பு, புத்தகப் பதிப்பு, மதம் மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய பொருளுற்பத்தி முறைகளை நம்மால் செய்யமுடியும். அதை இலங்கைத் தமிழர்கள் அப்படியே உபயோகிப்பதுதான் புத்திசாலித்தனமான பொருளியல் அணுகுமுறை. அதற்காக அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பதாக் கருதினால், அவர்களைவிட நாம் உயர்வானவர்களாக் கருதினால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் ஒரு மாவட்ட ஜனத் தொகையைவிட குறைவான எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரச் செறிவிற்கும் செய்த பணி மகத்தானது. அதுவே அவர்கள் நம்மைவிட ஆற்றலில் உயர்ந்தவர்கள் என்பதற்கான அத்தாட்சி.
இலங்கையின் மீதும், இலங்கைத் தமிழர்களின் மீதும் எனக்கு இயற்கையாக ஏற்பட்ட அபிமானம், என்னுடைய இலங்கைப் பயணத்தால் இன்னும் அதிகரிதிருக்கின்றது. மீண்டும், மீண்டும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பயண ஆர்வத்தால் ஏற்பட்டதல்ல. அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருப்பதாக எனக்குப் படுகின்றது.

7/25/11

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-III

மன்னாரின் தரைப்பாலம்:
மன்னார் தீவையும், இலங்கையின் பிரதான நிலப்பரப்பையும் இணைத்திருக்கும் கடலின் ஊடாக போடப்பட்டிருக்கும் அந்த நீளமான தரைப்பாலத்தில் நின்றிருந்தபோது என்னை ஒரு பரவச உணர்வு ஆட்கொண்டது. பாம்பன் பாலம் ஒரு அதிசயமென்றால், இந்தத் தரைப் பாலமும் அதிசயம்தான். கடலால் பிரிக்கப்பட்ட இரண்டு நிலப்பரப்புகளை மன்னார் தீவு -தரைப்பாலம் இணைக்கும் பணியைத்தான் பாம்பன் பாலமும், மன்னார் பாலமும் செய்கிறது. பாம்பன் பாலம் பார்ப்பவர்களை மிரள வைக்கும். ஆனால் மன்னார் பாலம், “நின்று பாரேன், நடந்து பாரேன், கொஞ்சம் உட்கார்ந்துதான் பாரேன்” என்று நம்மை  நட்புடன் தோழமையுடன் ஆசுவாசப்படுத்துகிறது. ஆழமேயில்லாத அந்தக் கடல்பகுதியைக் கடந்துதான் புராணகாலத்தில்  இராமபிரானும், வானரப்  படைகளும்  இலங்கைக்குள்  நுழைந்திருப்பார்கள். இராமனின் காலடித்தடங்கள் பட்ட இடத்தில், பாண்டிய, சோழர்களின் குதிரைகளின் குளம்படி பட்ட இடத்தில், சமீப காலத்தில் இனப்போரில் தங்கள் இன்னுயிர் நீத்த  எத்தனையோ வீரர்களின்  காலடித் தடங்கள் பட்ட இடத்தில் நிற்பதாக என்னுள் ஒரு உணர்வு.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கும் சேதுபாலம் (Adams Bridge) கடல்பகுதி, புராண காலத்தில் இப்படித்தான் ஆழமற்று இருந்திருக்கவேண்டும். இப்பொழுது கூட பாம்பன் சின்னபாலத்திலிருந்து அலை வற்றிய நேரங்களில் அருகாமைத் தீவிற்கு முழங்கால் தண்ணீரில் நடந்து செல்ல முடிகின்ற மாதிரி, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நடந்தே செல்லும் படிதான் புராணகாலக் கடல் இருந்திருக்கும்.                                         
சில வரலாற்றுப் புரிதல்கள் நமக்கு ஏற்பட வேண்டுமென்றால் சில இடங்களை நாம் பார்த்தே ஆகவேண்டும். அலையடிக்கும் ஆர்ப்பரிக்கும் கடலை விட ஆழமற்ற அமைதியான கடல் உருவாக்கும் தோழமையுணர்வை சொல்ல வார்த்தையில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அதிலும் குறிப்பாக மன்னாரை நுழைவிடமாக்கி வந்தவர்கள் கடல் தந்த தோழமையுணர்வினால் தான் சென்றிருப்பார்கள். அது பாண்டியர் கடலாய் இருந்திருக்கலாம். அது முத்துக்கள் கிடைத்த தென்கடல். சமீபகாலத்து வரை மீன்பிடித்து விட்டு மன்னார் வளைகுடாத் தீவுகளில் மீனவர்கள் ஓய்வெடுத்ததைப் போல, முத்துக் குளித்துவிட்டு மன்னார் தீவில் ஓய்வெடுத்திருப்பார்கள். அவர்கள் அந்நிய பூமிக்குச் செல்வதுமாதிரி கூட உணர்ந்திருக்கமாட்டார்கள். காலநிலை மாற்றங்களால் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காத பட்சத்தில் “சேதுவை மேடுறித்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் கனவு நனவாயிருக்கும்.
இந்தியா இலங்கை என்று இரு நாடுகளாக உருவானபின்னும், இராமேஷ்வரம் மீனவர்களும் மன்னார் மீனவர்களும் சொல்லிய மாதிரி “நினைச்சா இங்கிருந்து அங்கே போவோம் அங்கிருந்து இங்கே வருவாங்க. அருகருகே வலை இறக்கிக் கொண்டிருப்போம். புதுப் படம் ரிலீசானது தெரிந்து எங்க கூடவே வந்து மீனைப் போட்டுட்டு படம் பாத்துட்டுப் போவாங்க நாங்களும் அவங்க கூடப் போய் நாலு டம்ளர் சரக்கை ஊத்திட்டு வருவோம்”. இரு நாடுகளுக்கு மத்தியில் அப்போதும் எல்லைகள் இருக்கத்தான் செய்தன எல்லைகளில் துப்பாக்கிகள் முளைத்தது இப்பொழுதுதானே?
சுதர்ஸிணி
என் மாணவி ஏஞ்சலின் அகல்யா மூலமாக அறிமுகமான மன்னாரைச் சேர்ந்த யோகேஷ்வரி மற்றும் சுதர்சினி கொழும்பு  National Institute of Social Development-ல் BSW  படிக்கும் மாணவிகள் நான் சமூகப் பணி பேராசிரியர் என்பதால் அவர்களுக்கும் என்னிடம் சட்டென்று ஒரு ஓட்டுதல் ஏற்பட்டது.
சுதர்சினியிடம் மன்னாருக்குச் செல்ல வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னபோது, “மன்னார் சுற்றுலாத்தலம் இல்லையே!, அங்கே செல்ல வேண்டுமென்கிற உங்கள் விருப்பம் வித்தியாசமாக இருக்கின்றதே” என்று ஆச்சரியப்பட்டார். “உலகின் உயிர்ச் செறிவு மிக்க மன்னார் வளைகுடாப் பகுதியில் PAD  நிறுவனம் பணியாற்றுகின்றது. ஒரு வளமையான கடலுக்கு பெயர் தந்த மண்ணைப் பார்க்க வேண்டும். அந்தக் காற்றை சுவாசிக்க வேண்டும்” என்று நான் சொன்ன போது, “அதற்கு ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்? இந்த வார இறுதியில் மன்னாருக்குச் செல்கிறேன். அங்கிருந்து மண் எடுத்து வருகின்றேன். ஆசை தீரப் பாருங்கள். இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லுங்கள்” என்றே கிண்டலடித்தார்.
“கொழும்பிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரம். ஏறக்குறைய  9 மணிநேரப் பயணம், இரவுப்பயணம் என்றால் கூடப் பரவாயில்லை. பகல் நேரத்தில்தான் பயணம் செய்ய வேண்டுமென்கின்றீர்கள். பஸ்ஸை நிறுத்தி ஆட்களை ஏற்றுவார்கள். பயணநேரம் கூடலாம்” என்று பயமுறுத்தியும் கூட நான் பிடிவதமாகப் போய் வரலாம் என்று சொன்ன போது, மன்னாரை வாழ்விடமாகக் கொண்ட அவருக்கு என்மீது மேலும் அபிமானமும், மரியாதையும் ஏற்பட்டது.
சுதர்ஷினி ஐந்துமாதக் குழந்தையாக இருந்தபோது, தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழ்ந்த முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து, எல்லாவற்றையும் போட்டுவிட்டு, இரவோடிரவாக இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள் ஏறக்குறைய 15 வருடம் தமிழ்நாட்டில் அகதி வாழ்க்கை. மீண்டும் UNHCR (United Nations High Commission for Refugees)  உதவியுடன் மன்னார் திரும்பி இழந்த வாழ்க்கையை எடுத்துக்கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இலங்கைப் பிரச்னை சுதர்ஷினி குடும்பத்தைப் போல மன்னார் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக நிற்க வைத்திருக்கின்றது.. அவர்களின் பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் இன்று இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்.
அருடதந்தை தந்தை இராயப்பா, சுதர்சிணி குடும்பம் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் இழந்ததைப் பற்றிய புலம்பல் ஏதுமில்லை. நான் மன்னாரில் சந்தித்த தமிழக் குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்தபின்பும் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மன்னார் பேசாலையில் நான் சந்தித்த பள்ளி முதல்வர் “எல்லாவற்றையும் போட்டுவிட்டு இரவோடிரவாக படகேறி உயிர் தப்பிய போது, கல்வியைத் தவிர, கல்வி தந்த ஆற்றலைத் தவிர வேறெதையும் எடுத்துச் செல்ல முடியாது என்று புரிந்தபோது, மீண்டும் திரும்பிய பின், எங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்” என்று அவர் அமைதியாகச் சொன்னபோது நான் கலங்கிவிட்டேன். இலங்கை இனப் பிரச்சனை தமிழர்கள் மத்தியில் புது உத்வேகத்தை உருவாகியிருக்கின்றது. அவர்களின் உத்வேகம் உலகை வசப்படுத்தும்.
இலங்கையில் நடப்பதற்கு மாறாகத் தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வந்தது. தென்மாவட்டங்களில் நடந்த ஜாதிக் கலவரங்களை விசாரிக்க நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட, அந்தக் கமிசனின் வேண்டுகோளின்படி, கலவரத்தின் போது ஒரு குறிப்பிட்ட குடியிருப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மதுரை சமூகப் பணிக் கல்லூரியை வேண்டிக்கொள்ள, அதற்காக அந்தக் குடியிருப்பிற்கு நான் செல்ல நேர்ந்தது. இழப்புக்களை மிகைப்படுத்தி ஒருசாரார் சொல்ல, அவர் களைச் .சேர்ந்த இன்னொரு சாராரோ, “என்னங்கட டன் கணக்கில் தங்கம் பறிபோனதாயும், மந்தைமந்தையாய் ஆடுமாடுகள் தீக்கீரையானதாயும் சொன்னால் எப்படி? கேட்பவர்கள் நம்பும்படி சொல்லுங்கள்” என்று கடிந்து கொண்டனர். இதற்கு மாறாக இலங்கைத் தமிழரின் மனோபாவம் இருந்தது.
அருட் தந்தை இராயப்பா   
தங்களுடைய வீட்டில் என்னை வசதியாகத் தங்க வைக்க முடியாது என்று கருதிய சுதர்ஷினி குடும்பத்தார், என்னை அருட்தந்தை ராயப்பாவுடன் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். கத்தோலிக்க திருச்சபை சுனாமியாலும், போரினாலும் அனாதைகளாக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளை அரவணைத்து, அவர்கள் கல்வி கற்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து தர மன்னாரில் “தூய வளனார் இல்லம்” என்ற விடுதி நடத்தி வருகின்றது. சமூகப் பணித் துறையிலிருந்தாலும் ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க அங்கிருந்த அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதியைப் போல்  தமிழ்நாட்டில்கூட நான் பார்த்ததில்லை. மெத்தையுடன் கூடிய தனித்தனி கட்டில், தனித்தனி மேஜைகள், அலமாரிகள் என்று இங்கே நடுத்தரக் குடும்பங்கள் கூட செய்துகொடுக்க முடியாத வசதிகள்.  நான் அங்கு தங்கியிருந்த ஞாயிற்றுக் கிழமையில், எனக்குக் கிடத்த நேரத்தில் மாணவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும், அவர்களின் பாடப்புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் பார்க்க வாய்ப்பேற்பட்டது. அங்கே தமிழ்க் குழந்தைகள் முழுக்க முழுக்கத் தமிழில் படிக்கிறார்கள். பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்ட நேர்த்தி, முக்கியமானவற்றை வண்ணக்கட்டங்களில் எடுத்துக்காட்டும். அழகு ஏற்க்குறைய ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் தரத்திற்கு ஒப்ப இருந்தது. நான் மாதிரிக்குப் பார்த்த நோட்டுப் புத்தகங்களில் மாணவர்களின் கையெழுத்து அழகாக இருந்தது. மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறிக்கும் பாடசாலை மட்ட தேர்ச்சிக் குறிப்பேடுகள (Monitoring Card), மாணவர்களின் முன்னேற்ற்த்தை அறிந்து கொள்ளும்படி விரிவாக இருந்தது.
இலங்கையில் பள்ளிக்கல்வி:
இலங்கையிலுள்ள பள்ளிக்கல்வியின் தரத்தை எட்ட இந்தியாவிற்கும், தழ்நாட்டிற்கும் இன்னும் பல காலம் ஆகலாம். இலங்கையில் 90 சதவீத மாணவர்களுக்கு சமச்சீர் கல்விதான்.  தரமான பள்ளிக்கல்விதான் இலங்கையின் வலிமை. தமிழ் சிங்களம் பிரதான போதனா மொழி. பிரச்சனைக்குப் பிறகு இப்பொழுது மும்மொழி (தாய் மொழி, ஆங்கிலம், சிங்கள / தமிழ்) நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ் மாணவர்கள் சிங்களத்தை உள்வாங்குமளவு, சிங்கள மாணவர்களால் தமிழை உள்வாங்க முடியாத நிலை. தமிழும் சிங்களமும் மட்டுமல்ல உல்கெங்கும் வியாபித்து, உலக மொழிகள் பல தெரிந்த ஒரு தமிழ் தலைமுறை இலங்கையில் உருவாகி வருகின்றது. இலங்கைத் தமிழன் கட்டாயமாக ஜெயிப்பான்.
இலங்கைத் தமிழர்களின் வலிமையே அவர்களுக்குக் கிடைக்கும் தரமான தாய்மொழிக் கல்விதான். அங்கே மொழிஎன்பது பிழைக்கும் உத்தியல்ல. அது கற்றலுக்கான கருவி, பெரும்பாலான இலங்கைத் தமிழ் மாணவர்களால் தாங்கள் நினைத்தை தமிழில் பிழையின்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும்  முடியும். இங்கே தமிழில் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு முதுகலை படிக்கும் பெரும்பாலான மாணவர்களால் கூட தமிழில் பிழையின்றி எழுத முடியாது. இதை நான் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. என்னுடைய ஆசிரியப் பணியின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
நம்மிடையே Centers of Excellence இருக்கின்றன. சர்வதேசத் தரமுடைய பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அதில் படிப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. ஆனால் இலங்கையில் அனைவருக்கும் சத்தியமானது நம்முடைய சராசரித் தரத்தைவிட  பன்மடங்கு உயர்ந்ததாக இருக்கின்றது.
அருட்தந்தை ராயப்பாவின் அன்பும் கரிசனமும் என்னை நெகிழவைத்தது. தமிழ்நாட்டில் அருளனந்தர் கல்லூரியில் படித்ததால் அவருக்கு நிறைய நண்பர்கள் தமிழ்நாட்டில்  இருக்கின்றார்கள். இனப்போரின் போது ஒரு நள்ளிரவில் சிங்கள இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக் குள்ளாகியிருக்கிறார். “அங்கி அணிந்த என்னையே ஆர்மீக்காரன் அந்த அடி அடிச்சான்ன, எங்க பிள்ளைகளையெல்லாம் எப்படி அடிச்சிருப்பான். எம் பிள்ளைகளெல்லாம் எப்படித்தான் தாங்கிக் கொண்டார்களோ” என்று அவர் சொன்னபோது எனக்குச் சுரீர் என்றது. பிறகு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் முறையிட்டதன் பேரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் என்றால் இந்துக்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் உள்ளடங்குகிறார்கள். முஸ்லீம்கள் தமிழ் பேசினாலும் முஸ்லீம் அடையாளத்துடனே வாழ்கின்றார்கள்.
கிறிஸ்தவ மதம் தமிழ் இனப்பிரச்சனையில் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களை அரவணைத்துக் கொண்டுள்ளது. என்னுடைய மாணவர்களில் ஒருவரான அருட்சகோதரர் சவரிமுத்து, இத்தாலியில் அகதிகளாக வாழும் தமிழரிடையே பணியாற்றுவதற்காக இத்தாலிக்கு அனுப்பபட்டிருக்கின்றார். எங்கெங்கே இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு உதவவும், தமிழில் திருப்பலி கொடுக்கவும் முறையான ஏற்பாடுகளை அனைத்து திருச்சபைகளும் செய்து வைத்திருக்கின்றது. சிங்களவர்களிலுள்ள கிறிஸ்தவர்கள், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து குரலெலுப்பி வருகின்றார்கள். பெளத்தக் குருமார்கள் தான் சிங்களப்பேரின  வாதத்தைத் தூண்டுகின்றார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.. ஆனால் இலங்கையில் பெரும்பாலான பேருந்துகளில் புத்தர் உருவப்படத்தோடு இந்துக் கடவுளர்களின் உருவப்படங்களையும் காணலாம். சில பேருந்துகளில் இந்துக் கடவுளர்களின் பெரிய உருவப் படங்களைக்கூட காணமுடிகின்றது. இந்துக் கோயில்களுகு சிங்களர்களின் வருகை அதிகரித்த வண்ணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அருட்தந்தை ராயப்பாவுடன் இருந்த பொழுது ஆரம்ப பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒரு(கிறிஸ்தவர்) ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே ஆசிரியர்கள் பணியில் சேரும் போது இலங்கை ரூபாயில் 12-15 ஆயிரம் வரை வாங்குகிறார்கள். ஆனால் கொத்தனாருக்கு தினச் சம்பளம் ரூபாய் 1200. குறைந்த சம்பளத்தில் எப்படி திருப்தியாகப் பணியாற்றமுடிகிறது என்று கேட்ட போது, “ஆசிரியப் பணி புனிதமான பணி என்பதாக நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம்” என்று கூற, “கிறிஸ்தவப் பின்னனியில் இருந்து வருவதால் இப்படிச் சொல்கிறார்களா? இல்லை எல்லா மதத்தினரும் இப்படித்தான் நினைப்பார்களா? என்று கேட்டதற்கு, “இங்கே இந்து நல்ல இந்துவாகவும், முஸ்லீம் நல்ல முஸ்லீமாகவும் பெள்த்தர் நல்ல பெளத்தராகவும் தான் வளர்க்கப்படுகின்றோம்” என்றார். ந்ம்மை மாதிரி ஜாதி, மத துவேஷங்க்ளூக்குப் பழக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மத துவேஷமில்லாமல், இனத்துவேஷத்திற்கு ஆட்பட்ட இலங்கைப் பிரச்சனையை சட்டென்று புரிய முடியவில்லை.
நான் மன்னார் பகுதிக்கு விரும்பி வந்ததையறிந்ததும் மன்னாரின் மூலைமுடுக்கெல்லாம் காண்பிப்பதில் அருட்தந்தை ஆர்வம் காட்டினார். மன்னாரிலுள்ள பெருக்குமரம், 450 கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையின் பொருட்டு சங்கிலி அரசனால் கொல்லப்பட்ட தேவசாட்சி என்ற இடம், இலங்கையின் மிகப்பெரிய பேசாலை சர்ச், தலைமன்னார் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
450 வருடங்களுக்கு முன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது மாதிரி, பேசாலை சர்ச்சில் மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது சிங்கள இராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இன்று அந்த சர்ச்சை இலங்கையின் மிகப்பெரிய சர்ச்சாகக் கட்டி பதில் சொல்லிவிட்டார்கள்.
பேசாலை சர்ச்:
பேசாலை சர்ச்சின் அலுவலக மாடியில் பேசிக்கொண்டிருந்த போது, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதை பற்றி பேசியபோது பல உண்மைகள் புரிய வந்தது. “தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். அவர்களின் மீன்பிடி முறைகளும் உபயோகிக்கும் வலைகளும் ஆட்சேபத்திற்குரியது’ என்றனர். இராமநாதபுரம் கடல்பகுதியில்  மூன்று கடல் (வாரத்திற்கு மூன்று நாட்கள் இயந்திரப் படகுகள் மீன் பிடிக்க அனுமதி) அமலில் உள்ளதைப் போன்று இலங்கைக் கடல்பகுதியிலும் தமிழக மீனவர்களுக்காக மூன்று கடலை அரசாணை ஏதுமில்லாமல் இலங்கை அரசு அமல்படுத்துகிறது. நாளை(திங்கள்) இரவு வந்து பாருங்கள், கடலுக்குள் ஒரு நகரமே இருப்பதுபோல், தமிழ் நாட்டுப் படகுகள் இங்கே மீன் பிடிப்பதை” என்று அவர்கள் சொன்னபோது என்னால் மெளனமாகத்தான் இருக்க முடிந்தது.
தமிழக மீனவர்கள்:
தமிழ் நாட்டுக் கடல் பகுதியில் மீன்வளம் குன்றி வருவதால் இலங்கைக் கடல் பகுதிக்கு நாம் மீனவர்கள் செல்கின்றார்கள் என்பதே உண்மை. உயிர்ச் செறிவுமிக்க மன்னார் கடல் பகுதியில் மீன்வளம் குன்றுவதற்கான பல காரணங்களில், வளைகுடாப் பகுதியிலுள்ள தரவைகளை நாம் சரியாகப் பராமரிக்காததும் ஒரு காரணம். மன்னார் தீவில் தரவைகள் பாழாக்கப்படவில்லை. கடலையொட்டிய தரவைகளுக்கும், (Coastal Wetlands), அதாவது ஈர நிலங்களுக்கும், கடலின் உயிர்ச்செறிவிற்கும் சம்பந்தமுண்டு. மன்னார் தீவில் தரவைகளில் திரியும் கணக்கற்ற கழுதைகளே, அங்கு தரவைகள் அதன் தன்மை மாறாமல் இருப்பதைக் காட்டுகின்றது. தமிழ் நாட்டுக் கடலில் மீன்வளம் குன்றிவருவது நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால். இதை விட்டுவிட்டு இனஉணர்வைத் தூண்டினால் மீன் வளம் பெருகிவிடுமா என்ன? தமிழ்நாட்டுக் கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக தேவையான அறிவியல் மற்றும் நிர்வாக ரீதியான முயற்சிகளை அரசு எடுத்துச் செய்ய நாம் வற்புறுத்த வேண்டும்.
பேசாலையிலிருந்து தலைமன்னாருக்குச் சென்றோம். தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து இருந்த காலத்தில் கட்டப்பட்ட சிறு துறைமுகத்தை பியரடி என்கிறார்கள்; அந்தப் பியரடி இன்று இலங்கைக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பியரடியிலிருந்து Adams bridge ஐ  பார்ப்பதற்கு, படகில் உல்லாசப்பயண ஏற்பாடுகளும் இருக்கின்றது.
தனுஷ்கோடியும் தலைமன்னாரும்:
இயற்கைச் சீற்றங்களாலும் உள்நாட்டுப் போரினாலும் எப்படி பழமை வாய்ந்த குடியிருப்புகள் நலிவடைகின்றன என்பதற்கு தனுஷ்கோடியும் தலைமன்னாரும் நல்ல உதாரணங்கள்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து கொழும்புக்கு இரயிலில் பயுணச்சீட்டு வாங்கிக் கொண்டு தனுஷ்கோடி வரை இரயிலிலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குக் கப்பலிலும் பின் அங்கிருந்து கொழும்புவிற்கு மீண்டும் இரயிலிலும் பயணம செய்ய முடிந்தது. அந்தக் காலத்தில் வாங்கப்பட்ட இரயில் பயணச்சீட்டை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தார்கள்.
இப்பொழுது மாதிரியான நிலை இருக்கும் பட்சத்தில் தனுஷ்கோடி புயலைக் காரணம் காட்டி மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கமுடியாது. இன்றும் கூட தனுஷ்கோடியில் மீனவர் குடியிருப்பு அடிப்படை வசதிக்ள் இல்லாமல் அல்லோல்படுகின்றது. தனுஷ்கோடியைப் போன்று முற்றிலும் அப்புறப்படுத்தபடாவிட்டாலும் போரினால் மன்னாருக்கும் தலைமன்னாருக்கும் வந்து கொண்டிருந்த இரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் தன்னுடைய பழைய பொழிவை மீட்டெடுக்க இன்னும் சிறிது காலமாகும்.
அருட் தந்தை இராயப்பாவுடன் தேவதோட்டம் என்ற இடத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களில் 450 பேருக்கும் அதிகமானோர் சங்கிலி அரசனால் கொல்லப்பட்டது பழைய வரலாற்றுச் செய்தி. அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட அடித்தளம் தோண்டிய போது குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் தென்பட்டு, அந்த எலும்புகளின் காலத்தைக் கணிக்க ஆய்விற்கு அனுப்ப, அந்த இடமே இப்பொழுது கிறிஸ்தவர்கள் அதிகம் வந்து பிரார்த்திவிட்டுச் செல்லும் புனிதத் தலமாகிவிட்டது.
அந்தக் கட்டிட வேலையை சுதர்ஷ்னியின் தகப்பனார் ஒப்பந்த அடிப்படையில் செய்வதால், கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக உயிர்துறந்தவர்களின் எலும்புகளைப் புனிதமாகப் பாதுகாப்பது தெரிந்தது.
நாம் இன்னும்  பண்பட வேண்டும்:
மன்னார் அழகிய, மிக அமைதியான சிறு நகரம். ஞாயிற்றுக்கிழமையென்றால் ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி தெருக்களில் மக்கள் நடமாடடமில்லாமல் அமைதியாகி விடுகின்றது.
இலங்கையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். ஞாயிறு இரவு, சுதர்ஷினியின் வீட்டிலிருந்து புனித வளனார் இல்லம் செல்ல புறப்பட்டபோது, இரவு பதினொரு மணி. எனக்கும் பகலில் செய்த மாதிரி, ஒரு ஹெல்மெட் (தலைக்கவசம்) கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். இந்த நேரத்தில் கூடவா? என்று கேட்ட போது நம்முடைய நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்று சொன்னபோது சட்டத்தை மதிக்கும் அவர்களுடைய மனோபாவம் என்னை வியக்க செய்தது.
இனத்தால், மொழியால் நாம் இருவரும் ஒருவரே என்று இலங்கைத் தமிழரின் தோளில் நாம் கைபோடவேண்டுமென்றால் நாம் இன்னும் கொஞ்சம் பண்பட வேண்டும் போல் எனக்குப் பட்டது.(தொடரும்)

7/20/11

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-II

சமீபத்தில் இலங்கை சென்று வர வாய்ப்பேற்பட்டது. அந்த அனுபவங்களை மன்னார் (வளைகுடா) தந்த ஞானம் என்ற என்னுடைய முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதுகின்றேன். இந்தப் பயணமே நாங்கள் (PAD நிறுவனம்) மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுவதால் கிடைத்த வாய்ப்பு.

இலங்கைக்கு நான் ஏற்கனவே (2002) ஒருமுறை IMM என்ற நிறுவனத்தின் அழைப்பிற்கிணங்க சென்றிருக்கிறேன். பவளப்பாறைகளை மையப்படுத்திய பிழைப்பு முறைகளைப் பற்றிய ஆவணம் தயாரிக்கும் பணியில் என்னைச் சேர்த்து மேலும் இருவராக மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டிருந்தோம். நான் தங்கியிருந்த ஹோட்டலும், பணியாற்றிய இடமும் குடித்தனங்கள் இல்லாத அதிகபாதுகாப்புடைய நிறுவனப்பகுதிகள். பணியின் நிமித்தமாக வெளியில் செல்லவோ, யாருடனும் பேசவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்ற சூழ்நிலைதான் இந்தியாவில். ஆனால் இலங்கையிலோ தமிழைவத்துக்கொண்டு தடுமாறாமல் நடமாடமுடியும் என்ற நம்பிக்கை அந்த நான்கு நாட்களில் எனக்குள் ஏற்பட்டுவிட்டிருந்தது. இலங்கையிலிருந்து நான் திரும்புகிற பொழுது மீண்டும், மீண்டும் நான் இலங்கைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே விமானம் ஏறினேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பு நான் முயற்சி செய்யாமலே சமீபத்தில் ஏற்பட்டது. பெங்களுரை பணியிடமாகக் கொண்ட PAC நிறுவனமும், நான் சார்ந்த PAD நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் Environmental Governance – Citizen Report Card என்ற திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையை இலங்கையின் CEPA என்ற நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்க PAC நிறுவனத்தாருடன், PAD நிறுவனப் பிரதிநிதியாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கு கருத்தரங்கில் கலந்து கொள்வதை விட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அங்கு காலாற நடந்து அந்த மண்ணின் மணத்தையும், காற்றையும் சுவாசித்து வரவேண்டும் என்ற ஆவல். யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி சீட்டு வாங்க என்னுடைய மாணவி ஏஞ்சலின் அகல்யா ரெம்பவும் மெனக்கெட்டார். இலங்கை சென்று சேர்ந்த அடுத்த அரைமணி நேரத்திலே, ஏஞ்சலின் தோழிகள் இருவர் வந்து என்னை பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களோ, நான் இலங்கையில் இருந்து திரும்ப திட்டமிட்ட அதேநாளில் தான் அனுமதி கிடைக்கும் என்றனர். யாழ்ப்பாணத்திற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அனுமதி தேவைப்படாத மட்டக்களப்புக்கு வரச்சொல்லி ஏஞ்சலின் ஆலோசனை கூறினாலும். நான் மன்னார் பகுதிக்குச் சென்றுவரலாம் என்று விரும்பினேன். இன்னும் எட்டு நாட்கள் இருக்கிறது அதற்குள் எது சாத்தியமோ அது நடக்கட்டும் என்று அமைதியானேன்.

அடுத்த நாள் கருத்தரங்கு நடந்த Cylon Continental Hotel லுக்குச் சென்ற போது எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பெண்கள் அதிக அளவு பங்கேற்ற அந்த கருத்த்தரங்க நிகழ்ச்சியில், அந்தப் பெண்களெல்லாம் இலங்கையில் மேட்டுக்குடியினராக இருந்தாலும், பாசாங்குத்தனம் இல்லாத ஒரு தோழமையுணர்வு அவர்களிடம் தென்பட்டது. கருத்தரங்க ஆய்வறிக்கை ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும் சிங்களம் மற்றும் தமிழிலும் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்கள். கருத்தரங்கின் நோக்கங்களாக CEPA Executive Directer Priyanthi Fernando வினால் தரப்பட்ட அறிக்கையின் தமிழக்கத்தில் Executive Directer என்ற ஆங்கில வார்த்தைக்கு நிறைவேற்றுப் பணியாளர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்த பாணியே இலங்கைத்தமிழரின் மொழிவளத்தையும் பண்பாட்டையும் காட்டியது. Executive Directer என்றால் இங்கு நிர்வாக இயக்குனர் / செயல் இயக்குனர் என்றே மொழி பெயர்க்கிறோம். CEPA ஒரு தொண்டு நிறுவனம். நிர்வாக இயக்குனர் என்ற மொழியாக்கத்தில் இல்லாத பணிவு, தொண்டுள்ளம், நிறைவேற்றுப் பணியாளர் என்ற மொழிபெயர்ப்பில் இருந்ததாக எனக்குப் பட்டது.

கருத்தரங்கின் இருக்கைகளே வித்தியாசமாக அமைந்திருந்தது. ஐந்து பேர் உட்காரும்படியான வட்டமேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஹெட்போன்கள் போடப்பட்டிருந்தன. இந்தியாவில் கூட அதைவிட ஆடம்பரமான, அதிக நபர்கள் கலந்து கொண்ட, அறிவுபூர்வமாக நடந்த ஓரிரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தாலும் அக்கருத்தரங்குகளில் தோழமையுணர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கின் ஆரம்பத்திலே, கருத்தரங்குப் பகிர்தலை சிங்களத்திலோ, தமிழிலோ கேட்க விரும்புகின்றவர்கள் ஹெட்போன்களை உபயோகிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆசிய அளவிலான அக்கருத்தரங்கில் ஆங்கிலம் தெரியாதவர் எவரும் இருக்கமுடியாதுதான். இருப்பினும் மொழிபெயர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Inaugural Session முடிந்த பிறகு ஆர்வமிகுதியால் எப்படி கருத்தரங்கு
ப் பகிர்தல் தமிழாக்கம் செய்யப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஹெட்போனை காதில் மாட்டிக்கொள்ள்ள, அந்த மொழிபெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு ஒரு பெருமித உணர்வால் மனம் நெகிழ்ந்து போனேன்.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள்தாம். தமிழ், சிங்கள மொழியாக்கம் அவர்களுக்குத் தேவைப்படாததுதான். அது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கட்டாயத்தின் பேரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம். மாறாக அது தொண்டு நிறுவன நிகழ்ச்சி, தமிழும் சிங்களமும் அங்கே சம மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்த உணர்வு என்னை
த் தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்கச் செய்தது பத்தாண்டுகளுக்கு முன்னர் SIDA என்ற நிறுவனம் இந்தியாவில் நிதியுதவிதரும் நிறுவனங்களுக்காக அனுபவப் பகிர்தலை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் Carlton ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பிராந்தியங்களிலிருந்து கலந்துகொண்டவர்கள் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மொழிபெயர்ப்புக்கென்று பிரத்தியோகமாக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை என்றாலும் சில பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு போல் அல்லாமல் கருத்துச் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜேந்திர சிங் (பின்னாளில் மக்சாசே பரிசு வாங்கியவர்) ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டாலும், உரையாட முடியாததால் ஹிந்தியிலே பேச, நான் வீம்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு கேட்டேன். அவர் பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிய கருத்தை மொழிபெயர்ப்பாளர் இரண்டு நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்ல, நான் விரிவான மொழிபெயர்ப்பு தேவை என வீம்பு பிடித்தேன். தேநீர் இடைவேளையின் போது என்னைச் சந்தித்த மொழி பெயர்ப்பாளர், ராஜேந்திர சிங்கின் பணிகள் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு முக்கியமானது அல்லவென்றும், சில சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும் அவர் எதோ அதிசயத்தைச் செய்தது மாதிரி அவரை முன்னிறுத்துகின்றார்கள் என்று என்னுடைய வாயை அடைக்க முற்பட்டார், ஆனால் இராஜேந்திர சிங் அவர்களோ அவருடைய பணியைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கருதி, அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அவரது செயல்பாடுகள் பற்றிய ஆங்கில அறிக்கைகளைக் கொடுத்தார். அவருடைய நிறுவனத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏளனத்துடன் பார்க்கப்படும் அளவிற்கு இந்தியாவில் ஆங்கிலம் ஒரு வல்லாதிக்க மொழியாகி விட்டது. தமிழ் மட்டுமல்ல ஏன் அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத்தின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையோ இரண்டு கோடிப் பேர். அதில் தமிழ் வம்சாவழியினர் என்று குறிப்பிடப்படுவது 7.5% சதவீதம். தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் கணக்கில் எடுத்தால் இன்னும் கூடும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழ் பேசுவோர் 20-25 லட்சத்திற்குள் தான் இருப்பார்கள். ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியத் தமிழர்கள் சாதிக்காததை, குறைந்த எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள் சாதித்திருக்கின்றார்கள். தமிழ் மொழி பற்றியும் தாய்மொழிப் பற்று பற்றியும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம் இருப்பதாக எனக்கு படுகிறது.

அந்தக் கருத்தரங்கில் மொழி பெயர்ப்பாளர்களாக செயல்ப்பட்ட இரண்டு தமிழர்களைச் சந்தித்தேன். மன்னார் பகுதியை சேர்ந்த திரு.பிகிரி (Fiqrhi) அவர்கள், நான் மன்னார் பகுதிக்குச் செல்ல விரும்புவதையும் அதன் காரணத்தையும் அறிந்து கொண்ட பிறகு என்னுடன் இன்னும் தோழமையானார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இருக்கும் அவரின் தமிழ் ஆங்கிலப் புலமை மெச்சத்தக்கது. தரமான தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவராக இருக்கிறார். பரந்த வாசிப்புப் பழக்கமும் மும்மொழிப் பாண்டித்தியமும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) கொண்ட அவரின் பணிவு வியக்கத்தக்கதாயிருந்தது. ஒரு அமர்வு நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த அமர்வை மொழி பெயர்க்கவில்லையா எனக் கேட்டபோது, யாரும் ஹெட்போனை உபயோகிக்க வில்லை, யாராவது ஒருவர் உபயோகித்தால் கூட சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்க ஆரம்பித்து விடுவோம் என்று கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. யாராவது விளையாட்டுக்கு ஹெட்போனை வைத்திருந்தால் கூட அவர்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழினம் காத்ததாக சொல்லப்படும் குடும்பத்தில் தோன்றி, ஆங்கிலம் தெரியாமல் ஏளனத்திற்கு உள்ளாகும் நிலையில் அமைச்சர் அழகிரி இருக்கும் போது, சாதாரணத் தமிழனின் நிலையை நாம் எப்படி எடுத்து கொள்வது?. இனக்காவலர்களும், மொழிக்காவலர்களும் நிறைந்த தமிழகத்தில் நடக்காத நடக்கவியலாத அதிசயங்களை இலங்கையில் தமிழர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தமட்டில் இலங்கைத் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர்தான். அவர்கள் நம்மை போல தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்தாம். அங்கு பேசப்படும், எழுதப்படும், கற்றுத்தரப்படும் தமிழுக்கும், தமிழ்நாட்டுத் தமிழுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகப்படுகிறது, "அம்மா சமையல் என்றால் சும்மாவா" என்ற விளம்பரம் மாதிரி, இலங்கைத் தமிழில் உணர்வும், உயிரும் கலந்திருப்பதாகப் பட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது தமிழ்நாட்டிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் போரிட்டோ, சமாதானமாகியோ “தமிழ்” அடையாளத்தை இலங்கைத் தமிழர் கடைசிவரை தக்க வைத்துக் கொள்வார்கள்.

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க, தொல்லை வினைதரு இலங்கைத் தமிழரின் தொல்லையகல உணர்வுபூர்வமாகப் பிரார்த்திப்போம். (தொடரும்)