7/20/11

மன்னார் (வளைகுடா) தந்த ஞானம்-II

சமீபத்தில் இலங்கை சென்று வர வாய்ப்பேற்பட்டது. அந்த அனுபவங்களை மன்னார் (வளைகுடா) தந்த ஞானம் என்ற என்னுடைய முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதுகின்றேன். இந்தப் பயணமே நாங்கள் (PAD நிறுவனம்) மன்னார் வளைகுடாப் பகுதியில் பணியாற்றுவதால் கிடைத்த வாய்ப்பு.

இலங்கைக்கு நான் ஏற்கனவே (2002) ஒருமுறை IMM என்ற நிறுவனத்தின் அழைப்பிற்கிணங்க சென்றிருக்கிறேன். பவளப்பாறைகளை மையப்படுத்திய பிழைப்பு முறைகளைப் பற்றிய ஆவணம் தயாரிக்கும் பணியில் என்னைச் சேர்த்து மேலும் இருவராக மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டிருந்தோம். நான் தங்கியிருந்த ஹோட்டலும், பணியாற்றிய இடமும் குடித்தனங்கள் இல்லாத அதிகபாதுகாப்புடைய நிறுவனப்பகுதிகள். பணியின் நிமித்தமாக வெளியில் செல்லவோ, யாருடனும் பேசவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்ற சூழ்நிலைதான் இந்தியாவில். ஆனால் இலங்கையிலோ தமிழைவத்துக்கொண்டு தடுமாறாமல் நடமாடமுடியும் என்ற நம்பிக்கை அந்த நான்கு நாட்களில் எனக்குள் ஏற்பட்டுவிட்டிருந்தது. இலங்கையிலிருந்து நான் திரும்புகிற பொழுது மீண்டும், மீண்டும் நான் இலங்கைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே விமானம் ஏறினேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.

மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பு நான் முயற்சி செய்யாமலே சமீபத்தில் ஏற்பட்டது. பெங்களுரை பணியிடமாகக் கொண்ட PAC நிறுவனமும், நான் சார்ந்த PAD நிறுவனமும் இணைந்து செயற்படுத்தும் Environmental Governance – Citizen Report Card என்ற திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையை இலங்கையின் CEPA என்ற நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்க PAC நிறுவனத்தாருடன், PAD நிறுவனப் பிரதிநிதியாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கு கருத்தரங்கில் கலந்து கொள்வதை விட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அங்கு காலாற நடந்து அந்த மண்ணின் மணத்தையும், காற்றையும் சுவாசித்து வரவேண்டும் என்ற ஆவல். யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி சீட்டு வாங்க என்னுடைய மாணவி ஏஞ்சலின் அகல்யா ரெம்பவும் மெனக்கெட்டார். இலங்கை சென்று சேர்ந்த அடுத்த அரைமணி நேரத்திலே, ஏஞ்சலின் தோழிகள் இருவர் வந்து என்னை பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களோ, நான் இலங்கையில் இருந்து திரும்ப திட்டமிட்ட அதேநாளில் தான் அனுமதி கிடைக்கும் என்றனர். யாழ்ப்பாணத்திற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் அனுமதி தேவைப்படாத மட்டக்களப்புக்கு வரச்சொல்லி ஏஞ்சலின் ஆலோசனை கூறினாலும். நான் மன்னார் பகுதிக்குச் சென்றுவரலாம் என்று விரும்பினேன். இன்னும் எட்டு நாட்கள் இருக்கிறது அதற்குள் எது சாத்தியமோ அது நடக்கட்டும் என்று அமைதியானேன்.

அடுத்த நாள் கருத்தரங்கு நடந்த Cylon Continental Hotel லுக்குச் சென்ற போது எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பெண்கள் அதிக அளவு பங்கேற்ற அந்த கருத்த்தரங்க நிகழ்ச்சியில், அந்தப் பெண்களெல்லாம் இலங்கையில் மேட்டுக்குடியினராக இருந்தாலும், பாசாங்குத்தனம் இல்லாத ஒரு தோழமையுணர்வு அவர்களிடம் தென்பட்டது. கருத்தரங்க ஆய்வறிக்கை ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும் சிங்களம் மற்றும் தமிழிலும் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்கள். கருத்தரங்கின் நோக்கங்களாக CEPA Executive Directer Priyanthi Fernando வினால் தரப்பட்ட அறிக்கையின் தமிழக்கத்தில் Executive Directer என்ற ஆங்கில வார்த்தைக்கு நிறைவேற்றுப் பணியாளர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருந்த பாணியே இலங்கைத்தமிழரின் மொழிவளத்தையும் பண்பாட்டையும் காட்டியது. Executive Directer என்றால் இங்கு நிர்வாக இயக்குனர் / செயல் இயக்குனர் என்றே மொழி பெயர்க்கிறோம். CEPA ஒரு தொண்டு நிறுவனம். நிர்வாக இயக்குனர் என்ற மொழியாக்கத்தில் இல்லாத பணிவு, தொண்டுள்ளம், நிறைவேற்றுப் பணியாளர் என்ற மொழிபெயர்ப்பில் இருந்ததாக எனக்குப் பட்டது.

கருத்தரங்கின் இருக்கைகளே வித்தியாசமாக அமைந்திருந்தது. ஐந்து பேர் உட்காரும்படியான வட்டமேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஹெட்போன்கள் போடப்பட்டிருந்தன. இந்தியாவில் கூட அதைவிட ஆடம்பரமான, அதிக நபர்கள் கலந்து கொண்ட, அறிவுபூர்வமாக நடந்த ஓரிரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டிருந்தாலும் அக்கருத்தரங்குகளில் தோழமையுணர்வு பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தில் நடைபெற்ற அக்கருத்தரங்கின் ஆரம்பத்திலே, கருத்தரங்குப் பகிர்தலை சிங்களத்திலோ, தமிழிலோ கேட்க விரும்புகின்றவர்கள் ஹெட்போன்களை உபயோகிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார்கள். ஆசிய அளவிலான அக்கருத்தரங்கில் ஆங்கிலம் தெரியாதவர் எவரும் இருக்கமுடியாதுதான். இருப்பினும் மொழிபெயர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Inaugural Session முடிந்த பிறகு ஆர்வமிகுதியால் எப்படி கருத்தரங்கு
ப் பகிர்தல் தமிழாக்கம் செய்யப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஹெட்போனை காதில் மாட்டிக்கொள்ள்ள, அந்த மொழிபெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு ஒரு பெருமித உணர்வால் மனம் நெகிழ்ந்து போனேன்.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள்தாம். தமிழ், சிங்கள மொழியாக்கம் அவர்களுக்குத் தேவைப்படாததுதான். அது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கட்டாயத்தின் பேரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம். மாறாக அது தொண்டு நிறுவன நிகழ்ச்சி, தமிழும் சிங்களமும் அங்கே சம மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்த உணர்வு என்னை
த் தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்கச் செய்தது பத்தாண்டுகளுக்கு முன்னர் SIDA என்ற நிறுவனம் இந்தியாவில் நிதியுதவிதரும் நிறுவனங்களுக்காக அனுபவப் பகிர்தலை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் Carlton ஹோட்டலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பிராந்தியங்களிலிருந்து கலந்துகொண்டவர்கள் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மொழிபெயர்ப்புக்கென்று பிரத்தியோகமாக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை என்றாலும் சில பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு போல் அல்லாமல் கருத்துச் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ராஜேந்திர சிங் (பின்னாளில் மக்சாசே பரிசு வாங்கியவர்) ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டாலும், உரையாட முடியாததால் ஹிந்தியிலே பேச, நான் வீம்புக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு கேட்டேன். அவர் பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிய கருத்தை மொழிபெயர்ப்பாளர் இரண்டு நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்ல, நான் விரிவான மொழிபெயர்ப்பு தேவை என வீம்பு பிடித்தேன். தேநீர் இடைவேளையின் போது என்னைச் சந்தித்த மொழி பெயர்ப்பாளர், ராஜேந்திர சிங்கின் பணிகள் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு முக்கியமானது அல்லவென்றும், சில சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும் அவர் எதோ அதிசயத்தைச் செய்தது மாதிரி அவரை முன்னிறுத்துகின்றார்கள் என்று என்னுடைய வாயை அடைக்க முற்பட்டார், ஆனால் இராஜேந்திர சிங் அவர்களோ அவருடைய பணியைப் புரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கருதி, அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அவரது செயல்பாடுகள் பற்றிய ஆங்கில அறிக்கைகளைக் கொடுத்தார். அவருடைய நிறுவனத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏளனத்துடன் பார்க்கப்படும் அளவிற்கு இந்தியாவில் ஆங்கிலம் ஒரு வல்லாதிக்க மொழியாகி விட்டது. தமிழ் மட்டுமல்ல ஏன் அனைத்து இந்திய மொழிகளும் ஆங்கிலத்தின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையோ இரண்டு கோடிப் பேர். அதில் தமிழ் வம்சாவழியினர் என்று குறிப்பிடப்படுவது 7.5% சதவீதம். தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் கணக்கில் எடுத்தால் இன்னும் கூடும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழ் பேசுவோர் 20-25 லட்சத்திற்குள் தான் இருப்பார்கள். ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியத் தமிழர்கள் சாதிக்காததை, குறைந்த எண்ணிக்கையுள்ள இலங்கைத் தமிழர்கள் சாதித்திருக்கின்றார்கள். தமிழ் மொழி பற்றியும் தாய்மொழிப் பற்று பற்றியும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம் இருப்பதாக எனக்கு படுகிறது.

அந்தக் கருத்தரங்கில் மொழி பெயர்ப்பாளர்களாக செயல்ப்பட்ட இரண்டு தமிழர்களைச் சந்தித்தேன். மன்னார் பகுதியை சேர்ந்த திரு.பிகிரி (Fiqrhi) அவர்கள், நான் மன்னார் பகுதிக்குச் செல்ல விரும்புவதையும் அதன் காரணத்தையும் அறிந்து கொண்ட பிறகு என்னுடன் இன்னும் தோழமையானார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இருக்கும் அவரின் தமிழ் ஆங்கிலப் புலமை மெச்சத்தக்கது. தரமான தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவராக இருக்கிறார். பரந்த வாசிப்புப் பழக்கமும் மும்மொழிப் பாண்டித்தியமும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) கொண்ட அவரின் பணிவு வியக்கத்தக்கதாயிருந்தது. ஒரு அமர்வு நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, இந்த அமர்வை மொழி பெயர்க்கவில்லையா எனக் கேட்டபோது, யாரும் ஹெட்போனை உபயோகிக்க வில்லை, யாராவது ஒருவர் உபயோகித்தால் கூட சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்க ஆரம்பித்து விடுவோம் என்று கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. யாராவது விளையாட்டுக்கு ஹெட்போனை வைத்திருந்தால் கூட அவர்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழினம் காத்ததாக சொல்லப்படும் குடும்பத்தில் தோன்றி, ஆங்கிலம் தெரியாமல் ஏளனத்திற்கு உள்ளாகும் நிலையில் அமைச்சர் அழகிரி இருக்கும் போது, சாதாரணத் தமிழனின் நிலையை நாம் எப்படி எடுத்து கொள்வது?. இனக்காவலர்களும், மொழிக்காவலர்களும் நிறைந்த தமிழகத்தில் நடக்காத நடக்கவியலாத அதிசயங்களை இலங்கையில் தமிழர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தமட்டில் இலங்கைத் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர்தான். அவர்கள் நம்மை போல தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள்தாம். அங்கு பேசப்படும், எழுதப்படும், கற்றுத்தரப்படும் தமிழுக்கும், தமிழ்நாட்டுத் தமிழுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகப்படுகிறது, "அம்மா சமையல் என்றால் சும்மாவா" என்ற விளம்பரம் மாதிரி, இலங்கைத் தமிழில் உணர்வும், உயிரும் கலந்திருப்பதாகப் பட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது தமிழ்நாட்டிற்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் போரிட்டோ, சமாதானமாகியோ “தமிழ்” அடையாளத்தை இலங்கைத் தமிழர் கடைசிவரை தக்க வைத்துக் கொள்வார்கள்.

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க, தொல்லை வினைதரு இலங்கைத் தமிழரின் தொல்லையகல உணர்வுபூர்வமாகப் பிரார்த்திப்போம். (தொடரும்)

No comments: