11/23/19

தலைமுறைகள் தழைத்தது.....

1
1974 ஆம் வருடம்.
1973 ஆம் ஆண்டு BSc Zoo முடித்த நான், அந்த ஆண்டே முதுகலையில் சேர முடியாமைக்கும், 1974 ஆம் ஆண்டு மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இடம் பெற்றமைக்கும் பின்னே ஒரு கதை உண்டு. அது இங்கே தேவையில்லை.
இயக்குனர்
தா.வெ.பெ.இராஜா 
சமூகப்பணிக் கல்லூரியில் இடம் கிடைப்பது அப்போது மிகமிகக் கடினமாகையால், நானும், அக்கல்லூரி இயக்குனர் (கேப்டன்) த.வெ.பெ.ராஜா அவர்களுக்குத் தெரிந்த பெரியவரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று, இயக்குனர்  அவர்களைச் சந்தித்தேன். அக்கடிதத்தைப் படித்துக்கொண்டே, "600 பேருக்கு மேல் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் என்றாலும், என்னால் எதுவும் செய்ய முடியாது. தேர்வுக்குழு இருக்கின்றது. நேர்முகத் தேர்வில் உங்கள் performance பொறுத்தே  சீட் கிடைக்கும். இப்போது எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. ஆகட்டும் பார்க்கலாம்” என்று என் முகத்தைப் பார்க்காமலே சொல்லிவிட்டு, கடிதத்தை என்னிடமே திருப்பிக்கொடுக்க முயல, நான் தயங்கி நின்றதைப் பார்த்து, என்னைத் தவிர்க்க வேண்டி, மீண்டும் கடிதத்தை வாங்கிக் கொண்டு, “அவரிடமே (சிபாரிசு கடிதம் கொடுத்தவரிடமே) பேசிக்கொள்கிறேன்” என்று சொல்லியனுப்பிவிட்டார். இதை சிபாரிசுக் கடிதம் கொடுத்தவரிடம் போய்ச் சொல்ல “சரி! அவர் பேசினால் நான் சொல்லுகிறேன்” என்று அவரும் விட்டேத்தியாகச் சொல்லியனுப்பிவிட்டார். அவர் பேசினாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களை நேர்முகத்தேர்விற்கு அழைக்கும் வழக்கப்படி நானும் அழைக்கப்பட்டேன்.
முதுகலை சேர்க்கைக்கான நேர்முகத்தேர்வு எப்படியிருக்கும்?, அதை எப்படி எதிர்கொள்வது? என்பதில் அதற்கு முந்தைய ஆண்டு புட்டத்தில் மிதிபட்டு வெளித்தள்ளப்பட்ட அனுபவம் இருந்ததால் ரெம்பவே மிரண்டிருந்தேன். மேலும் படிக்க விரும்பும் பேரனின் விருப்பம் நிறைவேற, குல தெய்வத்திற்கு ஒருரூபாயைக் காணிக்கையாக முடிந்து, கோவில் குங்குமத்தை என் நெற்றியில் பூசி, என் பாட்டி என்னை ஆசீர்வதித்து அனுப்பியிருந்தார்.
அந்தக்காலத்தில், மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் நேர்முகத்தேர்வு ஏழு, எட்டு நாட்கள் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த மாணவர்கள், அவர்களின் உடன் வந்திருந்த பெற்றோர்கள் சிலரின் தோற்றத்தைப் பார்த்து நான் மிரண்டிருந்தாலும், என்னைப்போன்றும், இவர்களைவிட நாம் பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றிய சிலரைப் பார்த்தும் சற்று ஆசுவாசமடைந்தேன்.  (அந்த நாளில் நேர்முகத் தேர்விற்விற்கு வந்திருந்தவர்களில் என்னைப்போன்றும், இவர்களைவிட நாம் பரவாயில்லை என்று நான் நினைத்த ஓரிருவர்தாம் தேர்வு பெற்றோம் என்பது வேறுகதை).
தமிழவேள் P.T.இராஜனார்
நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்தபோது, அந்தத் தேர்வுக்குழுவில் பெரியவர் PT இராஜனாரும் இருக்கிறார் என்பது மற்றவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தெரியவந்தது. அவர்தான் கல்லூரியின் தலைவராம்.(அப்படீன்ன??) அவருடைய மகன்,  PTR பழனிவேல்ராஜன் அவர்கள் அப்போது எங்கள் (தேனி) தொகுதியின் MLA. MLA  அவர்களின் தந்தையார்தான் அக்கல்லூரியின் தலைவரென்பது முதலிலே தெரிந்திருந்தால் யாரையாவது பிடித்து MLA வை அணுகி, அவரிடமும் சிபாரிசுக் கடிதம் பெற்றிருக்கலாம். (MLA விடம் கூட்டிச் செல்லுமளவு எனக்கு யாரும் இல்லை என்பது வேறு விஷயம்). இப்பொழுது காலம் கடந்து விட்டது.
என் முறை வந்து, நான் பதட்டத்துடன் உள்ளே சென்றேன். உட்காரச் சொன்னார்கள். அப்படித்தானே சென்ற ஆண்டும் உட்காரச் சொல்லித்தானே உதைத்தார்கள் என்ற நினைப்பு பயத்தை கொடுக்க நின்றுகொண்டே இருந்தேன். பிறகு இயக்குனர் உட்காரச் சொல்லி சைகையிட உட்கார்ந்தேன். இயக்குனர் த.வெ.பெ ராஜா அவர்கள், “இந்தப் பையன்  தேனியிலிருந்து வந்திருக்கிறார்” என்று PT இராஜன் (அவரை நேரில் பார்த்ததில்லையென்றாலும் போட்டோவில் பார்த்திருந்தேன்) அவர்களிடம் எடுத்துக்கொடுக்க,  அவர் என்னை ஊற்று நோக்கினார். என்னுடைய விண்ணப்பப் படிவத்தை வாங்கிப் பார்த்தார். அவர் பெரிய மனிதர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.  பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். போன்ற விவரங்கள் தவிர, அவரின் பேராளுமை பற்றி வேறெதுவும் எனக்கு அப்போது தெரியாது.
என்னைப் பார்த்து "எந்த ஊர்" என்று தமிழில் இயல்பாகக் கேட்க, "கோபாலபுரம், ஆனால்  கோனாம்பட்டி" என்று பேச்சு வழக்கு என்று தாடை நடுங்காமல் சொல்லிவிட்டேன்.
“எங்கே இருக்கிறது” என்று அவரே தொடர, "தேனிக்கு முன் இருக்கிற ரயில்வே கேட்டிலிருந்து தெற்கில் போகணும்".
“அப்பா அம்மா என்ன செய்றாங்க” என்று கேட்க, “விவசாயம்” என்று பதில்சொல்ல, “எத்தனை குழி” என்று பெரியவர் தொடர, “15 குழி, 3 குழி அம்மச்சியாபுரம் பரவுலே வயக்காடு” என்று சொல்ல, “என்ன விவசாயம்” என்று மேலும் அவர் தொடர, “நெல், மிளகாய், பருத்தி, தக்காளி, கடலை” என்று சொன்னேன். குழி, அம்மச்சியாபுரம் பரவு என்பது தேனி வட்டார வழக்கு.அந்த வழக்கிற்காக நான் சொல்லவில்லை. வேறு விதமாக எனக்கு சொல்லத் தெரிந்திருக்கவில்லை.
“போன வருசமே முடிச்சிருக்கீங்க..இந்த ஒரு வருஷம் என்ன செஞ்சீங்க” என்று கேட்க,  “விவசாயம் தான். வரலட்சுமி காட்டன் போட்டிருந்தோம்” என்றேன்.
“ஏன் இங்கே சேர நினைக்கிறீங்க? என்று கேட்டதற்கு “இங்க படிச்சா வேலை கிடைக்கும்” என்று சொன்னார்கள் என்றேன்.
மீண்டும் ஒரு முறை என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார். தான் கேட்கவேண்டிய கேள்விகளைக்  கேட்டுவிட்டதாகவும், மற்றவர்கள் கேட்கலாம் என்பதுபோல தேர்வுக்குழுவினரைப் பார்த்தார். யாரும் எதுவும் கேட்கவில்லை. “உனக்கான நேர்முகம் முடிந்துவிட்டது. போகலாம்” என்பதுபோல இயக்குனர் பார்வையால் சொல்ல, நான் வெளியேறினேன். அது நேர்முகத் தேர்வு போன்று இல்லாமல், ஒரு வாஞ்சை மிக்க பெரியவரிடம் பேசிவீட்டு வந்தது போல்  இருந்தது.40 வருடங்கள் கழித்து பதட்டமில்லாமல் எழுத முடிகிறது. ஆனால் அன்றோ...பல எண்ணங்கள்...என் முகத்தைப் பார்த்தே, இவனிடம் ஒத்த வரி ஆங்கிலத்தில் பேசினாலும் இங்கு மூச்சா போய்விடுவான் என்று நினைத்துதான் தமிழில் கேட்டிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன்.
நேர்முகத்திற்கு உள்ளே சென்ற மாணவர்களில் பலர் நீண்ட நேரம் கழித்தே அந்த அறையிலிருந்து வந்ததைப் பார்த்திருந்த எனக்கு, போன வேகத்திலே வெளித்தள்ளப்பட்ட என்னை, அங்கு காத்திருந்த மாணவர்கள் ஏளனமாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன். வெளியே வரும் மாணவர்களைச் சூழ்ந்து கொண்டு “உள்ளே என்ன கேட்டார்கள்” என்று கேட்க யாரும் என்னைச் சூழ்ந்துகொள்ளவில்லை. நான் அவர்களைப் பொறுத்தவரை பொருட்படுத்தத் தக்கவனல்ல என்பதை அது உணர்த்தியது மாதிரி பட்டது.
எனக்குத் தெரிந்தவர்களில் யாரும் அங்கில்லையாதலாலும், மதுரை எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாததாலும், எங்கள் ஊருக்குச் செல்லும் கடைசி டவுன் பஸ்சைப் பிடிக்க அங்கிருந்து சட்டென்று வெளியேறினேன். இன்டர்வியூ எப்படி இருந்தது? என்ன கேட்டாங்க? சீட் கிடைக்குமா? என்று கேட்குமளவு எங்கள் வீட்டில் விவரம் இல்லை. அதற்கு முந்தைய வருடம் SSLC பெயிலாகி மேற்கொண்டு படிக்க விரும்பாத என் தம்பி, தன்னுடைய 17 வது வயதிலே விவசாயப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தான். பட்டதாரிகளுக்கென்று பால் வளத்துறை அப்போது அறிவித்திருந்த Mini Diary மானியத் திட்டத்தில், வீட்டிலிருந்த எழெட்டு எருமைகளோடு மேலும் பத்து எருமைகளை வைத்துப் பண்ணை வைக்கலாம் என்ற யோசனை எனக்கும், என் தம்பிக்கும் இருந்தது. ஆகையால் சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்பது பற்றிப் பெரிதாகக் கவலைப்படத் தோன்றவில்லை.
ஆனால் பதினைந்து நாள் கழித்து, நான் தேர்வு செய்யப்பட்டதாகவும், கடிதத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்திச் சேரவேண்டுமென்றும், தவறினால் தேர்வு செய்யப்பட்டது காலாவதியாகிவிடுமென்ற தேதி குறிப்பிட்டு ஆங்கிலத்தில் கடிதம் வந்தது.
கல்லூரி இயக்குனரைத் தெரிந்திருந்த பெரியவர் எனக்காக உண்மையிலே சிபாரிசு செய்ததால் கிடைத்ததா? என் பாட்டியின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த குல தெய்வ அருளா? நான் BSc யில் பெற்ற மதிப்பெண்களா? எது என்னைத் தகுதியானவனாக ஆக்கியிருக்கும்? நிச்சயமாக என்னுடைய நேர்முகத் தேர்வு, நான் தேர்வு செய்யப்படக் காரணமாக இருந்திருக்க முடியாது என்று நானே நினைத்தேன். 300 ரூபாய்தான் மொத்தக்கட்டணமே. அதைபுரட்டிக் கொண்டுபோக நான்கு நாள் ஆனது. ஐந்தாவது நாள்தான் செல்லமுடிந்தது.
கல்லூரி அலுவலக வாசலில் கூட்டமாக இருந்தது. தயங்கியபடியே நின்றிருந்தேன். என்னை விட வயது குறைவான, குள்ளமான, பள்ளி மாணவர் போல தோற்றமளித்த ஒருவர், என்னைப்பார்த்து நட்புடன் சிரித்து, “தேனி.... ரெங்கசாமி....அப்பா பேரு சீனிவாசன்...ஊரு கோபாலபுரம்” என்று cross check செய்யும் பாவனையில் கேட்க, நான் வேகவேகமாகத் தலையாட்டி ஆமோதித்தேன். ஏன் இவ்வளவு லேட்?. எல்லோரும் பணத்தை கட்டிவிட்டார்கள்.. நீங்கதான் கடைசி என்று சொல்லிக்கொண்டே பணத்தைக் கட்டுங்கள் என்று சொன்னார். அவர் பெயர் நாராயணசாமி என்று பின்னர் அறிந்தேன். அப்போது கல்லூரியில், அலுவலகத்தில் எல்லாமே அவர்தான்.. கல்லூரியில் சேர்ந்து அவரின் நண்பனான பிறகு, என்னுடைய பெயரை இயக்குனரும், பெரியவரும் (PT இராஜன் அவர்கள்) டிக் செய்திருந்ததை அவர் மூலமாகப் பின்னர் அறிந்தேன். பெரியவர் (PT இராஜன்) சென்னை மாகாண முதல்வராயிருந்திருந்தாலும், அவருக்குத் தான் பிறந்த  மண்ணின் மீது, அதன் மக்கள் மீது, தனிப்பரிவு இருந்ததாகவும், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் இருந்தால், தேனி பக்கமிருந்து வரும் மாணவர்களில் ஒன்றிரண்டு பேரை பரிந்துரைப்பாராம். இதைப்புரிந்து கொண்டுதான் கல்லூரி இயக்குனர்  என்னை இவர் தேனியிலிருந்து வருகிறார் என்று எடுத்துக்கொடுத்திருப்பார் என்று நான் தேர்வு பெற்ற ரகசியத்தைச் சொன்னார்
என்னங்கட இது....முதுகலை சேர்க்கைக்காக ஊர் பேரும், என்ன செய்கிறீர்கள்? என்று மட்டும் கேட்டார்களாம். சீட் கிடைத்ததாம்.. NEET, JEE, CAT, GMAT போன்றும், அதுபோன்ற பல நுழைவுத் தேர்வுகளுக்கு இயல்பாகப் பழகிவிட்ட இன்றைய தலைமுறை மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி, 40 வருடங்களுக்கு முன் நடந்த இந்தத் தேர்வு முறை பற்றி ஏளனமாகத்தான் நினைப்பார்கள். அப்பொழுது யாரும் ஏளனமாகப் பார்க்கவில்லை...1:20 என்ற அளவில் போட்டியிருந்தாலும், அங்கே சேருவதற்கு நிர்வாகம் கேட்கும் நன்கொடை (capitation) கொடுக்கப் பலர் தயாராயிருந்தாலும், வாடகைக் கட்டடத்தில் அக்கல்லூரி செயல்பட்டாலும், நன்கொடை வாங்காதிருப்பதை அந்தக் கல்லூரி நிர்வாகம் தர்மமாகக் கொண்டிருந்ததால், மாணவர் சேர்க்கை முறையைப் பற்றி எவராலும் விமர்சிக்க முடியவில்லை.
ஆனால் மதுரை சமூகப்பணிக்கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக வேறு விழுமியங்கள் இருந்தது மட்டுமல்ல, அது உயர் விழுமியங்களாகவும் இருந்ததைப் போகப்போகப் புரிந்துகொண்டேன். சமூக நீதி, தன்னிடம் படிக்கவரும் மாணவர்களை, குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து வரும் முதல் தலைமுறை மாணவர்களை, எவ்வகையிலும் அச்சுறுத்தலாகாது என்ற கவனம்.... அந்தந்தக் கல்வித் தகுதிக்குரிய ஆங்கிலப் புலமையை அவர்கள் அங்கீகரித்தாலும், அங்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மிகப்பெரும்பான்மையினர், அந்த மொழியை இயல்பாகக் கையாளமுடியாமைக்கு அந்த மாணவனைக் கடந்த சமூகக் காரணிகளும் இருக்கின்றன என்பதைப் புரிந்திருந்ததால்....மாணவர்களைத் தேர்வு செய்ய, ஆங்கிலம் என்ற ஒன்றைமட்டும் ஒற்றை அளவுகோலாக வைத்திருக்கவில்லை. யார் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைத்தால், அதன் மூலம் தலைமுறைகள் தழைக்குமோ, அந்த மாணவனுக்குச் சராசரிக்கு மேலான மதிப்பெண் தகுதி இருந்தால் போதுமானது....அந்தக் கல்லூரி அரவணைத்துக்கொண்டது. அப்படித்தான் நானும் அரவணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அக்கல்லூரியில் படித்து அங்கே ஆசிரியராகப் பணிசெய்ய வாய்ப்புக்கிடைத்து, கிராம சமுதாய மேம்பாடு பாடத்தைக் கற்பிப்பவனாக ஆனபோது, என் பணியின் நிமித்தம் Understanding Rural Communities Based on Cropping Pattern என்ற கட்டுரையைப் படித்தபோதுதான், தமிழவேள் அவர்கள் என்னிடம் இயல்பாகக் கேட்ட கேள்விகளை வைத்து, வேளாண்மையைப் பின்னணியாகக் கொண்ட குடும்பங்களின் ஆளுமையை, அவர்கள் தொடர்ந்து பயிரிடும் பயிர்வகைகளைக் கொண்டே கணிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழவேள் அவர்கள் கேட்ட அதே கேள்விகளை என் மாணவர்களிடத்தில் கேட்டு, அவர்களின் குடும்பப் பின்னணியை என் போக்கில் விளக்கும்போது, “என்ன சார்! ஏதோ எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தது போல் துல்லியமாகச் சொல்கிறீர்களே” என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
சின்ன குக்கிராமம், விவசாயப் பின்னணி, இங்கு படித்தால் வேலை கிடைக்குமென்று நம்புகிறான். இவனுக்கு வாய்ப்பளிப்போம். இவன் தலைமுறை தழைத்துப் போகட்டும் என்று அந்த தேர்வுக்குழு என்னை ஆசீர்வதித்திருக்கிறது. நான் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்திருக்கிறேன். அந்த ஆசீர்வாதம் என் வாழ்க்கையில் பொய்யாகவில்லை.
என்னைப்போன்று ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அந்த ஆசீர்வாதம் அக்கல்லூரி கொண்டிருந்த சமூகப் புரிதலிலிருந்து வந்தது.
2
நான் ஆசிரியரான புதிதில்...
ஒரு மாணவன் கல்லூரியில் சேர விண்ணப்பப் படிவம் கொடுத்துவிட்டு, என்னைப் பார்த்தவன், நாம் பேசுவதை இவன் கேட்பான் என்று நம்பினானோ என்னவோ, “அண்ணே! இங்க சிபாரிசு இல்லாமல் சீட் கிடைக்காதாமில்லே” என்றபடியே என்னிடம் தயங்கித் தயங்கி வந்தான்.
“ஊரு கரிவலம்வந்தநல்லூர் பக்கமண்ணே…..மேலநீலிதநல்லூர் கல்லூரியில் படிப்பு. நிலபுலன் கிடையாது...கூலிவேலை தான்னே. அப்பா எங்களைவிட்டுட்டு இன்னொருத்தரோடு போயிட்டார். அம்மா, தங்கச்சி, அம்மாக் கிழவி. இங்க படிச்சா நிச்சயமா வேலை கிடைக்குமென்னு எங்க புரொபசர்ஸ் சொன்னாங்க. கூலி வேலைக்கு போய்க்கொண்டே தான் டிகிரி படிச்சேன். தமிழ் மீடியம்தான். 52 மார்க்குதான். ஆனா எப்பவும் எதிலும் பெயிலானதில்லை”.
அப்படியாகனும், இப்படியாகனும் என்ற ஆர்வம் எல்லாம் அவனிடம் இல்லை. ஆனால் நாலு பேருக்குச் சமதையாக, இதுவரை பட்ட கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறனும்....அதற்கு இந்தக் கல்வி வழிவகுக்கும் என்று நம்பியது தெரிந்தது.
அவனுடன் பேசினேன்...யாரிடமும் சென்று சிபாரிசுக் கடிதம் பெருமளவு அவனுக்குத் தொடர்புகளில்லை.....
“தம்பி! இங்கே யாரோட சிபாரிசும் செல்லுபடியாகாது. சிபாரிசு செய்கிறவர்களெல்லாம் நாம சொல்லித்தான் கிடைக்குது என்று நினைப்பார்கள். கல்லூரி டைரக்டர் நினைக்கணும்.  உங்கம்மாவை அழைத்து வந்து உங்க குடும்ப நிலையைச் சொல்லி, இயக்குனரிடம் முறையிடு. உனக்கு இங்கே சீட் கிடைத்துப் படித்தால், உங்கள் குடும்பம் தழைக்கும் என்று என்று உன் அம்மாவை வேண்டச்சொல்” என்று சொல்லி, அவன் தாயார் எப்படிப் பேசவேண்டும் என்று ட்ரைனிங்க் கொடுத்தேன். “ஜாக்கிரதை! நீங்கதான் சாமி என் பையனைக் கரைசேர்க்கனும் என்று சீன் போட்டு காலில் கையில் விழுந்தால் விரட்டிவிட்றுவாரு” என்று எச்சரித்து, இன்டர்வியூக்கான கடிதம் வந்ததும் அவர்கள் அம்மாவை அழைத்து வந்து டைரக்டரை பார் என்று அனுப்பிவிட்டேன்.
அவன் தன் தாயாருடன் வந்த அன்று நான் தற்செயலாக இயக்குனர் அறையில் இருந்தேன். கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளைக் கரையேற்றத் துடிக்கும் ஒரு தாயின் வைராக்கியம் அந்த அம்மையாரின் முகத்தில் தெரிந்தது.
யார் நீங்க? என்ன வேணும் என்று இயக்குனர் பார்வையால் கேட்டதைப் புரிந்துகொண்டு,
கையெடுத்து கும்பிட்டு, “ஐயா! நாங்க க.வ.நல்லூர் பக்கம். எனக்கு ஒரு பையன்.. ஒரு  பொண்ணு. பையன் காலேஜ் படிச்சி முடிச்சிட்டான். கூலி வேலைதான். இங்க படிச்சா வேலை கிடைக்குமென்னு சொல்றாங்க. நீங்க மனசு வச்சி இடம் கொடுத்தா, எங்க குடும்பம் பிழைச்சிக்கிடும்” என்று திருத்தமாக, பிசிறில்லாமல் பேசினார்.
“என்னம்மா! நீங்க பாட்டுக்கு உள்ள வர்ரீங்க. இடம் வேணுமென்னு சொல்றீங்க... இதென்ன சந்தைக்கடையா?...டைரக்டர் ஏதேதோ சொல்லி அவர்களை வெளியே அனுப்ப முயன்றார். அந்தம்மா...ஒரே போடாக...”கோவிலுக்கு போய் சாமிகிட்டே வேண்டுவது மாதிரி உங்களிடம் வேண்டுகிறேன். எம் பையன் இங்க படிச்சா எங் குடும்பம் பிழைச்சிக்கிடும். முடியாது என்று உங்க வாயால சொல்லாம நல்ல வார்த்தை சொல்லியனுப்பனும்” என்று சொல்ல, “சரி! சரி! பெரிய வார்த்தைகளெல்லாம் பேசாதீங்க” என்று சொல்லிவிட்டு, அந்தப் பையனைப் பார்த்து “உன் விவரத்தை ஆபீசில் கொடுத்துவிட்டுப் போ” என்று சொல்லியனுப்பி விட்டார். எந்த உத்தரவாதமும் இயக்குனரிடமிருந்து வராததால், “உம் பேச்சைகேட்டு எங்க அம்மாவையும் கூட்டிவந்தேன் பாரு” என்று என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு வெளியேறினான்.  .
சேர்க்கைக்கான தேர்வு முறைகள் முடிந்து, தகுதியான மாணவர்களைப் பட்டியலிடும் போது, டைரக்டர் அந்தப் பையன் எழுதிக்கொடுத்த குறிப்பைக் காண்பித்து இவன் பட்டியலில் வருவானா? என்று பார்க்கச் சொன்னார். ரெம்ப கீழே இருப்பதாகத் தெரிய வர, சரி இந்தப் பையனை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்துவிடுங்கள் என்றார். நிர்வாக ஒதுக்கீடு என்பது பெரிய VVIP சிபாரிசுகளுக்கே கிடைக்கும். ஆனால் அவனுக்கு கிடைத்தது. தான் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்பதைக்கூட உணரமுடியாத மட்டித்தனம் அவனிடமிருந்தது வேறு விஷயம்.
அவன் படித்து முடித்து, 25 வருடங்கள் கழித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்த்தில் அவனை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தபோது, என்னை அடையாளம் கண்டு கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் பெயர் மறந்துவிட்டாலும், அவன் நினைவுகள் சட்டென்று வந்தது.
படித்து முடித்து ஓராண்டு NGO வில் வேலை. பின் வங்கிப் பணித்தேர்வு எழுதி கனரா வங்கியில் கிளார்க். MA முடிச்சிருக்கான். பேங்க் வேலை வேறு....அவர்களைவிட ஓரளவு வசதியான பட்டதாரிப் பெண் மனைவி. திருமணத்திற்குப் பின் மனைவியையும் தேர்வு எழுத வைத்து அவர்களுக்கும் வங்கி வேலை. தங்கைக்கு திருமணம முடித்து வைத்திருக்கிறான். ஒரு ஆண், ஒரு பெண். மச்சானுக்கு PWD ல் லஷ்கர் வேலை. .குடிப்பழக்கம். 38 வயதில் மரணம். தங்கையை வீட்டோடு வைத்துக் கொண்டான். தங்கை மகன் BE Computer Science. அப்பொழுது onsite ல் நைஜீரியாவில். தங்கை மகள் BSc Nursing. அவரும் வேலை பார்க்கிறார். MSc Nursing படிக்கப் போறாளாம். இவருக்கு ஒரே பையன் BE Computer Science முடித்து campus placement டில் பெங்களூரில் வேலை. ஜப்பானுக்கு on site பணிக்காக ஆறுமாதம் போய் வந்தானாம். கிழவி இல்லை. (சில சோகங்கள்  வேண்டாம்)
புதிய வீடு, கொஞ்சம் நிலபுலன்....டிராக்டர்....தங்கையின் பொறுப்பில் விவசாயம்...தங்கை மகளின் திருமணத்திற்காக கொஞ்சம் நகைகள்... சேமிப்பு....ஆளுக்கு ஒன்றாக அவன் வீட்டில் ஐந்து டூவீலர்ஸ். கார் வாங்க எண்ணமிருக்கிறது....இன்னும் பத்தாண்டுகள் பணியிலிருக்கலாம்...குழந்தைகளின் கல்வி மீதான முதலீடு முடிந்து, அவர்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்....இனியென்ன? தலைமுறை தழைத்தது.
கல்வி கரை சேர்க்கும்தானே.....கல்வியில் கவனம் செலுத்திய முதல் தலைமுறையினரின் அனைவர் வாழ்விலும் இப்படித்தான் நடந்துள்ளது. இதில் புதுமை ஒன்றுமில்லைதான். இதில் சமூகப்பணிக் கல்லூரியைப் பெருமை படப் பேச என்ன உள்ளது என்று கேட்கலாம்.
50 வருடங்களுக்கு முன் ஒவ்வொரு கிராமத்திலும் PUC பெயில் என்று ஓரிருவராவது இருப்பர். PUC பெருந்தடை. அதையும் தாண்டி பட்டப்படிப்புக்கு வந்தவர்களின் கல்வி அதோடு முடிந்தது.... MA, MSc மிகக் குறைவான இடங்களே... எல்லோருக்கும் இப்பொழுது போல் வாய்ப்பு இல்லை.....முதுகலைப் பட்டப் படிப்பை வைத்து முதலமைச்சராக முடியாதுதான்....ஆனால் அதை முடித்துவிட்டால்....MA படிச்சிருக்கான்....ஏதோ .வேலையும் பாக்குறான்....அதுவே அவர்களை விடப் பொருளாதாரத்தில் செழுமை படைத்தவர்களிடம், இவனை நம்பி நம் பெண்ணைக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த, அதுகாறும் அவர்கள் அனுபவித்தறியாத சமூக மரியாதைக்கும், மேலதிகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் அந்தப்பட்டமே வழி வகை செய்தது.... இப்படி மேலெழுந்து தழைத்தவர்கள் பலர்....மதுரை சமூகப்பணிக் கல்லூரி மேலெழுந்து தழைப்பதை பலருக்கும் சுலபமாக்கியது....விரைவாக்கியது. கடந்த காலத்தில் உயர்கல்வி வாய்ப்பு எப்படியிருந்தது, அதிலும் சமூகப்பணிக்கல்வி வாய்ப்பு எப்படியிருந்தது என்பதை உணர்ந்தவர்களால் தான், மதுரை சமூகப்பணிக்கல்லூரியின் சமூகப் பங்களிப்பை உணர முடியும்.
3
1982 ஆம் ஆண்டு....
மதுரை மத்திய சிறைச்ச்சாலையில் ஆழ்நிலைத் தியானத்தைக் கைதிகளுக்குக் கற்றுத்தந்து அதன் விளைவுகளை ஆய்வு செய்ய, கல்லூரி முன்னெடுத்த ஒரு ஆய்வுத் திட்டத்தில் பணியாற்றினேன். 40 ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுக்குத் தியானம் கற்றுத்தரும் திட்டம். சிறைவாழ் மக்களின் அந்த அன்பு இன்றளவும் என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
அதில் தனுஷ்கோடி என்பவர், தண்டனை முடிந்து இன்னும் ஆரேழு மாதத்தில் விடுதலையாகவிருந்தார். தன்னுடைய மூத்தமகன் கல்லூரிப் படிப்பை முடிக்கவிருப்பதாகவும், அவனை சமூகப்பணி படிக்க வைப்பதான தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். விடுதலையான பிறகு கல்லூரி வந்து இயக்குனரைச் சந்தியுங்கள் என்று ஆலோசனை சொன்னேன்.
விடுதலையான மூன்றாம் நாளே கல்லூரிக்கு வந்தார். இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்தேன். “தான் ஒரு கொலைக்குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று விடுதலையாகி இருப்பதாகவும், சிறைக்கு களப்பணிக்கு வரும் அவரது (சமூகப்பணிக் கல்லூரி) மாணவர்களைப் பார்த்துப் பழகியதால், தன்னுடைய மகனையும் சமூகப்பணி படிக்க வைக்க விருப்பப்படுவதாகவும், அவருடைய மகனுக்கு இடம் கொடுத்து உதவவேண்டும்” என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு வேண்டுகோள் வைத்தார்.
அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து, அவரின் கைகளை வாஞ்சையாகப் பிடித்துக் கொண்ட இயக்குனர், “இந்த எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதற்காக மகிழ்ச்சி....ரிசல்ட் வந்தவுடன் உங்கள் மகனை விண்ணப்பிக்கச் சொல்லுங்கள்” என்றார். அவருடைய மகனுக்கு இடம் கிடைத்தது. அது எதிர்பார்த்ததுதான்.
ஆனால் அதைத் தொடர்ந்து நடந்துதான் சமூகப்பணிக்கல்லூரியின் பேரடையாளம். தனித்துவம். கல்லூரியில் பெற்றோர் கழகம் நடந்து வந்தது. முதலாமாண்டு சேரும் மாணவர்கள், முதல் நாள் கல்லூரிக்கு வரும்போது, பெற்றோருடன் வரவேண்டுமென்ற  வழக்கம். அக்கல்லூரியிலிருந்து, அக் கல்வியிலிருந்து பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லச் சொல்லும் வழக்கம் இருந்தது. ஒரு பத்து, பதினைந்து பெற்றோர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசுவதை வைத்து, பிற பெற்றோர்கள் அவர்களில் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த ஆண்டு மாவட்ட அமர்வு நீதிபதி ஒருவரின் மகளும், உதவி காவல் துறை கண்காணிப்பாளரின் (DSP) மகனும் கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள். அவர்களும் பேசினார்கள். தனுஷ்கோடி அவர்களும் பேசினார்.
தனுஷ்கோடி அவர்கள்  பேசியதை வைத்து அவர்தான் அந்த ஆண்டின் பெற்றோர் கழகத்திற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த கல்லூரி நிகழ்ச்சிகளுக்கும், அதற்கு அடுத்து நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர் அழைக்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரிய மனிதர்களுக்கு இணையாக மேடையில் அமர்த்தப்பட்டு, உரையாற்றுவார். தமிழ் இலக்கியங்களிலிருந்தும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி அவர் உரையாற்றுவதை அனைவரும் ஆர்வமுடன் ரசித்துக் கேட்பார்கள். மாணவர்களும் அவரை அப்பா, அப்பா என்று சூழ்ந்துகொள்வார்கள்.
இதைக் கேள்விப்பட்ட ஆனந்தவிகடன், அப்பொழுது அங்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றிய திரு.சுந்தரம் என்பவரை அனுப்பிவைத்து, தன்னுடைய 3.10.1982 தேதியிட்ட இதழில் “சப்தமில்லாமல் சமுதாயப்பணி இங்கே நடக்கிறது” என்று ஏழு பக்க அளவில் ஒரு சிறப்புக்கட்டுரை வெளியிட்டு கல்லூரியை கவுரவித்தது.....
எளிய பின்னணி கொண்ட மாணவர்களை அரவணைத்துக்கொண்டது சமூக அறிவியல் கல்லூரியின் அடையாளமாக இருந்தது. இன்று அடையாளங்கள் மாறிவந்தாலும், அரவணைப்பின் சுகத்தை அறிந்த, உணர்ந்த அதன் மாணவர்கள் தங்கள் பணித்தளங்களில் தங்களை நாடிவருவோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம் அந்த அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
4.
கல்லூரியில் ஆசிரியப்பணி சேர்ந்து 15 ஆண்டுகள் கழிந்தது.
என்னுடன் படித்தவர் நண்பர் ஜோஸ். 200 தடவைக்கு மேல் இரத்ததானம் அளித்ததால் அவர் குருதிக்கொடை ஜோஸ் என்றே மதுரையில் அறியப்படுபவர். மாணவனாக இருந்த போதே அவர் அதி தீவீர பெரியாரிஸ்ட். தமிழார்வம் மிக்கவர். அனைவருடனும்
அணுக்கமானவர். பல வருடங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான, ஏழை மாணவர் ஒருவருக்குப் பரிந்துரை செய்வார். அவர் பரிந்துரைகள் நியாயமாக இருக்கும். பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஒரு ஆண்டு நேர்முகத் தேர்வு நடைபெற்ற சமயம். யாருக்கோ பரிந்துரைக்க வந்திருக்கிறார். என்னை சந்தித்தார்.
“ரெங்கசாமி! இன்று பெரியாரிலிருந்து டவுன் பஸ்ஸில் வந்த பொழுது அவ்வளவு கூட்டம். நெரிசல். அழகர் கோவிலுக்குச் செல்லும் அந்த பஸ்ஸில் கசங்கிய உடைகளுடன் ஒரு ஏழைத்
குருதிக்கொடை ஜோஸ்
தம்பதியர் ஏறினார்கள். அந்தப் பெண்ணின் கையில் கைக்குழந்தை. கையில் ஏதோ பை. இருவர் அமரும் சீட்டில் உட்கார்ந்திருந்த, நன்றாக உடையணிந்த கொஞ்ச வயசுப் பெண், எழுந்து, தான் அமர்ந்திருந்த சீட்டில் அமரச் சொல்லியும், பக்கத்தில் அவரோடு உட்கார்ந்திருந்த கொஞ்ச வயது ஆணைப் பார்த்து, உட்காரத் தயங்க, அதைப் புரிந்துகொண்ட இருவரும் எழுந்திருந்து அந்த தம்பதியை உட்காரச் சொல்ல, அதை மறுத்துவிட்டு குழந்தையை மட்டும் வைத்திருக்கச் சொல்லி நின்று கொண்டார். குழந்தையை வாங்கிக்கொண்ட அந்த இளவயதுப் பெண் பஸ்ஸில் வந்த இருபது நிமிடமும், தன் சொந்தச் சகோதரியின் குழந்தையைக் கொஞ்சுவது போல கொஞ்சிக் கொண்டு வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”.
நம்ம காலேஜ் ஸ்டாப்புலே இறங்க, அவரும் இன்டர்வியூக்காகத்தான் தன் சகோதரருடன் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு, பயணத்தின் போது அவர் பால் ஏற்பட்டிருந்த மரியாதையால், நானே அவர்களிடம்  பேச்சுக்கொடுக்க, அந்தப்பெண்ணின் மீது மேலும் மரியாதை ஏற்பட்டது. எந்தப் பேதமும் இல்லாமல்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு வந்த அந்தப் பெண் பிராமண வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரியவர, மேலும் மரியாதை ஏற்பட்டது. இந்த மாதிரி மனப்பக்குவம் கொண்ட பெண்கள் இங்கு படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் FC ஆதலால் அவர்கள் செலக்ட் ஆவார்களா என்று தெரியவில்லை”.
“நான் ஏற்கனெவே ஒருவருக்குப் பரிந்துரைத்துவிட்டேன். என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. நீங்களும், நாராயணனும் (உடன் படித்து கல்லூரியில் பேராசிரியர்) ஏதாவது செய்து, இது மாதிரியான பெண்கள் இங்கே சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அந்த மாணவி எல்லாத் தேர்வுகளிலும் சரியாகச் செய்திருந்தாலும் FC என்பதால் ஒரு சின்ன push தேவைப்பட்டது. அவர்களுக்கு இடம் கிடைத்தது. இன்றுவரைக்கும் ஜோஸ் அவர்கள் தான் அவரை அடையாளம் கண்டு சொன்னார்  என்பது அவருக்குத் தெரியாது.
தோற்றப்பொலிவில் சமமாக இருந்தாலும், கடைசியில் Attitude அறிந்துகொள்ள கேட்கப்படும் ஒன்றிரண்டு கேள்விகளை வைத்து உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால், ஒரு பெண் தன் சக மானுடத்தை பேதமற்று நேசிப்பதை, இருபது நிமிட உற்றுநோக்கலால் ஜோஸ் போன்ற மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாதா என்ன? அவர் புரிந்துகொண்டது மட்டுமல்ல அதைப் போற்றவும் செய்தார்.
இவருக்கு இடம் கொடுத்தால்  தழைத்தோங்குவார் என்று நம்பிக்கை தந்தவர்களை, இவருக்கு இடம் கிடைத்தால் பேதமற்று சக மானுடர் மீது அன்பு செலுத்துவார் என்று நம்பிக்கை தந்தவர்களை சமூகப்பணிக்கல்லூரி மட்டுமல்ல அந்தக்கல்லூரியில் படித்த மாணவர்களும் அரவணைத்துக் கொள்வதை நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். ஜோசின் பரிந்துரை அதற்கான உதாரணம்.
5
மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படித்து, காவல்துறை துணைத் தலைவராக (Deputy Inspector General of Police) உயர்பதவி வகிக்கும் நண்பர் முத்துசாமி IPS அவர்கள் நேர்மையான அதிகாரி
முத்துசாமி IPS
என்று அடையாளம் காணப்பட்டவர் அவரின் அனுபவத்தைக் கேட்டால், மேலே சொன்னதையெல்லாம் கடந்த கால உதாரணங்கள் என்று யாரும் உதாசீனப்படுத்திவிட முடியாது. முத்துசாமி அரவணைப்பு எனும் அடியுரமிட்டு உயிர் தளிர்க்க உதவிய ஒரு கல்லூரிப் பாரம்பரியத்தின் நீட்சி.
அவரின் அனுபவம். “ஒரு மாதத்திற்கு முன்னாள் ஒரு பந்தோபஸ்து பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். சுத்தமான உடை அணிந்திருந்தாலும் அவர் அணிந்திருந்த பேண்டும், ஷர்ட்டும் அவரின் வசதியின்மையைக் காட்டியது. என்னை நோக்கி வர முயன்ற அவரை ஒரு காவலர் தடுப்பதற்குமுன், பணிவான நமஸ்காரத்துடன் என்னை நெருங்கி அருகில் வந்துவிட்டார். என்னுள் இருந்த காவலர் புத்தி சட்டென்று தலைதூக்கியது. ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவருக்குப் பிரச்சனையிருக்கும். என்னிடம் புகார் சொல்லத்தான் வருகிறார்” என்றுதான் நினைத்தேன்.
‘வந்தவர் கும்பிட்ட கைகளை எடுக்காமலே “ஆறு வருசத்துக்கு முன், என் தம்பி பையனைக் காலேஜில் சேர்ப்பது விஷயமாக, எனக்குத் தெரிந்தவர் உங்களைப் பார்க்கச் சொல்லி உங்களைப் பார்த்தோம். ஆனால், எம்மகனிடம் பேசிவிட்டு, நீங்களோ நேரடியாக அவனை அழைத்துச் சென்று பச்சையப்பாசிலே சேர்த்து விட்டீங்க. அவன் பொறுப்பா படிச்சான். MSc முடிச்சி, இப்போ கவர்ன்மெண்ட் ஸ்காலர்சிப்புலே பூனாவில் டாக்டர் பட்டத்துக்குப் படிச்சிட்டிருக்கான். உங்களைப் பற்றி பத்திரிகையில் வரும் செய்திகளை எங்களுக்குக் காட்டுவான். பூனாவிற்குப் போகுமுன் உங்களைப் பார்க்கணும்னு நினைச்சான். ஆறு வருசத்துக்கு முன் நடந்தது..உங்களுக்கு ஞாபகத்தில் இருக்குமோ என்னமோ, இப்போ போய் பார்த்த்தால் ஏதோ காரியம் நிமித்தமாக அடிபோடுகிறான் என்று நினைத்து விடுவீர்களோ”என்ற பயத்தில் தயங்கிவிட்டான்” என்று தடுமாறிப் பேசினார்.
கூப்பிய கரங்களை எடுக்காமலே கண்ணில் நீர்தழும்ப பேசிக்கொண்டிருந்தவரின் தோளில் கைபோட்டு, “நீங்க எப்போ வேணுமென்றாலும் என்னை வந்து பார்க்கலாம். வீட்டிற்குக்கூட ஒரு நாள் வாங்க. என் போன் நம்பர் கொடுக்கிறேன். உங்க பையனை பேசச் சொல்லுங்கள் என்று சொல்லிக்கொண்திருந்த போதே அடக்க முடியாமல் என் கண்களில் நீர்தளும்பியது. காரணம் நன்றி சொல்ல வந்த பெரியவரை, ஏதோ ஒரு சலுகையின் பொருட்டே நம்மிடம் வருகிறார்” என்று தவறாக நினைத்துவிட்டதற்காக.“நன்றியுணர்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல், தாங்கள் பெற்ற சிறு சிறு சாதனைகளை வெளியில் சொன்னால் தற்பெருமை பேசுகிறான் என்று தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் சாதாரண மக்கள் ஊமைகளாகி விடுவதை நினைக்க நினைக்க, அவரின் நிலையில் தானே நாமும் இருந்தோம் என்ற நினைப்பு வந்ததால் என் கண்ணீரை அடக்கமுடியவில்லை” என்றார்.
முத்துசாமி ஏழை மாணவர்களின் கல்வியின் பால் அக்கறை கொண்டு செயல்படுவது அறிந்த, தமிழகம் மதித்த காவல்துறை இயக்குனர் (Inspector General of Police) திரு. வால்டர் தேவாரம் அவர்கள் தனது கைப்பட முத்துசாமி IPS அவர்களுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில்  முத்தாய்ப்பாக Save children with a will to study and come up in life. Keep it up” என்று முடித்திருந்தார்.  “கல்வியின் மூலம் தழைக்க விரும்பும் எவருக்கும் உன் கரம் கொடுத்து காப்பாற்றும் செயலைத் தொடர்ந்து செய்” என்று வாழ்த்தியிருந்தார். என்ன ஒரு தீர்க்க தரிசனம் மிக்க வார்த்தைகள். வாழ்த்துக்கள்.
இதைச் சொல்லிவிட்டு கடைசியில் முத்துசாமி அவர்கள் ஒரு கேள்வி எழுப்பினார். “கல்லூரிச் சேர்க்கை தொடர்பாக என்னிடம் வரும் எல்லோருக்கும் நான் பரிந்துரைப்பது இல்லைதான். ஆனால் என் உதவியை நாடிவரும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் சில நிமிடங்கள் பேசினாலே, இக்கல்வியின் மூலமாக இவன் உயிர் பெற்று தழைப்பான்” என்று என் உள்மனம் சொல்லும். அப்படிப்பட்டவர்களை நானே நேரடியாக கல்லூரிக்கு அழைத்துச் சென்று முதல்வர்களிடம் பேசி அவர்களுக்கு உதவ வேண்டுகோள் வைப்பேன். என்னுடைய வேண்டுகோளைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி நான் உதவிய யாரும் என் நம்பிக்கையைப் பொய்யாக்கியதுமில்லை” என்ன ஒரு தெளிவான புரிதல்.
“சார்! விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டியதில்லை. இந்த உதவி இவனை உயிர்த்தெழ வைக்கும் என்று நம்பும் ஒரு சிலருக்கு விதிகளைத் தளர்த்தி உதவி செய்து பார்க்கலாமே. அதை ஏன் நமது கல்வி நிறுவனங்கள் செய்வதில்லை. என்னென்னமோ testing procedures வைத்திருக்கிறீர்களே. இவன் உயிர்த்தெழுவான் என்று அறிந்துகொள்ள உதவும்  தேர்வுமுறைகளை (testing procedures) உங்களால் உருவாக்கமுடியாத என்ன? என்ற கேள்வியை எழுப்பினார். என்னிடம் பதில் இல்லை.
அப்படி ஒரு தேர்வுமுறையை மதுரை சமூக அறிவியல் கல்லூரி அந்தக்காலத்தில் வைத்திருந்தது. அப்படித் தேர்வு செய்யப்பட்ட பலரில் நீங்களும், நானும் இருந்திருக்கிறோம் என்று தான் அவருக்குப் பதில் சொல்ல முடிந்தது.

11/22/19

எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து


பத்து வருடங்களுக்கு முன் (29.4.2009) ஆவணப்பகிர்வு தளங்களில் (document sharing sites) பதிவேற்றப்பட்ட "Introduction to Professional Social Work" என்ற என் பாடக்குறிப்புகளடங்கிய ஆவணத்தை, வடிவ மாற்றம் (layout improvement) செய்ய நினைத்த நண்பர் தயாளன், அதைப் பதிவிறக்கம் செய்ய முற்பட, பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகவே, அந்த ஆவணத்தின் பிரதியை அனுப்புமாறு கேட்டிருந்தார். இலவசமாகப் பயன்படுத்தப் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை, அதிக வாசகர்கள் பார்வையிடுவதையும், பதிவிறக்கம் செய்வதையும் பார்க்கும் ஆவணப் பகிர்வு (Document Sharing) இணைய தளங்கள் அதற்குக் கட்டணம் வசூலிக்கும் தவறான நடைமுறை ஒரு புறம். அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள பதிவேற்றம் செய்யப்பட்டதை, சந்தா செலுத்துபவர்கள் (membership) மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம், மற்றவர்கள் பார்க்க, படிக்க  மட்டும் செய்யலாம் என்று மறைமுகக் கட்டுப்பாடுகளை விதிப்பது மறுபுறம்கற்பனைக்கெட்டாத அறிவுப் புரட்சியை உண்டாக்கிய விக்கிபீடியா தளத்தையும், அதன் நிறுவனர்களான Jimmy Wales மற்றும் Larry Sanger க்கும் மானுட சமுதாயம் எவ்வளவு தூரம் கடமைப்பட்டது என்பதை உணரவேண்டும். விக்கி என்ற ஒரு மென்பொருளை, அவர்கள் காப்புரிமை செய்து, வணிகரீதியாகப் பயன்படுத்த நினைத்திருந்தால், இன்று உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவேளை அவர்களும் இணைந்திருப்பார்கள். வணிகம் கடந்த ஒருநிலை இணையத்திலிருப்பதால்தான் அது வளர்கிறது. நாமெல்லோரும் இணையத்தை நமக்கானாதாக உணரமுடிகிறது. இந்த நன்றியால்தான், என் வாழ்நாள் முடிவதற்குள் ஒரு பத்துக் கட்டுரைகளாவது தமிழ் விக்கிபீடியாவில் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. பார்க்கலாம்.
தயாளன் 

நண்பர் தயாளன் கேட்ட ஆவணத்தை அனுப்பிவிட்டு, அதில் அவர் மாறுதல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருந்ததால், அந்த ஆவணத்தின் word file அவருக்கு அனுப்பினால் மேலும் உபயோகமாக இருக்குமே என்று என் கணனியில் தேடினால், அது கிடைக்கவில்லை. தான் பணியில் சேர்ந்த காலம் முதல் அந்த பாடத்தைக் (Introduction to Professional Social Work) கையாண்டு வந்த பேரா. JCD ஓய்வு பெற்றபின், அந்தப் பாடத்தை நான் கையாள ஆரம்பித்தேன். Introduction to Professional Social Work தான் MSW பாடத்திட்டத்தின் அஸ்திவாரம். எனக்கென்னவோ மாணவர்கள் உள்வாங்கும் முகமாக அது கையாளப்பட்டதில்லை. மற்ற பாடங்களில் காண்பிக்கப்பட்ட அக்கறை அதில் காட்டப்படவில்லை என்ற எண்ணத்தால், என் திறமைக்கெட்டியவரை தயாரித்த பாடக்குறிப்புகள். அந்தப் பாடத்தில் எனக்குத் தொடர் வாசிப்பு இருந்ததில்லையாதலால், நான் வாசித்தறிந்தவரை, எனக்குப் புரிந்தவரை தயார் செய்த குறிப்புகள். Building is strong but Basement is weak என்ற வடிவேலுவின் நகைச்சுவை,  நம் செயல்களுக்கும் பொருந்தும்தானே. அந்த ஆவணத்தை இற்றைப்படுத்தி (update) மேலும், மேலும் செழுமையாக்க, எளிமையாக்க நினைத்ததுண்டு. அது MSW முதல் பருவத்தில் தொடங்கும் முதல் பாடம். அது சமூகப்பணியின் பாயிரம் போன்றது. சரியான பாயிரமின்றி கற்கத் தொடங்குபபவர்கள், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப்படுவார் என்பது தமிழ் இலக்கிய விதி. அந்த ஆவணத்தில் பல இடங்களில் மேலதிக விளக்கங்களும் படங்களும், அடைப்புக் குறிகளுக்குள் கலைச் சொற்களுக்கான தமிழ் பொருளும் இருந்தால் நன்றாக இருக்குமென்று பணியிலிருக்கும்போதே விரும்பினாலும், அதை நான் செய்யவில்லை. ஆனால் இன்று அதன் உள்ளடக்கத்தில் அல்ல, வடிவமைப்பில் மாறுதல் செய்தால் இன்னும் படிக்க இலகுவாக இருக்குமே என்று நண்பர் தயாளன் முன்வந்தது என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. என்னுடைய ஆர்வத்தைவிட, என்னுடைய மாணவர்களின் இப்படிப்பட்ட ஆர்வமே என்னைத் தேங்கவிடாமல் இன்றளவும் ஓடவைத்திருக்கிறது.
 
நண்பர் தயாளனுக்காக Introduction to Professional Social Work - word file ஐ என் கணனியில் தேடும் போது, அது கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, நண்பர் வினோத் அம்பேத்கார், தான் படித்த காலத்தில் எடுத்த புகைப்படங்களின் கோப்பைப் பார்க்கநேர்ந்தது. சில பாடங்கள், சில வகுப்புகள், சில மாணவர்களை ஆகர்ஷிக்கும் என்பதற்கு, MSW பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த Introduction to Livelihood Promotion என்ற பாடமே சான்று. எளிய மக்களின் ஜீவனோபாய முறைகளை அறிந்துகொள்ள வினோத் அம்பேத்கார் பலரையும் சந்திப்பார். உரையாடுவார். அந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அதைப் புகைப்படங்களாகவும் எடுத்துவந்து என்னிடம் பகிர்ந்துகொள்வார். பெரும்பாலோர் கையிலிருக்கும் கேமிராக்கள் அழகானவற்றை நோக்கியே திரும்பும். ஆனால் எளிய மக்களை நோக்கி கேமிராவைத் திருப்புவதற்கு உள்ளார்ந்த சமூக அக்கறை வேண்டும். அது வினோத்திடம் அப்பொழுதே இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.
வினோத் அம்பேத்கார்
வினோத் என்னுடன் பகிர்ந்திருந்த 150 படங்களுக்கு மேல் என் கணனியில் இருந்தது. எல்லாமே எளிய மக்கள் தாங்கள் ஜீவிப்பதன் பொருட்டு செய்யும் பல்வேறு செயல்கள். அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் விளக்க முற்பட்டாலே அது ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுமளவு நீளும்தான். எளிய மக்கள் செய்யும் வேலை, விற்கும் பொருள்கள், அந்த பொருட்களின் நுகர்வோர் என்பதிலிருக்கும் value chain, sector analysis, யோசித்தாலே, விளங்கிக் கொண்டாலே பிரமிப்பே மிஞ்சும். அப்படி பிரமித்து, அதைப்பற்றி சிந்தித்த ஒரு மாணவரும் இருந்திருக்கிறார் என்பது எனக்குப் பின்னாளில் தெரிய வந்தது. படித்து முடித்து விட்டு, போட்டித் தேர்வுகளுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்த மகேஷ் கார்த்திக் என்ற மாணவர், ஒரு கட்டத்தில் பல போட்டித்தேர்வு ஆயத்த மையங்களுக்கு, அதுவும் economics subject கற்பிக்கும் resource person ஆக சென்று வருவதாகச் சொன்னார். "என்னங்க நீங்கள் இளங்கலை வகுப்பில் கூட economics படித்ததில்லையே, economics பாடத்திற்கு எப்படி resource person ஆகப் போகிறீர்கள்" என்று அதிர்ச்சியடைந்து கேட்டபொழுது, "Economics படித்ததில்லைதான். ஆனால் livelihood படித்திருக்கிறேனே. அதைப் பின்னணியில் வைத்துதான் எல்லாப் பொருளாதாரக் கோட்பாடுகளையும் விளக்குகிறேன். என்னுடைய இந்த அணுகுமுறையால், பல போட்டிதேர்வு ஆயத்த மையங்கள் இதற்காகவே என்னை விரும்பி அழைக்கிறார்கள்" என்றும் சொன்னார். ஒரு கருத்தாக்கத்தை ஒவ்வொரு மாணவரும் அவர்களவில் புரிந்துகொண்டு அதை எப்படி மலரச் செய்கிறார்கள் என்பதை அறியும் போது பெருமையாக இருந்தது. நான் கற்றுத்தந்த பாடங்களில் எனக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம், நம்பிக்கைகளை உயிர்பித்து என்னை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொண்ட மாணவர்கள் பலர்.

எங்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேரா. கண்ணன் அவர்களின் மகன், விபத்திற்குள்ளாகி, நினைவு திரும்பாமால், ஏறக்குறைய 4 மாதங்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதையும், அதனால் பேரா. கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த மனஉளைச்சல் மற்றும் தாங்கொணா சிகிச்சைச் செலவுகளையும் குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் பேரா.NNR அவர்கள், பேராசிரியரின் மகன் குணமடைய வேண்டி பிரார்த்தித்துக் கொள்ளுமாறு முதலில் MISS CD என்ற வாட்சப் குழுவில் வேண்டியிருந்தார். அந்தச் செய்தியைப் பார்த்த நண்பர் தயாளன், "சார்! ஒரு நேரம் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தால், இன்னும் பயனுள்ளதாக இருக்குமே" என்று எடுத்துக்கொடுக்க, "அந்த நேரத்தை நீங்களே குறிப்பிட்டு, வேண்டுகோள் விடுங்கள் என்று பேரா.NNR சொல்ல, அதன்படி பார்ப்பவர்கள் எல்லாம் பிரார்த்திக்கத் தூண்டும்படியான ஒரு flyer தயாரித்து தயாளன் பகிர, அது மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்களின் வாட்சப் குழுக்களில் பகிரப்பட, நூற்றுக்கணக்காண மாணவர்களை உள்ளன்போடு அப்பிரார்த்தனையில் ஈடுபட வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த (flyer) சுற்றறிக்கையால்தான் என்பதை என்னால் உணரமுடிந்தது.


மக்கள் பங்கேற்பைப் பற்றிய பாடத்தை நான் பலவருடங்கள் கையாண்டுள்ளேன். ஆனால் சில விசயங்களில் என் மாணவர்களின் பங்கேற்பைக் கூட பெறமுடியாது தவித்துள்ளேன். ஒரு செயலில் மக்களைப் பங்கெடுக்க வைப்பதென்பது பெருங்கலை. அது மானுட இயல்பு, மானுட எதிர்பார்ப்பு, அதை உணர்ந்து சொல்லப்படும் ஒரு செய்தி, அந்த செய்தி சொல்லப்படும் விதம் என்று பலவற்றின் கூட்டுச்சேர்க்கை. ஆனால் எங்களால் (நண்பர் NNR)  வேண்டிக்கொள்ளத்தான் முடிந்தது. பார்வையிடப்படாமல் பலராலும் கடந்து செல்லப்படும் நிலையிலிருந்த வேண்டுகோளை, அழகாக வடிவமைமைக்கப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பார்க்க வைத்து, பல நாடுகளிலிருக்கும் முன்னாள் மாணவர்களையும் அப்பிரார்த்தனையில் பங்கெடுக்க வைத்தது தயாளன் வடிவமைத்திருந்த அந்த flyer தான் என்பதை மறுக்கவியலாது. நான்கு மாதங்களாக நினைவு திரும்பாமல் துயரத்திற்குள்ளான நிகழ்ச்சி. பலரும் அறிந்திருந்தாலும் அவர்களவில் வேண்டிக்கொண்டு கடந்த நிலையில் பலரையும் ஒன்றிணைத்தது, பங்கேற்கச் செய்தது பெரிய செயல். ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்படும் விதத்தில் எடுத்துச் சொல்லப்பட்டால் பலரின் பங்கேற்பு சாத்தியமே என்று பங்கேற்பு முறைகளின் மீது (Participatory Methods) எனக்கிருந்த நம்பிக்கையை தயாளன் வலுப்படுத்தினார் என்றால் மிகையாகாது
இங்கிலாந்தைச் சேர்ந்த பேரா. Malcom Payne பிரபலமான சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணியின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகங்களை சமூகப்பணித் துறை நூலகங்களில் பார்க்கலாம். புத்தகங்களாக வெளியிடப்படுவதற்கு முன் அதன் வரைவுகள் (drafts) சிலவற்றை Scribd தளத்தில் பகிரும் வழக்கம் அவருக்கிருந்திருக்கிறது. அவரின் ஆவணங்கள் என்னுடைய ஆவணத் தயாரிப்பிற்குப் பெருமளவு உதவியிருந்தது. ஆனால் அவர் பகிர்ந்திருந்த ஆவணங்கள், எந்தவித
ஜோடனையுமற்று தட்டச்சு செய்யப்பட்டதைப் போல காணக்கிடைக்கும். பல ஆண்டுகள் அந்தத் தளத்திலிருந்தாலும் அது வாசகர்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின. ஆனால் அவர் கருத்துக்களைக்  கடன்வாங்கித் தயாரிகிக்கப்பட்ட எனது ஆவணங்களுக்கு அதிக வாசகர்கள் கிடைத்தது, அதனுடைய மேலான தர்த்திற்காக அல்ல. மாறாக அதை நான் சற்று
சிரமமெடுத்து வடிவமைத்திருந்ததால்தான். Presentation matters என்பார்களே அதுபோல. தயாளன் முயற்சி, Introduction to Professional Social Work  ஆவணத்தை இன்னும் பலர் பார்க்கத் தூண்டலாம். அந்த அஸ்திவாரத்தை மேலும் வலுப்படுத்த சிலரைத் தூண்டலாம்.

பணியாற்றிய காலத்தில் மட்டுமல்ல, இப்பொழுது இக்குழுவில் செயல்படுபோதும் எனக்கு பல நேரங்களில் அலுப்பு தட்டும். எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வருவதுண்டு. அஞ்சால் அலுப்பு மருந்து சாதாரண மக்களின் அலுப்பை நீக்குவதுபோல, என்னுடைய மாணவர்களின் சில செயல்கள் என் அலுப்பை நீக்கிவிடும். செய்யணும், இன்னும் அதிகமாகச் செய்யணும் என்ற உற்சாகத்தை தந்துவிடும்.என் சுயநலத்தின் பொருட்டாவது, என் சோர்வைப் போக்கிக்கொள்ளவாவது, இவர்களுடன், இவர்கள் குழுமியிருக்கும் இந்த MISS CD வாட்சப் குழுவுடன் தொடர்ந்து உரையாடவேண்டும். ஏனெனில் எனக்கான அஞ்சால் அலுப்பு மருந்து என் மாணவர்களிடமே இருக்கிறது.

11/12/19

ஒரு சொம்புத் தண்ணீர்.....ஒரு சிறு பொறி...போதும்

MISS CD மாணவர்களின் கள அனுபவங்களை ஆவணப்படுத்த, அம்மாணவர்களடங்கிய வாட்சப் குழுவில், ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட போது, 2008,2009,2010 ஆகிய ஆண்டுகளில், முதலாம் பருவ மாணவர்களின் ஒரு கள (Slum Visit) அனுபவ அறிக்கைகள் கணனிமயமாக்கப்பட்டு, அதுவே பின் இணையமயமாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதால், சம்பந்தப்பட்ட மாணவரும், அவருடைய களப்பணி மேற்பார்வையாளர் மட்டுமே அதுகாறும் பார்த்திருந்த அந்த அறிக்கைகளை (ஆவணங்களை), ஏறக்குறைய 35,000 பேர்கள் பார்த்தும், 650 பேர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகக் (Slideshare Analytics) குறித்து, ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தேன். மாணவர்கள் அப்பொழுது சமர்ப்பித்திருந்த, இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த ppt ஆவணங்களின் link ஐயும் பகிர்ந்திருந்தேன்.
அதைப் பார்த்த நமது நண்பர் தயாளன்,  பத்து வருடங்களுக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட அந்த ppt கள், அதிலிருக்கும் படங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து, அதை மதுரையின் காலப்பெட்டகமாக உணர்வதாகக் குறிப்பிட்டார். மேலும், அப்பொழுது powerpoint மென்பொருளில் இருந்த வசதிகளை (tools) விட, தற்போது அதிக வசதிகள் தரப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ppt களுக்கு விளக்கம் (script) எழுதி, குரல் இணைத்து, காணொளியாக்கினால் அது இன்னும் பலரைச் சென்றடையுமென்றும், அதைத் தானே செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். ஒரு சின்ன பொறி. அவரை மேலும் சிந்திக்க வைத்து, செயல்படத் தூண்டியிருக்கிறது.

அதே போன்று, சென்ற வருடம் CD மாணவர்களின் கூடுகையின் போது, நண்பர் முத்துசாமி IPS அவர்கள், அவருடைய ஜூனியரான பெருமாளைப் பற்றி விசாரிக்க, பெருமாள் அகால மரணமடைந்த செய்தியைத் தெரிவித்தோம். பெருமாள் அனைவராலும் நினைவுகூற இயலாத, எளிமையான, படித்த காலத்தில் அடையாளமற்றவராக இருந்தவர்தான்.  ஆனால் எங்களில் சிலருக்கு, முத்துசாமி உட்பட, அவர் பிரியமானவர். கூடுகையின் போது நடந்த கலந்துரையாடல்களில், பணகுடி எனும் நண்பர், Prime Minister Jeevan Jothi Yojana, (PMJJY - 330 ரூபாய்), Prime Minister Suraksha Bima Yojana (PMSBJ 13 ரூபாய்) காப்பீடு திட்டங்களை CD மாணவர்கள் தங்கள் பணிகளில் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்று ஒரு பொறியைத் தட்டிவிட்டார். ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றினார். அது பெருமாள் போன்ற நண்பர்களை இந்தக் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருந்தால், அவரின் குடுபத்தாருக்கு 2 இலட்சம் ரூபாய் உதவி கிடைத்திருக்குமே என்று எண்ணத்தை முத்துசாமி மனதில் விதைத்தது. அதுவே நண்பர் முத்துசாமி அவர்களைத் தன் சரகத்தில் பணியாற்றிய ஏறக்குறைய 1200 காவலர்களுக்கு, அந்த இரண்டு காப்பீடுகளையும் உறுதி செய்ய வைத்து, தேசிய முன்னுதாரம் படைக்கக் காரணமாயிருந்தது. அதைத் தொடர்ந்து Freedom Fund என்ற சர்வதேச தொண்டுநிறுவனத்தில் பணியாற்றும் நண்பர் பாலமுருகன், அவர்கள் பணியாற்றும் 400 கிராமாங்களில், 50 ஆயிரம் பேர்களுக்கு காப்பீடு உறுதி செய்யக் குறிக்கோள் நிச்சயித்து, இதுவரை 20000 பேர்களுக்கு அந்தக் காப்பீடு வசதிகளை கொண்டுசேர்க்க உத்வேகம் அளித்திருக்கிறது. கூடுகையின் போது காப்பீடு திட்டங்களைப் பற்றி விதைக்கப்பட்ட பொறி, CD மாணவர்களைப் பற்றிக்கொண்டு, ஆயுஷ்மான் பாரத், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் என்று பலரையும் சிந்திக்க வைத்து செயல்படத் தூண்டி, பலருக்கும் சமூகப் பாதுகாப்பு கவசத்தைத் தந்தது மட்டுமல்ல, அது பல நண்பர்களின் தொடர் செயல்பாடாகவும்  மாறியிருக்கிறது.

Dr. Narayana Raja - Dayalan 
இன்று (12.11.2019) நமது நண்பர், முன்னாள் முதல்வர் நாராயண ராஜா அவர்கள், பேரா. கண்ணன் அவர்களின் மகனுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றியும், கடந்த 125 நாட்களாக நினைவற்று இருப்பதைப் பற்றியும்  முதலில் CD குழுவில் பகிர்ந்து, கண்ணன் சாரின் மகன் நலமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று மாணவார்களை வேண்டிக்கொண்ட செய்தியைப் பார்த்து, அவரிடம் நான் தொடர்பு கொள்ள, எனக்கு முன்னே அவரைத் தொடர்பு கொண்ட தயாளன் அவர்கள், ஒரு நேரம் குறித்து நமது வாட்சப் குழுவில் உள்ள நண்பர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். நேரம் குறிப்பிட்டு தயாளனே அதை அறிவித்தால், அந்த நேரத்தில் எல்லோரும் பிரார்த்திக்கலாம் என்று குழு முடிவெடுத்தது. பிரார்த்தனை முடியும் மட்டும், பேரா. கண்ணன் அவர்களின் மகன்
நலமடைய வேண்டி பகிரும் செய்திகளைத் தவிர வேறு செய்திகளைப் பகிரவேண்டாம் என்று குழுவில் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். தயாளன் அதற்கான நேரத்தை பின்னர் அறிவித்தார். 
நண்பர் தயாளன் அவர்களிடமிருந்து உருவான ஒரு சிறு பொறி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்ந்த அனைத்துக்குழுக்களிலும் பகிரப்பட, பல நாடுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான நமது மாணவர்களை, விக்னேஸ்வரன் நலமடைய பிரார்த்திக்க ஒன்றிணைத்திருக்கிறது. இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கிய நண்பர்கள் நாராயண ராஜா, தயாளன் அவர்களை தலை வணங்கி பாராட்டுகிறேன். இந்தக்கோணத்தில் சிந்திக்கும் மாணவர்களை CD குழு பெற்றிருப்பது குறித்து பெருமை. கூட்டுப் பிரார்த்தனைக்கு வழிவகுத்ததோடு அல்லாமல், Faith healing என்ற சிகிச்சை முறையை சமூகப்பணியாளர்கள் அங்கீகரித்து, அது  NASW நிறுவனம் வெளியிட்ட சமூகப்பணியாளர்களின் அதிகாரபூர்வமான The Social Work Dictionary  அகராதியில் இந்தக் கருத்து இணைக்கப்பட்டிருக்கிறது. அதை நான் மொழிபெயர்த்திருந்த சமூகப்பணி பொருளாகராதியின், android app குறுஞ்செயலியின் வாட்சப் பகிர்வுக்காக வடிவமைத்திருந்த சொல்லறிவோம் பொருளறிவோம் link ஐயும் தயாளன் பகிர்ந்திருந்தார்.
https://bit.ly/2QnQwAs

நீங்கள் தளும்பத் தயாராக நிறைந்துள்ளீர்கள். ஒரு சொம்புத் தண்ணீர் போதும் நீங்கள் சுற்றிலும் வழிந்தோடி, வறண்டு போயிருக்கும் எளிய மக்களின் வாழ்வு மலரும்படி அவர்களின் மனதை ஈரமாக்குவீர்கள் என்று CD மாணவர்களிடம் நான் சொல்வதுண்டு. கூடுகையின் போது ஊற்றப்பட்ட  ஒரு சொம்புத் தண்ணீர் முத்துசாமி, பாலமுருகன் போன்றோரை வழிந்தோட வைத்தது, இன்று பலரின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறது.
.
இன்று நண்பர் நாராயண ராஜா மற்றும் தயாளன் உருவாக்கிய சிறு பொறி நம் எல்லோரையும் விக்னேஸ்வரனுக்காக பிராத்தனை செய்ய வைத்திருக்கிறது. 

நம்முடைய நம்பிக்கையால் பேரா. கண்ணன் மகன் நினைவு திரும்பி எழட்டும். அவர் எழுந்து அவரிடமிருந்து இது மாதிரியான ஆயிரம் பொறிகள் உருவாகட்டும். 

11/7/19

இணையம் பழகுவோம்

MISS CD வாட்சப் குழு முன்னெடுத்த ஆவணப்படுத்தல் முயற்சிகளைத் தொடர்ந்து, நண்பர்களால் ஆவணப்படுத்தப்படும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாட்சப்பின் வடிவமைப்பும், அதிலிருக்கும் வசதிகளும் பொருத்தமாக இருக்காது என்று கருதியதால், பகிரப்படும் ஆவணங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுசெல்ல வேறுவகையான சமூக ஊடகத் தளங்களைக் குழு சிந்திக்கவேண்டிய கட்டாயமேற்பட்டது.

Blogger, Scribd, Slideshare, Issuu, Face Book போன்ற சமூக ஊடகங்களையும், ஆவணப்பகிர்வுத் தளங்களையும் பயன்படுத்திய அனுபவம் இருந்தாலும், 2013 க்குப் பிறகு, சமூகப்பணி பொருளாகராதி தயாரிப்பில் நான் ஆர்வமடைந்ததாலும், அதன் பின் MISS CD குழுவில் ஆர்வமெடுத்துக்கொண்டதாலும், சிலநேரங்களில் அத்தளங்களைப் பார்வையிடுவதைத் தவிர அதை தொடர்ந்து பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. சிலவற்றின் ID, Password கூட மறந்து விட்டிருந்தது. நண்பர்களின் ஆவணப்படுத்தலுக்காக அத்தளங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று அதில் மீள் கவனம் செலுத்திய பொழுது, கடந்த காலத்தில் இருந்தது போன்று இல்லாமல், அத்தளங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் இலவசமாகப் பயன்படுத்த முடிந்த third party plugins களை உப்யோகப்படுத்த நிபந்தனைகள் போடப்பட்டிருந்ததை அறிய நேர்ந்தது. என்னுடைய பயன்பாட்டிற்கேற்ப அத்தளங்களில் நான் இணைத்திருந்த widgets, plugins களை ப் புரிந்துகொள்ளவே சிரமப்படவேண்டியிருந்தது. பணம் செலுத்தும் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் user friendly ஆக மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

வலைப்பூ (blog) பதிவுகளின் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யவேண்டினால் html code ஐ எடிட் செய்யவேண்டும். இலவசமாகக் கிடைத்த third party widgets, plugins களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாற்றங்கள் செய்திருந்ததால் என்னுடைய வலைப்பூவில் சில காணொளிகளும், links ம் செயல்படவில்லை. அப்பொழுது java script ல் embed செய்ததை upgrade செய்யாததால் பல காணொளிகள்  இப்பொழுது செயல்படவில்லை. இது மாதிரியான விசயங்களில் எனக்கு வழிகாட்டும் நண்பர் சேகரின் உதவியையும் சட்டென்று பெறமுடியவில்லை. ஆகையால் நானே நேரம் செலவழித்து,  தட்டுத்தடுமாறி சிலவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட மீள்கற்றல் தேவைப்பட்டது. MISS CD குழுவின் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்தவேண்டுமென்றால் அதிகக் கற்றலும், பயிற்சியும் தேவைப்படுவதை உணர்ந்தேன். அப்படியான சுயகற்றலுக்கு கடந்த காலத்தில் இருந்தது போன்ற விடாமுயற்சி இப்பொழுது என்னுள் பழுது பட்டிருப்பதையும் உணரமுடிந்தது.

என்னுடைய பாடக்குறிப்பு ஆவணங்களைப் பதிவேற்றப் பயன்படுத்திய Slide Share தளத்தை மீண்டும் ஆர்வமுடன் கவனித்துப் பார்த்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. Aug 2010 இல் நான் பதிவேற்றியிருந்த என்னுடைய பாடக்குறிப்பு ஆவணமான Theories of Social Work  6,72,321 பேரால் பார்வையிடப்பட்டும் 10521 பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுமிருந்தது. Jan 2011 ல் பதிவேற்றியிருந்த Social Case Work எனும் ஆவணம் 2,30,192 பேரால் பார்வையிடப்பட்டும் 5158 பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டும், Feb 2011ல் பதிவேற்றியிருந்த Social Group Work என்ற ஆவணம் 2,97,023 பேரால் பார்வையிடப்பட்டும் 5819 பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுமிருந்ததைப் (2.11.2019) பார்க்கமுடிந்தது, ஏறக்குறைய எழெட்டு ஆவணங்கள் இலட்சத்திற்கு அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டிருந்தது. தினந்தோறும் சராசரியாக 500 பார்வையாளர்களை அது ஈர்த்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

Scribd ஆவணப் பகிர்வு தளம் பெருமளவு subscription சார்ந்ததாக ஆகியிருந்தாலும், அதனுடைய analytics இரண்டு மூன்று தடவை
மாற்றப்பட்டிருந்தாலும், ஆவணங்களை இலவசமாகப் பார்க்க, பதிவிறக்க அத்தளம் போட்ட கட்டுப்பாடுகள் எரிச்சலூட்டினாலும், ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய அவர்கள் கட்டணம் கேட்டாலும், அதையும் மீறி அத்தளத்தில் என்னுடைய கணனிமயமாக்கப்பட்டு இணையமாக்கப்பட்ட அறிக்கைகள் ஆவணங்களுக்குத் தொடர்ந்து வரவேற்பு இருந்திருக்கின்றது.  நான்
பணியாற்றிய கல்லூரியும், என்னுடன் பணிபுரிந்த சக பேராசிரியர்களும் இதை அங்கீகரிக்க மறுத்தாலும், அந்த ஆவணங்கள் உலகெங்கிலுமுள்ள சமூகப் பணியாளர்களால் வரவேற்கப்பட்டிருப்பதும், பயன்படுத்தப்பட்டிருப்பதும் மிகப்பெரிய மன ஆறுதலைத் தந்தது.

அதைவிட மகிழ்ச்சியான அனுபவம் என் மாணவர்களின் முயற்சி சார்ந்தது. சமூகப்பணி மாணவர்களின் களப்பணி அறிக்கைகளை கணனிமயப்படுத்த வேண்டும், இணையமயப்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது வந்தது. அதை எப்படிச் செய்வதென்ற வழிமுறைகள் தெரியாதிருந்தது. எனக்கிருந்த சொற்ப இணையப் பரிச்சயம், பதிவேற்றப்பட்ட என்னுடைய பாடக்குறிப்பு ஆவணங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, அதை எப்படிச் செய்யலாம் என்று ஓரளவு புரிய வைத்தது. நான் புரிந்திருந்ததை கல்லூரி அளவில் நிறுவனமயப்படுத்திச் செய்யும் சூழ்நிலை அப்போது கல்லூரியில் இல்லை. என்னுடைய நிலை அதைவிடப் பரிதாபம். என் மூலமாக வரும் எதற்கும் பாராமுகம் காட்டும் சில ஆசிரியர்கள் இருந்ததை நானறிந்திருந்ததால், என்னுடைய ஆர்வத்தை தேவையற்ற விவாதங்களுக்கு உட்படுத்த விரும்பாமல், களப்பணியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலமே முன்னெடுக்கலாம் என்று நினைத்தேன்.

முதலாண்டு சமூகப்பணியில், முதல் பருவத்தில், orientation visit என்று சமூகநலத் தளத்தில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் வாழ்வியல் நிலையைப் புரிந்துகொள்ளவும், அது தொடர்புடைய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். குறிப்பாக, நிறுவனமயப்படுத்தாத, open setting என்றழைக்கப்பட்ட குறைந்த வருவாய்ப் பிரிவினரின் (Slums) குடியிருப்புகளுக்கு மாணவர்களை நான் ஆர்வமுடன் அழைத்துச் செல்வேன்.  மேலவாசல், சுப்ரமணியபுரம், கீழ்மதுரை, கரும்பாலை போன்ற குடியிருப்புகளில் எனக்கிருந்த தொடர்புகளைக் கொண்டு அக்குடியிருப்புகளுக்கு மாறி மாறி அழைத்துச் செல்வேன். நிறுவனமயப்படுத்தப்பட்ட இடங்களில் மாணவர்களுக்கு சம்பிரதாயமான தகவல்களைத் தர ஆட்களிருப்பார்கள். ஆனால் குடிசைப் பகுதிகளில் அப்படி ஏற்பாடு செய்யமுடியாது. அக்குடியிருப்புகளில் எவையெவையெல்லாம் பார்வையிடப்படவேண்டும், அதற்கான விளக்கங்களை அங்கிருக்கும் மக்களுடன் எப்படி உரையாடிப் பெறவேண்டும் என்று மாணவர்களுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டாலும், தகவல் சேகரிப்பிற்கு மக்களுடன் உரையாட புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு  பழக்கமில்லாதிருந்ததால், தகவல் சேகரிக்கவும், அதை அறிக்கையாக்கவும் சிரமப்படுவார்கள். மாணவர்களால் பலவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவர்களின் புரிதலை, அதுவும் ஆங்கிலத்தில் அறிக்கையாக்க முடியாமல் சிரமப்படுவார்கள். நன்றாக அறிக்கைகள் எழுதும் மாணவர்களின் அறிக்கைகளைத் தழுவியே பிற மாணவர்களின் அறிக்கைகள் அமையும்.

"திறந்த வீட்டில் ஏதோ நுழைந்த மாதிரி இத்தனை பேரை கூட்டி வருகிறீர்களே....நாங்கள் என்ன காட்சிப்பொருளா? என்று ஒரு குடியிருப்புவாசி ஒருமுறை செவிட்டிலறைந்தது மாதிரி கேட்டது, என்னை சிந்திக்க வைத்தது. ஒரு வகுப்பு முழுமையையும் திமுதிமுவென்று கூட்டமாக ஒரே குடியிருப்பிற்கு அழைத்துச் செல்லாமல் மாணவர்களை 6-7 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, எழெட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பினால் மாணவர்களின் பிரசன்னம் குடியிருப்பு வாசிகளின் கவனத்தை அவ்வளவாக சங்கடப்படுத்தாது என்ற அனுமானத்தின் அடிப்படையில் மாணவர்களை சிறு குழுவாக அனுப்பும் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தேன். குழுவாகச் சென்றாலும் அவர்களுடைய களப்பணி அறிக்கைகளைத் தனித்தனியாகத்தான் சமர்பிக்க வேண்டும். சின்னக் குழுக்களாகச் சென்றதால் அவர்கள் சாகவாசமாக உரையாடி தகவல் சேகரிக்க முடிந்ததால் மாணவர்களின் புரிதல் மேம்பட்டது என்பதை அவர்களின் feedback மற்றும் அறிக்கைகளிலிருந்து அறிய முடிந்தது. இந்தக் குழு முறை (Team based visit)  ஓரளவு நான் எதிர்பார்த்த பலனைத் தந்தது. ஆனால் மற்ற இடங்களுக்கு அழைத்துப் போவது மாதிரி இல்லாமல் இதற்கு திட்டமிடவேண்டியிருந்தது. வேலைப்பளு மிக்கதாயிருந்தது.

மாணவர்களின் அறிக்கைகளை கணனிமயப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த பிறகு, இந்தக் குழுமுறையைப் பின்பற்றி, தனித்தனியாக அறிக்கைகள் சமர்பிக்காமல், குழு அறிக்கையாக, அதுவும் ppt presentation ஆக தரச் சொல்லி அதைக் கணனிமயப்படுத்தலாம், முடிந்தால் பிறகு அதை இணையமயப்படுத்தலாம் என்று முடிவெடுத்தேன். இந்தப் பணிக்காக சில வழிகாட்டுதல்களை வகுத்துக்கொண்டேன். இதன்படி

1. 7-8 நபர்கள் கொண்ட குழுவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அக்குழுவிற்குச் சொல்லப்பட்ட குடியிருப்பு பகுதிக்குச் செல்ல வேண்டும். அக்குழுவில் ஒன்றிரண்டு பேர்களுக்காவது கணனி கையாளவும், அதில் ppt தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  .
2. அக்குழு செல்லும் குடியிருப்புப் பகுதி மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் விதமாக குறைந்த பட்சம் 20 புகைப்படங்கள் எடுக்கவேண்டும். அவர்கள் எடுக்கும் புகைப்படங்களைப் பற்றி 20 -40 சொற்களில் விளக்கம் தரவேண்டும்.
3. புகைப்படம் எடுக்க கைபேசிகளையோ அல்லது கேமிராக்களையோ பயன்படுத்திக்கொள்ளலாம். குழுவினர் எடுத்த புகைப்படங்களைக்கொண்டு ppt தயார் செய்து, அதை வகுப்பில் பகிர வேண்டும்.
4.குழுவிற்குப் பொதுவான மதிப்பென்னும், களப்பணி மற்றும் ppt தயாரிப்பில் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கு குழுவின் பரிந்துரையின் படி சிறிது கூடுதல் மதிப்பென்னும் தரப்பட்டு மாணவர்களின் தனிதிறன் அங்கீகரிக்கப்படும்.

2008 ல் இப்பரிசோதனை முயற்சி தொடங்கப்பட்ட போது, மாணவர்களிடம் கைபேசிகள் பழக்கத்தில் இருந்தது. கைபேசிகள் மூலமோ அல்லது கேமிரா மூலமோ அவர்கள் புகைப்படங்கள் எடுக்கலாம் என்றாலும், பின்னால் வரவிருந்த தொழிநுட்பச் சிக்கலை நான் உணரவில்லை. அப்பொழுதிருந்த கைபேசிகளிலும், கேமிராக்களிலும் படமெடுக்க முடிந்தாலும், அதை எளிதாகப் பகிர வசதி இல்லை. ppt தயார் செய்ய தேவைப்பட்ட கணனி  வசதி பல குழுக்களில் இருந்த மாணவர்களிடம் இல்லை. சில குழுக்கள் browsing மையம் சென்று அதைச் செய்ய வேண்டியிருந்தது. ppt தயாரிப்பில் அனுபவம் இல்லாததால் அதிக நேரமும் பொருள் விரயமும் சில குழுக்களுக்கு ஏற்பட்டது. அறிக்கைகள் சமர்பிக்க கால தாமதமானது. எடுத்த புகைப்படங்கள் data transfer செய்யும்போது அழிந்துவிட்டதால், சில குழுக்களால் அறிக்கைகளைக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இறுதியில் இரண்டு குழுவினரின் ppt மட்டும் கிடைத்தது. சிரமங்கள் பல எதிர்கொண்டாலும் அச் சிரமங்களிலிருந்து கற்றுக்கொண்டது ஏராளம். வகுப்பறையில் மாணவர்கள் அறிக்கைகளை சமர்பித்ததால், எல்லாக் குடிசைப் பகுதிகளைப் பற்றியும் அவர்களுக்குப் பொதுவான புரிதல் ஏற்பட்டது.   

அடுத்த ஆண்டு 2019 இல் இப்பரிசோதனையைத் தொடர்ந்த போது, வீட்டிலோ நண்பர்களிடத்திலோ கணனி வசதி இருந்து, யாருக்கெல்லாம் ppt  தயாரிப்பில் அனுபவம் இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அவர்களெல்லாம் எல்லாக் குழுக்களிலும் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டேன். சிறிது காலதாமதமானாலும் ஒன்றிரண்டு குழுக்கள் தவிர அனைவரும் ppt அறிக்கைகள் சமர்பிக்க முடிந்தது.


2010 கைபேசிகளின் தொழில்நுட்பம் மேம்பட்டது. தரம் உயர்ந்த கேமிராக்களைக் கொண்ட கைபேசிகளை மாணவர்களில் பலர் வைத்திருந்தனர். கேமிராக்களை உபயோகிக்காமல் கைபேசிகளைக் கொண்டே மாணவர்கள் புகைப்படம் எடுத்தார்கள். ஆனால் எல்லா மாணவர்களிடமும் தொழிநுட்பமும், திறனும் ஒரு சேர இருந்ததாகச் சொல்லமுடியாது. சில மாணவர்களுக்குத் தங்கள் UG படிப்பின் போதே ppt தயாரிப்பு போன்ற செயல்களைச் செய்வதில் அனுபவமும் திறனும் கைவரப் பெற்றிருந்ததால், களப்பணி ppt அறிக்கைகளை குறித்த காலத்தில் பெற முடிந்தது. மாணவர்களின் presentation ஒரு நாள் முழுக்க நடந்தது. ஒரு குழு ஒரு குடியிருப்புக்கு மட்டுமே சென்றிருந்தாலும், ppt மூலம் காட்சிப்படுத்தியதால் அவர்களுக்கு மதுரை நகர சேரிப் பகுதிகளைப் பற்றிய புரிதல் ஏற்பட அந்த முயற்சி உதவியது.

மாணவர்களின் வகுப்பறை presentation முடிந்ததும் அதை என்னுடைய ஆவணங்களைப் பதிவேற்றியிருந்த Slideshare தளத்தில் பதிவேற்றி மாணவர்களுக்கும் தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு மூன்று ஆண்டுகளில் (2008 - 2010) மாணவர்கள் தயாரித்த 12 ppt ஆவணங்களை Slide share தளத்தில் பதிவேற்றியிருந்தேன். இந்த ஆவணங்கள் இதுவரை ஏறக்குறைய 35,000 பேர்களால் பார்க்கப்படும், 650 பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுமுள்ளதாக Slideshare Analytics தெரிவிக்கிறது. இதில் என்னை ஆச்சரியப்படவைத்த விஷயம் என்னவென்றால் இந்த ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்தவர்களில் பெரும்பாலோர் Architect படித்த, படிக்கும் மாணவர்கள் தாம்.

களப்பணி என்பது சமூகப்பணிக்கல்வியின்ன் signature pedagogy. ஆனால் அதை எப்படி பயனுள்ள கற்றல் முறையாக்குவது என்பதில் இந்திய சமூகப்பணிக் கல்வியாளர்களுக்குத் தெளிவில்லை. களப்பணி அறிக்கைக்கள் ஆங்கிலத்தில்தான், அதுவும் எழுத்து வடிவில்தான் இருக்கவேண்டும் என்ற மொன்னையான போக்கினால், தாங்கள் பார்த்ததை, உணர்ந்ததை எழுத முடியாததால் களப்பணி அறிக்கைகள் ஜீவனற்றுப் போய்விட்டது. எல்லா சமூகப்பணிக் கல்வி நிலையங்களிலும் இதுதான் நிலை. களப்பணி என்பது ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து விளையாடும் ஒரு கண்ணாமூச்சு விளையாட்டாகி, மாணவர்களுக்கு மதிப்பெண். ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் வெளிவேலைகள், சொந்த வேலைகளைப் பார்க்க அவகாசம் என்றாகிவிட்டது.

இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்தேன் என்பதை முதல்வர் நாராயண ராஜா அவர்களைத் தவிர வேறு எந்த ஆசிரியருக்கும் நான் சம்பிரதாயமாகக் கூட தெரிவிக்கவில்லை. நான் சொல்லாவிட்டாலும், அந்த முயற்சிகளின் பின்னிருந்த நியாயத்தை விமர்சிக்க முடியாமல், சக ஆசிரியர்கள் ஒரு சிலர் வெளிப்படுத்திய sarcastic comments, ஆர்வமான மாணவர்களின் உற்சாகத்தை மட்டுப்படுத்தியது என்று அதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அப்போதே தெரிவித்தனர்.

மாணவர்களின் எல்லாக் களப்பணி அறிக்கைகளையும் கணனிமயப்படுத்த இயலாதென்றாலும், அதற்கான முயற்சிகளை நிறுவனமயப்படுத்தி தொடர்ந்திருந்தால், அது மதுரை நகர் பற்றிய அருமையான காலப்பெட்டகமாக வருங்காலத்தில் போற்றப்பட்டிருக்கும். வருங்காலத்தில் என்ன இப்பொழுதே போற்றப்பட்டிருக்கும். இப்படியெல்லாம் செய்யலாம் என்று எனக்குப் புரிய வந்தபோது, அதை செய்வதற்கான தொழில்நுட்பம் கைகொடுத்த போது, நானும் நண்பர் நாராயண ராஜாவும் ஓய்வு பெரும் வயதை (2010) நெருங்கிவிட்டோம். அதற்கு முன்னதாக கல்லூரி சார்ந்த 5000 புகைப்படங்களை scan செய்து கணனிமயப்படுத்தி இருந்தோம். சமூகப்பணியின் 12 மூல இலக்கியங்களை scan செய்து கணனிமயப்படுத்தினோம், இந்திய திட்டக்கமிசன் 1960 களில் வெளியிட்டு, ஒரு பதிப்போடு நின்று, மீண்டும் பிரசுரிக்கப்படாத Encylopedia of Social Work in India என்ற ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வரலாற்று ஆவணத்தை scan செய்து கணனிமயப்படுத்தினோம். அவ்வாறு கணனிமயமாக்கப்பட்டு, இணையமயமாக்கப்பட்ட Encylopedia of Social Work in India கலைக் களஞ்சியதின் மூன்று பகுதிகள் (volume) எங்களுடைய முயற்சியால் இணையத்தில் கிடைக்கிறது. அது எப்பொழுதும் கிடைக்கும். அது சாகாவரம் பெற்றுவிட்ட இலக்கியமானது. அதையெல்லாம் இப்பொழுது நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.

இந்த அனுபவங்களின் அடிப்படையில், கணனி, இணையம் சார்ந்த தகவல் தொழில்நுட்ப அறிவியலைக் (ICT) கொண்டு MSW Self Finance Course ஐ MSW (IT) என்று மாற்றலாமா என்று கூட நானும் நாராயண ராஜாவும் சிந்தித்தோம். ஆனால், அந்த எண்ணத்தை, ஓய்விற்குப் பிறகு, கல்லூரிப் பணியில் நாங்கள் தொடர முயற்சிப்பதாக நிர்வாகமும், சக ஆசிரியர்களும் தவறாகப் புரிந்துகொண்டால் அது எங்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து, கல்லூரியிலிருந்து முழுமையாக வெளியேறுவதுதான் மரியாதை என்று  மவுனமாகி வெளியேறிக்கொண்டோம்.

பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. நான் ஓய்வு பெற்றுவிட்டேன். 86 ஆம் ஆண்டிலிருந்து CD படித்த பல மாணவர்களுடன் தொடர்பிலிருக்கிறேன். அவர்களில் பலரின் கள அனுபவங்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது. சமுதாய மேம்பாட்டுப் பணி தொடர்புடைய ஆவணங்களில், எந்தக் கற்றலையோ, சிந்தனைத் தாக்கத்தையோ உருவாக்காத பல அனுபவங்களைப் படித்திருக்கின்றேன். அதை ஆவணப்படுத்தியவர் உயரதிகாரத்தில் இருப்பவராகவோ, ஆங்கிலப் புலமை மிக்கவராகவோ இருப்பதால் அந்த அனுபவங்கள் எளிதாக ஆவணப்படுத்தப்பட்டு, எழுதியவர்கள் பிரபலமானவர்களாதாலால் அது பலருடைய கவனத்தையும் பெறுகிறது. என்னுடைய மாணவர்களின் அனுபவங்கள் அதைவிட மேலானது என்று எவரிடமும் நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன். ஆனால் அது உலகின் பார்வைக்கு வராததன் காரணம் அதை ஆவணப்படுத்தப்படுத்தத் தவறியதால்தான். அது எந்த மொழியில் ஆவணப்படுத்தப்பட்டாலும், அதில் உறைந்துள்ள உள்ளார்ந்த உண்மையால் அது தன்னைத்தானே உலகோரின் பார்வைக்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. அது பலருக்கும் பெரிய சிந்தனைத் திறப்பாக, பல பிரச்சனைக்களுக்கு தீர்வு கண்டறிய உதவும். அந்த நம்பிக்கையினடிப்படையில் தான் MISS கல்லூரியில் CD படித்து பல களங்களில் பணியாற்றும் நண்பர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த ஆவணங்கள், எழுத்தாக, குரலாக, காணொளிகளாக, கருத்துப்படங்களாக பல வடிவங்களில் இணையமாக்கப்படும் போது, அது சமூக மாற்றுருவாக்கத்திற்கான புது நம்பிக்கைகளை விதைக்கும்.

அதற்காகவே எம் மாணவர்கள் இணையம் பழகுகிறார்கள். அவர்கள் எழுத்தாக, குரலாக, காணொளிகளாக, படங்களாக இணையத்தில் இருப்பார்கள். அதற்கான முன்னெடுப்பே இணையம் பழகுதல்