1/22/09

His Holiness Kundrakudi Adikalaar. தவத்திரு குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி 45 வது குரு மகா சந்நிதானம் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

நாகனாகுளம் என்ற கிராமத்தில், களப் பணியின் மூலமாக நான் எடுத்துக் கொண்ட ஒரு சமூக மாற்று உருவாக்க முயற்சியில், அதுவும் ஒரு கோயில் கட்டி, அதன் மூலமாக, "கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயில்களும் என்ற அடிகளாரின் எண்ணத்திற்கேற்ப எடுக்கப்பட்ட முயற்சியில், பின்னடைவு ஏற்பட, அதைத் தெரிந்து கொண்ட அடிகளார், உற்சாகப்படுத்து முகமாக, அவ்வூருக்கே வந்து சென்றதும், அதைத் தொடர்ந்து என்னைக் கனிவுடன் அரவணைத்துக் கொண்டதும், எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசிர்வாதம். அதன் பின் அவர் காலடியில் அமர்ந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன்.
அதிகாலை 3 மணியிலிருந்து 5-30 மணி வரை அடிகளாரின் சொந்த நேரம். பல நாட்கள் அந் நேரத்தில் அவர் காலடியில் அமர்திருந்திருக்கின்றேன்.கண்ணில் நீர் தளும்ப சமூக அவலங்களைப் பற்றி அவர் பேசுவார்..சைவமும், தமிழும் கடந்த இன்னொரு முகம் அவருக்கு இருந்தது. அம் முகம் இன்னும் அழகாகவும், பேரொளி மிக்கதாகவும் இருந்தது.
அந்த அழகை, பேரொளியை நானும் தரிசித்திர்க்கின்றேன்...என் மாணவர்களுக்கும் காட்டி இருக்கின்றேன். எங்கள் மாணவர்கள் அவரிடம் செல்லும் போதெல்லாம் காரைக்குடியில் இருந்து உணவும், சிற்றுண்டியும் வரவழைப்பார். அந்த அன்பு..அரவணைப்பு..சாமீ! இந்த மக்களின் மேம்பாட்டிற்கு எங்களால் ஆன வகையில் ஏதாவது செய்து கைம்மாறு காட்டுவோம் சுவாமி!

குன்றக்குடியும், குன்றக்குடி அடிகளாரும் தமிழர்களால் அறியப்படாத வார்த்தைகளல்ல. அறிவியல், ஆன்மீகம் இரண்டும் சரிவரக் கலந்து வார்த்தெடுக்கப்பட்ட அதிசயமாக வாழ்ந்தவர் குன்றக்குடி அடிகளார். அதானால்தான் என்னவோ, கருப்பு, Adikalaar 1சிவப்பு, காவி நிறங்களைத் தங்களின் ஆளுமை மற்றும் கொள்கை நிலைப்பாடாகக் கொண்டவர்களால் அப்போதும், இப்போதும் மதித்துணரப்பட்டு போற்றப்படுகிறார்.
அடிகளாரின் ஆன்மிகம் மற்றும் தமிழ்ப் பணியை நான் எழுதித தெரிந்து கொள்ளுமளவிற்கு தமிழர்கள் துரதிருஷ்டசாலிகள் அல்ல. இருப்பினும், அடிகளாரைப்பற்றி, அவருடைய இன்னொரு பரிமாணமான, ‘வளர்ச்சிப் பணியாளராக’ குன்றக்குடிக்கும், தமிழ்நாட்டிற்கும் செய்த பங்களிப்பைப் பற்றி எழுதுமளவிற்கு என்னிடம் எண்ணற்ற நினைவலைகள் நிரம்பியுள்ளன.

திட்டமிடலும் தியானமும்
நமது தேசத்திற்கு திட்டக் கமிஷன் உள்ளது மாதிரி, குன்றகுடிக்கும் ஒரு திட்டக் குழுவை ஏற்படுத்திச் செயல்பட்டார். அந்த கிராமத் திட்டக் குழு என்ன செய்தது என்பதற்கு, மறைந்த நமது பிரதமர் அன்னை இந்திரா தனது கடைசி விருப்பமாகத் தெரிவித்த, 'இது மாதிரியாக என் நாட்டின் எல்லாக் கிராமங்களிலும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்' (this is what I want for all my villages) என்ற வாசகங்களே அத்தாட்சி. ஒருவேளை அன்னை இந்திரா சுடப்படாமல் இருந்திருந்தால், குன்றக்குடி அடிகளாரை தேசிய அடையாளமாக்கி இருப்பார்.

'Micro Plan" என்ற பெயரில் மெத்தப் படித்தவர்கள் கூட கிராமக் குறுந்திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் குன்றக்குடியில் அடிகளார் நடத்திய திட்டக் குழுவோ, தேசியத் திட்டக் குழவிற்கு இணையாக, ஏன்..அதைவிட மேலான அர்ப்பணிப்புடன் செயல்பட்டது. மாதம் ஒருமுறை குன்றக்குடியில் நடந்த மாதாந்திர பொதுப் பரிசீலனைக் கூட்டங்களில் (Monthly General Review Meeting) கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தவர்களுக்குத் தெரியும்..."திட்டமிடலை" குன்றக்குடி அடிகளார் தவமாக்கியிருந்தார். திட்டமிடலும் தியானம் செய்வதும் அடிகளாரைப் பொறுத்த மட்டில் இரு வேறு காரியங்களல்ல. லெனினையும், நேருவையும் இந்த வகையில் தன் குருநாதர்களாகப் பாவித்தார்.


Kundrakudi Adigalar12

பசுவோடு படுக்கணும்

குன்றக்குடியில் கூட்டுறவு பால் பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. கால்நடை வளத்தைப பெருக்க விரிவாக்க மையத்தையும் குன்றக்குடியில் ஏற்படுத்தி இருந்தார். நான் கலந்து கொண்ட ஒரு மாதாந்திரப் பரிசீலனைக் கூட்டத்தில், பண்ணையின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டது. பால்வற்றியும் சினையாகமலும் ஏழெட்டு பசுக்கள் பல மாதங்களாக இருந்தும், முந்தைய மாதங்களில் அதைப்பற்றி பேசியிருந்தும், பிரச்சனை தீர்க்கப்படாமல், மீண்டும் நொண்டிச் சமாதானம் சொல்லப்படுவதைக் கேட்ட அடிகளாருக்கு உண்மையிலே கோபம் வந்துவிட்டது. கூட்டம் முடிந்து பண்ணைப் பொறுப்பாளரிடம் பேசிய போது, "சாமிகிட்டே தப்பிக்க முடியாது. இன்றைக்கு நானாவது பசுவோட படுத்து ஒரு வழி செய்ய வேண்டும்" என்று சலித்துக் கொண்டார்.அதன்பின் சரியான செயற்கைக் கருத்தரிப்பு முறைகளைக் (artificial insemination) கையாண்டதன் மூலம், அடுத்த மாதம் அப் பசுக்கள் எல்லாம் சினைபிடித்தன.

கைவசமுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண விவசாயி வாழ்வை மேன்மையடையச் செய்வதுகூட கடவுள் வழிபாடுதானே! மஹரிஷி மகேஷ் யோகி, ஓஷோ போன்ற மகான்களும், இப்போதைக்கு ரவிசங்கர்ஜி, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் தியான முறைகளை வகுத்துக் கொடுத்தது மாதிரி, குன்றக்குடி அடிகளார் கிராம மேம்பாட்டிற்கு பல (வழிபாட்டு) முறைகளை வகுத்துக் கொடுத்தார்.

மாறுவாங்க! நிச்சயம் மாறுவாங்க!
நாற்றுப் பாவும் போதும், நெல்மணி திரளும்போதும் குன்றக்குடியில் கணமாய் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு. இதைப் போக்க, சமுதாயக் கிணறுகளை ஏற்பாடு செய்து, மின் தட்டுப்பாடு இருந்தாலும், காற்றாலை மூலமாக மோட்டாரை இயக்க வச்த்தியுள்ளதாக்கி இருந்தார். குன்றக்குடி சமுதாயக் கிணறுகளை நிர்வகிக்க கூட்டுறவு பாசன சங்கத்தையும் ஏற்படுத்தி இருந்தார். ஆனால், நீர்த் தட்டுப்பாடன நேரத்திலும் கூட மோட்டாரை இயக்காமல், "கண்மாய் நீரிலுள்ள சத்து கிணற்று நீரில் இல்லை. அதுவும், கரண்ட் மோட்டார் வழியாக தண்ணீர் வரும் போது, நீரிலுள்ள கொஞ்சநஞ்ச சத்தையும், கரண்ட் உறிஞ்சி விடுவதால், சக்கைத் தண்ணியைப் பாய்ச்சி என்ன ஆகப் போகிறது என்பதால் மோட்டாரை இயக்கவில்லை" என்று சங்கப் பொறுப்பாளர் சொன்ன விளக்கத்தால் அதிர்ச்சியடைந்து, அடிகளாரிடம், “சாமி! இம் மக்கள் திருந்த/ மாற இன்னும் எவ்வளவு காலமாகும்? என்று நான் கோபப்பட்டு கேட்டேன். அடிகளாரோ, “மாறுவாங்க!நிச்சயம் மாறுவாங்க! ஒரு காலக்கெடு வைத்து மக்களை மாற்ற முடியுமென்று நினக்கிறீர்களா? அது திணிப்பாகிவிடதா? அவர்கள் நடப்பதற்கு ஏற்ற பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதே என் கடமை. பாதை நன்றாக இருந்தால் பயணிக்க தூண்டப்படுவார்கள் தானே?

உலகெங்கிலுமுள்ள வளர்ச்சிப் பணியாளர்கள், இன்றைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசும், ஏழைகள் ஏறிச் செல்ல ஏதுவான சூழலை (creating an enabling environment) இருபது வருடங்களுக்கு முன் அடிகளார் குன்றக்குடியில் செயல்படுத்தினார்.

முருகப் பெருமானிடம் பார்த்த அரிவாள் சுத்தியல்
பலமுறை, சமூகப்பணி (சமுதாய முன்னேற்றம்) மாணவர்களைக் குன்றக்குடிக்கு களப்பணிக்காக அழைத்துச் சென்றுள்ளேன். திட்டப் பரிசீலனைக் கூட்டங்களில் நாங்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப் படுவதுண்டு. அப்படி ஒரு கூட்டத்தில், குடிகாரக் கணவன் ஒருவன் தன் மனைவியை நடுத்தெருவில் அடித்த பிரச்சினை பற்றி விவாதம் எழுந்தது. மாணவர்களைப் பார்த்து அடிகளார் அபிபிராயம் கேட்க, ஒரு மாணவி எழுந்திருந்து, "குடிப் பழக்கம் ஒரு நோய். நடுத்தெருவில் தன் மனைவியை அடித்த கணவனுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டுமென்று” கூற, எதையும் பேசாமல் இருந்ததை விட இதையாவது பேசினாகளே என்று நான் கருத்து சொன்ன மாணவியை பெருமிதத்துடன் பார்த்தேன். சில வினாடிகள் அமைதி காத்த அடிகளார், என்னைக் கேலியாகப் பார்த்து, "மாணவர்களை நல்லாத்தான் கெடுத்து வைத்திருக்கின்றீர்கள்" என்று சொல்லிவிட்டு, கருத்து சொன்ன மாணவியைப் பார்த்து, "மனைவியை நடுத்தெருவில் அடித்த கணவனைப் பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து விளக்குமாற்றால் அடிக்க வேண்டும் என்று சொல்லிஇருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என்று சொன்னார். அதைத் தொடர்ந்து கவுன்சிலிங் என்ற கருத்தாக்கத்தையும், அதன் பின்னணியில் இருந்த அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளையும், கவுன்சிலிங்கால் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று விளக்கமும் கொடுத்தார். அந்த சில நிமிடங்களில், முருகப் பெருமான் கையிலிருந்த வேலைக் கீழே வைத்துவிட்டு, அரிவாள் சுத்தியலுடன் நிற்கின்ற பிரேமை ஏற்பட்டது.

உள்ளங்காலில் முளைத்த மயிர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று வார்த்தையாடல் உண்டு. அது உண்மையென குன்றக்குடியில் உணர பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. அடிகளாரின் உரைகளில், எழுத்துக்களில் தென்பட்ட பண்பையும், நாகரீகத்தையும் குன்றக்குடியில் பலர் உள்வாங்கி இருந்தார்கள்.

குன்றக்குடி மக்ளிர் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டு இருந்த அம்மையார் ஒருவரின் 93 வயதான தயார், அடிகளாரிடமும், அவருக்கு முந்தய மூன்று மடதிபதிகளிடமும் சேவை செய்தவர் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். பேச்சு வாக்கில், 'அடிகளாருக்கும், அவருக்கு முன்பிருந்த மடாதிபதிகளுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்நதீர்கள்" என்று கேட்டதற்கு, 'வித்தியாசமா? அவர்களுக்கு உள்ளங்காலில் மயிர் முளைத்திருந்தது. இவருக்கு இல்லை' என்று சுருக்கம்காக முடித்து விட்டார்.

என்ன ஒரு நாகரீக வெளிப்பாடு?. உள்ளங்காலில் மயிர் முளைத்தது என்பதை எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுதிக்க் கொள்ளலாம். என்னைப் பொறுத்தமட்டில் உள்ளங்காலில் மயிர் முளைத்ததை 'மடமுண்டு தானுண்டு' என்று முந்தய மடாதிபதிகள் இருந்ததாக எடுத்துக் கொண்டேன்.

நான் அறிந்த வரையில் நாளொன்றுக்கு சராசரியாக அடிகளார் 250 கி.மீ. வரை பயணம் செய்தார். அவருடைய தினப்படி நிகழ்ச்சி நிரல் அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 12 மணி வரை நீடித்தது.

காஜாவிற்கு வரும் வாழ்த்து

1989 ல் நான் மாணவர்களை குன்றக்குடிக்கு அழைத்துச்சென்ற போது, காஜா முகைதீன் என்ற மாணவரும் வந்திருந்தார். ஆசிரமக் குறிபேட்டில் அவர் எழுதிய குறிப்பில் இருந்து, அவரின் பெயரைத தெரிந்து கொண்ட மடத்தினர், அந்த வருடம் காஜாவிற்கு அடிகளார் கையெழுத்திட்ட வாழ்த்து மடல் அனுப்பிஇருந்தனர். காஜா முகைதீன் படிப்பை முடித்து பலப்பல வருடங்களாகிவிட்டது. அடிகளாரும் நம்மிடையே இல்லை. இருப்பினும் மடத்தில் இருந்து வாழத்து மடல் அனுப்பும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. வருடாவருடம், காஜா என்னும் சாதாரண மாணவனை நினைவில் வைத்து குன்றக்குடியிலிருந்து வரும் வாழ்த்து மடலைப் பார்க்கும் போதெல்லாம் நான் நெகிழ்ந்து போகிறேன்...குன்றக்குடி அடிகளார் என்ற மகா முனிவருடன் எனக்கேற்ப்பட்ட அறிமுகத்தால்.
நன்றி! இறைவா..நன்றி!

2 comments:

Rathnavel Natarajan said...

இந்த பதிவில் முதல் பின்னூட்டம் என்னுடையது, வேதனையாக இருக்கிறது. இன்னும் திறக்கப்பட, பார்க்கப்படவேயில்லையா.

குன்றக்குடி அடிகளாரின் தொழில் வளர்ச்சி பற்றி அற்புதமான பதிவு. எங்கள் பள்ளிக்கு 1964-65 வாக்கில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடிகளார் வந்திருக்கிறார்; அப்போது இந்தி எதிர்ப்பு பரபரப்பான சூழல்.

இந்த பதிவு நமது முகநூல் நண்பர் திரு Srinivasan Rengasamy அவர்கள் எழுதியது. ஒரு மாமனிரை கண்டெடுத்திருக்கிறேன். நன்றி ஐயா.

இந்த பதிவை நண்பர்கள் ஆழ்ந்து படிக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றி நண்பர்களே.

Sriv said...

குடி வாழ கோல் உயரும் என்று சொல்லுவார்கள் , குன்ற குடி வாழ அடியாரின் பங்கு ஏராளம் . அடியார்க்கு அடியனாய் ஒரு பொடியன் போல் வாழ்ந்த வள்ளல். பிணி அறுக்கும் மருந்தாய் , பணி (சமூக) செய்வதே கடமை என்று வாழ்ந்த தெய்வம் . ஆம். நாத்திகர் கடவுள் இல்லை என்று மறுக்கலாம் . ஆனால் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்னும் பாடலுக்கு இணங்க , பெரியாரும் , இந்த பெரியவளும் தெய்வமே . அந்தரங்கமும் என் ஆசான் ரங்க ஸ்வாமி அறிவார் . வாழ்த்து !